"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!'
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
குழினும் தான் முந்துறும்'
என்பது வள்ளுவர் வாக்கு. நாம் எவ்வளவு பெற்றிருந்தாலும் இறைவன் விதித்த அளவுக்கு மேல் அனுபவிக்க முடியாது. நமக்கு நன்மை நெருங்கும் நேரத்தில்கூட விதி முந்திக் கொண்டு அந்த நன்மையைத் தவிர்த்துவிடும்.
இப்படிப்பட்ட ஒருவன் ஒரு உத்த மிக்குக் கணவனாயிருந்தான்.
சாதனை புரிந்த கனி கனிகள் இனியவை. சுவையால் நாவுக்கும், நறு மணத்தால் நாசிக்கும், வண்ணத்தால் கண்களுக்கும், மென்மையால் தொடுவதற்கும் இனிமை பயப்பவை! செவியைத் தவிர நான்கு புலன்களுக்கும் இனியவை. இத்தகு கனிகளே சோதனை உண்டாக் கியதும் உண்டு; சாதனை புரிந்ததும் உண்டு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kani_11.jpg)
கயிலையில் ஒரு கனி!
கயிலையில் ஒரு மாங்கனி, நாரதர் கொண்டுவந்து அம்மையப்பனிடம் கொடுத்தது!
அக்கனியைப்பெற தெய்வப் பிள்ளைகளிடையே போட்டி. உலகை வலம்வந்தான் ஞானமுருகன்.
பெற்றோரே உலகமென அவர்களை சுற்றிவந்து முதலில் கனி பெற்றான் கணபதி.
ஆனாலும் இறைவனின் சர்வ வியாபகத் தன்மையை உணர்த்தியவன் வேலனே. எனவே அவனும் வென்றவனே. தனியே சென்று மலையேறி நின்றவனே!
இறைவனுக்கே தாயானவர்!
மானிடர்களிலே ஒரு புனிதவதி! அவரும் இறைவனிடம் இருமுறை வேண்டி இருகனி களைப் பெற்றார். அவருக்கு வந்த சோதனை யில் வென்று காரைக்கால் அம்மையார் என்று வழிபடப்பட்டார். கயிலை சென்ற அம்மையாரை, "அம்மையே வருக' என சிவ பெருமானே அழைத்த பெரும்பேறு பெற்றார். பிறப்பிலியாகிய சிவனுக்கே தாயான பெயர்பெற்றார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர் இந்த அம்மையார் மட்டுமே!
புனிதவதியின் வாழ்வு
காரைக்கால் நகரில் பரமதத்தன் என்றோர் வணிகன். அவன் வாணிபத்தில் வல்லவன். ஆயினும் மனைவியின் அருமை, பெருமை உணராதவன்! ஒருநாள் அவனிடம் வாணிகம் பேசவந்தவர்கள் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தனர். அவன் அவற்றை வீட்டிற்கு அனுப்பிவிட்டான்.
அடியாராய் வந்த சிவன்!
சிவனடியார் ஒருவர் மிகுந்த பசியுடன் அவனது வீட்டிற்கு வந்தார். பரமத்தனின் மனைவி புனிதவதியார் அடியாரை அன்புடன் வரவேற்றார். சிறப்பாக ஏதாவது சமைக்கும் வரை அடியார் பசிதாங்கமாட்டார் என்பதைக் குறிப்பால் உணர்ந்தார் புனிதவதி. எனவே அடியாரை உடனடியாக அமரச்செய்து உணவு படைத்தார். குழம்பு, ரசம் தவிர வேறெதுவும் இன்மையால், கணவன் கொடுத்தனுப்பிய இரு மாங்கனிகளில் ஒன்றை அடியாருக்குப் படைத்தார். அடியார் உண்டுசென்ற சிறிது நேரத்திற்குப்பின் கணவன் வந்தான். அம்மை யார் அவனுக்கு உணவு படைத்தார். மீதமிருந்த ஒரு மாங்கனியை அவனுக்கு இலையில் இட்டார்.
சோதனை ஆரம்பம்
""மாங்கனி மிகவும் சுவையாய் இருக்கிறது. மற்றுமோர் கனியையும் இடுக'' என்றான் கணவன்.
வாழ்க்கையின் ஒரு பகுதியாகிய மனைவி யும், தான் உண்டதுபோல் உண்ணட்டும் என்ற எண்ணமே இல்லாத "மரம்' அவன்!
அன்பே உருவான புனிதவதிக்கு இப்படி யோர் பொருந்தாத கணவன். சேக்கிழார் இவர்களது திருமணத்தைத் கூறும்போதே ஒரு அழகான உருவகத்தால் "பொருந்தாத உறவு' எனக் கூறிவிட்டார்! "அவிர் அடவி மென்றகை மயிலை தாதவிழ்தார் காளைக்கு கனமகிழ் சுற்றம் போற்ற கலியாணம் செய்தார்.' மயிலின் மென்மையானது முட்டி மோதும் முரட்டுக் காளைக்குத் தெரியுமா? இருப்பினும் கணவன் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சியென்று வாழ்ந்தவர் புனிதவதி. ஆகவே, உள்ளே சென்றார். "பெருமானே, இவரிடம் எப்படி நான் உண்மை சொல்வேன்?' என்று கலங்கி கண்ணீர் சிந்தி வழிபட்டார். "நீதான் ஒரு கனி தந்தருள வேண்டும்' என்று சிவனை வேண்டினார். அடுத்த கணம் அவர் கைகளில் ஒரு அருட் கனி. மலர்ந்த முகத்துடன் அதனைக் கணவனின் இலையில் இட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kani1_7.jpg)
""மற்று அதனைக் கொடுவந்து மகிழ்ந்து இடலும்.'
-பெரியபுராணம்.
""இக்கனி முன்பு உண்டதைவிட மாறுபட்ட சுவையுடையதாய் உள்ளதே'' என்றான் அவன்.
"உற்ற சுவை அமுதினும் மேம்பட உளதாயிட
இது நான் முன்தரு மாங்கனியன்று
மூவுலகில் பெறற்கரிதால் பெற்றது
வேறு எங்கு என்று பெய்வளையார்தமைக்
கேட்டான்.'
-பெரியபுராணம்.
மனைவியிடம் பழகும் இங்கிதமறியாத வன் பரமதத்தன்! அதனால் அவனை "இல் இறைவன்' என்று ஏளனமாய்க் குறிப்பிடுகி றார் சேக்கிழார்.
அம்மையார் நிலை தர்மசங்கடமாயிற்று. எனவே அடியார் வந்து உண்டுசென்றதை யும், சிவனருளால் மற்றோர் கனி பெற்றதை யும் மறைக்காமல் கூறிவிட்டார்.
"மொய்தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்.'
-பெரியபுராணம்.
பக்தியின் சாதனை!
புனிதவதியார் கூறிய உண்மையைக்கேட்டு கணவன் மகிழ்ச்சியடையவில்லை; பாராட்ட வுமில்லை. "என்னது? பூஜையறைக்குள் மரமில்லாமலே மாங்கனி வருமா?' என சந்தேகப்பட்டான்!
"ஈசனருள் எனக்கேட்ட இல் இறைவன் அது தெளியான்
வாசமலர் திருவனையார் தமைநோக்கி மற்றிதுதான்
தேசுடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்
ஆசில்கனி அவனருளால் அழைத்தளிப்பாய் என மொழிந்தான்.'
-பெரியபுராணம்
கணவன் தன்னை சந்தேகப்படுவதற்காக அம்மையார் வருந்தவில்லை. இறைவன் அருளே சந்தேகத்திற்கிடமாகிவிட்டதே என வருந்தினார். கண்களில் நீர்வழிய கண்மூடித் தொழுதார்.
"ஈங்கிது அளித்து அருளீரேல் என்னுரை பொய்யாம்.'
-பெரியபுராணம்.
கண்ணீர்த்துளி கைகளில் விழுமுன் மற்றோர் அருட்கனி கைகளில் தவிழ்ந்தது. அம்மையார் அதனை முன்புபோல் அவன் இலையில் இடாமல் அவன் கைகளில் கொடுத்தார்.
இடுவது வேறு; கொடுப்பது வேறு. இடுவது மரியாதை; கொடுப்பது மரியாதைக் குறைவு.
"சந்தேகப்பட்டாய்; இதோ நீ கேட்டதைக் கொடுத்துவிட்டேன். பார்த்துக் கொள்' என்பது போன்ற செயல்.
"ஆங்கவன் கை கொடுத்தலுமே அதிசயித்து வாங்கினான்.'
-பெரியபுராணம்.
ஆனால் கனநேரத்தில் அக்கனி அவன் கைகளிலிருந்து மறைந்தது!
ஆம்; முன்பு சந்தேகமின்றி கேட்ட கனி இடப்பட்டு உண்டான். அது பூவோடு சேர்ந்த நாரும் மணம்பெறுவதுபோல.
உழவர் மண்ணை உமும்போது வழியில் முளைத்த புற்களெல்லாம் சிதையும். ஆனால் ஒரு மரத்தின் வேரை ஒட்டியிருக்கும் புல் மட்டும் சிதையாது என்பது குறளின் கருத்து.
அதுபோல பத்தினிப் பெண்ணின் கணவன் என்ற ஒரே காரணத்தினால் முதலில் வந்த அருட்கனியை உண்ணும் தகுதி அவனுக்கி ருந்தது.இப்பொழுது அம்மையாரின் பக்திக்கு சாட்சியாக வந்தது; காட்சி கொடுத்தது; காணாமற்போனது. அருட்கனியின் வேலை முடிந்தது; மறைந்துவிட்டது!
பரமதத்தன் கொடுத்ததில் ஒரு கனிதான் கதைக்குக் காரணமானது. இதற்குப் பிறகு பரம தத்தன் மனைவியின் தெய்வீகத் தன்மை உணர்ந் தான். விலகி வேற்றூர்சென்று விட்டான். வேறோர் பெண்ணை மணந்து பெண்மகவைப் பெற்று புனிதவதி என்று பெயரிட்டான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/kani-t.jpg)