பாவ- சாப- தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!

சித்தர்தாசன் சுந்தர்ஜி

15

Advertisment

உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை

உண்மையுடன் காட்டவல்ல உண்மை குருவைக்

கள்ள மனந்தன்னைத் தள்ளி கண்டுகொண்டன்பாய்

Advertisment

களித்துக் களித்து நின்றாடாய் பாம்பே.

(குரு வணக்கம்)

இன்றைய நாளில் "ஆன்மிகம்' என்ற சொல்லை அவரவர் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆலயங்களில் ஆன்மிகம், அரசியலில் ஆன்மிகம், உண்ணும் உணவில் ஆன்மிகம், உடுத்தும் உடையில் ஆன்மிகம், நோய் தீர்க்கும் மருத்துவத்தில் ஆன்மிகம், நின்றால் ஆன்மிகம், நடந்தால் ஆன்மிகம் என எங்கும் எதிலும் ஆன்மிகம் வியாபாரமாகவும், மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் ஒரு தொழிலாகவும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த உலகில் ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பிரிவினை, பேதங்களை செயற்கையாக ஏற்படுத்தி கலவரம், குழப்பங்களை உண்டாக்கி, மக்களின் நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்து விட ஆன்மிகம் என்ற சொல் ஆதாரமாக உள்ளது. நாம் அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் கூறிய ஆன்மிகம் எதுவென்று அறிவோம்.

இந்த பாரத நாடு முற்காலத்தில் ஐம்பத்தாறு நாடுகளாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு நாட்டுப்பகுதியில் வாழ்ந்த மக்களும், தங்களுக்கென்று தனித்தனியான மொழி, நாகரிகம், பண்பாடு, கடவுள் வழிபாடு என அவரவர் முன்னோர்கள்கூறிய ஆன்மிக நம்பிக்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்கள்.

இந்த பரத கண்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழ்மொழி பேசும் மக்கள், தங்களின் முன்னோர்களான குரு அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்களின் வழிகாட்டுதல்படி சைவ சித்தாந்தக் கருத்துகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்கள் என்பதை சித்தர்களின் பாடல்கள்மூலம் அறியமுடி கிறது. ஆதிகுடி தமிழ்மக்கள் கடைப்பிடித்து வாழ்ந்த சைவ சித்தாந்த ஆன்மிகம், வழிபட்ட கடவுள் எதுவென்று அறிவோம்.

ஆன்மா + அகம் = ஆன்மிகம்.

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும், தன் அகத்திலுள்ள ஆன்மாவை அறிவதே ஆன்மிக நிலை என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. அதாவது தன்னையறிதலே ஆன்மிகம்; தன் ஆன்மாவை அறிவதே ஆன்மிகம் ஆகும்.

ஒருவன் முழுமையான மனிதனாக இருக்க வேண்டுமென்றால் அவனது உடல், உயிர், ஆன்மா என்ற மூன்று சக்திகளும் எந்தவித குறையுமில்லாமல் இருக்கவேண்டும். இந்த மூன்று நிலைகளில் உடலானது பார்வைக்குத் தெரியும். உயிர் கண்ணுக்குத் தெரியா விட்டாலும் அதன் இயக்கத்தை உணர்வால், செயலால் அறிந்துகொள்ள முடியும். ஆனால் ஆன்மாவை உணரவும் முடியாது; உருவமாகக் காணவும் முடியாது. ஒரு மனிதனின் ஆன்மா ரகசியமானது; மற்றவர்களால் அறிய முடியாதது. அவரவர் அகத்தினுள்ளே மறைந்துள்ள ஆன்மாவை அவரவரே அறிய முடியும். ஒருவன் தன் ஆன்மாவைப் பற்றிய தனித்துவமான, ரகசியமான உண்மைகளை அறியும்போதுதான் அவன் ஆன்மிகவாதி யாகிறான். ஆன்மிக வெற்றியை அடைகிறான்.

தன்னையும் அறிகிறான்.

இந்த பூமியில் உயிரினங்களை உருவாக்கும் சக்தியை பிரம்மா என்றும், உலகிலுள்ள அனைத்தையும் காக்கும் சக்தியை விஷ்ணு என்றும், பூமியிலுள்ள அனைத்தையும் பிரளய காலத்தில் அழித்து விடும் சக்தியை சிவன் என்றும் கூறுகிறார்கள். இந்த கடவுள் சக்திகளை மும்மூர்த்திகள் என்றும், இந்த சக்திகளை வணங்கி நம் வாழ்வில் நன்மைகளை அடைய வேண்டும் என்றும் ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள். இதுபற்றிய உண்மைகளை சைவத் தமிழ்ச்சித்தாந்தம் கூறுவதை அறிவோம்.

உடல்- ஆக்கும் சக்தி பிரம்மா

vasiyogamஇந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் அந்தந்த இனத்தின் ஆண்- பெண் சரீர சேர்க்கை உறவினால் கருவாகி வளர்ந்து பூமியில் பிறக்கிறது. பிறந்த அனைத்தும் உணவினால் உடல் வளர்ச்சிப்பெற்று, தன் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தன் உடல் உழைப்பின்மூலம் உருவாக்கிக்கொள்கிறது. உடலின் உழைப்பு, உதவியில்லாமல் ஒரு மனிதன் எதனையும் அடையமுடியாது என்பதே உண்மை. இந்த பூமியில் ஆக்கும் சக்தி பிரம்மா என்ற கடவுள் அவரவரின் உடலேயாகும்.

உயிர்- காக்கும் சக்தி விஷ்ணு

ஒரு மனிதன் தன் உடல் உழைப்பால் உருவாக்கிக்கொண்ட பணம், பதவி, புகழ், சொத்து, உறவு, குடும்பம் என அனைத்தும் தன்னைவிட்டு விலகிவிடாமல், அழிந்து போகாமல், தானும் தன் சந்ததியினரும் சுகமாக வாழ்வதற்கு அந்த செல்வங்களைக் காப்பாற்றி வாழ்தல் வேண்டும்.

உழைத்து செல்வம் சம்பாதிக்க ஆரோக் கியமான உடல் வேண்டும். அந்த உடல் இயங்க உயிர்சக்தி வேண்டும். உடலை, உயிர்சக்தி இயக்கும்போது நம்மிடம் உள்ள அறிவு, புத்திசக்தி இயங்கும். அந்த அறிவால் நாம் அனைத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உடலிலுள்ள அனைத்து பாகங்களையும் இயக்கும் மூச்சுக்காற்றே நம்மைக் காக்கும் கடவுள் சக்தியாகும். உடல்பலத்தையும், உழைத்து சம்பாதித்த செல்வங்களையும் காப்பாற்றிக் கொள்ளும்போது, மனிதனே மகாவிஷ்ணு என்னும் காக்கும் கடவுளாகிறான்.

கர்மவினை- அழிக்கும் சக்தி சிவன்

ஒரு மனிதன் தான் செய்யும் செயல்களால் உண்டாகும் நன்மை, தீமைகளை பகுத்தறி வால் புரிந்து செயல்படாமல், உண்மைக்குப் புறம்பான கருத்துகளை நம்பிக்கொண்டு, மனம்போன போக்கில் வாழ்ந்து, தன் சொத்து, சுகம், உறவுகளை அழித்துக்கொள்ளும்போது அவனே அழிக்கும் கடவுள் ஆகிறான். மனதை இயக்கும் சக்தி அவரவர் பூர்வஜென்ம கர்மவினையேயாகும்.

ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்றுவிதமான சக்தி நிலைகளும் மனிதனின் உடல், உயிர், மனதில்தான் உள்ளது. உயிர் என்ற மூச்சுக்காற்று உடம்பினுள்ளே நுழைந்தவுடன் மனம் இயங்குகிறது. மனம் இயங்கும்போது எண்ணம் தோன்றுகிறது. எண்ணம் உருவானவுடன் அதை செயல் படுத்த உடல் இயங்குகிறது. நமது எண்ணத்தின் நிலையைப் பொருத்தே நம் செயல்மூலம் நன்மை- தீமைகளைப் பயனாக அடைகிறோம்.

ஆன்மா பற்றிய ரகசியங்களையும், ஆன்மா இருக்கும் கோவிலையும், அந்த கோவில் இருக்கும் ஆலயத்தையும், ஆன்மாவை செயல்பட வைக்கும் துணை சக்திகளையும் பற்றிய விளக்கங்களை அடுத்த இதழில் அறிவோம்.

வாசியோகம்

"உண்ணும்போதும் வாசிபாரு.'

மனிதன் ஒவ்வொரு செயலிலும்

மூச்சுக்காற்றின் நிலையையறிந்து செயல் பட்டால், அவன் முற்பிறவி பாவ- சாபப் பதிவுகளால் கஷ்டப்பட்டுதான் வாழவேண்டு மென்ற விதி நிலை இருந்தாலும் அதைத் தடுத்து நன்மையானதாக அமைத்துக் கொள்ளலாம் என்று சைவத்தமிழ்ச் சித்தாந்தம் நல்வாழ்வுக்கு வழிகாட்டுகிறது.

உடலை வளர்த்து, ஆயுளை நீட்டிக்க வேண்டுமென்பது முன்னோர்கள் வாக்கு. உடல் பலமில்லாதவன், உயிர் இருந்தும் இல்லாதவனாகிவிடுகிறான். இதனால் தான் சித்தர்கள் நோய் தீரவும், உடல் இளமையானதாக இருக்கவும், உடலுறுப்பின் திசுக்கள் அழிந்துபோகாமல் இருக்கவும் மூலிகைகளைப் பயன்படுத்தி வாழும் சித்த வைத்தியமுறைகளைக் கூறியுள்ளார்கள்.

அதேபோல் மனிதன் உணவுண்ண வேண்டிய வழிமுறைகளையும் கூறியுள்ளார்கள்.

ஒரு மனிதன் தன் மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் சூரியகலையாக மூச்சுக்காற்று ஓடும்போது மட்டும் உணவுண்ண வேண்டும். அப்போது உண்ணும் உணவின் சக்தி முழுமையாக நம் உடம்பிலுள்ள ரத்தம், தசை, திசுக்களில் சேர்ந்து உடலிற்கு நல்ல பலத்தைக் கொடுத்துவிடும். நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் பொருட்கள் உடல்நலிவையும் நோயையும் நீக்கும். வலப்பக்கம் மூச்சுக்காற்று ஓடும்போது எந்த உணவை சாப்பிட்டாலும் உடலுக்கு தீங்கு எற்படாது. ஒவ்வாமை (அலர்ஜி) உண்டாகாது.

வலப்பக்கம் சுவாசக்காற்று ஓடுவதை கவனித்து, அந்த நேரத்தில் நாம் சாப்பிட்டு விடவேண்டும். சூரியகலை நடக்கும் நேரம், எந்த நேரமானாலும் சாப்பிடலாம். சிலர் நேரம் கெட்ட நேரத்தில் உணவு சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறு உண்டாகும் என்று கூறுவார்கள். அவ்வாறு எதுவும் உண்டாகாது. சூரியகலைக் காற்று நாக்கின் ருசி நரம்பில் உணர்ச்சியை உண்டாக்கும். வயிறு நிரம்ப சாப்பிடமுடியும்.

இன்று பலர் உடலுறுதிக்கு உணவு உண்பதில்லை. அதுபோன்று ஆன்மா, மனவுறுதிக்காக இறைவழிபாடு செய்வதில்லை. எதையெல்லாம் சாப்பிட்டால்- சரீரம் கெட்டு, நோயால் தாக்கப்படுவோமோ, அந்த உணவையே விரும்பி உண்டு உடலைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.

சூரியகலை சுவாசம் நடக்கும்போது நெய், பால், புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, காரம் என ருசியுள்ள எல்லா உணவு வகைகளையும் உண்ணலாம். இதனால் சரீரத்தில் எந்த பாதிப்பும் வராது.

ஒருவன் சூரியகலையில் மூச்சுக்காற்று ஓடும்போது சாப்பிடாமல், தினமும் மூன்றுவேளையும், மூக்கின் இடப்புறம் சந்திரகலையில் சுவாசக் காற்று ஓடும்போது சாப்பிட்டுவந்தால் அவன் வெகுசீக்கிரம் நோயாளியாகிவிடுவான். உடம்பில் ஏதாவது ஒரு நோய் உண்டாகி சிரமம் தந்துகொண்டே இருக்கும். சிலர் எப்போது பார்த்தாலும் கை, கால், கழுத்து வலி, வாந்தி, மூச்சுத் திணறல், மலச்சிக்கல், உடல்அசதி, களைப்பு என ஏதாவது ஒரு வியாதியைக் கூறிக்கொண்டு, மருத்துவமனைக்கு அலைந்துகொண்டேயிருப்பார்கள். இவர்கள் எல்லாரும் சந்திரகலையில் காற்று ஓடும்போது சாப்பிட்டு வருபவர்கள் என்பதை சுலபமாக அறிந்துகொள்ளலாம்.

இதுபோன்று உடல் உபாதை உள்ளவர்கள், தங்கள் தங்கள் மூச்சுக்காற்று, மூக்கின் வலப்பக்கத் துவாரத்தில் நடக்கும்போது மட்டும் கவனித்து உண்டு வந்தால் வியாதிகள் படிப்படியாகக் குறைந்துவிடும். உடலுறுப்புகள் இழந்த பலத்தைப் பெற்றுவிடும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மருந்து, மாத்திரையில் தீர்க்கமுடியாத வியாதிகளுக்கும் நிவாரணம் பெறலாம். காற்றுக் கடவுளின் அருளையும் பெறலாம்.

சில சமயங்களில் இடப்பக்கம், சந்திர கலையில் காற்று ஓடும்போது சாப்பிட வேண்டிய சூழ்நிலை அமைந்துவிடும்.

அப்போது சுடச்சுட உள்ள உணவுகளை உண்ணவேண்டும். ஆறிப்போன உணவுகளை-

பழைய சாதம், பழைய குழம்பு, குளிர்ச்சியான உணவுகளை உண்ணக்கூடாது. அதுபோன்று சந்திரகலை ஓடும்போது, நெய், பால், புளிப்பு, துவர்ப்பு, இனிப்புச் சுவையுள்ள உணவுகளை உண்ணக்கூடாது. தாகத்திற்கு குளிர்ந்த நீர், பானங்களை அருந்தக்கூடாது.

இடப்பக்க மூக்குத் துவாரத்தில் மூச்சுக்காற்று ஓடும்போது எவ்வளவு சத்தான உணவை உண்டாலும், அதிலுள்ள சத்து முழுமையாக உடலில் சேராது. வயிறு நிரம்ப சாப்பிடவும் முடியாது. எவ்வளவு ருசியாக சமைத்து வைத்தாலும், சந்திரகலையில் சாப்பிடும்போது உணவில் ருசி இல்லாதது போன்றே தோன்றும். மனைவிக்கு ருசியாக சமைக்கத் தெரியவில்லை என்று சண்டைதான் வரும். அன்பாக ஆசையாக சமைத்து வைத்த மனைவிக்கு அவப்பெயரை உண்டாக்கிவிடும், இந்த சந்திரகலை என்ற பெண் காற்று.

அடுத்த தொடரில், உணவின்மூலம் வம்சத்தில் உண்டான பெண் சாபத்தை எப்படி நிவர்த்தி செய்யலாம் என சைவ சித்தாந்தம் கூறுவதை அறிவோம்.

"சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்து

துடிப்பா ருலகத்தில் சிற்சிலோர்கள்

தெற்றுவா ரவர்பிழைக்க அநேக வேடம்

தேகத்தி லணிந்துகொண்டு திரிகுவார்கள்

பற்றுவார் குருக்களென்பார் சீடரென்பார்

பையவே தீட்சைவைப்பார் தீமையென்பார்

கத்துவார் திரிமூர்த்தி தாமே யென்று

காரணத்தை யறியாத கசடர்தானே.'

(வால்மீகி சித்தர்)

சித்தரைப் பற்றி வாருங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

(மேலும் சித்தம் தெளிவோம்)