(பாவ- சாப தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!

சித்தர்தாசன் சுந்தர்ஜி

17

"காயம்நிலை யழிகையைக் கண்டு கொண்டபின்

Advertisment

கற்புநிலை யுள்ளிற்கொண்டெக் காலமும்வாழும்

தூயநிலை கண்டபரிசுத்தக் குருவின்

துணையடித் தொழுதுநின்றாடு பாம்பே.'

Advertisment

(குரு வணக்கம்)

இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும், உடல், உயிர், ஆன்மா என்ற மூன்றின் கூட்டமைப்பு இயக்கம் என்கிறார்கள். உடலை கண்ணால் காண்கிறோம்.

உயிர் இருப்பதை பிறப்பு, மரணம் என்ற இரு நிகழ்வு களால் அறிகிறோம். ஆனால் ஆத்மாவைப் பற்றிய விளக்கங்களை மட்டும் மதகுரு மார்கள் பலரும் பலவிதமாகக் கூறுகிறார்கள்.

கூடஸ்தர்கள்: பிரம்மத்தை அறிவதே ஆத்மாவை அறிதல்.

லௌகீகர்கள்: தேகம், புத்திர, களத்திராதிகளே ஆத்மா.

உலகவாசிகள்: அவரவர் தூல சரீரமே ஆத்மா.

சார்வார்கள்: மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய பஞ்சேந்திரியங்களே ஆத்மா.

சார்வாக ஏக தேசர்கள்: பிராண வாயு போன பின்பு உடல், இந்திரிய இயக்கம் இல்லாத தால், பிராண வாயுவே ஆத்மா.

உபாசகர்கள்: மனம் இயங்காதபோது பிராண வாயு நீங்கிவிடுவதால் மனமே ஆத்மா.

கணிதவாதியர்: புத்தி செயல்படாதபோது மனம் பேதப்பட்டுவிடுவதால் புத்தியே ஆத்மா.

பௌத்தர்கள்: ஒன்றுமில்லாத சூனிய நிலையே ஆத்மா.

பாட்டாச்சார்யர்கள்: உடம்பிலுள்ள அனைத்து சக்திகளே ஆத்மா.

திகம்பரர்: கால்முதல் தலைவரை அறிவு வியாபித்திருப்பதால் ரூபமே ஆத்மா.

சாங்கியர்: "ஆத்மா' என்பது அறிவாகவும், பூரணமாகவும் இருந்து உயிர்களுக்கு சுக, துக்கத்தைக் கொடுப்பதால் அவரவர் சுபாவமே ஆத்மா.

பதஞ்சலி மதத்தார்: மனிதன், பிராணி களின் மனதில் மறைந்திருப்பதுவே ஆத்மா.

அந்தராளர்கள், ஆகமஸ்தர்கள்: சூட்சும நாடியில் அணுவே ஆத்மா.

தார்க்கீகர், பிரபாகர்: ஆத்மா பரிபூரணமென்னும் சடம்.

பாட்டர்: ஆத்மா சுழுத்தியில் சடமாகவும், செயல்களில் அறிவாகவும் இருப்பதால் இதனை "சத்சித்' என்பர்.

சிவயோகியர்: மனித சுபாவத்தை ஒழுங்குபடுத்தி நடத்துவோன் இல்லாததால் அவரவர் செயலாகவும், உத்தரவிட்டுக் கட்டுப்படுத்துபவர்- காப்பாற்றுபவர் இல்லாததால் சிவபெருமானே சீவராசிகளின் ஆத்மா.

வைணவர்கள்: கிருஷ்ணன் விஸ்வ ரூபமெடுத்து அண்டம் முழுவதும் வியாபித்து நின்றதாலும், தன் வாயில் ஆகாயம், அண்டம், சூரியன், சந்திரன், பூமியிலுள்ள கடல், மலை, ஜீவராசிகள் என அனைத்தையும் காட்டியதாலும் கண்ணனின் விராட் விஸ்வரூபமே எல்லா உயிர்களிடத்தும் ஆத்மாவாக உள்ளது.

ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஞான காண்டத்தில், தைத்ரிய உபநிஷத்தில், "அறிவே பிரம்மம் என்ற ஆத்மாவாக உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

யஜுர் வேத ஞான காண்டத்தில், அயித்திரிய உபநிஷத்தில், "அகம் பிரம்மாஸ்மி- ஒருவரின் அகமே ஆன்மா- அதாவது மனிதனே பிரம்மம்; அவனே ஆத்மா' என்று கூறப்படுகிறது.

சாமவேத ஞான காண்டத்தில், சாந்தோக்ய உபநிஷத்தில், "தத்த்வம் அசி' என்ற வாக்கியம்மூலம் "நீயே உன் ஆத்மா' என்று கூறப்பட்டுள்ளது.

அதர்வண வேத ஞான காண்டத்தில், மாண்டோக்ய உபநிஷத், "மனிதனுடைய ஆத்மாவே பிரம்மமாய் விளங்குகின்றது' என்கிறது.

இத்தகைய விளக்கங்களைப் பற்றி

siddhar

அகத்தியர் கூறும்போது-

"பாரப்பா நால்வேதம் பாருபாரு

பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி

வீணப்பா ஒன்றுக்கொன்றை மாற்றி

வீணிலே யவர் பிழைக்கச் செய்த மார்க்கம்

தேரப்பா தெருத் தெருவே புலம்புவார்கள்

தெய்வ நிலை யொருவருமே காணார்

ஆரப்பா நிலைநிற்கப் போறாரையோ

ஆச்சரியங் கோடியிலே யொருவர்தானே'

என்கிறார். அகத்தியர் முதலான சைவத்

தமிழ்ச் சித்தர்கள் கூறிய சைவ சித்தாந்தத்தில் ஆத்மா எது? ஆத்மாவின் செயல்பாடுகள் என்ன என்று அடுத்த இதழில் அறிவோம்.

வாசி யோகம்

குதம்பைச் சித்தர் மனிதனின் வாயில் ஊறும் எச்சிலின் உயர்வைப் பற்றிக் கூறுவதைக் காண்போம்.

"மாங்காய்ப் பாலுண்டு

மலைமேல் இருப்போர்க்கு

தேங்காய்ப் பால் யேதுக்கடி- குதம்பாய்

தேங்காய்ப்பால் யேதுக்கடி.'

மலை, குகை, வனங்களில் வசிக்கும் சித்தர் பெருமக்கள் தங்கள் வாயில் ஊறும் எச்சில் நீரை விழுங்கியே தங்கள் பசி, தாகத்தைப் போக்கிக்கொள்வார்கள். தேவைப்பட்டால் மட்டுமே காட்டில் கிடைக்கும் பழங்களை சாப்பிட்டு அருவிநீரைக் குடிப்பார்கள். சுவாசக் காற்றின்மூலமும் தங்கள் உடலுக்குத் தேவையான சக்தியை அடைந்து கொள்வார்கள். தங்கள் எச்சிலை விழுங்கியே பல வருடம் வாசியோகம், குண்டலினி யோகம் செய்து அட்டமா சித்திகளை அடைந்துவிடுவார்கள்.

சித்தத்தை அடக்கி, ஆன்மாவைக் கட்டி, ஆசையை விலக்கி, ஞானநிலையில் வாழும் எங்களுக்கு மற்ற சாதாரண மனிதர்கள் உண்ணும் உணவு பசி தீர்க்கத் தேவையில்லை என்கிறார் குதம்பைச்சித்தர்.

மாங்காய்ப் பால் என்று எதைக் கூறுகிறார் என்பதை அறிவோம்.

மனிதர்கள், விலங்குகளின் உடம்பிலுள்ள உறுப்புகளில் இதயம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், கணையம் என அனைத்தும் ஒரு குலையில் மாங்காய்கள் கொத்தாக இருப்பதுபோல் இணைந்தே இருக்கும். இந்த உறுப்புகள் அமைந்திருக்கும் நிலையை பாமரமக்கள் "ஈரல் குலை' என்று கூறுவார் கள்.

இந்த குலைப் பகுதியில்தான் நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு ஜீரணமாகி, ரசமாக்கப்பட்ட சத்து என அனைத்தும் ரத்தமாகவும், தசையாகவும், தைராய்டு, இன்சுலின், பித்தநீர், வாதநீர், எச்சில்நீர், நிணநீர் என சுரப்புகளாக மாற்றப்பட்டு, உடம்பின் மற்ற பாகங்களுக்கு ஈரல் குலையிலிருந்து பிரித்தனுப்பப்படுகிறது. அதேபோல் விந்து உற்பத்தியாகும் விதைப்பகுதியானது ஒரு காம்பில் இரண்டு மாங்காய் தொங்குவதுபோல் அமைந்துள்ளது. எனவேதான் இந்த சுரப்பு பாகங்களை மாங்காய் என்றும், சுரப்பு நீரினை மாங்காய்க் காம்பினை ஒடிக்கும்போது வரும் பாலுக்கும் ஒப்புமைப்படுத்தி குதம்பைச் சித்தர் கூறுகிறார்.

எங்கள் கிராமத்தில் நான் சிறுவனாக இருந்தபோது "கணபதி வைத்தியர்' என்றொரு சித்த வைத்தியர் இருந்தார். அவரிடம் நோய்க்கு வைத்தியம் பார்க்க வருபவர்களுக்கு, நாடிபிடித்துப் பார்த்து நோயறிந்து மருந்து தருவார். அவர் தரும் மருந்தை ஒரு பூவரசு மரத்தின் இலையில் வைத்து, அவரவர் எச்சிலை மருந்தில் துப்பிக் குழைத்துச் சாப்பிடச் சொல்வார். அதேபோன்று சொறி, சிரங்கு, புண்கள், கட்டிகளுக்கு மருந்து தந்து, அவரவர் எச்சிலில் குழப்பி காயம், கட்டிகள்மீது பற்றாகப் போடச்சொல்வார். அவர் தரும் மருந்துடன் அவரவர் எச்சிலைப் பயன்படுத்தும்போது நோய் முற்றிலும் குணமாகிவிடும்.

அவர் எப்போதும் ஏதாவது ஒரு சித்தர் பாடலைப் பாடிக்கொண்டிருப்பார். பிறர் எதைப் பற்றியாவது கேள்வி கேட்டால், அதற்குரிய ஒரு சித்தர் பாடலைப் பாடிவிட்டு தான் பதிலைக்கூறுவார். அப்போது எனக்கு பத்து வயது; அவருக்கு சுமார் 90 வயதிருக்கும். மெலிந்த தேகம், அந்த வயதிலும் கோலூன்றி நடக்காமல் மிடுக்காக நடப்பார். ஒரு பல் கூட விழவில்லை.

ஒருநாள் நான் அவரிடம், "தாத்தா, எச்சிலில் மருந்து சாப்பிட்டால் தப்பில் லையா? ஒருவர் எச்சில் மற்றொருவர்மேல் படக்கூடாது; எச்சிலை மிதிக்காமல் பார்த்து நடக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றார்களே. ஆனால் நீங்கள் தரும் மருந்தையெல்லாம் எச்சிலில் குழைத்துச் சாப்பிடச் சொல்கிறீர்களே' என்று கேட்டேன்.

பத்து வயது சிறுவனான என்னையும் மதித்து பதில் கூறினார். "பேரப்பயலே, ஒருவர் எச்சில்தான் மற்றவருக்கு விஷமாகும். ஆனால் அவரவர்க்கு அமுத நீராகும். இரவில் தூங்கும்போது உன் எச்சிலை விழுங்காதே. காலையில் எழுந்து பல் தேய்த்தபின்பு உன் வாயில் ஊறும் எச்சிலைத் துப்பிவிடாதே. நாள் முழுவதும் விழுங்கிவிடு. சளியை துப்பிவிடு; எச்சிலை விழுங்கிவிடு. நோய்கள் வராமல் உன் எச்சில் தடுக்கும். வந்த நோய் களை குணப்படுத்தும்' என்று கூறினார்.

அவர் தன்னிடம் வைத்தியம் பார்க்க வருபவர்களிடம் காசு வாங்கமாட்டார். காசு கொடுப்பவர்களைத் திட்டி அனுப்புவார்.

இதற்கு அவர் சொல்லும் காரணம், "நான் மருந்து மூலிகைகளை காடு, மலைகளில் சென்று தேடிக்கொண்டு வருவதில்லை. நமது ஊரிலுள்ள பாதைகளின் ஓரத்திலும், வயல்வெளியிலும் தானாக வளர்ந்து கிடக்கிறது. எனக்கு இலவசமாகக் கிடைப்பதைப் பறித்து இலவசமாகத் தருகிறேன்'' என்று கூறுவார். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு, பகல் எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் சென்று வைத்தியம் செய்வார். இதற்கு சைவ சித்தாந்த கருத்து ஒன்றையும் கூறினார்.

"பேராண்டி, இந்த பூமியில் மனிதன், விலங்கு, பறவை என அனைத்து உயிரினங்களுக்கும் முக்கியமானது அவற்றின் உயிர், உடல், ஆன்மா ஆகிய மூன்றும்தான். இந்த மூன்றுக்கும் எந்தவித பாதிப்பு இல்லாமலும், பாதிப்பு ஏற்பட்டால் காப்பாற்றுவதும் ஜோதிடம், மருத்துவம், நீதிமுறை ஆகிய மூன்றும் தான்.

ஒரு மனிதன் தன் பூர்வஜென்ம பாவ- சாபப் பதிவுகளால் இப்பிறவியில் அனுபவிக் கும் கஷ்டங்களை முறையாக அறிந்து, அதற்கு சரியான நிவர்த்தி முறைகளைக்கூறி, தன்னை நாடிவந்தவர்களை ஊழ்வினை பாதிப்புகளில் இருந்து காப்பாற்றி, நிம்மதியாக வாழ வழிகாட்டுவது ஜோதிடம். இதனை ஜோதிடர் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் செய்யவேண்டும்.

ஒரு மனிதனுக்கு மற்றவர்களால் உண்டாகும் தீமை, இழப்புகளை அந் நாட்டை ஆட்சி செய்யும் அரசன், காவல் அதிகாரிகள், நீதி வழங்கும் நீதிமான்கள் நேர்மையான முறையில் விசாரணை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி வழங்கவேண்டும். ஜோதிடமும், நீதித்துறையும் ஒரு ஆத்மாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நீக்கி, உயிரைக் காப்பாற்றி நிம்மதி அடையச் செய்யவேண்டும்.

உடலுக்கு உண்டாகும் நோய்களை நீக்கி நலம் தரும் மருத்துவர்கள், தாங்கள் செய்யும் மருத்துவத்திற்கு பணம் பெறாமல் அல்லது நியாயமான ஒரு தொகை பெற்றுக்கொண்டு நோய் நீக்கி வாழவைக்க வேண்டும்.

உயிரைக் காப்பாற்றி நீண்டநாள் வாழ வழிகாட்டும் சித்தர்கள் அருளிய வாசி யோகம், குண்டலினி யோகம், மூச்சுக்காற்றுப் பயிற்சி முறைகளை பணம் பெறாமல் கற்றுத்தரவேண்டும்.

உடல், உயிர், ஆத்மா ஆகிய மூன்றையும் காப்பாற்றும் நிலை பெற்றவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். கடவுள் தன்னை நாடிவருபவரிடம் காசு, பணம், சொத்து கொடு என்று கேட்க மாட்டார். எனவே நான் இப் பிறவியில் எனக்கு வரமாகக் கிடைத்த மருத்துவத்தொழிலை சித்தர்கள் கூறியபடி இலவசமாக , எந்த நேரமும் செய்துவருகி றேன்' என்று கூறினார்.

என்னுடைய பத்து வயதில் அன்று எனக்குப் புரியவில்லை. இன்று எவ்வளவு பெரிய ஞான தீட்சையை அன்றே அடைந்துள்ளேன் என்று புரிகிறது.

"எச்சிலெச்சி லென்று

நீரிடைந்திருக்கு மேழைகாள்

துப்புலெச்சி லல்லவோ

தூய காய மானதும்

வைச்சலெச்சில் தேனலோ

வண்டினெச்சில் பூவலோ

கைச்சுதாவில் வைத்துடன்

கறந்தபாலு மெச்சிலே.'

(சிவவாக்கியர்)

சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

(மேலும் சித்தம் தெளிவோம்)