இரண்டாம் பாகம் -இந்திரா சௌந்தர்ராஜன்
ராஜரிஷிகள் தனக்குக் கூறிய ஆலோசனைப்படியே நடக்க சம்மதித்தான் கார்த்தவீர்யார்ஜுனன். ""ஒரு நாட்டின் மக்கள் எப்போது மிக மோசமானவர்களாகிறார்கள்'' என்கிற கேள்வியை முதலில் எழுப்பினர் அந்த ரிஷிகள்!
""பசிக்கு உணவில்லாதபோதும், நியாயமான விருப்பங்கள் ஈடேறாதபோதும், இருக்க நல்ல இருப்பிடமும் உடுத்த உடையும் இல்லாதபோதும், நோய் வந்து அல்லல்படும்போதும், கள்வர்களால் களவாடப்படும் பொழுதும், தம் வீட்டுப் பெண்களுக்கோ ஆண்களுக்கோ பிராயத்தில் திருமணம் நடக்காத போதும், அப்படியே நடந்தாலும் பிள்ளைப்பேறு இல்லாமல் போகும்போதும்...'' என்று மக்களுடைய வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளை ஒருபுறம் அறிஞர்களும், மந்திரிகளும் வரிசையாகச் சொன்னார்கள்.
""சுருக்கமாய்க் கூறுவதென்றால் நாட்டு மக்கள் எனப்படுபவர்கள் அடிப்படைத் தேவை பூர்த்தியானவர்களாய், அதையும்மீறி குறைகள் இருந்தால் அவை தீரும் விதத்தில் அவர்களுக்கு உதவிகள் கிடைத்தால் அவர்கள் மகிழ்வோடு இருப்பார்கள். எந்த தவறான எண்ணங்களும் அவர்களுக்குத் தோன்றாது.'' என்று முடித்தனர்.
இவ்வாறு ஒரு முடிவுக்கு வந்தபின் கார்த்த வீர்யார்ஜுனன் தன் நாட்டு மக்களுக்கென்று பல திட்டங்களைத் தீட்டினான். அதில் ஒன்று குடியிருக்க வீடு, உழுது பயிரிட நிலம், அதில் பாடுபட கருவிகள் தருவது என்பது முதல் திட்டம். அடுத்து பயிரிட்ட பயிர் வகைகளை அரசாங்கமே விலைக்கு வாங்கிக்கொண்டு அதற்குரிய பணத்தைத் தந்துவிடும். யாருக்கும் எந்த வரி விதிப்பும் கிடையாது. பசி, தாகத்துக்கும் இடமில்லை. அரசாங்கமே அன்னசத்திரத்தில் எல்லாருக்கும் இலவசமாக உணவு தரும்.
அவரவர் உழைப்புக்கேற்ப சம்பாதித்து அதைக்கொண்டு தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். மதுப் பழக்கம், சூதாட்டம், கணிகையர் தொழில் போன்றவற்றுக்கு துளியும் நாட்டில் இடம் கிடையாது. யாராவது களவில் ஈடுபட்டால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்.
இப்படி பல புதிய திட்டங்களைத் தீட்டி ஆட்சி நடத்தியதில் அவன் நாடு சில வருடங்களிலேயே மிக முன்னேறிய நாடாகிவிட்டது. யாருக்கும் எந்தக் குறையுமில்லை.
எல்லாரும் மகிழ்வுடன் இருந்ததால் குற்றங்களுக்கோ, அதனால் பாவச் செயல்களுக்கோ இடமின்றிப் போனது. மாதம் மும்மாரியும் பெய்தது. இதனால் கார்த்தவீர்யார்ஜுனன் கணக்கில் பாவங்கள் சேராத நிலை தோன்றியது. இவ்வேளையில் "தத்தாத்ரேயர்' எனும் முனி இவனது நாடான மாகிஷ்மதிக்கு வரவும், அவரை வரவேற்று அவருக்குத் தொண்டு செய்தான். பின் அவர் மனம் கனிந்து, ஊனமான நிலையிலும் உன்னதமாய் ஆட்சி நடத்தும் அவனுக்கு ஆயிரம் கரங்கள் முளைக்கவும் இரு கால்களும் ஏற்படவும் அனுக்கிரகித்தார்.
அவன் முழுமை பெற்ற மனிதனாகி ஆயிரம் கரங்களில் முதல் கரத்தையும் ஆயிரமாவது கரத்தையும் மட்டும் இயக்கிக்கொண்டு, மற்ற கரங்கள் தான் வேண்டும்போது தோன்றும்விதத்தில் தன்னை வடிவமைத்துக் கொண்டான். இப்படி ஆயிரம் கரங்கள் அவன் ஒருவனிடமே இருப்பதால் அவனை எதிர்த்து யுத்தம் செய்திட எல்லாரும் அஞ்சினர்.
எனவே இந்த பூமிக்கே தலைவனாகிவிட்டான் கார்த்தவீர்யார்ஜுனன்! நாட்டு மக்களும் நலத்தோடு வாழ்ந்தனர்.
ஒரு கட்டத்தில் இவனிடம் செல்வம் மிகுந்தது.
அதை பிராமணர்களுக்கு அள்ளித்தந்து தீர்த்தான்.
இந்த உலகிற்கு ஒரு பெருமை உண்டு. இவ்வுலகில் பிறந்த எவரும் நீடித்தும் நிலைத்தும் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. உலகம் மட்டும்தான் நீடித்திருக்கும். கார்த்தவீர்யார்ஜுனனுக்கும் அது பொருந்தும். பல்லாயிரம் ஆண்டுகள் திறம்பட ஆண்டவன், ஒரு கட்டத்தில் மரணமடைந்தான். இவனுக்குப்பின் வந்த இவனது மக்கள் இவனைப்போல நடக்க முயன்றார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதுமட்டுமல்ல... மக்களும் தவறாக நடக்க ஆரம்பித்தனர். இதனால் மழைவளம் குறைந்து நாட்டில் திருட்டு, கொலை, கொள்ளை ஏற்படலாயிற்று.
கார்த்தவீர்யார்ஜுனன் தான் வாழ்ந்த காலத்தில் தன்வசமிருந்த தங்கம் மற்றும் நவரத்தினங்களை பிராமணர்களுக்கு அளித்திருந்தானல்லவா?
அவர்கள் இப்போது மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்து வந்தனர்.
அதுமட்டுமின்றி ஏழைகளைத் தங்களுக்கு அடிமைகளாக்கி மகிழ்ந்தனர். இதைக்கண்ட கார்த்த வீர்யார்ஜுனனின் புதல்வர்கள் இந்த பிராமணர்களைத் தேடிவந்து தங்கள் தந்தை தானமாய்த் தந்த செல்வத்தை திரும்பக்கேட்டனர். கஜானாவில் செல்வம் இல்லாததால் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை என்றனர். ஆனால் அந்த அந்தணர்களோ தங்களிடம் எந்த செல்வமுமில்லை என்று கூறிவிட்டனர். தங்கள் வசமிருந்த அவ்வளவு செல்வத்தையும் பானைகளில் போட்டு ஆற்றோரமாக ரகசியமாகப் புதைத்து வைத்துவிட்டனர். பல நூறு பிராமணர்கள் இவ்வாறு பேராசையோடு நடந்து கொண்டனர்.
அவ்வாறு நடந்து கொண்டதோடு "தானமாய்க் கொடுத்ததை திரும்பக்கேட்டது தவறு- அது இழிவு' என்று இகழவும் செய்தனர்.
இதனால் வருந்திய இளைய வீர்யார்ஜுனர்களை மந்திரிகளும் ராஜரிஷிகளும் ஆறுதல்கூறித் தேற்றினர். மேலும், "நாட்டைக் காக்க அந்த பிராமணர்களிடமிருந்து நாம் தந்த செல்வத்தைப் போரிட்டும்கூட திரும்பப் பெறலாம்; அதில் தவறில்லை' என்றனர்!
வியாச மகரிஷி இக்கட்டத்தில் தான் கூறிவந்த கார்த்தவீர்யார்ஜுனன் கதையை நிறுத்திவிட்டு பாலும்பழமும் உண்ணத் தொடங்கினார். ஜெனமேஜெயனோ ஏராளமான கேள்விகளுக்குள் மூழ்கிப் போயிருந்தான். சாப்பிட்டு முடித்தவர் அவனை ஏறிட்டார். அவனும் கேள்விகளைக் கேட்க வாயைத் திறந்தான்.
""மகரிஷி... நீங்கள் இதுவரை கூறிய பல சம்பவங்களில் இந்த சம்பவம் என்னைப் பலவாறு சிந்திக்க வைக்கிறது. காலும் கையுமின்றிப் பிறந்துவிட்ட போதிலும், ஆயிரம் கரங்களுக்கு சொந்தக்காரனாக கார்த்த வீர்யார்ஜுனன் ஆனதென்பது போற்றுதலுக் குரியது. உண்மையில் இது எனக்கு மகிழ்வை யும் நம்பிக்கையும் அளிக்கிறது.
ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும்- மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்பெதல்லாமும் தெரியவந்தது. ஆனால் இத்தனை சிறந்த மன்னன் மறைந்த பிறகு எல்லாமே தலைகீழாக மாறியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
இப்படிக்கூடவா மாற்றங்கள் ஏற்படும்? அதைவிடக் கொடுமை தானமாகக் கொடுத்ததைக் கேட்க நேர்ந்ததுதான். அந்தக்கொடுமையிலும் கொடுமை அந்த செல்வத்தை அந்தணர்கள் தர மறுத்தது... இப்படியெல்லாம் கூடவா நடக்கும்?'' என்று ஜெனமேஜெயன் மூச்சு விடாமல் கேட்டான். வியாச மகரிஷி சிரித்தார்.
""ஜெனமேஜெயா.. ஆசை வயப்பட்ட வாழ்வே எப்போதும் இப்படித்தான். ஒரு நாள் பிரகாசமாய் இருக்கும்- மறுநாளே இருண்டுபோகும். இதற்கு இருகரங்கள் கொண்ட நாம் மட்டுமல்ல; ஆயிரம் கரம் கொண்டவனும் விதிவிலக்கல்ல என்று உணர்த்துவதே கார்த்தவீர்யார்ஜுனன் கதை.''
""அப்படியானால் எதுதான் சிறந்த வாழ்வு?''
""தர்ம நியதிப்படி நடப்பதும், கடமையை எந்த எதிர்பார்ப்புமின்றி செய்வதுமே சிறந்த வாழ்வாகும். இப்படி வாழ்ந்திடும்போது, பெரும் துன்பம் வரும்போது நாம் ஒடிந்து போகமாட்டோம்; இன்பம் வந்தாலும் மயங்கிவிட மாட்டோம்.''
""மொத்தத்தில் நிதானமாக வாழவேண்டும் என்கிறீர்கள்...''
""ஆம்; இதையே நீ கருத்தாக எடுத்துக் கொள்ளவேண்டும்.''
""நல்லது... அதன்பின் என்னாயிற்று?''
""அதன்பிறகே நடக்கக்கூடாததெல்லாம் நடந்தது...''
""விளக்கமாய்க் கூறுங்கள்...''
""இளைய வீர்யார்ஜுனர்களுக்கு அந்த ணர்கள் ஆற்றோரமாக தம் தந்தை தந்த செல்வங்களைப் புதைத்து வைத்த தகவல் உளவாளிகள் மூலமாகத் தெரிய வரவும், அவர்கள் அவற்றைத் தோண்டியெடுக்க முனைந்தனர். தடுக்க வந்த அந்தணர்களை வெட்டிக் கொன்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்தணர் குடும்பத்துப் பெண்கள் பலர் விதவைகளாயினர். அவர்கள் வீர்யார்ஜுனர்களை சபித்தனர். அது மட்டுமல்ல; தங்கள் குலத்தையே நாசம் செய்த "ஹைஹயர்கள்' எனப்படும் இளைய வீர்யார் ஜுனர்கள் செயலிழந்து போகும் வண்ணம் உக்ரமான தேவி வழிபாட்டில் அவர்கள் இறங்கினர்!''
மீண்டும் வியாசர் ஒரு இடைவெளி விட்டார். ஜெனமேஜெயன் வியப்போடு பார்த்தான்.
""என்ன பார்க்கிறாய்?''
""உக்ரமான தேவி வழிபாடு என்றீர்களே... அதை எண்ணிப் பார்த்தேன்.''
""ஆம்; தங்களுக்கு நேரிட்ட இழப்புக்கும் அவமானத்திற்கும் அதுதான் தீர்வென்று பிராமணப் பெண்கள் கருதினர்.''
""தேவி வழிபாட்டில் உக்ர வழிபாடு என்றுகூட உண்டா என்ன?''
""ஏன் இல்லாமல்? தேவி சாந்த அணுகுமுறைக்கேற்ப அருள் செய்வதைப்போலவே உக்ரத்துக்கும் அருளுகிறாள்.''
""ஆச்சரியமாக உள்ளது! உக்ரம் என்பது உணர்ச்சி மிகுந்த செயல்பாடு. உணர்ச்சிகளோ உடல் சார்ந்தவை. மிக அநித்யமானவை. அநித்யமான ஒன்றையா அம்பாள் ஊக்குவிக்கிறாள்...?''
""நித்யம் இல்லாது அநித்யம் ஏது?''
""என்றால் நித்யத்துக்கே முயற்சி செய்யலாமே?''
""நீ இப்போது நிதான கதியில் இருந்து கதை கேட்டபடி உள்ளாய். உனக்கு கதை கேட்பதைக் கடந்து இப்போது வேறு கடமையும் இல்லை. இதேநிலையில் தாகத்தில் தவித்த சமயம் உன் தந்தை பரீட்சித்து ராஜாவும் இருந்திருந்தால், செத்த பாம்பை எடுத்து தவம்செய்யும் ரிஷியின் கழுத்தில் போட்டிருக்கமாட்டார். நன்றாக யோசித்து செயல்பட்டிருப்பார். இந்த பிராமணப் பெண்களும் கணவனை இழந்த துக்கத்திலும் கோபத்திலும் இருப்பவர்கள். இவர்கள் இவ்வாறே செயல்படுவர்.''
""அவர்கள் செயல்படுவது இருக்கட்டும். அம்பிகை இப்படிப் பட்டவர்களுக்கு எப்படி அருள் செய்வாள்?''
""அம்பிகைக்கு பக்தியும் அதன் பின்புலத்தில் உள்ள தர்மமுமே கணக்கு.''
""சரி... இவர்கள் வழிபாட்டுக்கு அம்பிகை செவிசாய்த்தாளா?''
""அது எப்படி எனக்கென்னவென்று இருப்பாள்? அம்பிகை பிரசன்னமாகி அனுக்ரகம் செய்தாள். அந்த அந்தணப்பெண்களில் ஒருத்தியின் தொடையில் கோபக்கார பிருகு முனிவர் அம்சமானது பிள்ளையாக உருத்திரண்டு பிறக்கும். அப்படி பிறக்கும் பிள்ளையால் உங்கள் துன்பம் தீர்வதோடு ஹைஹயர்களின் தவறான செயல்பாடுகளும் திருத்தப்படும் என்றாள்.''
""என்ன விந்தை இது? எதற்காக இப்படி ஒரு பிள்ளை? அதுவும் தொடையில் கருக் கொண்டு எப்படி பிறக்கமுடியும்? ஏன் அப் பெண்ணின் கர்ப்பத்தில் அந்த பிருகுமுனி அம்சம் தோன்றக்கூடாது..?'' ஜெனமேஜெயனின் கேள்வி வியாசரையே சற்று சிந்திக்க வைத்தது.
""என்ன மகரிஷி... என் கேள்விக்கு பதில் இல்லையா?''
""கேள்வி என்று இருந்தால் பதிலும் இருந்தே தீரும் ஜெனமேஜெயா.''
""பிறகென்ன தயக்கம்? எதற்கு அம்பிகை இப்படி ஒரு வரத்தைத் தந்தாள்? இது இயற்கைக்கு மாறானதல்லவா?''
""உண்மைதான்! பொதுவாக ஒரு உயிர் உருவாக ஆண்- பெண் சேர்க்கை அவசியம்...
இப்படி இருவர் சேர்ந்து ஒன்று உருவாகும் போது இருவருடைய வினைக்கணக்கின் பயனாகவே பிறந்த உயிர் இருக்கும். ஆனால் இப்படி இருவர் சேர்க்கையாலன்றி விசேஷப் பிறப்புகளும் உலகில் உண்டு. அப்படி ஒரு பிறப்புதான் பிருகு முனிவர் அம்சமான "பார்கவர்' இவரே தொடை. வழி பிறந்த பிள்ளை ஆவார்!
கர்ப்பத்தில் அடங்கியிருந்து வளராமல், தொடைக்குள் நுண்ணுயிர் மாமிசமாக இருந்து வளர்ந்து நம்போல் உருவைப் பெறுவதென்பது இன்னொரு விதம்! அப்படிப் பிறந்த இவரை நவகோள்கள் அணுகாது. எந்த தீயசக்தியும்கூடநெருங்காது. மீறி நெருங்கினால் அவற்றால் இவரை எதுவும் செய்யமுடியாது.''
""அதிசயம், ஆச்சரியம்... இப்படிப் பிறக்கும் ஒருவருக்கு மன அமைப்பு எப்படி இருக்கும்?''
""அது நம்மைப்போலவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அம்பிகையின் இப்படிப்பட்ட விருப்பத்தால் பிறந்தவர் என்பதால் இவரிடம் விசேஷ சக்திகளும் இருக்கும்.''
""அப்படிப்பட்ட சக்தி இந்த பார்கவர் என்பவரிடம் இருந்ததா?''
""நிறையவே இருந்தது. தங்களுக்கு எதிராகப் பூஜைசெய்து, இப்படி ஒரு வரசித்தியும் அந்தணப் பெண்கள் பெற்று விட்டது அறிந்து அவர்களைக் கொல்லவும் தயாராகினர் ஹைஹயர்கள்... ஆனால் அவர்கள் திரண்டு வந்த சமயம் தொடையைப் பிளந்து கொண்டு பார்கவர் பிறந்தார். அப்படி அவர் பிறக்கும்போதே கோடி சூரியப் பிரகாசத்துடன் பிறந்தார். இதனால் அவரைப் பார்த்த ஹைஹயர்களின் கண்கள் அவ்வளவும் குருடாகிவிட்டன!
சிறு குழந்தையாகப் பிறந்த சில மணி நேரங்களிலேயே பார்கவர் ஒரு மனிதனுக் குண்டான தேக அளவுக்கு வளர்ந்து எழுந்தும் நின்றார்.''
""எல்லாமே ஆச்சரியமாக உள்ளது... இயற்கைக்கு மாறாகவும் உள்ளது. இதை என்னால் நம்பவும் முடியவில்லை.''
""ஆம்; நம்பமுடியாதுதான். நம் அறிவின் விழிப்புநிலை ஒரு குறுகிய அளவே உடையது. ஆனால் அம்பிகையின் சக்தியோ எல்லையற்றது. எல்லையற்ற ஒன்றை எல்லைக்குட்பட்ட நம்மால் அறியவோ புரியவோ முடியாதுதான்.''
""அறியவும் புரியவும் முடியாத நிலையில் நம்பிக்கை ஏற்படுமா?''
""வேண்டாம். நம்பாதே! உலகில் நிகழும் பல சம்பவங்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து நிகழ்பவையல்ல. அதை அதன் போக்கில் சென்றே அறியமுடியும். அப்படிச் சென்றபின்பும் அறியமுடியாதும் போகலாம்.''
""ஒரு கேள்விக்கு இரண்டு பதிலா குருவே?''
""சில சமயங்களில் சில கேள்விகளுக்கு அப்படி பதில் அமைந்து விடுவதுண்டு ஜெனமேஜெயா...''
""சரி; பிறகு என்னாயிற்று?''
""என்னவாகும்... சக்தி மிகுந்தவர்கள்முன் சக்தியற்றவர்கள் பணிவதுதானே எங்கும் வழக்கம்?''
""என்றால் பார்கவர்முன் ஹைஹயர்களான இளைய வீர்யார்ஜுனர்கள் பணிந்து சென்றனரா?''
""பணிந்தால்தான் திரும்பப் பார்வை கிடைக்கும் எனும்போது பணிந்துதானே தீரவேண்டும்?''
""அப்படியா சங்கதி... எல்லாருடைய பார்வையும் திரும்பக் கிடைத்ததா?''
""கிடைத்தது. அளவற்ற சக்தி படைத்தவராக பார்கவர் விளங்கினார். அன்னையின் அருளால், மிக வித்தியாசமாகப் பிறந்தவரல்லவா?''
""பிறகு?''
(தொடரும்)