பாவ- சாப- தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!

சித்தர்தாசன் சுந்தர்ஜி

13

Advertisment

பொய்மதங்கள் போதனைசெய் பொய்குருக்களை

புத்திசொல்லி நன்னெறியிற் போகவிடுக்கும்

மெய்மதந்தான் இன்னதென்று மேவவிளம்பும்

Advertisment

மெய்குருவின் பதம்போற்றி ஆடாய்பாம்பே.

(குரு வணக்கம்)

அகத்திய முனிவரிடம் புலத்தியர் கேட்ட சந்தேகங்களுக்கு அவர் விடை கூறலானார்.

""புலத்தியனே, எது அசைந் தால் இந்த பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் அசையுமோ, அவற்றின் மனம் அசையுமோ, மண், நீர், நெருப்பு இயக்கம் பெறுமோ, இடை வெளியில்லாமல் எங்கும் பூரணமாய் நிறைந்திருக்கும் அந்த ஒரே சக்தியான காற்றினையே கடவுளாக வணங்கி அனைத்து சக்திகளையும் அடைந்தோம்.

சித்தர்களாகிய எங்களுக்கு அனைத்து சக்திகளையும் வழங்கிய அந்தக் காற்றுக்கடவுளைக் கண்ணால் காணமுடியாது. ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வால், உயிரால் அந்தக் கடவுளை உணரமுடியும். இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளிலும் அந்தக் கடவுள் ஆதியிலும் இருந்தது; இன்றும் இருக்கிறது. இந்த பூமிப்பந்து அழியும்வரை அழியாம லிருந்து அனைத்து உயிர்களையும் காப்பாற்றிக்கொண்டேயிருக்கும்.

siddhar

இந்தக் கடவுள் இல்லையென்றால் பூமியில் எந்த உயிரினமும் இருக்காது. அவற்றுக்கு சக்தியும் சலனமும் இராது. எல்லாம் சவமாகவும், ஜடப்பொருளாகவும்தான் இருக்கும். காற்று தான் எங்களுக்கு இவ்வளவு சக்திகளையும் வாரி வழங்கியது. உயிருள்ள அனைவரும் தங்கள் உணர்ச்சியினால் இந்தக் கடவுளை அறிந்துகொள்ளலாம்; இதன் சக்தியை அனுபவித்துக்கொள்ளலாம். முற்பிறவியின் பாவ- சாபப் பதிவுகளைத் தடுத்து உயர்வான வாழ்வைப் பெறலாம். புலத்தியனே, இந்தக் கடவுளின் சக்தி நிலையை ஆராய்ந்தோம்; அனுபவத்தால் அறிந்தோம். காற்றினை நம்முள் அடக்கிக் கட்டிவிட்டால், காற்றின் அனைத்து சக்திகளும் மனிதனுக்கும் கிடைத்து விடும். மனிதனும் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் சக்தியினையடைந்து, அண்டமெல்லாம் வியாபித்து நிற்கலாம் என்பதை எங்கள் புத்தியினால் புரிந்து, பல ஆண்டுகள் குண்டலினி வாழ்க்கை வாழ்ந்து, சகலசக்திகளையும் சித்திகளையும் அடைந்தோம்.

குண்டலினி சக்தியால் சைவத் தமிழ்ச் சித்தர்களாகிய நாங்கள் பதினெட்டுப் பேரும், சாகாக்கால், வேகாத்தலை, போகாப்புனல் என்ற நிலையை அடைந்து மரணத்தை வென்றோம். இந்த பூமியில் என்று காற்று இல்லாமல் அழியுமோ, அன்றுதான் நாங்களும் அழிவோம்; மறைவோம். அதுவரை இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்போம். பூமி தோன்றியபோது தோன்றிய தமிழினம் இந்த பூமி அழியும்போதுதான் அழியும். இதுவும் உண்மை.''

""அகத்தீசரே, தங்கள் விளக்கம் எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. இன்னும் ஒன்றைப் பற்றிய விளக்கத்தையும் தெளிவையும் எனக்குக் கூறுங்கள். சாகாக்கால், வேகாத்தலை, போகாப்புனல்- இவை பற்றியும் கூறுங்கள்.''

""புலத்தியனே கேள்...

சாகாக்கால்

"கால்' என்றால் மூச்சுக்காற்று. அது எப்போதும் எங்கள் உடலினுள்ளே இருக்கும்படியும், வெளியே செல்லாத வண்ணம் எங்கள் உடம்பினுள்ளேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்படியும் செய்துகொண்டோம். அதாவது கடலில் உண்டாகும் புயல் காற்று, கரையேறாமல் கடலுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பது போல் செய்து கொண்டோம். புயல்காற்று கடலுக்குள் சுழன்று கொண்டி ருக்கும்போது, அந்தக் காற்றின் சக்தி அளவிட முடியாதது என்பதை நீ அறிந்தவன்தானே. ஆனால் அந்தக் காற்று கடல் நீரைவிட்டு கரையேறினால் அதன் வலுக்குறைந்துவிடும். எங்கள் உள்ளேயுள்ள மூச்சுக்காற்று கடலிலுள்ள புயல் காற்றை விட சக்தி பெற்றது.

வேகாத்தலை

எங்கள் மூச்சுக்காற்று, உயிர் எங்கள் உடம்பைவிட்டு வெளியேறாத காரணத் தால் உடம்பில் சூடு குறையாமல் நிலைத்து நின்றுவிட்டது.

போகாப்புனல்

எங்கள் உடம்பினுள்ளே காற்றையும் நெருப்பையும் அழியாமல் தக்க வைத்துக்கொண்டதால், உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில் பாய்ந்து சுற்றி, புனல் (நீர்) என்ற ரத்தம் தன்நிலை மாறாமல், புதுப்புது ரத்தத் திசுக்களை உருவாக்கிக்கொண்டு, தடையில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதனால் சரீரம் முதுமை நிலையடையாமல் இளமையாகவே உள்ளோம்.

மனிதன், விலங்கு போன்ற உயிர்களின் மூச்சுக்காற்று நின்றுவிட்டால், அவன் உடம்பிலுள்ள சூடு மறைந்து, குளிர்ந்துவிடும். உடம்பு குளிர்ந்துவிட்டால் ரத்தஓட்டம் நின்று, தசைகள் அழுகி நீராகி உடல் கரைந்து ஒழுகிவிடும். மனம் இயங்காது. இதுவே மரணநிலை. "வாசி', "கால்' என்னும் காற்று இல்லாமல் போனால் மனிதன் சவமாகிவிடுவான்.

தன் உடம்பைவிட்டு மூச்சுக்காற்று, உடல்சூடு, ஓடும் ரத்தம் வெளியேறாமல் தடுத்துக்கொண்டவன் எங்களைப் போன்ற சித்தன் ஆவான்.

"வேகாக்கால் சாகாத்தலை விரைந்து கேளாய்

விடுத்ததனை யுரைப்பவனே ஆசானாகும்.'

சாகாக்கால், வேகாத்தலை, போகாப் புனல் ஆகியவற்றுக்கு விளக்கம்கூறி, அவற்றைக் கட்டியடக்கும் வழிமுறைகள் தெரிந்தவனே குரு, ஆசான் ஆவான். இதற்கு விளக்கம் தெரியாத வரெல்லாம் பொருள் சம்பாதிக்க அலையும் போலி குருமார்கள் என்பதைப் புரிந்துகொள் புலத்தியனே.

சித்தர்களாகிய நாங்கள் ஆக்க சக்தி யானோம்; எங்களை அண்டியவர்களைக் காக்கும் சக்தியானோம்; மனிதர்களின் முற்பிறவி பாவ- சாபப் பதிவுகளைத் தடுத்து அழிக்கும் சக்தியுமாகி, முப்பெரும் சக்திகளை அடைந்தோம்.''

சித்தர்களின் கடவுளான காற்றின் சக்தியை ஒரு உதாரணத்தின்மூலம் அறிவோம்.

siddharசெயலற்று வாடிக்கிடக்கும் ஒரு பலூனை எடுத்துக் காற்றினை ஊதி, அந்தக் காற்று வெளியே வரமுடியாதபடி பலூனின் வாயைக் கட்டிவிட்டால் அந்த பலூனுக்கு உயிர்சக்தியும் உருவமும் வந்துவிடுகிறது. வெளியிலுள்ள காற்று, பலூனின் உள்ளேயுள்ள காற்றினைத் தேடி ஓடிவந்து அந்த பலூனை உருண்டோடச் செய்கிறது. உயரே பறக்கச் செய்கிறது. காற்று என்ற கடவுள் பலூனிற்கு செயல்படும் சக்தியைத் தந்துவிட்டது. பலூன் அட்டமாசித்திகளை அடைந்த நிலை இது.

அந்த பலூனின் உள்ளே இருக்கும் காற்று வெளியே வராதவரை அந்த பலூனுக்கு மரணமில்லை. இதைப்போன்றுதான் இந்த உலகிலுள்ள மனிதர்களும் குண்டலினி பயிற்சிமூலம் தங்கள் உடம்பினுள்ளே அவரவர் உயிர்மூச்சுக்காற்று என்ற கடவுளை அடக்கி நிறுத்திவிட்டால், உயிர்காற்று உடம்பின் உள்ளிருக்கும் வரை அவனுக்கு மரணமில்லை. அவன் மரணத்தை வென்றுவிட்டான். தன் மரணவிதியைத் தடுத்துக் கொண்டான். அவன் தேடித் தேடி அலையா மலேயே அவனுக்கு அட்டமாசித்திகளும் வசப்பட்டுவிடும்.

"அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது' என்கிறோம். அதாவது காற்று, மண், நீர், நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துவித சக்திகளால் அனைத்தும் உருவாகி, உயிராகி இயங்குகிறது என்று கூறுகிறோம். ஆனால் மண், நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய நான்கு சக்திகளும் ஜடப்பொருட்கள் ஆகும். இவை உயிர்பெற்று இயங்கவேண்டுமென்றால் முதல் சக்தியான "கடவுள்' காற்றின் அருளால்தான் முடியும். மனிதனின் உடல் மண்; ரத்தம் நீர்; நெருப்பு உடம்பின் சூடு; மனம் வெட்டவெளியான ஆகாயம். இவை இயக்கமில்லா சக்திகள். இவை நம்மைவிட்டு விலகாமல் ஒன்றாக உருவமாக இருக்கும். ஆனால் உயிர்தரும் கடவுளான காற்று மட்டும் நம்முள்ளே வந்துவந்து செல்லும். நிரந்தரமாக இருக்காது. வந்துவந்து செல்லும் காற்றை மட்டும் நாம் நம்முள் அடக்கிவிட்டால் மற்ற நான்கு சக்திகளும் அழியாமல் இருக்கும். மனிதன் சிவமாகி, சித்தனாவான்.

புலத்திய முனிவர் அகத்தியரிடம், ""சைவத்தமிழ் ஓதிய அகத்தியரே, சித்தர்களான நீங்கள் காற்றையே கடவுளாக வழிபட்டு சகல சக்திகளையும் பெற்றதாகக் கூறினீர்கள். கண்ணுக்குத் தெரியாத காற்றை எப்படி உங்களால் வழிபட முடிந்தது? உடம்பில் கட்டி அடக்க முடிந்தது? யாகம், பூஜை தவத்தால்தான் கடவுளைக் காணமுடியும்; அருள்பெற முடியும் என்று வடபுலத்தார் கூறும் நிலையில், நீங்கள் குண்டலினியால் கடவுளைக் கட்டினேன் என்கிறீர்கள். நீங்கள் கூறுவது நம்பமுடியாததாக அல்லவோ உள்ளது?'' என்று கேட்டார்.

""புலத்தியனே, நாங்களும் வாசிலிங்க உருவத்தை வணங்கி, அந்த வாசிலிங்க அருளால், அது தந்த வரத்தின் உதவியால்தான் அனைத்து சக்திகளையும் அடைந்தோம். அதனையும் கூறுகின்றேன்; அறிந்துகொள்'' என்றார்.

அது அடுத்த இதழில்...

வாசியோகம்

சித்தர்கள் கூறிய வாசியோக முறையில் எவ்வாறு தேர்வெழுது வது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். அதன்படி செய்தால் நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடுவீர்கள்.

வினாத்தாளை கையில் வாங்கியவுடன், முதலில் உங்களுக்குத் தெரிந்த கேள்விகளுக்கு பதிலை எழுதி முடித்துவிடுங்கள். அதன்பின் தெரியாத கேள்விகளுக்கு பதில் எழுதத் தொடங்குங்கள். வலப்பக்க மூச்சுக்காற்று ஓடஓட, பதில் தெரியாத கேள்வி களுக்குரிய பதிலைப் படித்ததும், வகுப்பில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததும் உங்கள் ஆழ்மனதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்தொடங்கும். உங்கள் மறதிவிலகி ஞாபகசக்தி வெளிப்படும்.

அந்த கேள்விக்குரிய பதிலையும் தெளிவாக எழுதமுடியும்.

படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் வேலை சம்பந்தமான மனு எழுதும்போதும், மனு செய்யும்போதும் வலப்பக்க மூக்குத் துவாரத்தில் மூச்சுக்காற்று ஓடும்போது செய்யுங்கள்.

வேலை சம்பந்தமான தேர்வுகளுக்குப் படிக்கும்போது மூச்சுக்காற்று இடப்பக்க மூக்குத்துவாரத்தில் ஓடும்போது படியுங்கள்.

உத்தியோகம் சம்பந்தமான தேர்வெழுதும் போது மூச்சுக்காற்று வலப்பக்கம் ஓடுமாறு செய்துகொள்ளுங்கள். இதேபோன்று வேலை சம்பந்தமான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளச் செல்பவர்கள், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளன்று காலையில் முறையாக ஓடவேண்டிய சுவாசம் ஓடுகின்றதா என்று கவனித்துக் கொள்ளுங்கள். அதன்பின் நீங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பும்போதும் மூச்சுக்காற்று வலப்பக்கத் துவாரத்தில் ஓடும்படி செய்துகொள்ளுங்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் அறைக்குள் நுழைந்தவுடன், தேர்வு செய்யும் அதிகாரிகளின் வலப்பக்கம் அமர்ந்துகொள்ளுங்கள். இப்போது அதிகாரிகள் உங்கள் இடப்பக்கம் அமர்ந்திருப்பார்கள். இப்போதும் உங்கள் மூச்சுக்காற்று வலப்பக்கம் ஓடவேண்டும்.

உங்களின் வலப்பக்கம் ஓடும் வாசி, அந்த இடத்தில் உங்களுக்கு உண்டான பயம், தளர்ச்சியைப் போக்கும். நாம் சொல்லும் பதில்கள் சரியா? தவறா என்ற தடுமாற்றத்தையும் சந்தேகத்தையும் போக்கிவிடும். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான பதிலை உங்களால் கூறமுடியும். தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களிடம் உருவாகிவிடும்.

போர்க்களத்தில் ஒரு போர்வீரன், எதிரியின் வாள்வீச்சு முறையை சரியாக கவனித்து, அதற்குத்தகுந்தபடி தன் கத்தியைவீசி எதிரியின் வாளைத் தடுத்து எப்படி வெற்றிபெறுவானோ, அதேபோன்று அதிகாரிகளின் கேள்விகளை நீங்கள் சுலபமாகப் புரிந்துகொண்டு, எந்தவிதப் படபடப்புமின்றி சரியான பதிலைக் கூறுவீர்கள். தேர்வு அறையில் நீங்கள் அமர்ந்துள்ள முறையும், அதிகாரிகளிடம் உங்களைப் பற்றிய ஒரு உயர்வான எண்ணத்தை உருவாக்கிவிடும். நேர்முகத்தேர்வில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உத்தியோகம், பதவி தரும் முதலாளிகளும், அதிகாரிகளும், வேலை கேட்பவர் அறிவு, ஆற்றல், எதனையும் செய்து முடிக்கும் திறமை, விடாமுயற்சி உள்ளவரா? வேலை செய்வதில் ஏமாற்றுக்குணம், திருட்டுக்குணம் இல்லாதவரா என்றுதான் பார்ப்பார்கள். எனவே நீங்கள் ஆற்றல், பகுத்தறிவு, உண்மை, திறமை நிறைந்தவராக உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். ஆளும் வளரவேண்டும்; அறிவும் வளரவேண்டும்.

"ஆச்சப்பா இந்தமுறை பதினெண்பேரும்

அயன்மாலும் அரனோடுந் தேவரெல்லாம்

மூச்சப்பா தெய்வமென்றே யறியச்சொன்னார்

முனிவர்கள் இருடியரிப் படியேசொன்னார்

பேச்சப்பா பேசாமல்நூலைப் பார்த்துப்

பேரான பூரணத்தை நினைவாய்க் காரு

வாச்சப்பா பூரணத்தைக் காக்கும்பேர்கள்

வாசிநடு மையத்துள் வாழ்வார்தானே!

(அகத்தியர்)

(பூரணம்- காற்று; இருடியர்- ரிஷிகள்)

சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

(மேலும் சித்தம் தெளிவோம்)