19
இரண்டாம் பாகம்
அசுவினி தேவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று கவனிக்கலானார் தத்யங்க முனிவர். அவர்களிடம் பலமான ஆலோசனை! அவர்கள் இந்திரனின் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கப்போகிறார்களா இல்லை என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று தங்களுக்கு பிரம்மஞானத்தை உபதேசமாகப் பெறப் போகிறார்களா? இதுதான் இப்போது கேள்வி. அசுவினி தேவர்களும் தங்களுக்குள் கலந்து பேசிவிட்டு தத்யங்கரிடம் வந்து நின்றனர். தத்யங்கரும் அவர்களை ஏறிட்டார்.
""மகாமுனி... நாங்கள் தங்கள் உயிர்போவது பற்றி கவலைப்படத் தயாரில்லை. எனவே தாங்கள் எங்களுக்கு பிரம்மஞானத்தை உபதேசியுங்கள்'' என்றனர்.
ஆச்சரியமடைந்தார் தத்யங்கர்.
""தேவர்களே! உபதேசம் பெறுவதே கடைத்தேறத்தான். ஆனால் உபதேசம் செய்தால் நான் இறந்துவிடுவேன் என்பது இந்திரனின் மிரட்டல். என் உயிர்போவது பற்றி உங்களுக்குக் கவலையில்லையா?''
""தாங்கள் கேட்டிருப்பது நல்ல கேள்விதான்... ஆனால் தாங்கள் இறக்கமாட்டீர்கள். உங்களை இறக்க விடமாட்டோம்!''
""எப்படி?''
""நாங்கள் ஒரு தந்திரம் புரிய தாங்கள் அனுமதிக்க வேண்டும்.''
""தந்திரமா?''
""ஆம்... இந்திரனை நாங்களோ நீங்களோ எதிர்க்கும் சக்தி படைத்தவர்களல்ல.
எனவே தந்திரமாகவே அவனை வெற்றி கொள்ளவேண்டும்.''
""அப்படியாவது இந்த பிரம்மஞானத் தைத் தாங்கள் அடையத்தான் வேண்டுமா?''
""ஆம்... அடையத்தான் வேண்டும்! இது மிகமிக மேலானது- இதை அவ்வளவு சுலபத்தில் எவரும் அறிந்து கொண்டுவிடக்கூடாது என்பதனால்தானே இந்திரன் தங்களையே கொன்றுவிடுவேன் என்கிறான்...''
""சரி... எப்படி நீங்கள் செயல்படப்போகிறீர்கள். உங்கள் தந்திரம்தான் என்ன?''
""நீங்கள் எங்களுக்கு பிரம்மஞான உபதேசம் செய்யுங்கள். இதனால் இந்திரன் தான் சொன்னது போல் நடக்க வாளோடு வருவான். உங்கள் தலையையும் வெட்டுவான். ஆனால் அது உண்மையான உங்கள் தலையாக இராது...''
""அப்படியானால்?''
""உங்கள் உருவைப்போலவே ஒரு உருவத்தை நாங்கள் களிமண்ணால் செய்து, உங்களைப்போலவே அதை ஆசனத் தில் அமர்த்திவிடுவோம். தியானத்தில் நீங்கள் அமர்ந்துவிட்டதுபோல காட்சி தரும் அந்த உருவை உண்மையென எண்ணி இந்திரன் உங்கள் தலையை வெட்டுவான். இதனால் சிலையுடல்தான் துண்டாகும்.''
""கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் இந்திரன் அவ்வளவு ஏமாளியா என்ன?''
""அவன் ஏமாறுமளவு உங்கள் உருவம் தத்ரூபமாக இருக்கும். உண்மையான தலையை வெட்டியதுபோல குருதியும் பீறிடும்...''
""சரி... பிறகு இந்திரனுக்குத் தெரியாமல் போகுமா?''
""நாங்களே போய் உண்மையைச் சொல்லி, "உனக்கு ஏன் இந்த ஆவேசம்... இது தலைமைக்கு அழகா' என கேட்போம்.''
""அதை இப்போதேகூட கேட்கலாமே?''
""இப்போது கேட்டால் இந்திரன் ஒப்புக்கொள்ளமாட்டான். மறுத்துவிடுவான். இப்படிச் செய்தபிறகு என்றால் அவனை வியாழ குரு உள்ளிட்ட அவனது அவைச் சான்றோர் கேள்வி கேட்பர். அடுத்து ஒரு சுத்த வீரன் எந்தவொரு சாரியத்தையும் ஒருமுறைதான் செய்வான். இரண்டாவது முறை என்பது இழுக்கு...''
அசுவினி தேவர்கள் ஒருவாறு தத்யங்கரை ஒப்புக்கொள்ள வைத்தனர். பொன், பொருள் மற்றும் இறவா வரத்துக்கு ஆசைப்படுவோர் நடுவில் பிரம்மஞானமடைய ஆசைப்படும் அசுவினி தேவர்கள் செயலை தத்யங்கரும் பாராட்டி, அவர்களுக்கு பிரம்மஞான உபதேசம் செய்தார்.
பின் இந்திரனும் வந்தான்- வெட்டினான்-
திரும்பிச் சென்றான். பின்னர் உண்மையறிந்து திரும்ப வந்தான். அவனை தத்யங்கரே தடுத்துவிட்டார்.
""இந்திரா உன் செயல் குறுகிய மனம் கொண்டது. என் சாபத்துக்கு ஆளாகி விடாதே...'' என்றார். இந்திரனும் திரும்பிச் சென்றுவிட்டான்.
வியாசமுனி இவ்வாறு கூறிமுடிக்கவும் ஜெனமேஜெயன் சிரித்தான்.
""ஏன் சிரித்தாய் ஜெனமேஜெயா?''
""சிரிக்காமல் என்ன செய்வது? இந்திரன் எதனால் இப்படி நடந்து கொள்கிறான்? மற்றவர்கள் பிரம்மஞானம் பெற்றால் அவனுக்கு எது குறைந்துவிடும்?''
""ஒரு பிரம்மஞானி யாரையும் பெரிதாக வும் கருதமாட்டான்; சிறிதாகவும் கருத மாட்டான்... இதுபோதாதா?''
""புரியவில்லை.''
""பிரம்மஞானி என்பவனுக்கு இந்த உலகிலுள்ள எல்லாமே பிரம்மம்- கல், மண் ணிலிருந்து நீ, நான் வரை சகலமும் பிரம்மம். அதனால் இந்திரனை தலைவனாகக் கருதுவதோ இல்லை அவன் வாயிற் காவலர்களைக் கீழ்மையாகக் கருதுவதோ இல்லாமல் போய்விடும்.
எல்லாரும் பிரம்மஞானிகளாகிவிட்டால், இந்திரன் தேவையே இல்லாமல் போய் விடுவான். இந்திரலோகம், இந்திரப்பதவி, பட்டம், பரிவாரம் எல்லாம் ஒன்றுமில்லாது போய்விடும். அதனால்தான் இந்திரன் தத்யங்கர் தலையைத் துண்டிப்பேன் என்றான்...''
""இந்திரனுக்கு அந்த அளவுக்கா பதவி மோகம்?''
""ஆம்... தேவர்களின் தலைவனல்லவா? இதற்கு சக்திமிக்கவர்களின் தலைவன் என்றும் ஒரு பொருள் கொள்ளலாம். அடுத்து சில சுகங்களுக்கு அடிமையாகிவிட்டால், அதைத் துறக்க எவருக்கும் மனம் வராது. அதற்கு மனிதர்கள் மட்டுமல்ல; தேவர்களும்கூட உதாரணம்.''
""சரியாகச் சொன்னீர்கள் மகரிஷி! போகட்டும்... தத்யங்கர் உபதேசித்த பிரம்ம ஞானத்தை தாங்கள் அறிவீர்களா?''
""பிரம்மஞானிகளையே பிரம்மரிஷிகள் என்கிறோம். என்றால் நான் யார் என்பதை நீயே முடிவு செய்துகொள்.''
""நான் தவறாகக் கேட்டிருந்தால் மன்னியுங்கள்...''
""கேட்கும்முன் நன்கு யோசித்து எதையும் கேள்...''
""நல்லது மகரிஷி. எனக்கு பிரம்மஞானத்தை உபதேசிப்பீர்களா?''
""நீ இப்போதுள்ள நிலையில், உனக்கு பிரம்மஞான உபதேசம் தேவையில்லை. நீ சாபத்துக்கு ஆளான ஒரு வம்சத்தின் தொடர்ச்சி. நீ முக்திக்கு வழிகாட்டும் பக்திமார்க்கத்தில் நடந்தாலே போதும்.''
""அப்படியானால் பக்தி மார்க்கம் குறித்துக் கூறுங்கள்.''
""பக்தி மார்க்கம் என்பது கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்று மூவகைப்படும். இதில் உடலால் செயல் படுத்துவது கர்மயோகம்; அறிவால் நடத்துவது ஞானயோகம்; மனதால் அனுஷ் டிப்பது பக்தி யோகமாகும்.''
""இதிலும் மூன்றுவிதங்களா?''
""ஆம்... இதில் பக்தியோகம் தாமசபக்தி, ராஜசபக்தி, சாத்வீகபக்தி என்று மூவகைப் படும்.''
""எதனால் இப்படி வகைப் படுத்தப்படுகிறது?''
""சொல்கிறேன். பிறரைப் பொருட் படுத்தாமல், தன்னலம் ஒன்றையே பெரிதாகக் கருதி பொறாமை, காமக்குரோதங்களோடு செய்யும் பக்தி தாம சபக்தியாகும்.
பிறரைத் துன்புறுத்தாது, தன்னலனை மட்டும் உத்தேசித்துச் செய்யும் பக்தி ராஜச பக்தியாகும்.
துளியும் தன்னலமின்றி, எல்லாரும் நன்றாக இருக்க விரும்பி செய்யும் பக்தி சாத்வீக பக்தியாகும்!''
""அருமையான விளக்கம். இப்படிப்பட்ட பக்தி இருந்தால்தான் பிரம்மஞானம் ஏற்படுமா?''
""பிரம்மம் எல்லாரிடமும் உள்ளது. ஆனால் அதை உணரமுடியாதபடி ஆசை, பாசம், மோகம், காமம், லோபம், தாபம் போன்ற உணர்வுகள் தடுக்கின்றன. இவற்றை அறுத்தெரிந்து பிரம்மத்தை உணர கடினப் பிரயாசை வேண்டும்.''
""கடினப் பிரயாசை மட்டும் போதுமா?''
""அந்தப் பிரயாசை சரியானவழியில் செல்லவேண்டும்.''
""எது சரியான வழி?''
""சக்தி மாதாவை ஒரு மனதாய்த் துதி செய்வது, எவரிடமும் வேற்றுமை காணா திருத்தல், பகை இல்லாதிருத்தல், சக்தி மாதாவின் திருத்தலங்களை தரிசித்தல், வேதம் ஓதுதல், வேதம் ஓதும் வேதியர்கள் மனம் குளிரும்படி நடத்தல், "நான்' என்னும் அகங்காரம் இல்லாதிருத்தல், சக்தி நாமத்தை இடையறாது ஜெபித்தல் ஆகியவையே சரியான வழி.''
வியாசர் தெளிவாகக் கூறிமுடித்திட ஜெனமேஜெயனும் அதை அறிந்து மகிழ்ந்தான். அப்படியே பக்திநெறி யில் விரதங்கள் குறித்து அறிய ஆசைப் பட்டான்.
""குருவே... பக்திநெறியில் விரதங் களுக்கென்று ஒரு சக்தி இருக்கிறதல்லவா?''
""நிச்சயமாக... கடினப் பிரயாசைக்கு இன்னொரு பெயர்தான் விரதம். இது திரிதியை விரதம், ரசகல்யாணி திரிதியை விரதம், ஆருத்ரா விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், புதன் விரதம், சதுர்த்தி விரதம், பிரதோஷ விரதம், நவராத்திரி விரதங்கள் என்று பலவகை உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பலனுண்டு.''
""அற்புதம் மகரிஷி... தேவியின் மகிமை களோடு எது பக்தி? எது பிரம்ம ஞானம் என்று பல விஷயங்களை அறிந்தேன். மேலும் நான் அறிய வேண்டியது உள்ளதா?'' என ஜெனமேஜெயன் கேட்டிட, ""அனேகம் உண்டு. முதலில் நீ அறியவேண்டியது நீ வாழுகின்ற மண்ணான இந்த பாரத தேசம் பற்றியதாம்'' என்றார்.
""அது என்ன?''
""இந்த பூமி கர்ம பூமி. இதைப்போல பூவுலகில் எட்டு நிலப்பரப்புகள் உள்ளன. இந்த பாரத பூமியில் பிறக்கவே கொடுத்து வைத்திருக்கவேண்டும். இந்த பூமியை எட்டு நிலப்பரப்பென்றேனல்லவா?
இதில் முதலாவது இளாவிரதம் எனப் படுவதாம். இங்கே யாகங்கள்மூலம் வழிபாடு நிகழும். மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியுமே இங்கே ஆராதனைக்குரிய தேவதங்கள்!
பத்திராசுவ வர்ஷம் என்பது அடுத்தது... இதில் தர்மபுத்திரர் ஹயக்ரீவரை துதிப்பார்.
ஹரிய வர்ஷத்தில் விஷ்ணு நரசிம்மமாக அருள்பாலிப்பார்.
கேதுமாலா வர்ஷத்தில் விஷ்ணு மன்மதன்போல் இருப்பார். பிரஜாபதி குரு இவரை வழிபட்டபடி இருப்பார்.
ரம்யக வர்ஷத்தில் விஷ்ணு மச்சாவதார மூர்த்தியாக விளங்கிட, மனுக்கள் இவரை வணங்குவர்.
இரண்மய வர்ஷத்தில் கூர்மமாக இறைவன் விளங்கிட சூரியன் இவரை ஆராதிப்பான்.
குரு வர்ஷத்தில் விஷ்ணுவானவர் வராகமூர்த்தியாகத் தோன்றி அருள்புரிவார். பூமிதேவி வழிபடுவாள்.
கிம்புருஷ வர்ஷத்தில் விஷ்ணு ராமனாக அவதரித்திட ஆஞ்சனேயர் அவரை வணங்குவார்.
பாரத வர்ஷத்தில் விஷ்ணுவே ஆதிபகவான்! நாரதர் உள்ளிட்டோர் இவரைத் துதிக்கின்றனர்.
இந்த பாரத வர்ஷத்தில்தான் இமயம், மங்களம், மைநாக பர்வதம், திரிகூடம், ரிஷ்யகூடம், ஸஷ்யம், தேவகிரி, ரிஷிமூலம், ஸ்ரீசைலம், வேங்கடாத்திரி, மகேந்திரம், துரோணம், சித்ரகூடம், கோவர்த்தனம், சைரவதம், நீலபர்வதம், கௌரமுகம், இந்திரகீலம், ராமகிரி- இப்படி பல மலைகள் உள்ளன.
இம்மலைகளில் பெருக்கெடுக்கும் நதிகள் பாவம் போக்குபவை. தாமிரவருணி, சந்திரவசா, கிருதமாலா, வடோதகா, வைகை, யசி, வேணு, பயஸ்வினி, துங்கபத்ரை, கிருஷ்ணா, சக்கராவர்த்தகை, கோதாவரி, பீமநதி, நிர்வித்யா, ரேவா, சரஸா, நர்மதா, சரஸ்வதி, சர்மண்வதி, சிந்து, சுக்தசோனா, மகாநதி, ரிஷிகுல்யா, திரிசாமா, வேதஸ்மிருதி, கௌசி, யமுனை, மந்தாகினி, திருமணி, கோமதி, சரயு, வேதவதி, சப்தலகி, சுக்ஷோமா, சத்க்ரூ, சந்திரபாகா, மருத்விரதா, விதஸ்வா, அஸிக்னி, விஸ்வா, காவிரி என்று எத்தனை நதிகள்! எத்தனை நதிகள்!''
வியாசர் போட்ட பட்டியல் பிரம்மிப் பளித்தது!