ந்தப் பெண் விஸ்வாமித்திரர்முன் கெஞ்சி அழத்தொடங்கினாள்.

""முனிவரே! என்னை விட்டுவிடுங்கள். தங்கள் விருப்பப்படி என்னால் நடக்க இயலாது! என்னை விடுவித்து அனுப்புங் கள்'' என்று கதறவும் செய்தாள். அந்தப் பெண்ணின் கதறல் அரிச்சந்திரனை ஒரு அரசனாய் ஆவேசகதிக்கு ஆட்படுத்தியது.

""முனிவரே... என்ன இது... ஒரு பெண்ணை இப்படியா கண்ணீர் சிந்த விடுவீர்கள்?'' என்று ஆரம்பித்தான்.

""நீ யார் அதைக் கேட்க? இவளது கணவனா அல்லது சகோதரனா அல்லது பெற்ற தந்தையா?'' ""நீங்கள் சொன்ன மூன்று உறவுகளையும் கடந்த இந்த நாட்டு அரசன். என் நாட்டில், என் ஆட்சியில் பெண்கள் கண்ணீர் சிந்துவதை நான் அனுமதிக்க முடியாது.'' ""இது எங்கள் சொந்த விஷயம். இதில் நீ தலையிடாதே!'' ""உங்கள் சொந்த விஷயம் நான்கு சுவர் களுக்குள் இருந்திருந்தால் சரி. என் கண்ணெதிரில் நான் எப்படி அனுமதிப் பேன்?''

Advertisment

""சரி; என்ன செய்யவேண்டும் என்கிறாய்?''

""இவளைவிட்டு விலகிச்செல்லுங்கள். இவளை உங்கள் பொருட்டு துன்புறுத்தாதீர் கள்.''

""மீறிச் செய்தால்...''

Advertisment

""சட்டப்படி உங்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பேன்.''

""அரிச்சந்திரா... என் சக்தி தெரியாமல் நீ பேசுகிறாய்.''

""உங்கள் சக்தி எவ்வளவு வேண்டுமானா லும் இருந்துவிட்டுப் போகட்டும். நான் அதற் கெல்லாம் அஞ்சுபவன் கிடையாது.''

""அப்படியா?''

""அப்படியேதான்.''

""சரி... நான் இப்போது விலகுகிறேன். ஆனால் என்னிடம் சிக்கி நீ படாதபாடு படப்போகிறாய். அதை மறந்துவிடாதே.''

""பயமுறுத்தாதீர்கள் முனிவரே! நான் சூரிய வம்சத்தில் வந்தவன். எக்காரணம் கொண்டும் கடமை தவறமாட்டேன்.''

""அதையும் பார்க்கிறேன்'' என்று விலகி னார் விஸ்வாமித்திரர்.

y

அந்தப் பெண்ணும் அரிச்சந்திரனை வணங்கி விடைபெற்றாள். இந்தச் சம்பவமே ஒரு நாடகம். அரிச்சந்திரன் எப்படிப் பட்டவன் என்பதைத் தெரிந்துகொள்ள விஸ்வாமித்திரர் நடத்தியது. இதில் அவன் வீரத்தைக் காட்டிவிட்டான். எனவே இவனை வீரத்தால் வீழ்த்தமுடியாது. வேறுவிதங்களில் இவனுக்கு சிக்கலை உண்டாக்கினால்தான், இவனை தான் எண்ணியதுபோல் இந்த உலகின் சராசரி மனிதர்களில் ஒருவன் என்று காட்டமுடியும் என்பதை கண்டுகொண்ட விஸ்வாமித்திரர் அதற்கேற்ப திட்டமிட்டார். எப்படித் தெரியுமா?

தன் தவசக்தியால் ஒரு காட்டுப்பன்றியை உருவாக்கி, அதை அரிச்சந்திரனின் நந்தவனத் திற்குள் ஏவி விட்டார். அது நந்தவனத் துக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. அதை வேட்டையாட வீரர்கள் முயன்றபோது, அது மறைந்துபோய் அவர்களை அலைக்கழித்தது. இறுதியாக அரிச்சந்திரனே களத்தில் இறங்கினான்.

ஒரு வில்லை எடுத்துக்கொண்டு அதை வேட்டையாடத் தொடங்கினான். அது அவன் கண்ணில்பட்டு... போக்கு காட்டிய படியே காட்டுக்குள் நுழைந்தது. அரிச்சந்திர னும் காட்டுக்குள் நுழைந்தான்.

அது மாயப் பன்றியாதலால் அரிச்சந்திர னின் பாணங்கள் வீணாயின. ஒரு கட்டத்தில் அரிச்சந்திரன் தன் நாட்டைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டதும் தெரிந்தது. தன் அயோத்தி நகரம் எந்தப் பக்கம் இருக்கிறது என்பதே தெரியாதபடி அவன் ஒரு மாயமான சூழலிலி−ல் இருந்தான்.

பொழுதும் இருட்டிக்கொண்டு வந்தது. மழை வருவதற்கான அறிகுறிகள் வேறு! ஒரு மரத்தின்மேல் ஏறி அமர்ந்து இரவுப்பொழுதைக் கழிக்க முனைந்தான். ஆனால் மலைப்பாம்பும், தேன் கூடுகளும் அவனை ஏறமுடியாமல் செய்தன.

தவிக்கத் தொடங்கி னான்! அப்போது பசி தாகமும் ஏற்பட்டது. உண்பதற்கு ஒரு கனி வகையும் அங்கே இல்லை. மயக்கமே வந்துவிட்டது. மறுநாள் கண் விழித்த போது, தான் முன்பு மயங்கிவிழுந்த இடமாக அது இல்லை. ஒரு மலைப் பிரதேசம்போல் இருந்தது அந்தப் பகுதி. தான் எப்படி இங்கே வந்தோம் என்று தெரியாமலும், பசியாலும் அரிச்சந்திரன் துடிக்கவும், அதுதான் சரியான நேரமென்று விஸ்வாமித்திரர் ஒரு கிழட்டு பிராமணர் வேடத்தில் அரிச்சந்திரன்முன் வந்தார்.

அவரைக் காணவும், அரிச்சந்திரன் அந்த நிலையிலும் சோர்வோடு வணங்கினான். பிராமணர் வேடத்திலிலிருந்த விஸ்வாமித்திரர் முதல் காரியமாக குடிக்கத் தண்ணீர் கொடுத்தார். பின் தன் வசமிருந்த கட்டுச் சாதத்தை அவன் சாப்பிடக் கொடுத்தார். சாப்பிட்டு தெம்பு வரவும் அரிச்சந்திரன் நன்றி கூறினான்.

""பிராமணரே! நான் அயோத்தி மன்னன் அரிச்சந்திரன்... ஒரு மாயப்பன்றி என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்துவிட்டது. நல்லவேளை... நீங்கள் வந்து உணவளித்து உயிர்ப்பிச்சையளித்தீர்கள். இதற்காக நான் தங்களுக்கு நீங்கள் எதைக் கேட்டாலும் தர சித்தமாக உள்ளேன்'' என்றான்.

சிரித்தார் பிராமண வேட விஸ்வாமித்திரர்!

""ஏன் சிரிக்கிறீர்கள்?''

""எதைக் கேடடாலும் தர சித்தமாய் இருப்பதாகக் கூறினாயே... அதை நினைத் தேன்... சிரிப்பு வந்துவிட்டது.''

""அதில் சிரிக்க என்ன உள்ளது? நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன்.''

""அது சரி... சொல்வ தெல்லாம் சொல்லாகவும் வாக்குறுதிகளாகவும் ஆகிவிடுமா என்ன?''

""ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? என்மேல் உங்களுக்கு சந்தேகமா?''

""மனிதர்கள் எவரையுமே நான் இம்மட்டில் நம்புவதே இல்லை. யாரும் சொல்வதுபோல் நடப்பதேயில்லை.''

""நான் அப்படிப் பட்டவனில்லை முனிவரே!''

""அப்படியா?''

""வேண்டுமானால் நான் சத்தியம் செய்யட்டுமா?''

""அவசியமில்லை... உன் பேச்சே சத்தியத் துக்கு சமானமானது என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன்'' என்று கூறியபோது, அங்கே இன்னும் இருவர் வந்தனர்.

அவர்கள் அந்த பிராமணரின் பெண் மற்றும் பெண்ணை மணக்கப்போகும் மாப்பிள்ளை!

விஸ்வாமித்திரர் அவர்களை அரிச்சந்திரனுக்கு அறிமுகம் செய்தார். அப் படியே, ""இவர்கள் திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறது. அந்த திருமணத்திற்கு நீ உதவி செய்வாயா?'' என்றும் கேட்டார்.

""எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறேன். இது என் பாக்கியம்' என்றான் அரிச்சந்திரன்.

""அப்படியானால் எனக்கு அயோத்தி செல்ல வழிதெரியும். நானே உன்னை

அழைத்துச்செல்கிறேன். இவர்களும் உடன் வரட்டும். திருமணமும் நடக்கட்டும். இவர்களுக்குத் திருமணப்பரிசையும், எனக் குத் தனியாக நான் கேட்பதையும் நீ தருவாயா?''

""நிச்சயமாக...''

""அங்கு வந்தபின் பேச்சு மாறமாட்டாயே...?''

""உயிரே போவதாக இருந்தாலும் மாறமாட்டேன்.''

""உன் உயிர் போய் விட்டால் நீ எப்படி வாக்குறுதியைக் காப்பாற்றமுடியும்? எனவே உன் உயிர் எக்காரணம் கொண்டும் போகக்கூடாது. ஆத்மஹத்தி பற்றி நினைக் கவே மாட்டேன் என்று வாக்கு கொடு...''

""அப்படியே சுவாமி.''

அரிச்சந்திரன் விஸ்வாமித்திரரின் சதியை உணராதவனாய்- அதே சமயம் ஒரு நல்ல மன்னனுக்குரிய தன்மைகளோடு விஸ்வாமித்திரரின் எல்லா நிபந்தனைகளுக்கும் சம்மதித்தான்.

அதன்பின் அவர் அவனை அழைத்துக் கொண்டு அயோத்தி வந்தார். அரிச்சந்திரனும் அரண்மனையை அடைந்து, தான் காட்டில் வழிதவறிச் சென்றுவிட்டதையும், பிராமணர் தன்னைக் காப்பாற்றி அழைத்து வந்ததையும் கூறினான். அமைச்சர்கள் மகிழ்ந்தனர்.

பிராமண விஸ்வாமித்திரரும் தன் யோக சக்தியால் உருவாக்கிய தன் மகள் மற்றும் மருமகனுக்குத் திருமணம் செய்துவைத்தார். அதன்பின் தம்பதி சமேதராய் அவர் அரண்மனைக்கும் வந்தார். அவரை மிக உற்சாகமாய் வரவேற்றான் அரிச்சந்திரன். அமர்வதற்கு தனக்கு அருகிலேயே ஒரு சிம்மாசனம் அமைத்து அதில் அமரச் செய்தான். விஸ்வாமித்திரரும் பிராமண வேடத்தில் அமர்ந்த நிலையில் அவனை ஏறிட்டார். பார்வையே "நான் கேட்க விரும்புவதைக் கேட்கட்டுமா?'' என்றது.

அவையே அவர் கேட்கப்போவதை எதிர்பார்த்தது.

""மன்னா... நான் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்தானே?''

""தாராளமாக...''

""வாக்கு மாறமாட்டாயே...''

""இந்த நாட்டுமக்கள்மேல் ஆணை- மாறமாட்டேன்''

""அப்படியானால் என் மாப்பிள்ளை, பெண்ணுக்கு நீ இந்த நாட்டையே பரிசாகத் தரவேண்டும். தருவாயா?''

விஸ்வாமித்திரர் கேட்டுவிட்டு அரிச் சந்திரனைப் பார்த்தார். அதைக்கேட்டு அவையோர் திடுக்கிட்டனர்.

அரிச்சந்திரன் மனைவி சந்திரமதியும், மகன் லோகிதாசனும் அடுத்து அரிச் சந்திரனைத்தான் பார்த்தனர்.

அரிச்சந்திரன் சற்று அமைதியாக இருந்தான். அவன் மௌனம் விஸ்வாமித்திர பிராமணரை பல கேள்விகள் கேட்கச் செய்தது.

""என்ன அரிச்சந்திரா... அதிர்ச்சியாக உள்ளதா? இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. எனக்கு நீ எந்த வாக்குறுதியும் தரவில்லையென்று சொல். நான் இவர்களை அழைத்துக்கொண்டு போய்விடுகிறேன்'' என்றார்.

""இல்லை பிராமணரே! நான் யோசித்தது இந்த நாட்டை இவர்களுக்கு எப்போது, எப்படித் தருவது என்பது குறித்தேயன்றி வேறு காரணங்களில்லை'' என்றான் அரிச்சந்திரன்.

அதைக் கேட்ட பிராமணர் உட்பட எல்லாருமே அதிர்ந்தனர். பிராமணர் சளைக்கவில்லை.

""அப்படியானால் இங்கே, இப்போதே நீ இவர்கள் இருவரையும் அரசன், அரசி யாக்கி விடு. இதற்கு ஏன் காலநேரம் பார்த்துக் கொண்டு...''

""தங்கள் விருப்பம் இப்போதே என்றால் நானும் சித்தமாய் இருக்கிறேன்.''

""அப்படியானால் செயலி−ல் காட்டு...''

பிராமணர் உத்தரவிட, அரிச்சந்திரன் அந்த மணமக்களை அழைத்து, அதில் மணமகனைத் தன் இருக்கையிலும், மணமகளை சந்திரமதி இருக்கையிலும் அமர் வித்து, தன் சிரசிலுள்ள கிரீடத்தையும் சுழற்றி மணமகனுக்கு அணிவித்தான்.

கணவன் எவ்வழியோ மனைவியும் அவ்வழியே என்று சந்திரமதியும் அவ்வாறே செய்தாள். அரிச்சந்திரன் முடிதுறந்த மன்னனாக அவை யோரைப் பார்த்துப் பேசினான்.

""அருமை அயோத்தி மக்களே! இந்த அவையின் பிரதானிகளே! அமைச்சர்களே! மந்திரிமார்களே... மேலும் இந்த அவையை அலங்கரிக்கும் சான்றோர் பெருமக்களே! உங்களையெல்லாம் முதலி−ல் வணங்கி மகிழ்கிறேன். நான் இப்போது உங்கள் மன்னனில்லை. காலம் என்னை இப்பொறுப்பிலி−ருந்து விடுவித்துள்ளது. கொடுத்த வாக்குறுதியென்பது இந்த உலகில் பட்டம், பதவி என எல்லாவற்றையும்விட பெரியது. எனவே, நானும் என் முன்னோர்வழி நின்று வாக்குறுதியைக் காப்பாற்றும்பொருட்டு இப்போது சாமான்யனாகியுள்ளேன்.

என் செயலை நீங்கள் ஒப்புக்கொண்டு என்னை வாழ்த்துங்கள். இனி இந்த பிராமணரும், அவர் மனைவியுமே அரசன், அரசி! அவர்களுக்குக் கட்டுப்பட்டு நீங்கள் நடக்கவேண்டும். எனக்குத் தந்த ஆதரவை நீங்கள் இவர்களுக்கும் அளிக்கவேண்டு மென்பதே என் விருப்பம்'' என்று பேசி முடித்தவனாய் தன் மனைவி, மகனுடன் அவையை விட்டு புறப்பட முனைந் தான்.

பிராமண வேட விஸ்வா மித்திரர் அவனைத் தடுத்து, தன் அடுத்த கட்டத் தாக்குதலைத் தொடர்ந்தார்.

""அரிச்சந்திரா, நில்!''

""ஸ்வாமி... ஏன் நிற்கச் சொல்கிறீர்... நான் சொன்னபடி நடந்து விட்டேன். இந்த நாட்டில் ஒரு மூலையில் இருந்து கொண்டு அயோத்தி நகரப் பிரஜையாக வாழ விரும்புகிறேன்.''

""அதற்கு நீ அனுமதி பெறவேண்டாமா?''

அவர் கேள்வி அரிச் சந்திரனையே திடுக்கிட வைத்தது.

""ஸ்வாமி... தவறுதான். தாங்களே அனுமதி பெற்றுத் தாருங்கள்...''

""அதற்குமுன் இன்னொரு விஷயம்?''

""என்ன ஸ்வாமி?''

""நீ கொடுத்தது இரு வாக்குறுதிகளை...

ஆனால் ஒன்றைத்தானே நிறைவேற்றியுள் ளாய்... இன்னொன்று?''

பிராமணர் பேச்சால் அவை கொந்தளிக் கவே தொடங்கியது!

(தொடரும்)