தாளச் சக்கரத்தில் ஆடல் மகளிர்! 21 -அடிகளார் மு.அருளானந்தம்

/idhalgal/om/women-dancing-rhythm-wheel-21-foot-m-arulanantham

வேலனாட்டம் குறித்தும், முதற்சங்கம் எனும் கூடலை உருவாக்கியது குறித்தும் கடந்த அத்தி யாயத்தில் விவரித்திருந்தோம்!

அனைத்தும் மக்களுக்காகவே!

முருகவேல் கோட்டத்துப் பெருங்குறடுக்கு நடுவே, இளவரசனைக் கடம்ப மயிலாசனத்தில் சுமந்து வந்து இறக்கிவைப்பார்கள். வேல்கோட்டத்திற்கு வந்தடைந்த அரண்மனைக் கணக்காயர், தம்மிடமுள்ள அரசுக் கணக்கேடுகளை வேல்கோட்டத்து வேலாயுதத்தின் முன் அடுக்கிவைப்பார்.

d

வேலவனுக்குக் கொண்டு வந்த பூசைப் பொருள்களை வரிசையாகக் கொண்டுவந்து வைப்பார்கள். முருகு அயர்தலுக் காகக் கொண்டுவரப்பட்ட கறியாடுகள், மான்கள், முயல்கள், கோழிகள், காடைகள், புறாக்கள், கௌதாரிகள், பறவை முட்டைகள், நெல், பழங்களிலிருந்து எடுக்கப்பட்ட கள்குடங்கள், பனைமரத்திலிருந்து எடுக்கப்பட்ட கள்குடங்கள், தேன்குடங்கள், சிறுதானியக் கூடைகள் போன்றவை வேல்கோட்டத்துக்குமுன் விரிந்த அளவில் வேயப்பட்டிருந்த பந்தலின்கீழ் வரிசைப்படுத்தப்படும். இவையனைத்தும் மக்களுக்காகவே.

போரில் கைப்பற்றிய பகைவர்களின் சொத்துகள்!

சென்ற போரில் கைப்பற்றப் பட்ட பகைவர்களின் சொத்து கள், தங்க ஆபரணங்கள், மகுடங்கள் போன்றவற்றை, தட்டார்கள் அக்க சாலைகளில் உருக்கி, அவற்றிலிருந்து ஏழரை மாற்றுள்ள தங்கங்களை அரசு முத்திரை பொருந்திய தங்க நாணயங்களாகவும், எட்டரை மாற்றுத் தங்கங்களை, இளவல் தானங்களாகக் கொடுக்கக்கூடிய பொற்கிழிகளுக்குத் தேவையான பல வடிவ வட்டத்தட்டுகளாகவும், பத்தரை மாற்றுத் தங்கங்களை வேல்கோட்டத்தில் முருகு அயர்தலின்போது இளவலுக்கு அணிவிப்பதற்கான வீரப்பொன் வடங்களாகவும் மாற்றி, அதில் நவரத்தி னங்களைப் பதித்து அலங்கரித்து வைத்திருப்பார்கள்.

பகைவர் நாட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆநிரைகளின் எண்ணிக்கை, போர்ப்படைக் கருவிகளை உலைப்பட்டிகளில் போட்டு உருக்கி, புதிதாக செய்யப்பட்ட போர்ப்படைக் கருவிகளின் எண்ணிக்கை, அவற்றின் பலம் மற்றும் பகைவர்களிடமிருந்து கொண்டுவரப்பட்ட புரவிகள், யானைகள், இப்போது தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவரப் பட்டுள்ள ஊர்கள், கோட்டைகள், குளங்கள், ஏரிகள், ஆற்றுப்பாசனப் பகுதிகள், அவற்றில் பலனடையும் நஞ்சை, புஞ்சை, மாவிடைகள், மரவிடைகள், திறல்கள், திட்டுகள், திறவிடைகள், நத்தங்கள், தோட்டங்கள், மலைத்தொடர்கள், கானகங்கள், அவற்றுக்கூடே பாயும் அருவி ஆறுகள், அவற்றால் பயன்பெறும் தினைப்புனங்கள் போன்றவற்றை அளந்தறிந்து, அவற்றின் பயன்பாடுகள் யாவும் கூட்டல் செ

வேலனாட்டம் குறித்தும், முதற்சங்கம் எனும் கூடலை உருவாக்கியது குறித்தும் கடந்த அத்தி யாயத்தில் விவரித்திருந்தோம்!

அனைத்தும் மக்களுக்காகவே!

முருகவேல் கோட்டத்துப் பெருங்குறடுக்கு நடுவே, இளவரசனைக் கடம்ப மயிலாசனத்தில் சுமந்து வந்து இறக்கிவைப்பார்கள். வேல்கோட்டத்திற்கு வந்தடைந்த அரண்மனைக் கணக்காயர், தம்மிடமுள்ள அரசுக் கணக்கேடுகளை வேல்கோட்டத்து வேலாயுதத்தின் முன் அடுக்கிவைப்பார்.

d

வேலவனுக்குக் கொண்டு வந்த பூசைப் பொருள்களை வரிசையாகக் கொண்டுவந்து வைப்பார்கள். முருகு அயர்தலுக் காகக் கொண்டுவரப்பட்ட கறியாடுகள், மான்கள், முயல்கள், கோழிகள், காடைகள், புறாக்கள், கௌதாரிகள், பறவை முட்டைகள், நெல், பழங்களிலிருந்து எடுக்கப்பட்ட கள்குடங்கள், பனைமரத்திலிருந்து எடுக்கப்பட்ட கள்குடங்கள், தேன்குடங்கள், சிறுதானியக் கூடைகள் போன்றவை வேல்கோட்டத்துக்குமுன் விரிந்த அளவில் வேயப்பட்டிருந்த பந்தலின்கீழ் வரிசைப்படுத்தப்படும். இவையனைத்தும் மக்களுக்காகவே.

போரில் கைப்பற்றிய பகைவர்களின் சொத்துகள்!

சென்ற போரில் கைப்பற்றப் பட்ட பகைவர்களின் சொத்து கள், தங்க ஆபரணங்கள், மகுடங்கள் போன்றவற்றை, தட்டார்கள் அக்க சாலைகளில் உருக்கி, அவற்றிலிருந்து ஏழரை மாற்றுள்ள தங்கங்களை அரசு முத்திரை பொருந்திய தங்க நாணயங்களாகவும், எட்டரை மாற்றுத் தங்கங்களை, இளவல் தானங்களாகக் கொடுக்கக்கூடிய பொற்கிழிகளுக்குத் தேவையான பல வடிவ வட்டத்தட்டுகளாகவும், பத்தரை மாற்றுத் தங்கங்களை வேல்கோட்டத்தில் முருகு அயர்தலின்போது இளவலுக்கு அணிவிப்பதற்கான வீரப்பொன் வடங்களாகவும் மாற்றி, அதில் நவரத்தி னங்களைப் பதித்து அலங்கரித்து வைத்திருப்பார்கள்.

பகைவர் நாட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆநிரைகளின் எண்ணிக்கை, போர்ப்படைக் கருவிகளை உலைப்பட்டிகளில் போட்டு உருக்கி, புதிதாக செய்யப்பட்ட போர்ப்படைக் கருவிகளின் எண்ணிக்கை, அவற்றின் பலம் மற்றும் பகைவர்களிடமிருந்து கொண்டுவரப்பட்ட புரவிகள், யானைகள், இப்போது தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவரப் பட்டுள்ள ஊர்கள், கோட்டைகள், குளங்கள், ஏரிகள், ஆற்றுப்பாசனப் பகுதிகள், அவற்றில் பலனடையும் நஞ்சை, புஞ்சை, மாவிடைகள், மரவிடைகள், திறல்கள், திட்டுகள், திறவிடைகள், நத்தங்கள், தோட்டங்கள், மலைத்தொடர்கள், கானகங்கள், அவற்றுக்கூடே பாயும் அருவி ஆறுகள், அவற்றால் பயன்பெறும் தினைப்புனங்கள் போன்றவற்றை அளந்தறிந்து, அவற்றின் பயன்பாடுகள் யாவும் கூட்டல் செய்யப்பட்டு, கருவூலப் பண்டாரத்தார்களிடம் அரண் மனைக் கணக்காயர்கள் ஒப்படைப் பார்கள்.

வழிபாட்டில் கணக்கேட்டுக் கட்டுகள்!

இவற்றிலிருந்து அந்தப் பகை நாட்டினர் செய்துவந்த வாடாக் கடமைகள் என்று சொல்லப்படும் ஆண்டுதோறும் செய்யப்பட்டு வந்த கொடைகள், கோவில், மட இறையிலி தானங்கள், இரப்பார் தானங்கள் போன்ற யாவும் தடைப்பெறாமல் தொடர்ந்து வருங்காலங்களில் செய்துவருவதற்கான செலவினங் களைக் கூட்டல்செய்து, மேற்சொன்ன தொகுபயன்களிலிருந்து கழித்து, அந்தக் கணக்குகளைக் கொண்டு மேலும் அப்பகுதிகளை வளப்படுத்தவும், வலிமைப்படுத்தவும், அரண் மனை அம்பலப் பண்டாரங்கள், கணக்காயர் கள் சேர்ந்து பல வழிவகைத் திட்டங்களை ஆய்ந்து உருவாக்குவார்கள்.

இவற்றுக்கு புதிய பயிர் வரி, சுங்க வரிகள் எவ்வளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பவற்றைக் கருத்திற்கொண்டு எழுதப்பட்ட கணக்கேட்டுக் கட்டுகளை வேலவன் முன்பாக பொற்தாம்பாளத்தில், வெண்பட்டுத் துணியினால் போர்த்தி வழிபட, வேலவன் கோட்டத்துப் பூசகப் பண்டாரத்திடம் அம்பலகாரப் பண்டாரம் ஒப்படைப்பார்.

ஒளிமயமான சூழலில் முருகப்பெருமான்!

மேலும், இளவலுக்கு வேல்கோட்டத்தில் பூணவிருக்கும் பொன்மணி வடங்கள், பொன்னிடை நாண்கற்றைகள், அங்கச்சுற்று பொன், வைர நகைகள் அடங்கிய பெட்டகம், பூசைக்குத் தேவையான சீர்வரிசைப் பொருள்கள் யாவும் வேலாட்டம், வெறியாட்டம் ஆடும் அருளாடிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவை வேலவன்முன் வரிசையாக வைக்கப்படும்.

பின், வேல்கோட்டத்திற்கு வெளியே வெண் சங்கங்கள் முழங்க, வந்திருக்கும் அனைத்துப் பெருமக்களின் சார்பாக பூசகப் பண்டாரத்தார் இளவலுக்குச் செய்யவேண்டிய மங்கல மஞ்சனப் பூக்கள் தூவி, பெரிய வாகைப்பூ மாலையை இளவலுக்கு சூட்டி வரவேற்பார்.

வேல்கோட்டத்திற்கு வெளியே ஐவகை கைக்குத்தல் நெல்லரிசி மூடைகளை, கொதித்துக்கொண்டிருக்கும் தூய ஆற்றுநீர் கொப்பரைகளில் வேளாண் குடிமக்கள் கொண்டுவந்து கொட்டுவார்கள். முல்லைநில மக்களால் கொண்டுவரப்பட்ட விலங்குகள், கால்நடைகள், பறவையினங்கள் போன் றவை கழுமரத்தடியில் பலியிடப்படும்.

ஆயர்குல ஆய்ச்சிகளால் கொண்டு வரப்பட்ட பால்குடங்கள் பால்காய்ச்சும் கொப்பரைகளில் ஊற்றப்பட்டு, குறிஞ்சியின மக்கள் கொண்டுவந்த குறிஞ்சி விறகுகளால் நெருப்பு மூட்டப்படும். பால் கொதித்தவுடன் மணம் நிறைந்த பச்சரிசி மூடைகளைக் காராள வெள்ளாளர்கள் பறைசங்குகள் முழங்க, வேலவனின் தளிகைக்காக அக்கொப்பரைகளில் கொட்டுவார்கள். வேலவன் குறடுக்குள் குறிஞ்சிநில மக்கள், தங்கள் இசைவாத்திய முழக்கத்தோடு ஏலம், தேன், தினைமா கலந்த மூங்கிற்கூடைகளைக் கொண்டுசெல்வர்.

பால், அன்னக் கொப்பரைகள் கொதித்துப் பொங்கிவரும்போது ஆயர்குல ஆய்ச்சியர் குழகை ஒலியெழுப்பி, நெய்க் குடங்களையும், முல்லைநிலப் பனையேறி மக்கள் கருப்பட்டி வட்டுகள் நிறைந்த பெருங்கூடைகளையும் பால் அன்னம் வெந்து கொண்டி ருக்கும் கொப்பரைகளுக்கு அருகில் கொணர்ந்து வைப்பர். பனை வெல்லம் தூளாக்கப்பட்டு நைத்து, நெய்யோடு சேர்த்து, மங்கல இசைவாத்தியங்களும், மக்கள் குழகை ஒலியும் வானுயர முழங்க, பால் அன்னக் கொப்பரைகளில் கொட்டுவார்கள்.

அன்னக் கொப்பரைகள், கருங்காலி மரப் பெருந்துடுப்புகளாலும், பதுமுக மர அகப்பைகளாலும் திறன்மிக்க ஆடவர் களால் கிண்டப்படும்போது, சுக்கு, ஏலம், உலர் பழங்கள் கூடைகளிலிருந்து தாதிப் பெண்களால் கொட்டப்படும்.

dance

வேலவன் கோட்டத்திற்குள் அமர்ந்தி ருக்கும் இளவலுக்குமுன் வேலனாட்ட, வெறி யாட்ட, காவடியாட்ட அருளாடிகளுக்கு பம்பை, சேகண்டி, உறுமி முழங்க பெண்கள் குழகையிட்டு அருளேற்றம் செய்வார்கள். அவர்கள் யாவரும் வேலவனை வணங்கி, தாங்கள் அணிந்திருக்கும் அணிகழல்கள் முழங்கப் பேரருள் பெற்று, அந்த அருளோடு கந்தவேல்முன்பு வீற்றிருக்கும் கம்பீரமான இளவலுக்கு மலர்தூவி, ஆசிர்வதித்து, வேல்கோட்டத்திற்கு வெளியே விரிந்த நிழற்பந்தலில் வீரவெறி நடனமிடுவர்.

அவ்வமயம் மக்கள், அவர்களுக்கு வாகை மலர் மாலைசூடி தங்கள் எதிர்காலப் பலன் பற்றி குறிகேட்பார்கள்.

பலியிடப்பட்ட விலங்குகளும், பறவை களும் நுண்கூறுகளிடப்பட்டு, வெந்து கொண்டிருக்கும் கறியன்னக் கொப்பரை களில் கொட்டப்பட்டு, அனுபவம் மிகுந்த சமையற்கலைஞர்களால் சுவை கூட்டு வாசனைப் பொருட்கள் சேர்த்து சமைக்கப்படும் வேளையில், வேலவனுக்கு நெய், பால், தேன், மஞ்சள் புனித நீராட்டுகள் செய்யப்பட்டு, பட்டுப் பரிவட்டங்கள் சூட்டி, பொன்னகைகள் சூட்டி, முல்லை நிலத்து அலங்காரப் பண்டாரங்களால் கொண்டுவரப்பட்ட மலர் ஆரங்களால் மருத நிலத்துப் பூசகப் பண்டாரங்கள் அணிவித்து, நந்தா விளக்கு, சரவிளக்குகள், நெய்ப் பந்தங்கள் யாவற்றையும் ஒளியேற்றி, மிகுந்த ஒளிமயமான சூழலில் முருகப்பெருமானைக் காட்சிப்படுத்துவர்.

ராஜமாதா முன்செல்ல... அரச மகளிர் பின்தொடர்வர்!

பாலன்னத் தளிகைகள் தயாரானவுடன், அரச குடும்பத்தார்களின் பல்லக்குகளும், யானைப் பரிவாரங்களும் அரண்மனையிலிருந்து ராஜ வீதிகளின்வழியே கந்த கோட்டத்தை நெருங்கி வருவார்கள். சேவற் சண்டைகளுக்குத் தயாராகும் கீழச்சேரி, மேலச்சேரி மறவர்கள். கூட்டம் கூட்டமாகத் தங்கள் சேவல்களின் கால்களில் விடம் தடவிய கத்திகளைப் பொருத்தி, அவற்றுக்கு ஊக்க மருந்து கொடுத்துக் கொண்டிருப் பார்கள்.

அரண்மனையிலிருந்து வரும் பரிவாரங் களுக்குமுன், அலங்கரிக்கப்பட்ட வெண் புரவியில் ராஜகுருவும், அவரைத்தொடர்ந்து முத்தரைய சேனாதிபதி, அலங்கரித்த கருப்பு புரவியிலும் வர, அலங்கரிக்கப்பட்ட அரச மகளிர்களின் பல்லக்குகளும், கங்காணிகள் குதிரைகளிலும் புடைசூழ வருவதைத் தொடர்ந்து, அரசகுல குடும்ப அதிரிகாரிகள் யானைகளின்மீது அம்பாரிகளில் அமர்ந்து வருவார்கள். இவர்கள் கந்தகோட்டத்தை அடைந்தவுடன் குருநாதரும், சேனைத் தலைவரான முத்தரையரும் வெள்ளைக் கொடிகளை அசைப்பர்.

உடனே அரண்மனைக் கைக்கோளர்கள் பெரும் பட்டுப் பீதாம்பர திரைச்சீலைகளை பல்லக்குகளின் இருபுறங்களிலும் அரச குடும்பப் பெண்கள் தெரியாதவண்ணம் உயர்த்திப் பிடிப்பர். முத்தரையர் தன் கையிலிருக்கும் நீண்ட உடைவாளை எடுத்து உயர்த்திப் பிடித்து, பாதுகாப்பு சரியாக உள்ளது என சமிக்ஞை காட்டுவார். அதைப்பார்த்து, பல்லக்கை சுமந்து வந்த சீர்பாதந் தூக்கிகள் பல்லக்கை வேலவன் கோட்டத்து முன்னே சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும் பந்தலில் இறக்கிவைத்து விலகி நிற்பார்கள்.

அரண்மனைக் கங்காணிகளின் பார்வை முழுவதும் திரைச்சீலைகளைச் சுற்றி நோட்டமிட்டுக்கொண்டே இருக்கும்.

அப்போது வெண்சங்கங்கள் முழங்க அரண்மனை சேவகிகள், பல்லக்கைச்சுற்றி நறுமணப் புகைத் தூக்கிகளையும், மலர்த்தட்டுகளையும் கொணர்ந்து, முதல் பல்லக்கிலிருந்து அரச மாதாவின் சீர்பாதங்கள் படுமிடங்களில் மலர்களைத் தூவி மென்மையாக்குவார்கள்.

மலர்கள் தூவிய இடங்களில் ராஜமாதா தன் பாதத் தடங்கள் பதித்து, வெண்பட்டுப் போர்த்தி, மெல்லிய ராஜ நடையோடு, தன் மகவைக் காண வேலவன் கோட்டத்தை நோக்கி முன்செல்ல, மற்ற அரச மகளிர் அவரைப் பின்தொடர்வர். அதைத் தொடர்ந்து, யானை அம்பாரிகளிலிருந்து இறங்கிய அனைத்து அரச குடும்பத்து ஆண்மகன்கள் சீருடைகளுடன் வேல் கோட்டத்திற்குள் வருவர்.

அரசமாதா வேலவன் கோட்டத்திற்குள் தனக்கென அமைக்கப்பட்ட ஆசனத்தில் வந்தமர்ந்தவுடன், இளவலும் அங்கிருக்கும் முக்கிய அதிகாரிகளும் அவரை வணங்கி வரவேற்பர். இத்தருணத்திற்காகக் காத்திருந்த ஆடல் மகளிர்கள் வேல்கோட்ட சதுக்கத்தின் நடுவே வரையப்பட்ட தாளச் சக்கரத்திற்கு வந்துசேர்வார்கள்.

பிரம்மிக்க வைக்கும் இசை நடனம்!

இந்தத் தாளச்சக்கரம் என்பது, நடுவே ஒரு வட்டமும், அதைச்சுற்றி ஆறு இதழ்களும், அந்த ஆறு இதழ்களிலும் காசுபதம், விராமம், துருதம், இலகு, குரு, புலுதம் என அறுவகைத் தாளங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்த இதழ்களைச் சுற்றிலும் பெரிய வட்டமும், அதனைச் சுற்றிலும் 35 இதழ்களும் பொறிக்கப்பட்டு, அதில் பிறை, மதி, கணை, வில், பாம்பு, புன்னடி என்ற மாத்திரைகளின் பெயர்கள் இருக்கும். மேற்சொன்ன இதழ்களுக்கு வெளியே 35 இரட்டை இதழ்களும், அதற்கு வெளியே 35 பெரிய ஓரிதழ் வட்டமும் வரையப்பட்டிருக்கும். இதற்குதான் தாளச்சக்கரம் என்று பெயர்.

ஆடல் மகளிர் ஆறு பேர் அவ்வட்டத் தாமரையில் வணங்கிய நிலையில் வந்துநின்றவுடன், நட்டுவம் வாசிப்பவர்கள் முதலில் முருகப்பெருமானை வணங்கி முதல் பாடல் இசைத்து, பின் பேரரச வம்சத்தைப் புகழ்ந்து, வரவேற்கும் பாடலோடு நட்டுவம் இசைப்பார்கள். இதற்கு மகா ஒலிதம் என்று பெயர்.

இதைத் தொடர்ந்து, வேலவன் கோட்டத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் மகாசேகண்டி எனப்படும் பெரிய வெண்கலத்தட்டு மர சுத்தியால் ஓரடி அடிக்கப்படும். உடனே ஆடல்மகளிர் மேலே சொன்னவகைத் தாளங்களை நட்டுவனார்கள் வாசிக்க, அதற்கேற்றாற் போல் சதங்கைகள் பொருந்திய தங்களது சீர்மிகு பாதங்களை அசைத்தாடுவர்.

அப்போது சுற்றிலுமுள்ள நெய்ப் பந்தங்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டு வரும். ஒளிமங்கிய அந்த இடம் முழுவதும் மிகப் பிரகாசமாக ஒளிரும். அப்போது தங்கள் நுணுக்கமான நளின உடல் அசைவுகளை வெளிப்படுத்தி நடனிப்பார்கள்.

ஒலியும் ஒளியும் நிறைந்த மங்களகரமான அந்தச் சூழலில், முருகப்பெருமானுக்கும், இளவலுக்கும், அரசமாதா அமர்ந்திருக்கும் இடத்திற்கும் நடுவே பிரம்மிக்கும் அளவிற்கு இசை நடனம் நடக்கும். இந்த நிகழ்வில், போர்க்களங்களில் நடந்த ஒன்பதுவகை மனவுணர்வுகளையும், சீரிய முறையில் நடனங் களில் காட்டுவார்கள்.

இறுதியாக, போரில் மிகப்பெரிய சாதனை படைத்து, வெற்றிப் பெருமிதத்தோடு வீரநடைபோட்டு அரண்மனை வாயிலுக்கு வந்த நிகழ்வுகளை ஆடவர்கள் போல் செய்துகாட்டும்பொழுது, மக்களின் ஆரவாரப் பேரொலியோடு, மக்களின் குழகை ஒலியோடு, சேனாதிபதி ஆடல் மகளிர் ஆறுபேருக்கும் வாகைப்பூ மாலைசூட்டி, அந்த இனிய நிகழ்வினை நிறைவு செய்வார்.

முருகு அயர்தல் இனிதே தொடரும்.

தொடர்புக்கு:

அலைபேசி 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

om011020
இதையும் படியுங்கள்
Subscribe