"தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்பது எவ்வளவு உயர்வான வாக்கியம் என்பதை நாம் பார்க்கவேண்டும். உலகின் மூத்தக்குடி மற்றும் முதுபெரும் செம் மொழி எனும் பல சிறப்புகளை உள்ளடக்கியதே தமிழினமும், தமிழ் மொழியும்! எனவேதான் எம்பெருமான் சிவபெருமானை "தென்னாடு டைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று நம்மால் உரக்கச் சொல்லமுடிகிறது. இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதியின் அருகிலுள்ள குன்றின்மீது சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க வல்லுநர்கள் அதன் வயதை (காலத்தை) ஆராய்ந்தபோது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கண்டறியப் பட்டுள்ளது. சிவம் எங்கெல்லாம் கால்பதித்துள் ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
"ஆதித்தமிழரே ஆதிசிவன்' ஆகிறார். இதை உணர்த்தும் வகையில் அமைந்த தலமே சிதம்பரம். திருவாசகம் எழுதிய மாணிக்க வாசகர் முதல் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் உட்பட 63 நாயன்மார் களையும் சேர்த்து அனைவரும் சிவ சொரூபமே.
சிவனை தரிசனம் செய்ய நினைத்தால் போதாது. நினைப்பவரின் சொல்லும், செயலும், நடத்தையும் மிகத்தூய்மையாக இருக்கவேண்டும். ஒருவர் "கடவுள் இல்லை' என்று சொல்கிறார் என்றால் அது மோசமான (நெகடிவ்வான) சிந்தனையாகும். அந்த சிந்தனை தொடர்ந்து நமது நினைவில் இருக்கும்போது பின்னாளில் அதுவே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நிம்மதியற்ற நிலை ஏற்படும். "கடவுள் இருக்கிறார்;
அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்' எனும் சிந்தனை மிக அற்புதமான ஒரு நேர்மறை (பாசிட்டிவ்) ஆற்றலாகும்.
அதே சிந்தனையில் லயித்திருப்பதென்பது நன்மையைத் தரவல்லதாகும். எனவேதான் நம் முன்னோர்கள் "திக்கற்றவருக்கு தெய்வமே துணை' என்று கூறியுள்ளனர். எந்தவொரு மனிதனுக்கும் இறைசக்தியின்மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை என்பது உயிரைப் போன்றது. சந்தேகம் என்பது மரணத்தைப் போன்றது. சந்தேகம் நோயைத் தரக்கூடியது. நம்பிக்கை ஆரோக்கியமான மகிழ்ச்சியைத் தரக்கூடியது.
"அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.'
என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் ஒரு செயலைச் செய்யும்போது தம்மை சிறியவராகக் கருதிக்கொண்டு, இச்செயலை நம்மால் செய்யமுடியாது என்று நம்பிக்கையற்று மனம் தளரக்கூடாது. நம்பிக்கையுடன்கூடிய விடா முயற்சியே அச்செயலை முடிப்பதற்கேற்ற பெருமையைத் தரும்.
இயற்கையை நேசிக்கவேண்டும். இயற்கை யோடு ஒன்றிணைந்து வாழவேண்டும். எங்கும், எதிலும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்னும் எண்ணமே நம்மை நல்வழிப்படுத்தும் கருவியாகும்.
அகல் இடமாய் அறியாமல் அடங்கும்
உகல் இடமாய் நின்ற ஊன் அதனுள்ளே
பகல் இடமாம் முனம் பாவ விநாசன்
புகல் இடமாய் நின்ற புண்ணியன் தானே.
(திருமந்திரம் 1723)
பொருள்:
சிவப்பரம்பொருளானது பரந்து விரிந்த இப்பார் முழுவதும் நிறைந்து, எங்கும் எதிலும் கலந்திருக்கும் என்றா லும், எவரும் அறிய இயலாதபடி மறைந்து நிற்கும். அழியப்போகும் ஊனுடம்பை இடமாகக் கொண்டு, அதனுள்ளே இறைவன் பொருந்தி, மானுடப் பிறவிகளின் சீவன்கள் முன்செய்த பாவங்களை யெல்லாம் போக்கி, அவர்கள் உள்ளம் ஆன்ம ஒளி பெற்றுப் பிரகாசிக்கும் இடமாக இருக்க வேண்டும் என்ற பரமகருணையினால் அழியும் உடலோடு ஈசனவன் கலந்து நிற்கிறான்.
அண்டத்திற்கும் அப்பால் இருந்து இயங்கி யும், இயக்கியும் பிண்டத்தையும் பாதுகாக்கும் ஈசனின் அருட்கடாட்சம் நிறைந்த தலமே ஆகாயத்தலமான சிதம்பரம் ஆகும். ஏற்கெனவே இத்தலத்தைப் பற்றி அறிந்திருந்தாலும், இன்னும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வாருங்கள். சிதம்பரம் செல்வோம்.
சிதம்பரம் என்றால் கோவில் என்று பொருள். கோவில் என்றால் உடல் என்று பொருளா கும். ஈசன் பேராற்றலைத் தன்னகத்தே கொண்ட சிதம்பரமே சிவபுரமாகும்.
சிதம்பரத்திற்கு தில்லைவனம் என்ற திருப்பெயரும் உண்டு. சித்+அம்புரம்=சிதம்பரம் ஆகும். "சித்' என்றால் அறிவு என்று பொருள்.
அம்பரம் என்றால் வெட்டவெளி. மேலும் சிதம்பரத்திற்கு பொன்னம்பலம் எனும் பெயரும் உண்டு. அம்பலம் எனும் சொல் சபையைக் குறிப்பதாகும். தலத்தின் வேறு பெயர்கள் பூலோக கைலாசம், வியாக்கிரபுரம், தில்லை வனம். தல விருட்சம் தில்லைமரம்.
இத்திருத்தலத்தில் சிற்றம்பலம், பொன்னம் பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜசபை எனும் ஐந்து சபைகள் (மன்றம்) அமைந்திருப் பது சிறப்பு. விஷ்ணுவுக்கும் இங்கே தனிச்சந்நிதி உண்டு. இங்கே "ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் நடனமாடும் நடராஜர் காட்சி தருகிறார்.
இறைவனின் திருப்பெயர் மூலட்டானேசுவரர், திருமூலநாதர். இறைவியின் திருப்பெயர் உமையம்மையார், சிவகாம சுந்தரி. 51 ஏக்கர் நிலப்பரப்பில், நான்கு திசைகளிலும் 135 அடி உயரமுள்ள நான்கு ராஜகோபுரங்கள் கம்பீர மாக நிற்கின்றன. 13 பெரிய செப்புக்கலசங்கள் கோபுரத்தில் உள்ளன. ராஜகோபுர வாயில் கள் ஒவ்வொன்றும் 40 அடி உயரம் கொண்டவை. நான்கு ராஜகோபுரங் களைச் சுற்றிலும் கருங்கற்களாலான 30 அடி மதிற்சுவர் எழுப்பப்பட் டுள்ளது. தெற்கு கோபுரத்தின் அருகில் தென்மேற்கு மூலையில் "முக்குருணி விநாயகர்' திருச்சந்நிதி அமைந்துள்ளது. இவர் சுமார் எட்டு அடி உயரத்தில் எழுந்தருளியுள்ளார்.
மேற்கு கோபுரத்தின் வெளிப்புறத்தில் ஏழு திருக்கரங்களோடு நர்த்தன கணபதியாகக் காட்சிதருபவரே இத்தல விநாயகர்.
மேற்கு கோபுரத்தின் உட்புறத்தில் வடக்குப் பக்கத்தில் பாலசுப்ரமணியர் சந்நிதி அமைந்துள் ளது. "சிவகங்கைத் தீர்த்தக்குளம்' சந்நிதிக்கு எதிரே உள்ளது. வடப்புறத்தில் சிவகாம சுந்தரி ஞானசக்தியாக கோவில் கொண்டிருக்கிறாள்.
வடக்கில் துர்க்கையம்மன் சந்நிதி உள்ளது.
பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற சண்முகப்பெருமான், ஆறு திருமுகங் களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் வள்ளி- தெய்வானை சமேதராக மயில்வாகனத் தில் காட்சிதருகிறார். ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் நவகிரகங்களால் பூஜிக்கப்பட்ட நவலிங்கக் கோவிலும் உள்ளது.
கோவிலின் கிழக்குப்பகுதியில் ஐந்து சபைகளுள் ஒன்றான ராஜசபை எனும் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள் ளது. ஆனி, மார்கழி மாதங்கள் திருவிழாக்காலங்கள் ஆகும். இது தில்லையம்பதியின் ஆனந் தத்தாண்டவம்(Cosmic Dance) நடைபெறும் திருச்சபையாகும். மேற்குப்பகுதியில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது.
தில்லைவனமாக இத்திருத்தலம் இருந்த போது, "மூலட்டானேசுவரர்' தில்லை மரத்தடி யில் வியாக்ரபாத முனிவரால் பூஜிக்கப்பட்டி ருக்கிறார். தங்க ஓடுகள் வேய்ந்த விமானம் தாங்கிய இந்த சித்சபையில்தான் ஆனந்த நடராஜ மூர்த்தியும் அன்னை சிவகாம சுந்தரியும் எப்போதும் ஆனந்தத்தாண்டவம் ஆடி அருள் பாலிக்கின்றனர். சித்சபையின்மேல் ஒன்பது தங்கக் கலசங்கள் உள்ளன. இது ஒன்பது விதமான சக்திகளைக் குறிக்கின்றன.
தினசரி மனிதனின் சுவாசத்தைக் குறிக்கும் 21,600 தங்கத் தகடுகள் மேற்கூரையாக வேயப்பட்டுள்ளன. அதனை இணைக்கும் 72,000 ஆணிகள் மனித உடலிலுள்ள 72,000 நாடிகளைக் குறிக்கிறது.
பொன்னம்பலம் இடப்புறமாக அமைந் துள்ளது. அது நம் உடலிலுள்ள இதயத் தைக் குறிக்கிறது. பொன்னம்பலத்திலுள்ள 28 தூண்கள் சிவனை வழிபடும் 28 வழிவகைகளைக் குறிக்கின்றன. இத்தூண்களைத் தாங்கும் மேற்கூரையில் 64 + 64 சாரங்கள் (Beams)குறுக்காக உள்ளன. இவை 64 கலைகளைக் குறிக்கின்றன. ஐந்து வெள்ளிப் படிகளும் ஐந்தெழுந்து மந்திரமான பஞ்சாட்சரப் படிகளைக் குறிக்கின்றன. வெள்ளிப் பலகணிகள் 96-ம், தொண்ணூற்றாறு உடல் தத்துவங்களைக் குறிக்கின்றன. சித்சபையில் உள்ள ஐந்து தூண்களும் ஐம்பொறிகளை உணர்த்துகின்றன. சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்திலுள்ள சிறுவாயிலில் உள்ள திரை விலக்கப்பட்டு ஆரத்தி காட்டப்படும். இங்கு திருவுருவம் எதுவுமில்லை. ஆனால் தங்கத்தாலான வில்வ மாலை ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கும். இதன் ரகசியம் "இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறார்' என்பதுதான்.
இப்பிராகாரத்தின் கீழ்ப்பகுதியில் நாட்டியம் தொடர்பான சிற்பங்களும் மற்றும் பல்வேறுவகைச் சிற்பங்களும் மிக அழகாகக் காணப்படுகின்றன. நடராஜர் சந்நிதியின் எதிரில் அமைந்துள்ள படிகளின்மேல் ஏறிச்சென்று பார்த்தால் தெற்கு முகமாக உள்ள நடராஜர் சந்நிதியையும், கிழக்கு முகமாக உள்ள கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியையும் ஒரே நேரத்தில் கண்டு வழிபடமுடியும். இத்தலத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித்திருமஞ்சன சேவையும் மிகவும் பிரசித்திப் பெற்றவையாகும். மேலும் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தில்லை நடராஜப் பெருமான் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டியருளினார் என்பது வரலாறு.
தில்லையில் நடராஜப்பெருமானின் திருநடனமே ஆனந்ததாண்டவம் எனப் படுகிறது. இதனை அமெரிக்கர்கள் காஸ்மிக் நடனம் (Cosmic Dance) என்று கூறுகின்றனர்.
பிரபஞ்சத்தில் உள்ள ஒட்டுமொத்த உயிர்ச் சக்தி எனப்படும் உயிராற்றல் (Cosmic Energy) அனைத்தும் இங்கே விழுவதாக "நாசா' உறுதி செய்துள்ளது. பூலோகக் கயிலாயம் என்றழைக் கப்படும் தில்லையம்பதியை நாம் ஒவ்வொரு வரும் தரிசனம் செய்யவேண்டும். ஆகாயத் தைப்போலவே எண்ணிலடங்கா ரகசியங் களை உள்ளடக்கியதே சிதம்பரம் நடராஜர் தலமாகும். ஆரோக்கியம் மேம்பட ஆகாயத் தலமான சிதம்பரம் நடராஜரை தரிசிப்போம்.