20

"கற்பகாலம் கடந்தாதி கர்த்தாவோடுங்

கடமழியாது வாழும் காரணக்குரு

பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல்செய்து

Advertisment

பூரணச் சிந்தையோ டாடாய்பாம்பே.'

(குரு வணக்கம்)

அகத்தியரிடம் நேரடியாக சித்தஞானம் கற்ற மாணவர்கள் புலத்தியர், தேரையர், சுந்தரானந்தர் ஆகிய மூவர்தான் என அகத் தியர், தன் பாடல்கள் மூலம் கூறியுள்ளார். மற்ற சித்தர்கள், அகத்தியர் அருளிய சைவ சித்தாந்த ஞான வழிமுறைகளைக் கடைப் பிடித்து, பயிற்சிசெய்து அட்டமகாசித்தி களையும் அடைந்து, மரணத்தை வென்று அகத்தியர் அருள்பெற்று சித்தர்கள் வரிசை யில் இணைந்தவர்கள்.

Advertisment

இந்த பூமியில் மனிதனாகப் பிறந்து, சித்த ஞானத்தைக் கடைப்பிடித்து, குண்டலினி யோகமுறையில் பயிற்சிசெய்து, பஞ்சபூத சக்தியைத் தன் உடம்பில் கட்டியவர்கள்தான் சித்தர் நிலையை அடையமுடியும். இன்று நாம் யார்யாரையோ சித்தர்கள் என கூறுகிறோம்.

இன்னும் சிலர் தாங்களே தங்களை சித்தர் என அழைத்துக்கொள்கிறார்கள். இன்றைய நாளில் படிக்காமலேயே "டாக்டர்' பட்டம் வாங்குவதுபோல், சித்தர் பட்டம் வழங்கப் பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் வாழ்வுமுறை, பண்பாடு, நாகரிகம், தமிழ்மொழி என அனைத்தையும் உருவாக்கித்தந்து, அதனைக் கடைப்பிடித்து மக்கள் தங்கள் சுயஅறிவால் வளமான வாழ்வையும் புகழையும் அடைய வழிகாட்டிய முதல் தமிழ்க் குடிமகன் அகத்தியர்தான்.

புலத்திய முனிவர், அகத்தியரிடம் ஞானம் சம்பந்தமான தன் சந்தேகங்களுக்கு விளக்கங் களை அறிந்து, அறிவுத் தெளிவு பெற்றுள் ளார். இதில் சிலவற்றை அறிவோம்.

புலத்தியர்: அகத்தியர் பெருமானே, இந்த பூமியில் ஆன்மாவின் செயல்பாடு, ஆறறிவுள்ள மனிதர்களுக்கு மட்டும்தானா? அல்லது இந்த பூமியில் வாழும் மிருகம், விலங்கு, பறவையினங்களுக்கும் உண்டா?

அகத்தியர்: புலத்தியனே, நீ "பிரம்மயோகி' என்ற உயர்வான ஞானநிலையை அடைந் தவன். நீ அறியாதது ஒன்றுமில்லை. நாம் இருவரும் பஞ்சபூதம், உயிர், உடல், ஆன்மா பற்றிய சூட்சுமங்களை சைவ ஞானத்தால் அறிந்து வருகிறோம். ஆனால் அவ்வப்போது நீ ஒன்றும் அறியாத பாமரனைப் போன்று கேள்விகளைக் கேட்கின்றாய். இது நீ அறிந்து கொள்ளவா? அல்லது அகத்தியன் யான் அறிந்துள்ளேனா என என்னை சோதிக் கிறாயா?

புலத்தியர்: அறிவில் சிறந்தவரே, இந்த பூமியில் ஒவ்வொரு மனிதனும் மனமாயை நீக்கி, நடைமுறை வாழ்வில் உண்மை, பொய் அறிந்து நல்லறிவுடன் தன்னையறிந்து நல்வாழ்வு வாழவேண்டும். இதைத்தவிர என் கேள்விகளில் எந்த உள்நோக்கமும் இல்லை. உலக மாந்தர்களுக்கு உண்மை விளக்கம்கூறி தெளிவுபடுத்துங்கள். அகத்தியர் ஞானம் அனைவரையும் காப்பாற்றட்டும் ஆசானே.

அகத்தியர்: நண்பனே, நான் உருவாக்கிய தமிழ்மொழிக்கே உயிர், உடல், ஆன்மாவின் செயல்பாடு இருக்கும்போது, இந்த பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஆன்மாவின் நிலை இருக்காதா? அவற்றுக்கும் ஆன்மாவின் செயல்பாடு உண்டு.

புலத்தியர்: சைவத்தமிழ் ஓதிய அகத்தியரே, தாங்கள் கூறுவது எனக்கு அதிசயமாக உள்ளது. தாங்கள் உருவாக்கிய தமிழ் மொழிக்கு, எழுத்துகளுக்கு உயிர், உடல், ஆன்மாவின் நிலை உண்டா? விளக்கமாகக் கூறுங்கள்.

அகத்தியர்: சில மொழிகளில் மக்கள் பேசுவார்கள். ஆனால் அதற்கு எழுத்து வடிவம் இராது. சில மொழிகளில் எழுத்துகளும் வார்த்தைகளும் இருக்கும். அந்த மொழியில் யாரும் பேசமாட்டார்கள். ஆனால் இந்த மொழி வார்த்தைகளைத் தங்கள் தொழில் தேவைக்காக, தேவைப்படும் இடங்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அகத்தியன் யான் உருவாக்கிய தமிழ் மொழிக்கு எழுத்துக்கள் உண்டு; வார்த்தைகள் உண்டு. நடைமுறை வாழ்வில் பேசி, எழுதி வாழும் தனித்துவம் பெற்ற தமிழின மக்கள் உண்டு. தமிழ் எழுத்துக்கள் உயிர், உடல் இவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு, உயிர் எழுத்துக்கள் எனவும் மெய் (உடம்பு) எழுத்துக்கள் எனவும் இருவிதமாக அமைக்கப்பட்டுள்ளன. உயிர், மெய் எழுத்துக்கள் இணையும்போது, மூன்றாவதாக "உயிர்மெய்' எழுத்துக்கள் உருவாகின்றன. உயிரும் உடலும் இணைந்தாலே அங்கு ஆன்மாவின் செயல்பாடு தொடங்கி விடும்.

siddhar

ஒரு மனிதன் தன் மனதில் தோன்றும் ஆசை, வெறுப்பு என தன் ஆன்மாவின் உணர்வுகளை ஓசையாக பேச்சின்மூலம் சொல்லாகவும், எழுத்துக்களை இணைத்து வார்த்தைகளாக எழுதவும் முடியும். உயிர்மெய் எழுத்துக்களின் உதவியால் தன் ஆன்மாவின் செயலை பிறருக்கு உணர்த்த முடியும். தமிழ்மொழிக்கு குறில், நெடில், நிரை, நேர், உச்சரிப்பு அளவு என பலவகையில் ஒரு இலக்கண நெறிமுறை உண்டு. தமிழ்மொழிக்கு உயிர் உண்டு; மெய் உண்டு; தன் எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆன்ம சக்தியும் உண்டு.

அகத்தியனால் உருவாக்கப்பட்ட தமிழ் மொழி மரணமில்லா பெருவாழ்வு பெற்றது. சில மொழிகளைப்போல் காலத்தால் மறைந்து போவதல்ல. உடல், உயிர், உணர்ச்சிகள் (ஆன்மா) ஒருங்கே அமையப்பெற்று, மனிதர்களின் வாழ்வை செம்மைப்படுத்தும் மொழிதான் செந்தமிழ் மொழி.

யுகக்கணக்கு, காலங்களுக்கு முன்தோன்றிய மூத்தமொழி தமிழ். அகத்தி யனான என் காலத்தை, அறிந்தவர்க்கே தமிழின மக்கள், தமிழ்மொழி தோன்றிய காலக்கணக்கீடும் தெரிந்துகொள்ள முடியும்.

புலத்தியர்: பொதிகை முனிவரே, தாங்கள் உருவாக்கித் தந்த தமிழ்மொழியின் சிறப் பையும், உள்ளிருக்கும் நுட்பங்களையும், உடல், உயிர், ஆன்மா உள்ள மொழி தமிழென்றும் புரிந்தேன். இனி உயிரினங்களின் ஆன்மநிலை பற்றி விளக்கம் கூறுங்கள்.

அகத்தியர்: புலத்தியனே, தமிழ்ச்சங்கம் கூடும் நேரம் நெருங்கிவிட்டது. மற்ற சித்தர்கள் தமிழ் மன்றத்திற்கு வரத்தொடங்கி விட்டார்கள். நாமும் புறப்படுவோம்; உன் கேள்விகளுக்கு விடையை தமிழ்ச்சபையில் கூறுகிறேன்.

சித்தர்கள் கூட்டத்தில்...

அகத்தியர்: தமிழ்ச்சங்கத்திற்கு வந்துள்ள தமிழாய்வு சித்தர் பெருமக்களுக்கு வணக்கம். என் அருளாசி என்றும் உண்டு. இங்கு நாம் அனைவரும் சமம். சித்தர்களில் அறிவு சக்தியால் உயர்ந்தவர்- தாழ்ந்தவர் என்று எவருமில்லை. எல்லாரும் சமமே. அவரவர் ஞானக்கருத்துகளை ஒளிவுமறைவின்றி பகிர்ந்துகொள்வோம்.

தமிழ்ச்சபையில் இன்று நமது விவாதப் பொருள், புலத்தியனின் ஒரு சந்தேகம் பற்றியது. இந்த பூமியில் மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கும் ஆன்மாவின் செயல்பாடு உண்டா என்பதுதான் அது.

சித்தர்கள்: தமிழ் ஓதிய அகத்தியர் பெருமானே, இதற்குரிய விளக்கத்தைத் தாங்களே தெளிவாக எங்களுக்குக் கூறுங்கள்.

அகத்தியர்: என் அன்பிற்குரியவர்களே, இந்த பூமியில் அனைத்து உயிரினங்களையும் பிறப்பித்து, நல்வாழ்வை அடைய ஆசானாக இருந்து வழிகாட்டி, மரணம்வரை உடனிருந்து காப்பாற்றும் சக்திகள் மண், நீர், தீ, காற்று ஆகியவைதான். இந்த சூட்சுமமான உண்மையை அறிந்ததால்தான் சித்தர் களாகிய நாம் பஞ்சபூதங்களையே கடவுளாக வழிபட்டு, அவற்றின் அருளால் பல சக்தி களையும் சித்திகளையும் அடைந்துள்ளோம். இந்த பூமியில் எந்த உயிரினம், எந்த சக்தியால் உருவாகின்றது என்ற விவரத்தைக் கூறுகிறேன்.

மண்ணில் உருவாகும் உயிரினம் (பிருத்வி) புல், பூண்டு, செடி, கொடி, மரம், தாவர இனங்கள்.

விந்துநீர் மூலம் கர்ப்பப்பையில் உருவாகிப் பிறக்கும் உயிரினங்கள் (நீர்) மனிதன், ஆடு, மாடு, மிருகம் உள்ளிட்ட விலங்குகள்.

வியர்வை, வெப்பத்தால் உருவாகிப் பிறப் பவை (தேயு) ஈ, பேன், கொசு, புழு. காற்றினால் முட்டையில் உருவாகிப் பிறப்பவை (வாயு) கோழி, வாத்து, கருடன், காகம் போன்ற பறவையினங்கள் மற்றும் பாம்பு, பல்லி, ஆமை, மீன் போன்ற உயிரினங்கள்.

இங்கு ஒரு சந்தேகம் உங்களுக்குத் தோன்றும். முட்டையிலிருந்து அந்த உயிரி னங்கள் முதலில் தோன்றியதா அல்லது அந்த உயிரினங்களிலிருந்து முட்டை உருவானதா? எது முன் உருவானது என்பதுதான்.

இயற்கையின் பரிணாமச் செயலால் முட்டைதான் முதலில் உருவானது. முட்டையிலிருந்துதான் அந்த உயிரினங்கள் உருவாகின.

ஆகாயம் ஒரு வெட்டவெளி. அங்கு ஒன்றுமே கிடையாது. வானம் மாயை. இருப் பதுபோல தோன்றும். வானில் தெரிபவை எல்லாம் தனித்தனியே சுற்றிச் சுழபவை; தோன்றி மறைபவைதான்.

புலத்தியர்: ஆசானே, இந்த உயிரினங் களின் அறிவுநிலை அளவு பற்றிக் கூறுங்கள்.

அகத்தியர்: சித்த ஞானிகளே, ஓரறிவு உடையவை- புல், பூண்டு, செடி, கொடி, மரம் தாவரங்கள்.

ஈரறிவு உடையவை- சிப்பி, சங்கு, நத்தை போன்ற ஊர்வன.

மூவறிவு உடையவை- கரையான், எறும்பு.

நான்கறிவு உடையவை- வண்டு, தும்பி போன்ற பூச்சி இனங்கள்.

ஐந்தறிவு உடையவை- மிருகம், விலங்கு, பறவையினங்கள்.

ஆறறிவு உள்ளவர்கள்- மனிதர்கள்.

இந்த உயிரினங்கள் அனைத்துமே பஞ்சபூதங்களின் சேர்க்கையினால் உருவாகி, உடல், உயிர், ஆன்மா என அமைந்து வாழ் பவை. ஐந்தறிவுள்ள உயிரினங்களுக்கும் ஆசை, பாசம், பசி, தாகம், இனவிருத்தி மோகம் என அனைத்து உணர்ச்சிகளும் உண்டு. இந்த பூமியில் வாழும்வரை அவற்றுக்குத் தன் எதிர்காலம் பற்றிய சிந்தனை அறிவு உண்டு. தன் சந்ததியினரைக் குறிப்பிட்ட காலம்வரை காப்பாற்றும் எண்ணம் உண்டு. எங்கு எண்ணங்கள் உருவாகின்றதோ அங்கு ஆன்மாவின் நிலைப்பாடு உண்டு.

ஐந்தறிவுள்ள உயிரினங்கள் தங்களுக்கு எந்த உணவு நன்மை தருமோ, அந்த உணவை மட்டுமே உண்டு வாழும். பருவகால மாற்றங் களை அறிந்து வாழும். தன் இனத்திற்கு எதிரிகள் யாரென்று அறிந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் அறிவுண்டு. ஒவ் வொரு உயிரினமும் தன் தேவைகளை வெளிப்படுத்த அவற்றுக்கு மொழி உண்டு. தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை மறக்காமல் மனதில் தக்கவைத்துக்கொள்ளும் ஞாபகசக்தி உண்டு. தன் இனத்தின்மீது பற்றுண்டு.

ஆறறிவுள்ள மனிதனுக்கு உண்டான எல்லா குணமும் ஐந்தறிவுள்ள உயிரினங்களுக்கும் உண்டு. புலத்தியர்: ஆன்மநேசரே, தாங்கள் கூறுவது எங்களுக்கு அதிசயமாகவும், ஆச்சரிய மாகவும் உள்ளது. ஐந்தறிவுள்ள மிருகங் களுக்கும் மொழி உண்டா? அவற்றின் மொழியால் தங்கள் எண்ணங்களை, தேவை களை வெளிப்படுத்துமா?

அகத்தியர்: இயற்கையின் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமானவை என்ற ஆன்மநேயமுள்ள அனைவராலும் விலங்கு களின் மொழியை, அவற்றின் பேச்சை அறிந்து கொள்ளமுடியும். இவர்கள் பேசுவதையும் அந்த விலங்குகள் புரிந்துகொள்ளும். ஆனால் மனமாயையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பேதம் பேசுபவர்கள், ஆன்மநேயம் இல்லாது வாழ்பவர்களுக்கு இந்த சக்தி கிடையாது; தெரியாது. விலங்குகளின் மொழி, பேச்சின் விளக்கத்தை அறிந்து கொள்ளுங்கள் சித்தர் பெருமக்களே.

ஆடு, மாடு போன்றவை தங்களுக்குப் பசியுணர்வு உள்ளபோது, ஒருவிதமான தொனியில் கத்தும். பசு தன் கன்றினைக் காண முடியவில்லையை என்றால், ஒருவிதமாகக் கத்தும். பால் கொடுக்கும் நேரம் வந்து விட்டால் ஒருவிதமாகக் கத்தும். உடம்பில் மோக உணர்வு வந்து காளையுடன் இணைய வேண்டும் என்றால், அப்போது வித்தியாச மான குரலில் கத்தும். தன்னை வளர்த்துப் பராமரிக்கும் முதலாளியைக் காணும்போது தன் அன்பைக் காட்ட ஒருவிதமாகக் குரல் எழுப்பும். ஆடு, மாடு மேய்ச்சல் நேரத்தில் அலையும்போது, தன்னை வளர்ப்பவரின் குரலைக் கேட்டு புரிந்து செயல்படும். தன்னைத் தேடும் முதலாளியின் குரலுக்கு பதில் குரல் கொடுக்கும்.

இதேபோன்று நாயும், தன் முதலாளியுடன் அன்பாக விளையாடும்போது ஒருவித சத்தமும், எதிரிநாயை எதிர்க்கும்போது ஒருவித வேகமான கோபக் குரலிலும் என தன் உணர்வுகளை அவ்வப்போது வித்தியாசமான சத்தங்களில் வெளிப்படுத்தும். தன் எஜமானர் கூறுவதையும் புரிந்துகொண்டு செயல்படும்.

பறவையினமான கோழி முட்டையிடும் போது ஒருவிதமான சப்தம் தரும். தன் குஞ்சுகளுடன் மேயும்போது கருடனை, எதிரியைக் கண்டுவிட்டால் ஒருவிதமான எச்சரிக்கைக் குரலில் ஒலி எழுப்பும். இதுபோன்று எல்லா உயிரினங்களும் தங்கள் தேவைகளை, உணர்வுகளை தங்கள் மொழியில் வெளிப்படுத்தியே வாழ்கின்றன. ஆறறிவுள்ள மனிதனைவிட, ஐந்தறிவுள்ள உயிரினங்களுக்கு வாழ்க்கையைப் பற்றி புரிதல் அறிவு அதிகம். விலங்கு, பறவையினங் கள் தங்கள் நடைமுறை செயல்மூலம் மனிதர்களுக்கு ஏராளமான அறிவு வழிமுறைகளை போதிக்கின்றன. ஆனால் இயற்கையின் உண்மையைப் புரிந்துகொள்ளாமல், வேறு சக்திகளின் துணையைத் தேடி, மாயையை நம்பி வாழும் அறிவற்ற மனிதர்கள் இதனைப் புரிந்துகொள்ளவில்லை. இதனைப் பற்றி நாளை தமிழ்ச் சங்கத்தில் அறிவோம். (அது அடுத்த இதழில்).

விலங்கினங்களுக்கும், சிறுபிராணி களுக்கும் மொழியும், பேசும் சக்தியும் உண்டு என்பதை ஒரு வரலாற்று நிகழ்வு மூலம் அறிவோம்.

மன்னன் சாலமன் அனைத்து உயிர் களையும் சமமாக மதித்து ஆட்சி செய்த ஒரு ஆன்மிக அரசர். ஒருசமயம் சாலமன் தன் படைவீரர்களுடன் படைகளுக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பாதையின் குறுக்கே எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து சென்றுகொண்டு இருந்தன. அப்போது ஒரு எறும்பு, தன் தலைவன் எறும்பிடம், "பாதையில் மனிதர்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நம்மை மிதித்தால் நாம் இறந்து விடுவோம். இப்போது நாம் என்ன செய்வது?' என கேட்டது. அதற்கு தலைவன் எறும்பு, "யாரும் கலைந்து செல்லவேண்டாம். மனிதர்கள் நம்மை மிதித்து நாம் இறந் தாலும், தொய்வின்றி நம் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வோம். தடைகளைக் கண்டு தயங்கவேண்டாம். தொடர்ந்து செல்லுங்கள்' என்று ஆணையிட்டது.

எறும்புகளின் மொழியறிந்த மன்னன் சாலமன், தன் படைவீரர்களை மேற்கொண்டு நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தி, அந்த எறும்புகள் எல்லாம் சென்றபின்பு தன் பயணத்தைத் தொடர்ந்தான். பிராணிகளுக்கும் மொழியும் பேச்சும் உணர்வும் லட்சியமும் உண்டு என்பதை இந்த நிகழ்வுமூலம் அறியலாம்.

தானென்று உலகத்தில் சிற்சிலோர்கள்

சடைப்புலித்தோல் காசாயந் தாவடம்

பூண்டு

ஊனென்ற உடம்பெலாம் சாம்பல் பூசி

உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்

தேனென்ற சிவபூசை தீட்சையென்பார்

திருமாலைக் கண்ணாலே கண்டோ

மென்பார்

கானென்ற காட்டுக்குள் அலைவார் கோடி

காரணத்தை யறியாமல் கதறுவாரே.

(வால்மீகி சித்தர்)

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

(மேலும் சித்தம் ùளிவோம்)