கோலம் என்பது முப்பெருந்தேவி யர்கள் எழுதிய பக்திமிகுந்த வரை படமாகும். முப்பெருந்தேவியரால் உருவாக்கப்பட்ட கோலம் என்ற வரைபடத்திற்கு என்றும் தனிப் பெருமையும் மதிப்பும் உண்டு. எனவே, அதிகாலையில் கோலமிடுவது மிகமிக பயனுள்ளதாகும். அதிகாலையில் வீட்டு வாசலைத் தண்ணீர் தெளித்து, பெருக்கிப் பின் கோலமிட்டாலே  மகாலட்சுமி ஆனந்தப்பட்டு, நம் வீட்டுக்குள் தானாகவே வந்து அமர்ந்துகொள்வாள். வீட்டுக்குள் மகாலட்சுமி வந்து அமர்ந்துகொண்டால் அந்த வீட்டில் எல்லா ஐஸ்வர்யம் வந்து விடும். பிறகு கேட்கவே வேண்டாம். பொன், பொருள் சேர்ந்து வாழ்க்கை "ஓஹோ'வென்று உயர்ந்துவிடும். எனவே, அதிகாலையில் வீட்டுவாசலை சாணம் கலந்த நீரால் தெளித்து, பின் பெருக்கி சுத்தம்செய்து, வகை வகையாக கோலங்கள் போட்டு, மகாலட்சுமியை வரவழைத்து, சகல ஐஸ்வரியங்களையும் பெற்று, சீருடனும் சிறப்புடனும் வாழ்க்கையைச் செலுத்தவேண்டும். 


இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய பெண்கள், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சம்பாதிக்கும் நோக்கிலே, வெளியில் வேலைக்கு சென்றுவருகின்றனர். அதிகாலையிலே வீட்டைவிட்டு வேலைக்குப் போகும் பெண்களும் இருக்கின்றனர். அதேசமயம் இரவு முழுவதும் வேலைபார்த்துவிட்டு மிகுந்த களைப்புடன் அதிகாலையில் வீட்டுத் திரும்பும் பெண்களும் உள்ளனர். இதனால் வீட்டு வேலைகளைக் கவனிக்க வேலைக் காரப் பெண்களை நியமிக்கின்றனர். 

Advertisment

ஒரு அடுக்குமாடி கட்டடம். அம்மாவும், மகனும் மட்டுமே அந்த அடுக்குமாடி கட்டடத்தில் ஒரு வீட்டில் குடியிருந்து வந்தார்கள். அந்த வயதாகிப்போன தாயார் மூன்று மாடி கீழே இறங்கிவந்து, அதிகாலையிலேயே வாசல் தெளித்து கோலமிட்டு மாடியேறி வருவாள். தாயார் படும் துன்பத்தைக் கண்டு வேதனைப் பட்ட மகன் அவனுடைய அம்மாவைக் கண்டித்தான். "அம்மா' இந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் எத்தனை பேர் குடி இருக்கிறார்கள். அவர்களில் யாராவது உன்னைப்போல வாசல் தெளித்துக் கோலமிட முன்வருகிறார்களா? உனக்கு ஏன் இந்த வேலை''  என்று தினமும் முனுமுனுப்பான். அன்பு மகனின் கோபத்திற்கு அந்தத் தாயார் சொல்லுகின்ற பதில் ஒன்றுதான். "மகனே பூமி என்பது தெய்வம். இந்த பூமி மாதாவை பூஜிக்கவேண்டும். அந்த மகாலட்மியின் மறுவடிவம்தான் இந்த பூமி. இந்த பூமிதேவிக்கு அனுதினமும் அதிகாலையிலே வாசல் தெளித்து, சுத்தம்செய்து, கோலமிடவேண்டும். அப்படி செய்தால் அந்த மகாலட்சுமி நம் வீட்டில் வந்து குடியேறுவாள். அப்போதுதான் நாம் செழிப்புடன் வாழலாம். ஆகவே, நான் இப்படி ஒவ்வொரு நாளும் வாசல் தெளித்து கோலமிடுவேன். என்னைத் தடுக்காதே!'' என்று பிடிவாதமாகக் கூறினாள்.  

kolam1

எதிர்பாராதவிதமாக அந்தத் தாயாரும், மகனும் அவர்களது உறவினர் ஒருவர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திவர, 

Advertisment

அவரைப் பார்க்க 300 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள ஊருக்குப் போய்விட்டார்கள். போகும்போது ஒரு வேலைக்காரியை வேலைக்கு அமர்த்தி தினமும் காலையில் வாசல் தெளித்துக் கோலமிடும்படி கேட்டுக் கொண்டார்கள். அவளும் நாள் தவறாமல் வாசல் தெளித்து கோலமிட்டு வந்தாள். 


ஓரிரு நாட்கள் போயின. அந்த உறவுக்காரரின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை. சரி ஊருக்குத் திரும்பிப் போய்விடலாமா என்று அந்தத் தாயும், மகனும் யோசித்தார்கள். அப்போது டாக்டர் சொன்னார், "எதற்கும் இன்னும் ஒருநாள் இருந்துவிட்டுப் போங்கள். மேலும் எந்த முன்னேற்றமும் இல்லாவிட்டால் இவருக்கு மரணம் நேரிடலாம்?'' என்று சொன்னார். அதனால் அவர்கள் ஊருக்குப் போவதை ஒருநாள் தள்ளிப்போட்டார்கள். 

அடுத்த நாள் காலை ஒரு பரபரப்பான செய்தி, அந்தத் தாயாரையும், மகனையும் கதிகலங்க வைத்தது. நேற்று இரவு அவர்கள் ஊரில் நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த நகரமே ஆடிப்போய், அடுக்குமாடி கட்டடங்கள் பல அப்படியே பூமிக்குள் இறங்கிவிட்டதாம். செய்தி அறிந்த தாயும், மகனும், அலறி அடித்துக்கொண்டு ஊருக்கு திரும்பினார்கள். என்ன ஆச்சர்யம்? அவர்கள் குடியிருந்த அடுக்குமாடி கட்டடம் அப்படியே சரிந்துபோய் கிடந்தாலும், அவர்கள் இருந்த அந்த ஒரு வீடு மட்டும் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே அந்தரத்தில் நின்றுகொண்டு இருந்தது. அவர்கள் ஊருக்குப் போவதால் ஒரு வேலைக்காரியை நியமித்து அனுதினமும் வாசல் தெளித்தும் கோலமிடச் சொல்லிவிட்டுப் போனார்களே, அந்த வேலைக்காரி அன்றிரவு அந்தத் தாயாரின் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு எந்த ஆபத்துமின்றி உயிர் பிழைத்திருந்தாள். இந்த வேலைக்காரி அனுதினமும் வேறுசில இடங்களில் வாசல் தெளித்துக் கோலமிட்டு பலநாட்களாக செய்துவந்திருக்கிறாள். ஆகையால் பூமாதேவி அவளைக்காத்து அருள்புரிந்திருக்கிறாள். அதே போல இந்த வயதான தாயாரும் வாசல் தெளித்துக் கோலமிட்டு வந்திருக்கிறாள். அதனால் அவளையும், அவன் மகனையும் பூமாதேவி யானவள் காப்பாற்றிவிட்டாள்.

இந்திய நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் அர்த்தமுள்ளவை. அதிகாலையில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிடவேண்டும். அதைச்சுற்றி அழகாகக் காவிக்கரை கட்டவேண்டும். வீட்டு வாசலில் கோலமிட்டிருந்தாலே போதும், மகாலட்சுமி தானாக உள்ளே வந்து அமர்ந்துகொள்வாள். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டாலே போதும் சகல செல்வமும் சேரும். மங்களம் உண்டாகும். செழிப்புடன் வாழலாம். மகாலட்சுமியை வரழைக்க ஒரு கோலமேபோதும். எனவே வீட்டு வாசலில் கோலம் போடுங்கள்; நலமுடன் வாழுங்கள்.