பாவ- சாப தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
18
கூடுவிட்டுக் கூடுபாயும் கொள்கையுடைய
குருவின்வல்ல பவமெவர் கூறவல்லவர்
வீடுபெறும் வகையை மேன்மேலும் காட்டும்
மெய்க்குரு வைப்பணிந்து நின்றாடாய் பாம்பே.
(குரு வணக்கம்)
இந்த பூமியில் வாழும் மனிதன், விலங்கு, மிருகம் முதலான உயிரினங்களின், ஆன்மாவின் நிலை பற்றி அகத்தியர் முதலான பதினெட்டு சைவத்தமிழ்ச் சித்தர்களும் கூறியுள்ள விளக்கத்தினை அறிவோம்.
ஆத்துமத்தின் கூறான ஆசைப்பேய் தன்னுடனே
கூத்துப்புரிகின்ற கோளறிவாய் பூரணமே!
ஆன்மா ஆசையில் ஆடிடும் தேகஆட்டம்
ஆன்மா ஆசை அற்றபோதே யாமுடல்வாட்டம்!
ஆசையென்னும் பசுமாய்ந்தால்
தாண்டவக்கோனே
அண்டமெல்லாம் கண்டறிவாய்
தாண்டவக்கோனே!
மனிதன், விலங்கு, பறவை போன்ற உயிர்களுக்கு உண்டாகும் ஆசை, பாசம், விருப்பு, வெறுப்பு, கோபம், எண்ணம், குணம் போன்றவைதான் அவற்றின் “ஆன்மா’ என்கிறார் இடைக்காட்டுச்சித்தர். இந்த கருத்தையே அகத்தியர் முதலான சித்தர்களும் மறுக்காமல் ஒன்றுபோலவே கூறியுள்ளனர்.
பூதம்- 5, அறிவுப்பொறி- 5, புலன்- 5, தொழிற்கருவி- 5, உட்கருவிகள்- 4 என இருபத்து நான்கு கருவிகளும் ஆசையை உண்டாக்கி ஆன்மாவை செயல்படவைத்து, மனிதர்கள் வாழ்வில் நன்மை, தீமைகளை அனுபவிக்கச் செய்கின்றன.
இந்த 24 கருவிகள்தான் ஆன்மாவின் செயல்நிலைக்கு ஆதாரம். இவை இல்லை யென்றால் மனிதர்களுக்கு ஆசையே தோன்றாது; ஆன்மாவும் செயல்படாது. ஞானி, மகான், சித்தர்கள் இந்த 24 கருவிகளை அடக்கியவர்கள்- ஆன்மாவை அடக்கியவர்கள்.
பூதம்- 5
மண், நீர், தீ, காற்று, வானம் ஆகியவற்றின் செயல்பாடு பற்றி ஒரு சிறிய விளக்கத்தை அறிவோம்.
மண்- உடல்: உயிரினம் வாழவும், தாவரங்கள் தழைக்கவும், மனிதர்கள் செல்வ வாழ்வு வாழத் தேவையான தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றையும், பசி தீர்க்க தானியம், தாகம் தீர்க்க தண்ணீர், நோய் தீர்க்க மூலிலிகை என அனைத்தையும் இந்த பூமியே மற்ற நான்கு பூதங்களின் சேர்க்கையால் தன்னுள் உருவாக்கி, உயிரினங்களுக்குத் தந்து, தேகவலிலிலிமையை உண்டாக்குகின்றது. இந்த மண்ணிலிலிருந்து கிடைக்கும் அனைத் துப் பொருட்களும் உயிரினங்களின் சரீரம் பலம் பெறவும், பயன்படுத்தவும் மட்டுமே உகந்ததாக உள்ளன. எனவே உயிரினங்களின் உடலை “மண்’ என கூறினார்கள்.
நீர்- ரத்தம்: சரீரத்தில் சிறுநீர், செந்நீர் (ரத்தம்), மூளை, மஜ்ஜை, விந்து என்ற ஐந்து நிலைகளில் நீர்சக்தி செயல்படுகிறது.
தீ (வெப்பம்): உடம்பிலுள்ள சுவாசக்காற்றும், நீர்சக்தியும் இணைந்து வெப்ப சக்தியை உண்டாக்குகிறது. இந்த சக்தி உயிரினங்கள் உண்ட உணவு செரிமானம், உறக்கம், அச்சம், புணர்ச்சி, சோம்பல் என ஐந்து செயல்களை உண்டாக்குகிறது,
காற்று (சுவாசம்): அண்டவெளி என்ற ஆகாயத்தில் காற்று எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. இந்த காற்று சரீரத்தின் உள்சென்று உயிர்சக்தியாக இருந்து ஆன்மாவை இயங்கச்செய்கிறது. மனம் எங்குண்டோ காற்று அங்குண்டு. காற்று அசைவுள்ளபோது மனம், சித்தம் அசையும். காற்றில்லா விடில் மனம், சித்தம் இயங்காது.
வானம்: இது ஒன்றுமே இல்லாத வெட்டவெளியாகும். ஆகாயத்தில் கோள்கள், நட்சத்திரங்கள், மேகம் என தன்னுடன் எது தோன்றுகின்றதோ, அவையனைத்தையும் தன்னுள் இருப்பதுபோன்று காட்டும். சிவப்பு, நீலம், கருப்பு, மஞ்சள் என பல நிறங்களில் அவ்வப்போது நிறமாற்றம் அடைவது. தன்னிடம் இருப்பதுபோல் தோன்றும் பொருட்களாலும் நிறத்தாலும் அடிக்கடி வானம் நிலைமாறிக்கொண்டே இருக்கும். வானம் நிறமும் உருவமும் இல்லாதது. நிறமும் உருவமும் இல்லாதது. காற்று மட்டுமே வானத்தில் உள்ளது என்பதே உண்மை. இதேபோன்று மனிதனின் ஆன்மா, மனம் காற்றால் நிரம்பி, காற்றால் இயங்கி, அடிக்கடி தன் எண்ணம், குணம் ஆகியவற்றைத் தன்னுடன் எது சேர்கிறதோ அவற்றைப்போல் மாற்றிக்கொள்வதால், ஆன்மாவை வானத்திற்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள்.
அறிவுப் பொறிகள்- 5, புலன்கள்-5
மூக்கு, நாக்கு, கண், காது, உடல் இவை ஐந்தும் அறிவுப்பொறிகள். மூக்கு சுவாசக் காற்றால் உயிரைத் தந்து ஆன்மாவையும் மனதையும் இயக்குகிறது. நாக்கின் உதவியால் ருசியான உணவை உண்டு உடலுக்கு பலத்தைப் பெறுகிறோம்.
கண்களின் உதவியால் பிரபஞ்சத்தில் உள்ளவற்றைப் பார்க்கிறோம். காதுகளின் உதவியால் பிறர் பேசுவதையும், ஓசை, ஒலியையும் கேட்கிறோம். சுவாசித்தல், உண்ணுதல், பார்த்தல், கேட்டல் என அனைத்தையும் தன் சுய அறிவால் நன்மை, தீமைகள் அறிந்து வாழச்செய்வதால் இவற்றை அறிவுப் பொறிகள் என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
நாற்றம், சுவை, ஒளி, ஓசை, ஊறு ஆகியவை ஐம்புலன்கள்.
தொழில் உறுப்பு- 5
வாய், கை, கால், குறி, மலவாயில் ஆகிய ஐந்தும் அறிவுப் பொறிகளால் உணர்த்தப்பட்டு, ஆன்மா, மனம் ஆசைப்பட்டதை அடையும் வண்ணம் செய்துமுடிக்கும் தொழில் ஏவல் உறுப்புகள் ஆகும்.
மேற்சொன்ன இருபதும் உடலிலிலுள்ள வெளிப்புறக்கருவிகள் ஆகும்.
உட்கருவிகள்- 4
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும் ஆன்மாவின் செயல்களாகும். இவற்றால்தான் மனித வாழ்வில் விருப்பு, வெறுப்பு, உறவு, பகை, ஊரும் காணியும் தேடிப்பற்றுதல், குடும்ப விருத்திக்காக பெண்டு, பிள்ளைகள் ஆசை, வாழ்வு சுகமானதாக அமைய பொன், பொருள் தேடுதல், தன் நலத்தை மட்டும் விரும்பி, தன் குடும்பத்தாருக்கும் சமுதாயத்திலும் செய்யக்கூடாத தவறுகளைச் செய்து பாவ- சாபப் பதிவுகளை அடைந்து, இந்த பூமியில் அடுத்தடுத்த பிறவிகளைத் தானே உருவாக்கிக்கொள்ளுதல் போன்றவை நடக்கின்றன.
தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், உறவுகள் என தன் குடும்பத்தாருக்கு நன்மைகளைச் செய்தும், பொதுநல எண்ணத்தால் பிறருக்குத் தீமை செய்யாமலும், பிறர் பொருளை அபகரிக்காமலும், பிறரின் அன்பையும் ஆதரவையும் பெற்று புண்ணியப் பதிவுகளை அடைவதும்; தன் சுய அறிவால் தன் பிறவி நிலையை அறிந்து, தன் முன்வினைப் பதிவுகளை நடைமுறை செயல்களால் நிவர்த்தி செய்து, மோட்சநிலைக்கு முயற்சித்து வாழ்தல் போன்ற அனைத்தையும் செய்வது அல்லது மாயையை நம்பி வாழ்ந்து பிறவிகளைத் தொடரச் செய்வது, வாழ்வில் பெருமையையும் வறுமையையும் உண்டாக்கி வைப்பது இந்த உட்கருவிகள்தான்.
“உடலுயிரும் பூரணமும் மூன்று மொன்றே
உலகத்திற் சிறிதுசனம் வெவ் வேறென்பார்’
என்கின்றார் அகத்தியர்.
உடல், உயிர், ஆன்மா இவை மூன்றும் இணைந்திருந்து செயல்பட்டால்தான் மனிதன் வாழமுடியும். காற்றினால் உண்டாக்கப்படுவது உயிர்; அந்த உயிரினால் செயல்படுவது ஆன்மா; இந்த ஆன்மாவை மனம், சித்தம், உள்ளம் என பல வகையான பெயர்களில் கூறுவார்கள். ஆன்மா தான் விரும்பிய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கும்போது, அதனை நிறைவேற்றி வைப்பது உடலாகும்.
சித்தர்கள் கூறிய இந்த 24 உறுப்புகள்தான் ஆன்மாவை இயக்கி, ஆசையை உண்டாக்கி, மனிதனை செயல்பட வைக்கிறது. ஆன்மா இயங்க பஞ்ச பூதச் சேர்க்கையே ஆதாரமாக உள்ளது. மண், நீர், தீ, காற்று ஆகியவை இயற்கையாக ஒன்றுடன் ஒன்று சேராது. ஆனால் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது.
இந்த பஞ்சபூத சக்திகளைத் தவிர வேறு எந்த சக்தியாலும் ஒரு உயிர், உடல், ஆன்மாவுள்ள ஜீவனை உருவாக்க முடியாது. இந்த உண்மைகளை உணர்ந்த சித்தர்கள், பஞ்ச பூதங்களை ஆராய்ந்து அவற்றின் சூட்சும ரகசியத்தை அறிந்தார்கள்.
மனிதர்கள் உடம்பில் கழுத்திற்கு மேலுள்ள கண், காது, மூக்கு, வாய், மூளை ஆகியவை பிரபஞ்ச வெளியிலிலிலிலிருக்கும் பொருட்களை, நிகழ்வுகளை நம்முள் கொண்டு வருபவை. இந்த உறுப்புகளால் அறிந்ததை மனிதன் மூளைப்பகுதி பகுத்தறிந்து தனக்கு நன்மையானது எது? தீமையானது எது என்று மனதிற்கு உணர்த்தும் முதல்நிலைக் கருவிகளாகும். தனது சுய அறிவால் நன்மையானதை அறிந்து வாழ்பவர் அந்தணப் பெரியவர்கள் என்று கூறுகின்றார்கள் சித்தர்கள். அறிவுடையோர் எல்லாரும் முகத்தில் பிறந்தவர்கள். பிறப்பால் அந்தணர் யாரும் இல்லை.
மார்பு, இதயப்பகுதியாகும். இந்த இதயத்தில்தான் நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் நீர் என அனைத்தும் ரத்தமாக மாறி உடலிலின் அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது. அதேபோல் இதனை மனம், உள்ளம் உள்ள பகுதி என கூறுவார்கள். இந்த இதயப் பகுதியில்தான் எண்ணம், ஆசை, வீரம், கோபம், விரோதம் என அனைத்தும் உருவாகின்றன. இது ஆன்மாவின் இருப்பிடம் என கூறுவார்கள். இதன் செயலால்தான் நம் உடம்பு, உயிர், ஆன்மா என அனைத்தையும் காப்பாற்றிக்கொள்கின்றோம். எனவே இதனை சத்திரியன் என ஒரு அரசனுக்கு நிகராகக் கூறினார்கள். தன் சுய அறிவு, உழைப்பால் தன் வாழ்வில் எவன் உயர்வை அடைந்து வாழ்கிறானோ அவனே சத்திரியன்.
வயிற்றுப் பகுதி நாம் உண்ணும் உணவை ஜீரணம்செய்து, நமது உடல் செயல்பாட்டிற்குத் தேவையான எரி பொருளையும் சக்தியையும் தருகின்றது. மனிதனின் உணவான தானியம், நீர் என அனைத்தும் வயிற்றுப்பகுதியில் முதலிலிலில் சேர்ந்து, பின் பலவிதமான மாற்றங்களை அடைந்து இதயப் பகுதிக்குச் செல்லும்- ஒரு வியாபாரியிடமிருந்து பொருட்கள் பல இடங்களுக்குச் செல்வதுபோல். இது வியாபாரியைக் குறிக்கும். இதேபோன்று, விந்து, கருப்பை பகுதி உயிரினம் உருவாக்கம் செய்யும் பகுதியாகும்.
கால்கள், கைகள், நம் மனம் இடும் கட்டளையையும், நமக்குத் தேவையான உணவு தேடுதல், பொருள் தேடுதல் என அனைத்தையும் தன் உழைப்பால் தேடி உடலுக்குத் தரும் அடிமை நிலைக் கருவிகளாகும். புத்தியும், மனமும் இடும் கட்டளையை தனக்கு நன்மை, தீமை அறியாமல் நிறைவேற்றும் வேலையாள் ஆகும்.
மனிதன் பிரித்துவைத்த சாதிகள் பிறப் பால் அல்ல. ஒவ்வொரு மனிதனிடமும் அந்தணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நிலை உண்டு. அவரவர் செயல்மூலமே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பேதங்களை ஒருவன் அடைகிறான்.
ஆன்மாவைப்பற்றி இன்னும் அறிவால் அறிவோம்; தெளிவோம்.
வாசி யோகம்
மனிதர்களின் வாயில் ஊறும் எச்சில் போன்றே, நமது உடம்பிலிலிருந்து வெளியாகும் வியர்வை நீரையும் மனிதன் விரயம் செய்யாமல் சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
எங்கள் கிராமத்தில் வசித்த சித்த வைத்தியர் கணபதிப்பிள்ளை, சிறுவர்கள் மாலையில் விளையாடும்போது அவரும் இருப்பார். விளையாடும்போது உடம்பில் உண்டாகும் வியர்வையைத் துண்டினால் துடைக்கும்போது, அப்படி துடைக்கக்கூடாது என்று தடுத்துவிடுவார்.
வியர்வையை எங்கள் கைகளினால் மறுபடியும் உடம்பிலேயே தேய்த்துக் கொள்ளச் சொல்வார். தோல் துவாரங்களின் வழியாக வெளியேறும் வியர்வை நீரை கைகளினால் உடம்பில் தேய்க்கும்போது நமது உடம்பு வியர்வையை உள்வாங்கி தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும். வியர்வை நீரிலுள்ள உப்புச்சத்து மேல்தோலிலில் தங்கிவிடும். இதேபோன்று தலையில் உண்டாகும் வியர்வை நீரையும் கையால் தேய்த்துவிடச் சொல்வார்.
மனிதர்கள் வேலை செய்வதால், விளையாடுவதால் வியர்வை உண்டாகும். இந்த வியர்வை நீர் உடம்பில் உள்ளபோது அப்படியே குளிக்கக்கூடாது. வியர்வை நீர் உலர்ந்து காய்ந்தபின் தான் குளிக்கவேண்டும் என்று கூறுவார். வியர்வை நீர் உள்ளபோது குளித்தால் உடனே சளி பிடிக்கும்; உடல் உஷ்ணத்தில் மாற்றங்கள் உண்டாகும்.
மனிதன் தன் உடம்பிலிருந்து சிறுநீர், கண்ணீர், மலத்தை மட்டுமே வெளியேற்ற வேண்டுமே தவிர, வேறு எந்த வகையிலும் நம் உடம்பில் உள்ள நீர் வெளியேறாமல், நீர் சத்து குறையாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
மனிதர்கள் முக்கியமாகப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய மற்றொன்று விந்து நீர் ஆகும். இந்த பூமியில் மனிதர்களைத் தவிர விலங்கு, பறவை, மிருகம் போன்றவை தன் இனத்துடன் சேர்ந்து கரு உண்டாகிவிட்டால், அதன்பின் இனச்சேர்க்கையில் ஈடுபடாது. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் தங்கள் மனதை அடக்கும் சக்தியை இயற்கையாகவே பெற்றுள்ளன. ஆனால் ஆறறிவு உள்ளவன் என்று கூறிக்கொள்ளும் மனிதன் மட்டும் தன் மனதை அடக்கமுடியாமல், தன் விந்து நீரைப் பலவழிகளில் விரயமாக்கி தன் சரீரத்தை பாழ்படுத்திக்கொள்கிறான்.
இந்த பூமி செழிப்பாக, உயிரோட்டத் துடன் இருக்க நீர்சத்து அவசியம். நீரில்லாத வறண்ட பூமியில் உயிரினங்கள் வாழமுடியாது. தாவரங்கள் தழைக்க முடியாது. இதேபோன்றுதான் நீர்சத்து குறைந்தால் அந்த உடல் வறண்ட பூமி போன்று வலுவற்ற நிலையை அடைந்துவிடும். உயிர்களை உற்பத்தி செய்யாத மலட்டு நிலையை அடைந்துவிடும்.
இன்றைய மனிதன் தண்ணீரை வீணாக்கி, அலட்சியப்படுத்தி, இந்த பூமியை வறட்சியாக்கத் தொடங்கிவிட்டான். மலை வளமும், மழைநீர் வளமும் இல்லாத நமது தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான ஆறு, ஏரி, குளம் இவற்றை ஆட்சி செய்வோர் பாதுகாக்கத் தவறிவிட்டாலும், நமது வருங்கால சந்ததியினர் நீரின்றித் தவிக்காமலிருக்க ஒவ்வொரு குடிமகனும் நீரைப் பாதுகாக்க உறுதிகொள்ளவேண்டும்.
“புகலுவார் வேதமெல்லாம் வந்ததென்றே
பொய்பேசும் சாத்திரங்கள் மிகவும் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோமென்றே
அறிவுகெட்டே ஊர்தோறுஞ் சுற்றிச்சுற்றி
சகலமும் வந்தவர்போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி
இகலுமனம் அடங்காமல் நினைவு வேறாய்
எண்ணமெல்லாம் பெண்ணாசை பூசைதானே..
(கருவூர் சித்தர்)
சித்திரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.