கா தபஸ்வியும் ஞானச்சுடருமான பதஞ்சலி, வேதியர் குலத்தில் பிறந்து சந்திரகுப்தன் என்ற நாமம் பூண்டு தன் சீடரான கெடரிடமே பாஷ்ய பாடம் கற்பதற்காக வந்தார்.

நர்மதா தீரத்திலுள்ள ஆலமரம் ஒன்றில் கௌட பிரம்ம ராட்சதனிடம் சந்திரகுப்த சர்மாவாகிய பதஞ்சலிக்குப் பாடம் தொடங்கியது. அதற்கு முன்பாக சந்திரகுப்த சர்மாவுக்கு பல நிபந்தனைகள் விதித்தார் பிரம்ம ராட்சதன்.

dd""நீயும் மரத்தின்மீது அமர்ந்துதான் பாடம் கேட்கவேண்டும். நான் சொல்லும் பாடங்கள் உனக்குப் புரிந்துவிட்டதா என்பது பற்றி நான் யோசிக்க மாட்டேன். சொல்லிக்கொண்டே செல்வேன். இடையில் நிறுத்தமாட்டேன். நீயும் பாதியில் மரத்தைவிட்டு இறங்கக் கூடாது. உணவு, உறக்கத்துக்கு அவகாசமே இல்லை. விரைவில் முடித்துவிட வேண்டும்.'' இப்படி பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

கல்வியிலுள்ள ஆர்வத்தால் எல்லா நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மரத்தின்மீது ஏறியமர்ந்தான். அப்போது தான் அவனுக்கு அந்த உண்மை புரிந்தது. பாஷ்ய பாடங்களை எதைக்கொண்டு எதில் எழுதுவது? அதற்கான ஓலையோ, எழுத்தாணியோ அவனிடம் இல்லை. இக்கட்டான நிலையில் இறைவன்தானே வழி காட்டுவார். பாடம் ஆரம்பித் தாகிவிட்டது. அப்போது அந்த யோசனை உதித்தது. மரத்திலுள்ள ஆலிலைகளைப் பறித்தான். தன் கை நகத்தினால் தொடையில் கீறினான். ரத்தம் கொப்பளித்தது. இலைக்காம்பை ரத்தத்தில் தோய்த்து மகாபாஷ்யத்தை எழுதத்தொடங்கினான்.

Advertisment

பிரம்ம ராட்சதனான கௌடர் அசுர பாடம் போதித்தார். சந்திரகுப்த சர்மாவும் சளைக்காமல், பசி, தாகம் மறந்து எழுதிக்கொண்டே இருந்தான். பல நாட்கள் பாடம் எழுதுவது நிற்காமல் தொடர்ந்தது. இது ஒரு அமானுஷ்யமான செயலல்லவா? ஆதிகுருவான தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழேதானே பாடம் சொன்னார். பாடங்கள் முழுவதும் எழுதி முடிந்ததும் பிரம்மராட்சத உருவிலிருந்த கௌடபாதர் தன் சுயவடிவைப் பெற்று ஆனந்தமடைந்தார். இறைவனின் திருவடிகளிலேயே லயித்திருந்த கௌடர் இமயமலைக்குச் சென்றுவிட்டார்.

மகாபாஷ்யங்களை எழுதிய சந்திரகுப்த சர்மா மரத்திலிருந்து கீழே இறங்கியவுடன், தன்னையறியாமலேயே ஆயாசம் மேலிட்டு உடல் தளர்ந்து அப்படியே கண்ணயர்ந்துவிட்டான். மகாபாஷ்யம் எழுதப்பட்ட இலைமூட்டை அவனருகே கிடந்தது.

நாம் நினைத்தபடியே அனைத்தும் நடந்துவிடுகிறதா? அந்தப் பக்கமாக வந்த ஆடு இலை மூட்டையைக் கண்டு, அதில் ஒரு பகுதியைத் தின்றுவிட்டது. திடீரென கண்விழித்த சர்மா அதிர்ச்சியடைந்தான். அவ்வாறு காணாமல்போன பகுதி (அகபட்சித பாஷ்யம்) ஆடுதின்ற உரை என்றே இன்றும் வழங்கப்படுகிறது. மனதை ஒருவாறு தேற்றிக்கொண்ட சர்மா, எஞ்சியிருந்த இலை மூட்டையோடு உஜ்ஜயினி நகருக்கு வந்துசேர்ந்தான். அப்போது நள்ளிரவு. அவனது களைப்பும் சோகமும் தீராத நிலையில், தன்னை மறந்து ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துறங்கிவிட்டான். அந்த வீடு ஒரு வியாபாரியின் இல்லம்.

Advertisment

வணிகனின் மகள் காலையில் கதவைத் திறக் கும்போது திண்ணையில் ஒரு இளைஞன் சுயநினைவின்றிப் படுத்திருப்பதைக் கண்டு, அவனுடைய களைப்பு நீங்க உபசாரங்கள் செய்து, வயிறு நிறைய உணவு தந்து அவனை தன்னிலைக்குக் கொண்டுவந்தாள்.

தெளிவடைந்த அவன் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டபோது ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டான்.

அவனுக்கு அன்னமிட்ட ஆரணங்கு தன் உள்ளத்தை அவனிடம் பறிகொடுத்து விட்டதாகச் சொல்லி, தன்னை மணந்துகொள்ள வேண்டுமென்று பிடிவாதமாகச் சொன்னாள். வியாபாரியும், ""நீ எங்கள் பொருள். என் மகள் செய்த உதவியால்தான் நீ உயிரோடு இருக்கி றாய். எனவே என் மகளை நீ திருமணம் செய்துகொண்டே தீரவேண்டும்'' என்று நிர்பந்தப்படுத்தினார்.

சர்மாவுக்கோ இல்லறத்தில் சற்றும் விருப்பமில்லை. எனவே மறுத்தான். வியாபாரியும், மகளும் அரச சபைக்குச் சென்று முறையிட்டனர். சபைக்கு வந்த சந்திரகுப்த சர்மாவின் தெய்வீகமான முகமும், அறிவுச்சுடராய்ப் பிரகாசிக்கும் காந்தியும் மன்னனையும் மயங்கவைத்தது. வழக்கை விசாரிக்க வேண்டிய மன்னன் சர்மாவை தன் மகளுக்கு வரனாக வரித்துவிட்டான். சந்திரகுப்த சர்மாவைப் பற்றி விசாரித்த அமைச்சர், வேதமும் வேதாந்தமும் பூரணமாகக் கற்றுத்தேர்ந்து பிரம்மதேஜசோடு விளங்கும் சர்மாவை தனக்கு மாப்பிள்ளையாக்கிக்கொள்ள வேண்டுமென்று துடித்தார். திருமணமே வேண்டாமென்ற சந்திரகுப்த சர்மாவுக்கு வியாபாரி, மன்னன், மந்திரி என மூன்றுபேருமே பெண்ணைக்கொடுக்கப் பிரியப்பட்டார்கள். இந்த இக்கட்டிலிருந்து மீளமுடியாமல் சர்மா ஒரே முகூர்த்தத்தில் மூன்று பெண்களையும் திருமணம் செய்துகொள்ளும்படி ஆயிற்று. அந்தகால சம்பிராதயம் அது. "லோம விவாகம்' என்று குறிப்பிடப்படுகிறது.

அந்தண குலத்தைச் சேர்ந்த ஆடவர் சில நெருக்கடியான நிலை வரும்போது நான்கு வர்ணத்தைச் சேர்ந்த கன்னிகைகளை மணக்கலாம் என்று சாஸ்திரப்பூர்வமான செய்தி குறிப்பிடுகிறது. இதை அனுசரித்து சந்திரகுப்த சர்மா மூன்று பெண்களோடு நான்காவதாக ஒரு வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணையும் மணந்துகொண்டான். ஒவ்வொரு மனைவிக் கும் ஒரு மகன் பிறக்கும்வரை இன்பமாக இல்லறம் நடத்தினான்.

சந்திரகுப்த சர்மாவின் ஞானமும், அறிவுக்கூர்மையும் ஒருங்கே அமைந்த நான்கு பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள், வரருசி என்ற வல்லபருசி, விக்கிரமாதித்தன், பட்டி, பர்த்ரு ஹரி ஆகியோராவர். அதன்பின்னர் சர்மா மகாபாஷ்யத்தை உலகில் பிரசாரம் செய்துவிட்டு, தன் கடமையைச் செய்த மனநிறைவோடு இமயம் சென்று தவம்புரியத் தொடங்கினான்.

சர்மாவின் மகனான பர்த்ருஹரி சிறுவயதிலேயே வேத வேதாங்களைக் கற்று, வடமொழியில் நல்ல பாண்டித்யமும் பெற்றான். ஞானம், பக்தியுடன் சிறந்த கவியாகவும் இருந்தான். வடமொழியிலுள்ள அறநூல்களில் பர்த்ருஹரியால் இயற்றப் பட்ட "சுபாஷித த்ரிசதி' மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

"சுபாஷிதம்' என்றால் "நன்மொழி' என்று பொருள். "த்ரிசதி' என்றால் "முந்நூறு.' இந்த நூல் நீதிசதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் நூறு சுலோகங்கள் கொண்டது.

பர்த்ருஹரி மன்னராக இருந்து இன்பத்தை அனுபவித்தபோது சிருங்கார சதகத்தையும், பின்னர் நீதி சதகத்தையும், உலக வாழ்வில் வெறுப்படைந்து துறவறம் ஏற்றபோது வைராக்கிய சதகத்தையும் இயற்றினார் என்று அனுமானம். இதைத்தவிர மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார். இங்கு பர்த்ருஹரியின் நீதி சதகத்தை மட்டும் காண்போம். இதை மங்கள சுலோகத்தோடு ஆரம்பிக்கிறார்.

"திக்காலத்ய நவசின்னானந்த

சின் மாத்ர மூர்த்தயே/

ஸ்வாநுபூதயே கமநாய நம:

சாந்தாய தேஜஸே//

"அறிவும் மகிழ்ச்சியும் உருவமாய் அமைந்து

திசையாற் பொழுதால் தீர்வு பெறவில்லாச்

சுயவனுபவமே சிறந்த அளவையாம்

சாந்தமாம் ஒளியை சிறப்புற வணங்குவோம்.'

இந்த சுலோகத்தில் பரம்பொருளை வர்ணிக்கிறார். பரம் பொருள் ஜோதி வடிவமானது. ஆகாயம் போன்று எங்கு மிருப்பது. இங்குதான் உள்ளார் என்று சுட்டிக்காட்ட முடியாத படி சர்வ வியாபியாக இருப்பவர். பரம்பொருள் எக்காலத்தி லும் இருப்பவர். காலத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் எல்லா பொருட்களிலும் இருக்கி றார். திசை, காலம், வஸ்து என்னும் மூன்றின் அளவில் உட்படாமல் எங்கும், என்றும், எதுவாகவும் நிறைந் திருக்கும் இயல்புள்ளவர்.

பரம்பொருள் ஞானஸ்வரூபியாகவும், ஆனந்த ஸ்வரூபியாகவும் உள்ளவர். ஆத்மானுபவத்தையே ஸ்வயம்பிரகாச சாதனமாகக் கொண்டவர். மாயையில் தொடர்பில்லாமல் தெளி வாய் உள்ளவர். இத்தனை சிறப்புகளை உடைய ஜோதி மயமான பரம்பொருளுக்கு நமஸ்காரம்.

அடுத்து நல்லோர்களின் இயல்பைப் பற்றி பல சுலோகங்களில் சொல்கிறார்.

பழி உண்டாகும் செயலைச் செய்யாதவர்கள். தன் மனைவியை மட்டும் நேசிப்பவர்கள். வேத சாஸ்திரங்களைக் கற்பதில் ஊக்கம் கொண்டவர்கள். வித்தை கற்பித்த ஆசானிடம் பக்தியும் விநயமும் கொண்ட வர்கள். பரமேஸ்வரனையே தொழுபவர்கள். சிறிய தேவதைகளைத் தொழாதவர்கள். ஆபத்துக் காலத்தில் தைரியமும், செல்வம் வந்தபொழுது செருக்கின்மையும் உள்ளவர் கள். யுத்தத்தில் பராக்கிரமமும், புகழை சம்பாதிப்பதில் உற்சாகமும் உள்ளவர்கள். இவர்களே மகாத்மா.

சான்றோர்களின் திருவடிகளில் விழுந்து வணங்குவதே தலைக்கு அழகு. உண்மை பேசுவதே வாய்க்கு அழகு. நல்ல எண்ணங் களே நெஞ்சத்திற்கு அழகு. நல்ல கேள்வியறிவே காதுக்கு அழகு என்று பல நீதிகளைச் சொல்கிறார் பர்த்ருஹரி.

விரதங்களை அனுஷ்டிப்பது எப்படி யென்று சொல்லும்போது, விளம்பரமில்லா மல் செய்யப்படும் தானம், வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை உற்சாகமாக உபசரிப் பது, பிறருக்கு வேண்டிய உதவிகளைச் செய்தபோதும் அதைப்பற்றி வெளிக்காட்டா மல் மௌனமாக இருப்பது, பிறர்செய்த உதவி களை உயர்வாகப் பேசுவது, பிறரை நிந்திக் காமல் இருப்பதுவுமே விரதங்கள் என்கிறார்.

ஒரு நீர்த்திவலையானது பழுக்க காய்ச்சிய இரும்பின்மீது விழும்போது, அது இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோய்விடுகிறது. அதுபோல கீழ்த்தரமான மூர்க்கரினிடம் நட்பு கொண்டால் நல்லவர்களும் தன் புகழை இழந்துவிடுகிறார்கள்.

அதே நீர்த்திவலை தாமரை இலையின்மீது விழும்போது அப்படியே முத்துப்போல சற்று பிரகாசமாக இருக்கும். இதைப்போல நடுத்தரமான மனிதரிடம் நட்பு கொண்டால் நல்லவனாக மாறாவிட்டாலும் சிறிதாவது நல்லவன் போலிருப்பான்.

அதே நீர்த்திவலை சுவாதி நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும் நாளில் கடலிலுள்ள சிப்பி யில் விழுந்தால் நல்முத்தாகிவிடும். அதுபோல் நல்ல பண்புகள் கொண்டோருடன் பழகும் மனிதன் நல்லவனாகிறான்.

மிக எளிமையாக மனிதன் இருக்க வேண்டிய நிலைகளைப் பற்றிச் சொல்லியுள்ளார்.

மூடர்களின் நிலையைப் பற்றிச் சொல்லும் போது, அற்ப அறிவுடன் ஆணவம் கொண்டு அலையும் மனிதர்களை பிரம்மாவே வந்தாலும் திருத்த முடியாது. மூடனாக இருப்பவனைத் திருத்தும் உபாயம் எதுவுமே இல்லை என்கிறார். கொந்தளிக்கும் கடலைக் கூட கடந்துவிடலாம். சினத்தோடு சீறிவரும் பாம்பையும் பிடித்துவிடலாம். ஆனால் வீண்பிடிவாதம் செய்யும் மூடர்களை மட்டும் திருத்தவே முடியாது. கானல் நீரையும் தாகத்திற்குக் குடிக்கலாம். காடுகளில் அலைந்து முயல் கொம்பையும் அடைந்து விடலாம். ஆனால் மூடர்களைத் திருத்துவது மட்டும் முடியாது.

நெருப்பை நீரினால் அணைத்துவிடலாம். சூரியனது வெப்பத்தைக்கூட முறத்தினால் மறைத்துவிடலாம். மதம் பிடித்த யானையை அங்குசத்தால் அடக்கலாம். மூடர்களைத் திருத்துவது முடியாத காரியம் என்கிறார் பர்த்ருஹரி.

மூடர்கள் பழிக்கு அஞ்சமாட்டார்கள். புழுக்கள் நிறைந்து துர்நாற்றம் வீசும் தண்ணீரில் நனைந்து, சதையே இல்லாத கழுதையின் எலும்புகளைத் தின்னும் நாயானது வெட்கமே படாது. இதைப் போலவே உலகமே நிந்தித்தாலும் மூடர்கள் தான்செய்யும் இழிசெயல்களை வெட்கமே இல்லாமல் செய்துகொண்டிருப்பார்கள்.

மேலும் பர்த்ருஹரி நல்ல செயல்களைச் செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் சொல்கிறார். நல்லறிவும், நற்பண்பும் உள்ள புதல்வன் பிறப்பது புண்ணியம் செய்த தாய், தந்தையற்கே கிடைக்கும். எல்லா விதத்திலும் கணவனுக்கு நன்மையே செய்யும் மனைவி கிடைப்பது நல்ல பேறு செய்த கணவனுக்கே கிடைக்கும். இன்பத்திலும் துன்பத்திலும் விட்டுப் பிரியாது அவற்றில் பங்கேற்கும் நண்பன் புண்ணியவான்களுக்கே கிடைப்பான்.

இந்த உண்மைகள் எல்லாருக்கும், எக் காலத்திலும் பயன்படும். இந்த கருத்துகளை மனதில்கொண்டு உலகில் பிறந்த மாந்தர் யாவரும் உத்தமனாக இருக்கலாம்.

நல்லதையே செய்து, அல்லாததை அகற்றி, ஆண்டவனிடம் அன்பு பூண்டு, அவனுடைய அருளைப் பெற்று ஆனந்தமாக இருக்கலாம்.