14-9-2019- மகாளயபட்ச ஆரம்பம் 28-9-2019- மகாளய அமாவாசை
தட்சிணாயன காலமான ஆடிமுதல் மார்கழிவரை தேவர்களுக்கு இரவுப்பொழுது இருக்கும் காலத்தில், பிதுர்களுக்குப் பகல்பொழுது. இந்த காலத்தில் தம் வம்சத்தைச் சார்ந்தவர்கள் தங்களை நினைத்து தர்ப்பணம் செய்து, பிண்டம் போட்டு சிரார்த்தம் செய்யமாட்டார்களா என்று பிதுர்கள் ஏங்குவார்களாம். அவர்களை நினைத்து ஒவ்வொரு அமாவாசையிலும் நீர்நிலைகளில் தர்ப்பணம், பிதுர்பூஜை செய்பவர்களுக்கு முன்னோர்கள் ஆசி வழங்குவதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் அளிக்கமுடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள், மகாளயபட்சம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாளிலிருந்து அமாவாசை வரையிலான தேய்பிறைத் திதிகளில் தர்ப்பணம் அளிப்பது போற்றப்படுகிறது. இதனை பித்ரு பூஜை என்பர்.
"பித்ரு' என்பது தந்தையைக் குறிக்கும். "பித்ருக்கள்' என்றால், நமக்குமுன் வாழ்ந்து மறைந்த மூதாதை யர்கள். பித்ருக்களான முன்னோர்களை தென்புலத்தார் என்றும் சொல்வர்.
பொதுவாக மூதாதையர்கள் மறைந்த திதியில் நீத்தார் வழிபாட்டினை மேற்கொள்வது வழக்கம். புரட்டாசி அமாவாசைக்கு பதினைந்து நாட்கள் முன்பாக மகாளய பட்ச துவக்கத்தில் பூமிக்குவந்து தங்கும் பித்ருக்கள், மகாளயபட்ச முடிவில் அமாவா சையன்று தில (எள்) தர்ப்பணம் பெற்றுக் கொண்டு மீண்டும் பிதுர் உலகத்திற்குச் செல்வதாக ஐதீகம். அவர்கள் வாழ்ந்த காலத்தில் புண்ணியம் செய்திருந்தால், அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் அவர்களின் புண்ணியத்தால் சரி செய்யப்பட்டிருந்தாலும், வேறெங் காவது பிறந்திருந்தாலும், அவர்களின் வாரிசுதாரர்கள் புனித நீர்நிலையில் பிதுர் பூஜை செய்வதால் அவர்களுக்குப் பசித்த வேளையில் உணவு கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.
மேலும், காலமான முன்னோர்களுக்கு அமாவாசை, உத்தராயன, தட்சிணாயன புண்ணிய காலம், கிரகணம், மாதப்பிறப்பு, மகாளய நாட்கள் போன்ற சிறப்பு நாட்களில் தர்ப்பணம் செய்தல் என்பது ஒவ்வொருவரின் கடமையாகும். எள்ளும் நீரும் அளிப்பதே தர்ப்பணம் என வழங்கப்படுகிறது. வேத விற்பன்னர் மேற்பார்வையில் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். அந்த எள்ளும் நீரும் புனித நீரில் சங்கமிப்பதைவிட, அருகில் அரசமரம் இருந்தால், அந்த எள்ளையும் நீரையும் அரச மரத்தின் கீழ்ப்பகுதியில் ஊற்றி வழிபடவேண்டும். அதனால் அவை முன்னோர் களிருக்கும் பிதுர்லோகத்திற்குச் சென்றுவிடு மென்று ஞான நூல்கள் கூறுகின்றன. அதனால் விவரம் அறிந்தவர்கள் புனித நீர்நிலையில் பிதுர் பூஜையை அரச மரத்தடியில் மேற் கொள்வார்கள்.
மேற்கண்ட நாட்களில் பிதுர் பூஜை செய்ய இயலாதவர்கள் மகாளய காலங்களில் அவசியம் மேற்கொள்ளவேண்டும்.
காலம் சென்ற பெற்றோர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தாலும், தகுந்த கவனிப்பின்றி அலட்சியமாக இருந்திருந்தாலும், அது அந்த வாரிசுதாரர்களை பாதிக்கும். தெரிந்தோ தெரியாமலோ சூழ்நிலை காரணமாக அவர் களின் வயதான காலத்தில் பராமரிக்காமல் விட்டிருந்தால் அது மகாபாவம் என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது. அதை நிவர்த்தி செய்துகொள்ளவே சாஸ்திரங்கள் அமா வாசை போன்ற நாட்களில் பிதுர்பூஜை மேற்கொள்ள வலியுறுத்துகின்றன.
தர்ப்பணம் அளிக்கும்போது எள்ளும் தர்ப்பையும் அவசியம் பயன்படுத்தப்படுகிறது. எள்ளானது, திருமாலின் வியர்வைத் துளியிலிருந்து உருவான பரிசுத்தமான தானி யமாகும். தானம் செய்யும்போது எள்ளையும் தானம் செய்தால் அதன்பலன் மிகவும் சிறப் பாக இருக்கும். எப்பேர்ப் பட்ட பாவமும் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
மேலும், பிதுர்பூஜையின் போது கறுப்பு எள்ளைப் பயன்படுத்துவதால் பிதுர் தேவர்கள் மகிழ்ச்சிய டைகிறார்களாம்.
தர்ப்பைப்புல் என்பது முதலில் ஆகாயத்தில் தோன்றியது. இதில் ஒருமுனையில் பிரம் மனும், மறுமுனையில் சிவனும், நடுப்பகுதியில் திருமாலும் வாசம் செய்வதாக ஐதீகம்.
நம் முன்னோர்களுக்குச் செய்யப்படும் சிரார்த்தம் இருபத்தோரு யாகங்களுள் ஒன்று என்று சாஸ்திரம் சொல்கிறது. நீத்தார் வழிபாடு- நீர்க்கடன் என்று சொல்லப்படும் தர்ப்பணம், தெய்வ நம்பிக்கையுள்ள அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய நெறியாகும்.
சாஸ்திரரீதியாக தர்ப்பணம் கொடுக்க வசதியில்லாதவர்கள், தர்ப்பணத்திற்குரிய நாளில் ஆறு அல்லது குளங்களில் நீராடி, முன்னோர்களை நினைத்து இரண்டு கைப்பிடி நீர் எடுத்து தெற்குப் பார்த்து விடவேண்டும் என்பது விதியாகும். இதனைக் கடைப்பிடித்தால் நம் முன்னோர்கள் மகிழ்வார்கள்.
இறந்துபோனவர்கள் ஒரு வருடம்வரை மறுபிறவி எடுப்பதில்லை. அந்த உயிர் சஞ்சாரத் திலேயே உலவுகிறது என்று தர்மசாஸ்திரம் சொல்வதால், இந்தக் காலத்தில் மாதந்தோறும் சிரார்த்தம் செய்யவேண்டும். அதற்கு "மாசிகம்' என்று பெயர். ஒருவருடம் முடிந்தபின், "வருஷாப்திகம்' என்று சொல்லப்படும் திவசம் தரவேண்டும். அதாவது காலமான மாதம், நட்சத்திரம், திதியன்று மேற்கொள்ள வேண்டும். அதன்பின், வருடாவருடம் உரிய திதியில் சிரார்த்தம் தரவேண்டும். இதனைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள் மகாளயபட்சத்தில் வரும் இறந்தவர்களின் திதி நாளில் தர்ப்பணம் செய்யலாம். அல்லது மகாளயபட்ச அமாவாசை அன்று நீர்நிலை களில் தர்ப்பணம் தருவது முன்னோர்களின் வாழ்த்தினைப் பெற வழிவகுக்கும்.
புனிதத் தலங்களிலுள்ள நீர்நிலையில் பிதுர்பூஜை செய்ய இயலாதவர்கள், தங்கள் இல்லத்திலேயே வேதவிற்பன்னர்களை அழைத்து பிதுர்பூஜையைச் செய்யச் சொல்லிப் பலன்பெறலாம். அன்று அன்னதானம் சிறப்பிக்கப் படுகிறது. நாம் அளிக்கும் அன்னத்தை முன்னோர்கள் வேறு உருவிலிருந்து பெற்றுக்கொள்வதாக ஐதீகம். அன்று காகங்களுக்கு இலையில் அன்னம் வைத்து அழைத்தால் அவை பறந்து வரும். நம் முன்னோர்கள் காகங்கள் வடிவில் வந்து உண்பதாக சாஸ்திரம் கூறுகிறது. அன்று வஸ்திர தானமும் கோ தானமும் போற்றப் படுகிறது. மேலும் அன்று பசுமாட்டிற்கு அகத் திக்கீரை, வெல்லம், எள் மற்றும் பச்சை அரிசி கலந்தவற்றையும், வாழைப்பழங்களையும் ஆகாரமாகக் கொடுப்பது நன்மைகளைத் தருமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.
இந்த முன்னோர்கள் வழிபாட்டை வள்ளுவப் பெருந்தகையும் திருக்குறளில் "தென்புலத்தார் வழிபாடு' என்று முக்கியத்து வம் கொடுத்துக் குறிப்பிடுகிறார்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்பது குறள்.