சிவபக்த இராவணாதி அசுரர்களை அழிக்க மகாவிஷ்ணு மனிதனாக- ஸ்ரீராமனாக அவதரித்தார்.

சிவ- விஷ்ணு- பிரம்ம சக்திகள் ஒன்றிய பராசக்தியாக- மகிஷாசுரனை அழிக்க துர்க்கை அவதரித்தாள்.

இரண்யகசிபுவை அழிக்க மகா விஷ்ணு வினோத நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

குதிரை முக அசுரனை அழிக்க மகாவிஷ்ணு குதிரைமுக ஹயக்ரீவர் அவதாரம் எடுத்தார்.

Advertisment

யானை முக கஜமுகாசுரனை அழிக்க வினோத கஜமுகவிநாயகர் அவதரித்தார்.

மகிஷி அரக்கியை அழிக்க விந்தையான ஹரி-ஹரபுத்திரன் ஐயப்பன் அவதரித்தார்.

இவ்வாறே சிவ வரம்பெற்ற சிங்கமுக, தாரக, க்ரௌஞ்ச, சூரபத்மாதியரை அழிக்க சிவாம்ச தேஜோமய கந்த அவதாரம் நிகழ்ந்தது.

Advertisment

வியாசரின் ஸ்காந்தம் கந்த அவதார லீலை களைக் கூறும். காஞ்சி குமர கோட்ட முருகன் அருளால் கச்சி யப்ப சிவாச்சாரி யார் என்ற அர்ச்சகர், முருகன் "திகடச்சக்கர' (திகழ் தசக்கர) என்று அடியெடுத்துக்கொடுக்க "கந்த புராணம்' என்று தமிழில் கந்தன் அவதார லீலைகளை 10,345 பாக்களில் எழுதினார்- 15-ஆவது நூற்றாண்டில். அதில் கந்தன் அவதாரம் பற்றி என்ன எழுதினார்?

அருவமும் உருவமுமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பு அது ஒரு மேனியாகக் கருணைகூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்து அங்கு உதித்தனன் உலகம் உய்ய.

மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொணாமல் நிறைவுடன் யாண்டுமாகி நின்றிடும் நிமலமூர்த்தி அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தில் வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந்து அருளினானே.

எந்தை சக்திகள் உயிரெல்லாம் ஒடுங்குறும் எல்லை முந்துபோல ஒன்றாகியே கூடிய முறைபோல் அந்தம் இல்லதோர் மூவிரு வடிவம் ஒன்றாகிக் கந்தன் என்று பேர் பெற்றான் கவுரிதன் குமரன்.

சிவ மறுவுருவம் அல்லாது மரணமில்லை என்று வரம் பெற்றனர் சூரபத்மாதியர். வரம் பெற்றவர்கள் தானும் மற்றவர்களும் சுகமாக வாழ வழிகோலாமல், அகங்காரம் கொண்டு தேவலோகம் யாவும் கைப்பற்றி சிறை வைத்தனர். தேவர்கள் ஆழ்ந்து வேண்ட, சிவன் தனது ஐந்து முகங்கள் மற்றும் அதோ முகத்திலிருந்து ஜோதியைக் கிளப்பினார். அதை வாயுவும் அக்னியும் ஏந்தி கங்கையில் இட்டனர். கங்கை, சரவணத் தடாகத்தில் (சக்தி உருவம் என்பர்) ஆறு தாமரைப்பூக்களில் இட்டாள். அவை குழந்தைகளாயின. கார்த்திகை மாதர்கள் பாலூட்ட, அங்கு சிவ- பார்வதி வந்தனர். பார்வதி ஆறு குழந்தைகளையும் அழைக்க, அவை ஓடிவர, யாவரையும் ஒன்றாய் அணைக்க, ஆறுமுகம், 12 கைகள், இரண்டு கால்கள், ஓருடல் கொண்டவ னாய்த் திகழ்ந்தான் முருகன். இது நடந்த தினம் வைகாசி விசாகம். ஆக, அவன் பெயர் சிவகுமாரன், வாயுகுமாரன், அக்னி புதல்வன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், விசாகன், ஆறுமுகன், கந்தன் (ஒன்று சேர்ந்தவன், பற்றுக்கோடாக இருப்பவன்) என்றெல்லாம் பெயர் பெற்றான். அழகானவன் என்பதால் முருகன். இளையவன் என்பதால் குமரன். இதயத்தில் வசிப்பவன் என்பதால் குஹன்.

அவதார காரணமாக முதலில் தாரக- க்ரௌஞ்ச சம்ஹாரம். அதற்கு ஆயுதங்கள் சிவனது ஏகாதச ருத்ரர்களே. பராசக்தியே வேலாயுதம். அசுரர்களை அழிக்க அது வீரவேல், தீரவேல், சக்திவேல், வெற்றிவேல், வஜ்ரவேல்- பக்தியுடன் பணிபவர்களுக்கு அது ஞானவேல்.

muruganக்ரௌஞ்சன் மாயமலையாக தாரகனைக் காத்தான். போரில் கந்தனின் சேனைகள் யாவரும் மயங்கினர். கந்தனின் வேல் மாயக்ரௌஞ்சனை அழிக்க சேனைகள் மீண்டெழுந்தன. அடுத்து தாரகனுடன் கடும்போர் நடந்தது.

இராமாயணம் ராம- இராவண யுத்தத்திற்குச் சமமில்லை என்று சொல்லும். ஸ்காந்தமோ கந்த- தாரக யுத்தத்திற்கு சமமில்லை என்று சொல்லும். இறுதியில் கந்தன் வேலால் தாரகன் வீழ்ந்தான். அவன் மார்பிலிருந்த ஆத்மலிங் கம் ஐந்து கூறுகளாக விழுந்தன. அவையே- ஆந்திராவில் அமைந்த அமராராமம், த்ராக்ஷாராமம், குமராராமம், ஸோமாராமம், க்ஷீ ராராமம் என அபூர்வ சிவத்தலங்கள். என்னே ஆழ்ந்த சிவபக்தி.

பின்னர் கந்தன் திருச்செந்தூர் செல்ல, வியாழனும் நாரதரும் கூற, கந்தன் தன் வேலாயுதத்தால் சூரபத்மாதியர் யாவரையும் சம்ஹரித்தான். கம்சவதம், இராவணவதம், இரண்யகசிபு வதம் என்போம். கந்தன் செய்தது சம்ஹாரம். என்ன தத்துவம்?

சிங்கமுகாசுரனை அழித்து அவனை சிங்கமாக பராசக்திக்கு வாகனமாக்கி னான். தாரகனை அழித்து அவனை யானையாக ஐயப்பனுக்கு வாகனமாக்கி னான். சூரபத்மனை அழித்து மயிலை தனக்கு வாகனமாக்கி, சேவற் கொடியை ஏந்தினான்.

மயில் வாகன முகம் நம்மை நோக்கி இருந்தால் அது பிரணவாகார மயில்; வேதஸ்வரூபம். மயிலின் முகம் முருகனின் இடப்புறம் இருந்தால் அது யுத்தத்திற்கு முன்பிருந்த இந்திர மயில் வாகனம்.

மயில் முருகனின் வலப்புறம் இருந்தால் அது சூரபத்மன் மாறிய வாகனம்.

தீபாவளியை அடுத்த பிரதமையிலிருந்து ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா. எல்லா முருகன் தலங்களிலும் விசேட பூஜை, ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடக்கும். கந்த சஷ்டிமயம் சூரசம்ஹாரம் நடக்கும். திருச்செந்தூர் கடற்கரையில் இது மிகப்பெரிய விழா! லட்சக்கணக்கானவர்கள் தரிசிப்பர். மறுநாள் வள்ளி- தெய்வானை கல்யாணமும் நடக்கும். திருத்தணிகை தலத்தில் மட்டும் சூரசம்ஹாரம் கிடையாது. ஷண்முகச் சக்கரத்திற்கு பூஜை, ஆராதனைகள் நடக்கும். ஏன்?

சூரசம்ஹாரம் நடந்து, வேடர்களுடன் சண்டை தீர்ந்து, கோபம் (செரு) தணிந்து வீற்றிருக்கும் தலம் செருத்தணி; அது திருத்தணி, திருத்தனிகை என்றானது. ஆக, அவன் வெகு சாந்த கந்தன்!

ஏன் இத்தலம் வந்தான்? பெருமை என்ன?

"விரையிடங் கொளும் போதினுள் மிக்க பங்கயம்போல்

திரையிடங்கொளும் நதிகளில் சிறந்த கங்கையைப்போல்

தரையிடங்கொளும் பதிகளில் காஞ்சி யந்தலம்போல்

வரையிடங்களில் சிறந்தது இத்தணிகை மால்வரையே'

மலர்களில் சிறந்தது தாமரை; நதிகளில் சிறந்தது கங்கை; ஊர்களில் சிறந்தது காஞ்சி; அதுபோல் மலைகளில் சிறந்தது திருத்தணி. குறிஞ்சி மலை வாழ்பவன்.

சிறந்த மலையைத் தேர்ந்தெடுத்தான்.

கந்தர் சஷ்டிக்கு மறுநாள், தைப்பூசம், மாசிப்பூசம், பங்குனி உத்திரம் என பல நாட்களில் வள்ளி, தேவசேனா கல்யாணம் பல தலங்களில் நடைபெறுகிறது. திருப்பரங்கிரியில் கர்ப்பக்கிரகத்தில் தேவசேனை மட்டும் உள்ளாள். அங்கு பங்குனி உத்திரத்தில் கல்யாண உற்சவம் நடக்கும். திருத்தணிகையில்தான் கந்தன் வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக, ஆபத்சகாய கணபதி துணையால் வள்ளியை வள்ளிமலையில் அணைத்து, திருடி, போராடி, திருத்தணிகையில் வள்ளியை நாரதர் வேள்வி செய்ய மாசிப் பூசத்தில் மணந்தான்.

இம்மலையைப் பற்றி ஸ்காந்தம் தேவகாண்டத்தில் என்ன கூறுகிறது?

ஸ்ரியா: தேவ்யா: கி: யஸ்மாத்

பரிபூர்ண: தத் ஆஹ்வய:

தேவியான லக்ஷ்மி நிறைந்திருப்பதால் மலைக்கு பரிபூரணம் என்று பெயர். ஆக நமக்கு பரிபூரண அருள் கிடைக்கும்.

பஸ்யந்தியே கிரிவரம்

ஏனம் அத்ர நரோத்தமா

தேஷாம் பாபானி நச்யந்தி

க்ஷிப்ரம் ந சம்ஸயா-

எந்த உத்தம மனிதர்கள் இந்த மலையை தரிசிக்கிறார்களோ, அவர்களுடைய பாவங்கள் உடனே அழிகின்றன. இதில் சந்தேகம் இல்லை.

ஸ்னாத்வா ஸரோவரே அஸ்மின் ய:

மாம் அர்ச்சயதி மானவ:

மல்லோகம் ஸம்ப்ரயாத்

ஓமத் க்ருபாபூரித:

இந்திரநீல தீர்த்தத்தில் நீராடிப் பூஜிப்பவர்கள் என் கிருபையால் என் லோகம் அடைவர்.

யதேகம் மனுஜை: அத்ரபுண்யம்

ஸம்யக் அனுஷ்டிதம்

அனந்த பலதம் தத்ஸ்யாத் ஸத்யம்

உக்தம் நச அன்யதா

இம்மலையில் எந்த மனிதர்களும் ஒரு புண்ணிய கர்மா செய்தல் அது எல்லையற்ற பயன்களைக் கொடுக்கும். இது சத்தியம்.

யாவும் முருகன் வாக்குகள். ஆக, சந்தேகம் தேவையில்லை.

கச்சியப்ப முனிவரின் சீடர் கவிராட்சசர் வீரசைவர்; தொண்டை நாட்டைச் சேர்ந்தவர். ஆழ்ந்த முருக பக்தர். செந்தமிழ்ப்புலவர். தணிகாசல கலம்பகம், தணிகை உலா, தணிகை அந்தாதி, தணிகைப் பிள்ளைத்தமிழ் பாடியவர். அவரது தணிகாசலப் புராணம் என்ன மகிமை கூறுகிறது?

திருத்தணிகை வரை மேவும்

செவ்வேளின் மந்திரம் செபித்தாலும்

கருத்திலூற நினைத்தாலும்

தோத்திரங்கள் புரிந்தாலும் கைகள் கூப்பி

சிறத்திலுறப் பணிந்து ஏத்தி

திருவுருவை விழிகுளிர தரிசித்தாலும்

விருத்திபெறும் சந்ததிகள் மேன்மேலும்

தழைத்து அருளை மேவுவாரே.

தணிகைமலை மேவும் கந்தன் மந்திரம் ஜெபித்தாலும், உள்ளத்தில் நினைத்தாலும், துதிகள் கூறினாலும், கைகளை தலைமீது குவித்து வைத்து முருகனை நன்கு தரிசித் தாலும் சந்ததிகள் செழித்து வாழ்ந்திட முருகனருள் பெறுவர்.

அரன்உருவான தணிகைவாழ் குகனை

அடுத்து ஒருகால் தரிசித்ததால்

பரிமக நூறு புரிந்திடு பலமாம்

புரிந்திடு காலருச்சிக்கின்

வருமகநூறு செய்திடு பலமும்

மறைகணாலெட்டன உறைக்கும்

தருமமோர் கோடி செய்திடு பலமும்

சார்ந்திடும் வீணை மாமுனியே.

நாரதரே, சிவவடிவ தணிமலையில் வாழும் முருகனை தரிசித்தால் நூறு அஸ்வ மேத யாகம் செய்த பயனும், ஒரு முறை அர்ச் சித்தால் நூறு யாகங்கள் செய்த பயனும், வேதம் கூறும் 32 தர்மங்களைச் செய்தால் ஒரு கோடி யாகங்கள் செய்த பயனும் கிடைக்கும்.

ராமலிங்க சுவாமிகள் தன் வீட்டுக் கண்ணாடியில் தன் உருவைக் காணவில்லை; தணிகேசனைக் கண்டு இவ்வாறு துதித்தார்.

சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பம் தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத்தாள்களும் ஓர் கூர்கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக்கொடியும் அருள் கார்கொண்ட வண்மைத் தணிகாசலமும் என் கண்ணுற்றதே!

மேலும் துதிப்பார்-

ஏதம் அகற்று என் அரசே என் ஆருயிரே என் அறிவே

என் கண் ஒளியே என் பொருளே என் சத்குருவே

சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம் புயனே சத்யனே

தணிகாசலமா தலத்தமர்ந்த சைவமணியே ஷண்முகனே!

தைப்பூசத்தன்று ஜோதி மயமாய் வடலூரில் கரைந்தாரே!

18-ஆம் நூற்றாண்டு கச்சியப்ப முனிவ ரின் தணிகைப்புராணம் யாது கூறும்?

அத்தலம் தன்னை அடைகுவம் என

புத்தியில் நினைப்பிலும் புறத்திற் செல்லினும்

பத்தடி நடப்பினும் பரிந்த நோயெல்லாம்

கோதொடும் அவர்புறம் வழிக்கண்டு ஓடுமே!

திருத்தணி செல்ல வேண்டுமென்று நினைத் தாலும், அதன்திசை நோக்கித் தொழு தாலும், பத்தடி தூரம் நடந்தாலும், தலத்தின் பக்கம் சென்றாலும் நோய்கள் யாவும் அறவே அழியும். என்னே தல மகிமை!

கந்தப்பதேசிகரின் முதல் தணிகாசல அனுபூதியும் சிந்திப்போம்.

சிந்தாமணியே திருமால் மருகா வந்தார்க்கு உயர்வாழ்வு கொடுத்தருள்வாய் நொந்தாழ் வினையேன் முகம் நோக்கி வரம் தந்தாள் முருகா தணிகாசலனே! திருமாலை ஏன் நினைக்கிறார்? க்ரௌஞ் சாசுரன் திருமாலின் சக்கரத்தைப் பிடுங்கி விட்டான். முருகன் அவனை அழித்த சமயம் அந்த சக்கரம் முருகனின் மார்பில் பதிந்தது. திருமால் கேட்க, சக்கரத்தை தணிகேசன் எடுத்து அளித்தானாம். இன்றும் தணிகேச மூலவர் விக்ரக மார்பில் சிறிய பள்ளம் உண்டு.

அதில் சந்தனம் வைத்திருப்பர். அபிஷேக நேரம் தரிசிக்கலாம். பின்பு அதனில் சந்தனம் நிரப்புவர். அந்த சந்தனம் சர்வரோக நிவாரணி.

கந்த புராண காப்பு போற்றியால் போற்றி வணங்கி தணிகேசன் அருளைப் பெறுவோமே!

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி காவிரு மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி!