""ஸ்ரீவிஷ்ணு எழுப்பிய அந்த சக்தி ஆலயங்கள் மொத்தம் 108 ஆகும். அதில் முதலாவது காசி விசாலாட்சி,
அடுத்து நைமிசாரண்யத்தில் லிங்கதாரணி,
பிரயாகையில் லலிதா,
கந்தமாதனத்தில் காமுகி,
மானச சரஸில் குமுதா,
இதன் தெற்கே விசுவகாமா பகவதி,
மேற்கே விஸ்வகாமா பூரணி,
கோமந்தத்தில் கோமதி
என்று தொடங்கும் 108 தலங்கள், சப்தமாதர்களில் வைஷ்ணவியிடத்தும், பதிவிரதைகளில் அருந்ததியிடத்தும், அழகிய மங்கையரில் திலோத்தமையிடத்தும் என்று பரந்து விரிந்து முடிகிறது.
இந்த 108 தலங்களில் குடிகொண்டிருக்கும் சக்தி அம்சமே பெரும்பாலும் அவர்களின் பெயராகவும் விளங்குகிறது. இதை ஒருமுறை அப்படியே நினைத்துப் பார்ப்பது என்பதே அஷ்டோத்திரம் சொன்ன பயனைத் தந்திடும்'' என்று வியாசர் ஜெனமஜெயனுக்கு எடுத்துக்கூறவும், ஜெனமேஜெயனும் அதைக்கேட்டு பிரம்மித்தான்.
""முனிபெருமானே! தேவி குறித்து அறியத்தான் எத்தனை செய்திகள்... அதில் இந்த 108 ஸ்தல எண்ணிக்கையே ஒரு ஸ்தோத்திரம்போல் திகழ்வதை எண்ணி வியக்கிறேன். தேவி குறித்து அறிய இவ்வளவுதான் உள்ளதா, இன்னமும் உள்ளதா?'' என்றும் கேட்டான்.
""இந்த தலங்கள் குறித்து அறிந்தால் மட்டும் போதாது ஜெனமேஜெயா. நீயும் உன்னைப்போன்ற ராஜாக்களும் அறியவேண்டிய சில செய்திகளும் உள்ளன...''
""அது என்னவென்று கூறுவீர்களா?''
""இந்த 108 க்ஷேத்திரங்களுக்குச் சென்று வணங்குவது மிகுந்த உயர்வைத்தரும். அத்துடன் வேதம் கற்ற வேதியர்கள் மற்றும் சுமங்கலிகளுக்கும், கன்னிகளுக்கும், வேதப் பிரம்மச்சாரிகளுக்கும் உணவளித்து, அவர்களுக்கு உடையுமளித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதும் முக்கியம். திருப்தியுடன்கூடிய இவர்களின் மகிழ்வு அதை ஏற்படுத்தியவருக்கே ஒருநாள் திரும்பவரும்.
இவை செய்ய வேண்டியவை- செய்யக்கூடாதவையும் உண்டு. அது என்னவென்று சொல்லட்டுமா?''
""கட்டாயம் சொல்லுங்கள். இதைதான் ஒருவர் அவசியம் அறியவேண்டும்.''
""அப்படியானால் நன்றாகக் கேட்டுக்கொள். எக்காரணம் கொண்டும் தலங்களில் தானம் பெறக்கூடாது. தலங்களுக்குச் சென்ற இடத்தில் ஆசைப்படவும் கூடாது.''
""தேவியின் கருணைக்கும் அருளுக்கும் கூடவா ஆசைப்படக்கூடாது?''
""ஆம்... உன் கேள்விகளில் மிகச்சிறந்த கேள்வி இது! எக்காரணம் கொண்டும் ஆசை கூடாது. தேவிக்கு அர்ப்பணம் செய்வதில் ஆசைப்படுவதை அர்ப்பணம் செய்வதே மிகச்சிறந்த செயலாகும்.''
""நன்கு சொன்னீர்... இன்னமும் உள்ளதா? இல்லை அவ்வளவுதானா?''
""முக்கியமாக அறியவேண்டியது இவ்வளவே... கூடுதலாக அறியவேண்டியது பற்றிக் கூறுகிறேன் கேட்டுக்கொள். குறிப்பாக ஆடவர்களாக இருப்பவர்கள் அவசியம் அறியவேண்டிய செய்தி இது.''
""அது என்னவென்று கூறுங்கள்.''
""சக்தியும் அவள் சார்ந்தவற்றையும் பற்றி முழுமையாக அறிந்தோம். இந்த சக்தியானவள் பெண் வடிவாக இருந்தாலும் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இருக்கிறாள். இவள் நீங்கிவிடுவதையே சக்தியற்றுப்போதல் என்கிறோம். இம்மட்டில் நாம் எல்லாருமே சிவனைப்போல் நம்மைக் கருதவேண்டும்.
அப்படிக் கருதினாலே சக்தியற்றுப்போனால்
என்னாகும் என்பதை உணரமுடியும்.''
வியாசர் வெகு அழகாய் ஜெனமே
ஜெயனுக்கு கூறத்தொடங்கி தேவியின் விராட சொரூபம் பற்றிக் கூறத்தொடங்கினார்.
""ஜெனமேஜெயா...
நமக்குள் இயக்க சக்தியாய் இருக்கும் தேவியின் ஒட்டுமொத்த சக்தி உருவம்தான் விராட சொரூபம்- அதாவது விஸ்வரூப உருவம்! இந்த உருவைக்காண நம்மால் முடியாது.
அவளின் விஸ்வரூபத்தில் நாம் அவள் உடலின் ஒரு பாகத்தைக்கூட முழுமையாகக் காண முடியாது. அத்தனை பெரிய சொரூபம் கொண்டவள் அவள்... இதன் பின்புலத்தில் நாம் அறிய ஒரு சம்பவம் உண்டு'' என்று அந்த சம்பவத்தைக் கூறத்தொடங்கினார்.
""தட்சன் ஒருகட்டத்தில் சிவனை வெறுத்து சிவத் துரோகியாகவே மாறி விட்டான். இதனால் இவன் மகளான தாட்சாயிணி மனம் மிக வருந்தினாள். அதன் எதிரொலியாக யோகத்தில் ஆழ்ந்துவிட்டாள். அதாவது எச்செயலுமின்றி தன்னையே மறந்து செயலற்றுப் போய்விட்டாள்.
இதனால் சர்வலோகங்களிலும் இயக்க விசையில் சோர்வும், பலவீனமும் உண்டாகி ஒவ்வொரு உயிருமே அதை உணர்ந்தன.
தண்ணீரில் நீந்தியபடியே இருக்கும் மீன் ஓரிடத்தில் அப்படியே நின்றுவிட்டது. பறவைகளும் பறவாமல் மரங்களில் அமர்ந்தன. ஓடும் நதியிடம்கூட வேகமில்லை. இப்படிப்பட்ட நேரங்களில் எல்லாம் அசுர சக்திகள் தலைவிரித்தாடத் தொடங்கிவிடும். குறிப்பாக தாரகாசுரன் பிரம்மாவிடம் அளவற்ற வரங்களைப் பெற்றுவிட்டு தன் ஆட்டத்தையும் தொடங்கிவிட்டான். இதனால் வழக்கம்போல் தேவர்கள் துன்பமடைந்தனர். இவனை அடக்கவோ அழிக்கவோ யாரால் முடியுமென்று ஒரு கேள்வி எழும்பியது. இவனை வெல்ல சிவசக்தி சேர்க்கையில் உருவாகும் ஒரு சக்தியால்தான் முடியும் என்பது பதிலாகியது.
இதற்கு என்னதான் தீர்வு?
ஸ்ரீமகாவிஷ்ணுவே இதற்குத் தீர்வு கண்டார்.
"எப்படி' எல்லாரும் வெகு ஆவலாகக் கேட்டனர். "சிவசக்தி சேர்க்கை ஏற்படவும், ஏற்படுத்தவும் ஆதிசக்தி யாலேயே முடியும்-
அவளே பராசக்தி. எனவே அவளை அனைவரும் ஒருமுகமாய் தியானிக்கவேண்டும்' என்றார். அதேபோல அவ்வளவு தேவர்களும் ஒன்றுகூடி தேவியைத் தங்கள் மனதில் இறுக்கி தியானித்தனர்.
அதன்பயனாய் பராசக்தியும் பிரசன்னமானாள். முதலில் ஒளிப்பிழம்பாய்த் தோன்றிய வளை எவராலும் காணமுடியவில்லை.
பின்னரே ஒரு கன்னி வடிவம் கொண்டு காட்சி தந்தாள். அனைவரும் வலம்வந்து மகிழ்ந்தனர். தேவேந்திரன் கன்னி பராசக்தி யிடம் உபதேசம்பெற விரும்பினான். அதே போல பர்வதராஜனும் விரும்பினான். இவர்களுக்கு தேவியின் உபதேசம் தொடங்கியது.
இந்த உபதேசம் அசாதாரணமானது- தேவி இவர்கள் இருவருக்கு உபதேசித்த சாக்கில் உலகோர்க்கு உபதேசித்ததே இந்த உபதேசம்! இனி அதைக் கேட்போம்.
"ஹே பர்வதா... இந்திரா!
நன்கு கேளுங்கள்...
நானே அக்னியில் உஷ்ணம், சூரியனில் ஒளிக்கற்றை, சந்திரனில் குளிர், வெளிச்சம் என்று இருக்கிறேன். நானே மாயா!
இந்த உலகின் காரியங்கள் அனைத் திலும் மாயா உள்ளது. நானே சப்த தன் மாத்திரை வடிவில் ஆகாயமாய், ஸ்பரிச தன்மாத்திரை வடிவில் காற்றாய், ஏனைய நீராய், நெருப்பாய் நிலமாக உள்ளேன். இவற்றின் ஒட்டுமொத்தச் சேர்க்கையில் உருவானதே நமது உடலாகும். இந்த உடலைப் பற்றிக்கொண்டு கிடக்கும் ஆத்மாமுதல் அவ்வளவும் இவ்வுடலில் அடக்கம். இதில் ஞான இந்திரியம் ஐந்து, கர்ம இந்திரியம் ஐந்து, உள்ளே வாயுக்கள் ஐந்து. இதுபோக மனம், புத்தி என்று மொத்தம் பதினேழும் கொண்டதே ஜீவ சூட்சும சரீரம். இந்த உலகின் ஒட்டுமொத்த ஜீவசூட்சும சரீரத்தின் சேர்க்கையே எனது ஜீவசூட்சும சரீரமாகும். சரீரங்களின் குணம் மூன்று' என்று தேவி அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து, பர்வதராஜன் தேவியின் ஒட்டுமொத்த ஜீவசூட்சும சரீரத்தைக்காண விரும்பினான். தேவியும் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்க் காட்சிதந்தாள்.
ஆனால் காணத்தான் முடியவில்லை.
அவ்வளவு பிரகாசம்!
பின் தேவி தன்னை மட்டுப்படுத்தி கன்னியாகுமரியாகக் காட்சி கொடுத்தாள். இந்த நிலையில் ஆத்மஞானம் குறித்து உபதேசம் செய்தாள்.
"ஹே பர்வத ராஜா!
ஒரு பிறப்பென்பது ஒரு சந்தர்ப்பமாகும். அந்த சந்தர்ப்பம் எதற்குத் தெரியுமா... பிறப் பிலிருந்து விடுபடுவதற்கு...! ஆனால் விடுபடத் தெரியாமல் திரும்பத் திரும்ப பிறவிகள் எடுத்தபடியே தங்கள் ஆத்மாவை வைத்துள்ளனர். காரணம் மாயை!
இந்த மாயையை எடுத்துவிட்டால் இந்த உலகில் எதுவுமில்லாமல்போய் எல்லாம் சமமாகிவிடும். சமமான இடத்தில் இயக்கம் இருக்காது- சுவை இருக்காது. எனவேதான் மாயையை உருவாக்கினேன்.
மாயையே ஒருவனை அல்லப்பட வைக்கிறது; கண்ணீர்விடவும் வைக்கிறது. உண்மையில் இரண்டும் பொய். உடம்பை விட்டு உயிர்பிரிந்த பிறகு உடம்புக்குரிய வாழ்வு முடிந்துவிடுகிறது. அந்த வாழ்வை பிறர் நினைப்பதால் ஒரு பயனுமில்லை. ஏனென்றால் அதை நினைப்பவர்களும் நெடிய வாழ்வு வாழப்போவதில்லை.
இதைத் துல்லியமாக உணர்வதே ஞானம்!
ஞானம் உள்ளவன் மாயையை உணர்ந்து அதன் போக்கில்போய், இறுதி யில் அதைவென்று தன்னைத் தற்காத்துக் கொள்வான்.
மாயையை வெல்ல மாயையின் வடிவங்களை உணரவேண்டும். மாயையே காமம், குரோதம், லோபம், மதம், மோகம், மாத்சரியம் எனும் ஆறு பகை வடிவில் உள்ளது. இதை அடக்க யோகத்தால் மட்டுமே முடியும். இந்த யோகம் மொத்தம் எட்டு வகை...
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரனை, தியானம், சமாதி என்பதே அது.
பிற உயிருக்கு இம்சை செய்யாதிருத்தல், சத்தியத்தைக் கடைப்பிடித்தல், பிறர் பொருள்மேல் ஆசைப்படாதிருத்தல், பிரம்மச்சரியம் கொள்ளல், நன்னெறிகளில் செல்லுதல், கருணையுடன் இருத்தல், பொறுமை, துணிவுடைமை, அளவான உணவு, சுத்தம்- இந்த பத்துதான் இயமம்.
தவம், சந்தோஷம், தெய்வ நம்பிக்கை, அடக்கம், தானம், தேவபூஜை, சித்தாந்தம், புத்தி, ஜெபம், ஹோமம் இவை பத்தும் நியமம்.
ஆசனம், பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்ராசனம், வஜ்ராசனம், வீராசனம் போன்றவை யோகமாகும். இதையெல்லாம் உடம்பைக்கொண்டே செய்ய இயலும். இந்த உடம்பை- இதன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு சேர்க்கும் முயற்சியே சமாதி யோகமாகும்.
இந்த உடம்பில் மூன்றரை கோடி நாடிகள் உள்ளன. பத்து நாடிகள் முக்கியமானவை. இதில் மூன்று மிகமுக்கியம். அவையே இடகலை, பிங்கலை, சுழுமுனையாகும். முதுகெலும்பான மேருவுக்கு இடப்பக்கம் வெண்ணிறத்தில் அமிர்த தாரையோடு இருப்பது இடகலை நாடி. வலப்பக்கம் சூரிய பிரகாசத்தோடு இருப்பது பிங்கலை நாடி. புருவ நடுவில் அக்னிச் சுடர் வடிவில் இருப்பது சுழுமுனை நாடி.
இவற்றை உணர்ந்து குண்டலினி யோகம் புரியவேண்டும். இது சிரசில் சஹஸ்ராரத்தில் பெரும் ஒளியை உண்டாக்கி பேரின்பம் தரும்.'
இப்படி தேவியானவள் ஆத்மஞான விளக்கமளித்து சில முக்கிய கொள்கை களையும் வெளியிட்டாள்.
"இப்பிரபஞ்சத்தில் சகலத்திலும் பிரம்மத்தைக் காணமுடிந்தவனே ஞானி. ஒரு குருவால் கிட்டும் ஞானமே நிலைக்கும். குருவே பெரியவர். இறைவனிடமிருந்து குரு நினைத்தால் காப்பாற்றலாம். ஆனால் ஒரு குரு கோபித்தால் இறைவனால்கூட ஏதும் செய்ய இயலாது. குரு அவ்வளவு பெரியவர்.'
ஆதிசக்தியான தேவி ஆத்மஞான உபதேசத்தில் குரு எவ்வளவு பெரியவர் என்பதை உணர்த்த ஒரு கதையையும் கூறினாள்.
தத்யங்கர் என்று ஒரு குரு. இவரிடம் அசுவினி தேவர்கள் சென்று தங்களுக்கு பிரம்ம உபதேசம் செய்ய வேண்டினர். தத்யங்கர் "அதற்கு சரியான நேரம் முக்கியம்- அப்போது வாருங்கள்' என்று கூறிவிட்டார். இந்த விஷயம் இந்திரனுக்குத் தெரியவந்தது. அவன் முனிவரிடம் நேரில் வந்து, "அசுவினி தேவர்களுக்கு பிரம்ம உதேசம் செய்யக்கூடாது- அப்படிச் செய்தால் தலையைத் துண்டித்துவிடுவேன்' என்று பயமுறுத்தினான். தத்யங்கர் இச்செய்தியை அசுவினி தேவர்களிடம் கூறினார். அவர்கள் உடனே தந்திரமாய் ஒரு காரியம் செய்தனர்.
அது...?
(தொடரும்)