ஒரு மனிதன் மிகுந்த துன்பங்களுக்கு ஆளாவதைக்கண்டு, "எப்ப செஞ்ச பாவமோ, இப்பக் கெடந்து அனுபவிக்கிறான்' என்போம்.
அதேபோல, ஞானிகள், யோகிகள், முனிவர்கள் தவநிலையில் இருப்பதைக்கண்டு "இனி ஒரு பிறவி வேண்டாமென இறைவனை வேண்டித் தவமிருக்கிறார்' என்போம். மனிதர்களாகப் பிறந்த நாம் ஏன் பிறந்தோம்? இந்தப் பிறவிக்குமுன் எப்படி இருந்தோம்? இந்தப் பிறவிக்குப் பின் எப்படி இருப்போம் என்ற கேள்விகளுக்கான பதிலில் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றாலும், ஆத்மாவானது பல நிலைகளில் பிறவி எடுக்கிறது என்பதில் ஒத்த கருத்துடன்தான் இருக்கிறோம்.
பிறவிநிலைகள் ஏழு எனச் சொல்லப்பட்டாலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றுவகைப் பிறவிகளில் முற்பிறவி என்பது கடந்தகாலம். அதாவது கல்லறை. கல்லறையில் பெரிதாக மாற்றம் செய்ய எதுவுமில்லை; செய்யவும் முடியாது. அப்படியே செய்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. அது வேண்டாத வேலை! அதேசமயம், இந்தப் பிறவி என்பது நாம் கட்டிக் கொண்டிருக்கும் வீடு போன்றது. இழைத்து இழைத்து நம் கற்பனைக்கேற்ப, வசதிக்கேற்ப அதைக் கட்டலாம். வீட்டை மெருகூட்டுவதைப்போல இப்பிறவியின் எஞ்சிய காலத்தை சிறப்பாக்கிக் கொண்டு வாழவும், வாழ்ந்து கழிந்த நாட்களில் செய்த தவறுகளை சரி செய்து கொள்ளவும் சில கர்மாக்களைச் செய்ய வேண்டியது அவசியம். இந்த அவசியத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் கர்மாக்களை நித்திய கர்மா, நைமித்திக கர்மா, காம்ய கர்மா என மூன்றாகப் பிரித்து, அதைச் செய்வதற்கான வழியாக பக்தியை உருவாக்கினர்.
இறைவனிடம் செலுத்துகின்ற அன்பே பக்தி. அதைப் பாசுரங்களாக நாயன்மார்கள், காதலாக ஆண்டாள், தியாகமாக கண்ணப்ப நாயனார் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இறைவனிடம் செலுத்தி வழிபட்டனர். ஆனால், இப்படி அன்புசெலுத்த எல்லாராலும் முடியாது. அதற்கு மிகுந்த மனமுதிர்ச்சி வேண்டும். பண முதிர்ச்சி மட்டுமே வாழ்க்கை என வாழப் பழகிவிட்ட நம்மால் மனமுதிர்ச்சியோடு மேலே கூறியபடியெல்லாம் அன்பு செலுத்துவது எளிதான செயலல்ல. அப்படியானால் நாமெல்லாம் இறைவனிடம் எப்படி பக்தி செலுத்துவது? பரம்பொருளை அடையும் பாக்கியத்தை எப்படிப் பெறுவது?
ஒரு ஊருக்குச் செல்ல பல வழிகள் இருப்பதைப்போல இறைவனிடம் பக்தி செலுத்தவும் பல வழிகள் இருக்கின்றன. அத்தகைய வழிகளில் நம்மைப் போன்றவர்களுக்கு ஏற்ற எளிய வழி வழிபாடு. பாசுரங்களால், காதலால், மிதமிஞ்சிய பாசத்தால், தியாகத்தால் இறைவனிடம் பக்தி செலுத்தி அவன் அருளைப் பெற்ற நாயன்மார்கள், ஆண்டாள், சிறுத்தொண்ட நாயனார், கண்ணப்ப நாயனார் ஆகியோரைப்போல, வழிபாடு என்ற எளியமுறையின்மூலம் நாமும் இறைவனை நாடிச் செல்லமுடியும் என்று நிரூபித்துக் காட்டியதோடு, அந்த முறையிலேயே இறையருளைப் பெற்று விளங்கியவர்கள் ராமகிருஷ்ண பரமஹம்சரும், ரமணரும்!
எளிமையான- அதேசமயம் உயர்வான உன்னதங்களையும் அர்த்தங்களையும் கொண்ட வழிபாட்டின்மூலம் இறைவனிடம் பக்தி செலுத்துவதை, திருவிழாக்களைப்போல குறிப்பிட்ட காலங்களில் அல்லது நாம் நினைத்த நேரத்தில் செய்யக்கூடாது. அதில் எந்தப் பயனுமில்லை. இறைவனிடம் பக்தி செலுத்துவது நம் வாழ்க்கைமுறையோடு ஒன்றியதாக இருக்கவேண்டும். அதனாலேயே வழி பாட்டை ஐந்துவகை உபசாரங்களாகப் பாகுபடுத்தி ஆறுகாலப் பூஜைகளாக ஆலயங்களில் செய்தனர். கூடவே, வழிபாட்டை மையப்படுத்திக் கொண்டாடக்கூடிய பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் போன்றவற்றை வருடம் முழுதும் வைத்தனர்.
பக்தி இரு வகைப்படும். ஒன்று மரியாதை. மற்றொன்று நம்பிக்கை. ஒரு மாணவன் தன் குருவின்மீதும், குழந்தைகள் பெற்றோர்மீதும், வேலையாட்கள் எஜமானர்மீதும் வைக்கும் பக்தி மரியாதை பக்தி. இது ஜீவாத்மாக்கள் ஒருவருக்கொருவர் செலுத்திக்கொள்ளும் பக்தியாகும். இதில் உயர்வு- தாழ்வென்ற பாகுபாடு இருக்கும். அது பலவித அளவுகோல்களோடு வெளிப்படும். ஆனால், உலக ஜீவாத்மாக்கள் எல்லாம் இறைவன்மீது வைக்கும் பக்தி நம்பிக்கை பக்தி. இதில் எந்தவித பாகுபாடும் இருக்காது. இறைவனிடம் செலுத்தும் நம்பிக்கை பக்தியானது "சரணடைதல்' என்ற அளவுகோலோடு மட்டுமே வெளிப்படும். வழிபாட்டின் முக்கிய அம்சமே சரணாகதியடைதல்தான்!
ஒருவரிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும்போது மட்டுமே நாம் அவரிடம் சரணடைய சம்மதிக்கிறோம்.
அப்படியான நம்பிக்கையை நமக்குத் தருபவனாக இறைவன் இருப்பதாலேயே அவனுக்குரிய வழிபாட்டில் என்றுமே நம்பிக்கைக்கு முதல் இடம். "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பது கற்பனையல்ல!
முழுமையாகத் தன்னை நம்பி சரணா கதியடையும்வரை இறைவன் நம்மை சோதித்துக்கொண்டே இருப்பான். அவனை அவன் தாள் பணிந்து முழு சரணாகதி அடைந்தபின்பே துன்பங்களிலிருந்து தன்னைச் சரணடைந்தவர்களைக் காக்கிறான்.
தன்னைச் சரணடைந்தவர்களின் நம்பிக் கையை இறைவன் எப்பொழுதும் ஏமாற்று வதில்லை.
ஒருவரல்ல இருவரல்ல... ஐந்து கணவர்கள் கம்பீரமாக இருக்கிறார்கள்.
அவர்கள் தன்னுடைய மானத்தை எப்படியும் காப்பாற்றிவிடுவார்கள் என பாஞ்சாலி நம்பிய வரையிலும் இறைவன் (கண்ணன்) வரவில்லை. தன் கணவர்கள்மீதிருந்த நம்பிக்கை நசிந்துபோய் இறைவனிடம் அவள் முழுமையாகச் சரணடைந்த அந்த நொடியிலேயே வந்து நின்றான். அவளின் மானத்தைக் காப்பாற்றினான்.
இதையே பிரகலாதன் வழியாகவும் நமக்கெல்லாம் இறைவன் நிகழ்த்திக் காட்டினான். தன்னையே முழுமையாக நம்பியிருந்த பிரகலாதனைச் சட்டென இறைவன் காக்கவில்லை. இரணியகசிபு ஒரு கட்டத்தில் தன் மகன் பிரகலநாதனின் இறைநம்பிக்கையை ஏளனம் செய்யத் துவங்கினான்.
அப்பொழுதும் இறைவன்மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையில் பிரகலாதன் உறுதியாக இருந்தான். அந்த உறுதி இறைவனை நரசிம்மமாய் அவதாரமெடுக்க வைத்தது. எள் முனையளவும் சந்தேகமற்ற இறைநம்பிக்கையே பக்தியின் முதல்படி!
பாஞ்சாலிக்கும். பிரகலாதனுக்கும் உதவியதைப்போல தன்னை வழிபட்டு பக்தி செலுத்துபவர்களுக்கு ஏதோ ஒரு உருவில், வழியில் இறைவன் உதவிக் கொண்டே இருக்கிறான். நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் எதிர்பாராத வகையில் யாராவது வந்து உதவி செய்தால், "கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள்; உதவி செய்தீர்கள்' என்று சொல்கிறோம். எதிர்பாராமல் எதையும் தருபவன் இறைவன் மட்டுமே! அப்படி எதிர்பாராமல் ஒருவர்மூலம் கிடைத்த உதவி என்பதாலேயே "கடவுள் மாதிரி' என்கிறோம்.
நிதானமாக யோசித்துப் பார்த்தால், நித்தமும் கடவுள் ஏதோ ஒரு உருவில், வடிவில் நமக்கெல்லாம் உதவுவதும், நம்மைச் சந்திப்பதும் தெரியும்.
உடம்பு என்ற பூதப்பொருளும், ஆத்மா (உயிர்) என்ற அறிவுப்பொருளும் தனித்திருந்தால் அது சவம். அதுவே சேர்ந்திருந்தால் ஜீவாத்மா. அதாவது நாம்! உடம்பாகிய பூதப்பொருள் எடை, வடிவம், அளவு ஆகியவற்றைக் கொண்டதாக இருந்தாலும், அதை இயக்கவைக்கும் அறிவுப் பொருளாக ஆத்மா இருக்கிறது. அத்தகைய ஆத்மா சென்று சேருமிடம் என்ற பொருளில் அவை லயித்து (விரும்பி) இருக்கக்கூடிய இடத்தை "ஆலயம்' என்றழைத்தனர்.
ஆத்மா லயிக்கும் இடமென சொன்னார்களேயொழிய ஜீவாத்மா லயிக்கும் இடமெனச் சொல்லவில்லை. ஏனெனில் ஜீவாத்மாவாகிய நாம் லயித்து செல்லக்கூடிய இடமாக எந்த ஆலயமும் இல்லை. எந்த ஆலயத்திற்குள்ளாவது நம்மால் குழப்பமின்றி நுழையமுடிகிறதா? நிம்மதி தேடி ஆலயம் நுழைந்தால்- செருப்பை எங்கு மறைவாய் வைப்பது?
அர்ச்சனையை யார் பெயருக்குச் செய்வது?
தட்டோடு நிற்பவர் களுக்குத் தர எவ்வளவு சில்லரை இருக்கிறது என்ற கேள்விகளே முதலில் நிற்கின்றன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடித் தந்து உடம்பு என்ற பூதப் பொருளை ஆத்மா என்ற அறிவுப்பொருள் அழைத்துச் செல்கிறது. அதனாலேயே ஆத்மாக்கள் லயிக்கும் இடமாக ஆலயங்களைச் சொன்னார்கள்.
சிறுகுழந்தைகள் பெற்றோர்களைவிட அவர்களின் தாத்தா, பாட்டியிடம் அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள். காரணம், அந்தக் குழந்தைகளின் விருப்பத்தை, ஆதங்கத்தை, கோபத்தை மறுப்பின்றி, சலிப்பின்றி அவர்கள் கேட்கத் தயாராக இருப்பார்கள். ஆனால் வேகம் வேகம் என எதையோ தேடி ஓடும் வேக வாழ்க்கையில் பெற்றோர்களால் குழந்தைகளிடம் அப்படி இருக்க முடிவதில்லை. சிறுகுழந்தைகளைப்போல ஆத்மாவும், "இன்றைய வாழ்க்கை நெருக்கடிகளிலிருந்து மீள, துயரங்களைப் பகிர்ந்துகொள்ள யாராவது கிடைக்கமாட்டார்களா' என ஏங்குகிறது. ஆனால், பக்கத்து வீட்டில் இருப்பவரைக்கூட அறிந்து வைத்துக்கொள்ள முடியாத அவசர வாழ்க்கைமுறையில் காதுகொடுத்துக் கேட்க எவரும் தயாராய் இருப்பதில்லை. அப்படியே ஒருவர் கிடைத்தாலும் ஒருமுறை, இரண்டுமுறை வேண்டுமானால் நம் ஆதங்கங்களை, பிரச்சினைகளைக் கேட்பார். அடுத்த முறை அவரிடம் சென்றால், "இவனுக்கு வேற வேலையே இல்ல. எப்பப் பாரு ஏதாவது பிரச்சினைன்னு வந்து பிராணனை வாங்குறான். என் பிரச்சினையே இங்க பெரிசாயிருக்கு. இதுல இவன் கதை வேற' என முனங்க ஆரம்பித்துவிடுவார்.
இப்படியெல்லாம் இல்லாமல் எத்தனைமுறை போய்ச் சொன்னாலும் தாத்தா, பாட்டி மாதிரி நம் விருப்பத்தை, ஆதங்கத்தை, கோபத்தை ஒருவர் கேட்பதாக இருந்தால், அதன்மூலம் நம் மனச்சுமை குறைந்து நிம்மதி ஏற்படுவதாக உணர்ந்தால் அந்த இடத்தை நோக்கியே ஓடுவோம். இப்படி விரும்பி ஓடிவரும் ஆலயத்திற்குள் தாத்தா, பாட்டி மாதிரி நம் மனச்சுமைகளைப் பகிர்ந்துகொள்ள, அதன்மூலம் நிம்மதி உணர்வுகளைத் தர உதவுபவர் பூசாரிகள் மட்டுமே என நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் ஆலயத்திற்குள் வந்தபின்பும் இறைவனிடம் முறையிட்டுப் பெறவேண்டிய மனநிம்மதியை, ஆறுதலை, திருப்தியை பூசாரிகளிடம் முறையிட்டு ஆரூடமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அனைத்து மதக் கருத்துகளையும், இறை தத்துவங்களையும் ஆராய்ந்த பின்னர் "கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்' என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன உண்மையை உணராத பதுமைகளை இறைவன் எப்பொழுதும் புறந்தள்ளி விடுகிறான்.
தன்னை நோக்கி வரும் எல்லா ஆத்மாக்களிடமும் நெருக்கம் கொண்டவனா கவே இருக்கிறான். அந்த நெருக்கத்தாலேயே நாம் சொல்கின்ற எல்லா விஷயத்தையும் முரண்படாமல், எதிர்வாதம் புரியாமல் அவனால் கேட்டுக்கொள்ள முடிகிறது. தன்னிடம் வந்து வருந்தி நிற்பவனிடம் பேசிப் பேசியே அவனுடைய பலவீனத்தை அதிகப்படுத்திவிடுகின்ற மதவாதிகள், அரசியல்வாதிகளின் வேலையை இறைவன் ஒருபோதும் செய்வதில்லை.
கல்லாய் இருப்பதால் இறைவன் மௌனமாய் இருப்பதில்லை. அது அவனது மொழி. "மௌனம் சம்மதம்' என்பது காதலும் கல்யாணமுமாய் வாழ்பவர்களின் மொழியாய் இருப்பதைப்போல மௌனம் இறைவனின் மொழியாய் இருக்கிறது. இதையறிந்தவர்கள் ஞானிகள், தீர்க்கதரிசிகள் என்று போற்றப்பட்டனர். அவர்கள்மூலம் இறைவன் நமக்கு உணர்த்திய உன்னதங்கள்தான் எத்தனை... எத்தனை!
ஒருவேளை இறைவன் நம்மிடம் எதிர்வாதம் புரிகிறான் என வைத்துக் கொள்வோம். உடனே நாமென்ன செய்வோம்? தர்க்கம் செய்ய ஆரம்பித்துவிடுவோம். "நான்' என்ற அகந்தையோடு இறைவனை ஆதிக்கம் செய்ய முயல்வோம். உதாரணம்- புராணங்கள்! இப்படி தர்க்கமும் அகந்தையும் நிலவும் இடத்தில் வெறும் சப்தங்களும் குழப்பங்களும் மட்டுமே மிஞ்சும். ஆத்ம சுத்திக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய "தன்னையறிதல்' என்பது காணாமலே போய்விடும்.
தன்னை அறியும்போது மட்டுமே மனம் அமைதியடைகிறது. மனம் அமைதியாகும்போது தெளிவு பிறக்கிறது. தெளிவு மாற்றங்களை உருவாக்குகிறது. மாற்றம் மனிதனாகிய ஜீவாத்மாவை இயங்க வைத்துக்கொண்டிருக்கும் ஆத்மாவை சுத்தம் செய்கிறது. சுத்தமடைந்த ஆத்மா மகிழ்ச்சியான உணர்வைப் பெறுகிறது. இப்படி தன்னை அறிதல்மூலம் சந்தோஷ உணர்வைப் பெறுவதற்கு அமைதி முக்கியம். அந்த அமைதி ஆலயத்தில் நிரம்பிவழிவதால்தான், இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும் ஆலயத்திற்கு வந்து வழிபடுகிறோம்.
(தொடரும்)