"பாரத நாடு பழம்பெரும் நாடு' என்று பாரதியார் பாடினார். எதனால் நம் பாரத தேசம் உயர்ந்தது? மனித சிருஷ்டி முதன்முதலில் நம் தேசத்தில்தான் ஏற்பட்டது. வேதங்களின்மூலம் கடவுளால் கொடுக்கப்பட்ட ஞானமயமான வாக்கு நம் நாட்டில்தான் தோன்றியது.
நம் நாட்டில்தான் எத்தனை ஞானிகள், மகான்கள், சித்தர்கள் அவதரித்துள்ளார்கள்! ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றி இறைவனைப் பாடி அனுபவித்து, நீதி நூல்களையும் நமக்குத் தந்தருளியுள்ளார்கள். அவையெல்லாம் பொக்கிஷங்கள். நாம் உயர்வானதொரு வாழ்க்கை வாழ்ந்து ஆனந்த மாக இருக்க, மகான்கள் பல வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் பர்த்ரு ஹரி என்ற மகானின் நீதிசதகமும், மகா பாஷ்யம் என்ற பொக்கிஷம் தோன்றிய வரலாறும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. பர்த்ரு ஹரி பற்றிய ஆதாரப்பூர்வமான வரலாறு கிடைக்கவில்லை என்றாலும், இவர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று சில செய்திகள் கூறுகின்றன. சந்திரகுப்த சர்மா என்பவரின் நான்கு மகன்களில் பர்த்ரு ஹரியும் ஒருவர். வரருசி, விக்ரமாதித்தன், பட்டி ஆகியோர் மற்ற மூவர் என்பர்.
ஒருசமயம் ஆதிசேஷன் மனதில் ஒரு ஆசை உண்டாயிற்று. தில்லை சிற்றம்பலத்தில் கூத்தாடும் நடராஜப் பெருமானைக் கண்டு களிக்க வேண்டுமென்ற தீராத வேட்கை. இதையறிந்த மாதவனும் அருள்புரிந்தார். ""சேஷா, நீ சிதம்பரம் தலத்திற்குச் சென்று தவம் புரிந்தாயானால் ஆனந்த தாண்டவமூர்த்தியைக் கண்டு ஆனந்திக்கலாம்'' என்றார் பரந்தாமன். அரவரசனும் மகிழ்ச்சியடைந்து ஆதிசேஷ உருவத்தைவிட்டுத் தவமிருந்து, அத்ரி என்ற தபோதனருக்கு மைந்தனாய்ப் பிறந்து, பதஞ்சலி என்ற நாமம் கொண்டு பக்தியும் தவமும் செய்தபோது, சிவகாமி சமேத நடராஜமூர்த்தி தரிசனம் தந்து அருள்புரிந்தார். பதஞ்சலிக்கு கூத்தபிரானின் தரிசனம் மகிழ்ச்சியாக இருந்தா லும், ஆடலரசனைவிட்டுப் பிரிய மனமில் லாமல் அவர் அருகிலேயே இருந்து நடனத்தைக் கண்டு ஆனந்திக்க வேண்டுமென்று ஆசை.
பதஞ்சலியின் பக்தியைக் கண்ட நடராஜப் பெருமான் ஒரு பணியை அவரிடம் ஒப்படைத்தார். ""பதஞ்சலியே, மக்களுடைய நலனைக் குறித்து நீ யோக சூத்திரம் இயற்ற வேண்டும். அவர்கள் மனதைச் செம்மைப்படுத்த உயர்ந்த கொள்கைகளை உலகிற்கு உணர வைக்கவேண்டும். உடலையே இறைவனின் கோவிலாக எண்ணிப் பேணுவதற்காக சாஸ்திரம் இயற்றுவாய். வடமொழியில் உள்ள வியாகரணத்திற்கு விரிவுரை எழுதவேண்டும். மக்கள் கர்ம மார்க்கத்தையும் சரியாகச் செய்ய வேண்டும்.
இதற்கு மந்திர உச்சாடனம் வேண்டும். ஞானமார்க்கத்தை உள்ளபடி அறிய, உபநிஷத் துக்களை நன்றாக அறிந்து மக்களுக்குப் புரிய வைக்க மொழி ஞானமும் வேண்டும். இதை யெல்லாம் செய்வதற்கு உன்னால்தான் முடியும். நீ எழுதும் பாஷ்யம் "மகாபாஷ்யம்' என்று வழங்கப்பெறும். மக்களின் மனம், மொழி, மெய் இம்மூன்றையும் தூய்மைப்படுத்தும் இந்தப் பணியை சிறப்பாகச் செய்வாய்'' என்று அருள்புரிந்தான் ஆடவல்லான்.
பதஞ்சலிக்கு அளவில்லா மகிழ்ச்சி. நடராஜப் பெருமானின் அருளால் கிடைத்த பெரும்பேற்றை எண்ணி வியாகரண சூத்திரங் களைச் செய்தார். ஐயனின் ஆணைப்படி உலகிற்கு மகாபாஷ்யத்தை உபதேசிக்க வேண்டுமே- சிதம்பர தலத்திலேயே பாடத் தைத் தொடங்கினார். நாளடைவில் சிதம்பரத் தில் பதஞ்சலி பாஷ்ய பாடம் உபதேசிப்பதை அறிந்த, கல்வியில் ஆர்வமுள்ள இளம்மாணவர் கள் வந்து குவிந்தனர். பாடம் படிக்க வந்துள்ள மாணவர்களைப் பார்த்து பிரம்மித்தார் பதஞ்சலி. பெருமிதம் ஒரு பக்கம் இருந்தாலும், ஆயிரக் கணக்கான மாணவர்களுக்குப் பாடம் சொல்வது அவ்வளவு சுலபமல்ல. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல்ல வேண்டும். ஒரே நேரத்தில் பதில் சொல்வது சாத் தியமாகுமா... யோசித்து ஒரு யுக்தி செய்தார்.
மீண்டும் நான் ஆதிசேஷ உருவை எடுத்தால் தான் இது சாத்தியமாகும். ஆயிரம் தலைகளும், ஆயிரம் நாக்குகளும் கொண்ட ஆதிசேஷ உருவில் மாணவர்களுக்குப் பாடத்தை நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
அதேசமயம் அவருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் அருகில் யாராவது வருவார்களா? என் விஷ மூச்சுக்காற்றைத் தாங்கும் சக்தி அவர் களுக்கு இருக்குமா என்று யோசித்த பதஞ்சலி மாணவர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்தார். மாணவர்களுக்கும் தனக்குமிடையே ஒரு திரை போட்டு, திரையின் மறைவிலிருந்து பாடங் களை உபதேசிப்பேன் என்றும்; இடையில் யாராவது திரையை விலக்கிப் பார்த்தால் எரிந்து போவார்கள் என்றும்; பாடம் நடந்துகொண்டிருக்கும்போது நடுவில் யாரும் எழுந்து வெளியே செல்லக்கூடாது; அப்படி மீறிச்சென்றால் அவர் பிரம்மராட்சதனாகும் படி சபித்துவிடுவேன் என்றும் கூறினார். இத்தனை நிபந்தனைகளுக்கும் அத்தனை மாணவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
பாஷ்ய பாடம் தொடங்கியது. மாணவர் களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் திரையருகே சென்று தெரிவிப்பார்கள். ஆதிசேஷ ரூபத்திலிருந்த பதஞ்சலி அருமை யாக ஒவ்வொருவருக்கும் விளக்கங்கள் சொல்வார். எல்லா மாணவர்களும் பாடங் களைத் திறமையுடனே கற்றனர். நாட்கள் நகர்ந்தன. ஒரு மாணவனுக்கு மட்டும் மனதில் தீராத சந்தேகம். எப்படி நமது ஆச்சார்யார் ஒரே சமயத்தில் பல மாணவர்களுக்கு பொருள் விளக்கிப் பாடம் கற்பிக்கிறார்? மனதைக் குடைந்துகொண்டே இருந்த சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் தலைதூக்கியது.
திரையை விலக்கினால் எல்லா ரும் எரிந்துபோவீர்கள் என்ற குருவின் வாக்கு அச்சுறுத்தியது. இருந்தாலும் சந்தேகப்பேய் பிடித்து ஆட்டியது. மனதின்வழியே சென்ற அந்த மாணவர் திரையே விலக்கியை விட்டார்.
அடுத்த கணம் ஆதிசேஷனின் விஷக்காற்று சீறி, மாணவர்கள் எல்லாருமே எரிந்து சாம்பலாகிவிட்டனர்.
பதஞ்சலிக்கு தாங்கமுடியாத துக்கம். "வித்தை கற்பிக்கும் ஆவலினால் இப்படி விபரீதமாகச் செய்துவிட்டேனே- பாஷ்ய பாடம் கற்கவந்த மாணவர்களுக்கு நானே காலனாகிவிட்டேனே' என்று மனம் தவியாய்த் தவித்தது. "உலகில் மகாபாஷ்யம் பிரசாரம் செய்யமுடியாமல் போய்விட்டதே. இறைவன் எனக்கிட்ட ஆணையை நிறைவேற்ற முடியவில்லையே' என்ற கவலையுடன் ஆதிசேஷன் உருவை மாற்றிக்கொண்டு சாதாரணமாக இருந்தார். அப்போது ஒரு மாணவர் வெளியிலிருந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடனே ஆச்சரியம் உண்டானது. தன் வார்த்தையைமீறி வெளியே சென்ற கோபம் இருந்தாலும், இவன் ஒருவனாவது மிஞ்சியுள்ளானே... இவன்மூலமாக பாஷ்ய பாடத்தை உலகிற்குத் தெரியப்படுத்திவிடலாம் என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
வெளியே சென்றுவந்த மாணவருக்கோ ஒரே திகைப்பு. என்ன இது... யாரையுமே காண வில்லையே. எங்கும் எலும்புக்குவியல், சாம்பல். அதிர்ச்சியடைந்து, ""குருவே, நான் இயற்கை உபாதையால்தான் வெளியே சென்றேன். என்னை மன்னித்து அருளவேண்டும்'' என்று நமஸ்கரித்தான்.
பதஞ்சலி ஒருவாறு மனதை சமாதானமாக்கிக்கொண்டு, இந்த மாணவரைக் கொண்டு பாஷ்ய பாடத்தை உலகிற்குத் தெரியப்படுத்தி விடலாம் என்று ஆறுதலடைந்தார். (இந்த மாணவரைப் பற்றி விவரம் தெரியாவிடினும் கௌட தேசத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவர்.)
நடந்த செய்திகளை மாணவருக்கு விவர மாகச் சொன்னார் பதஞ்சலி. அச்சத்துடன் ஆச்சார்யரை அணுகினார் மாணவர் கௌடர். இந்த மாணவனுக்கு உட்கார்ந்து, வாயினால் பாஷ்ய பாடம் கற்பிப்பது மிகவும் சிரமமான காரியம்.
தனக்குத் தெரிந்த மகாபாஷ்யம் மற்றுமுள்ள வேதாங்கங்கள் எல்லாம் இந்த மாணவனுக்கு அப்படியே மனதில் வரவேண்டுமென்று, தன் மனதை ஒரு முகமாக தியானித்து, ஆசிர்வதித்து அருளைப் பொழிந்துவிட்டார். அவருடைய தபோபலம் அவ்வளவு சக்திவாய்ந்தது. மகான்களும், ஞானி களும், தவசீலர்களும் நினைத்தால் எதுதான் நடக்காது?
மகாபாஷ்யத்தை மனதினால் அருளிவிட்ட போதும், முன்பு சொன்ன சாபம் உள்ளதே. யாரேனும் வகுப்பிலிருந்து வெளியே சென்றால் பிரம்மராட்சதனாகிவிடுவார்கள் என்ற சாபம். இட்ட சாபத்தை மாற்றுவது இயலாத காரியம்.
பிரம்ம ராட்சதனிடம் பாடம் கற்க யார் வருவார்கள்? மீண்டும் மாணவர் வருத்தமும் வேதனையுமடைந்து, பதஞ்சலி குருவின் பாதங்களில் பணிந்து கண்ணீர் மல்கப் பிரார்த் தித்தார். அந்த சாபத்திலிருந்து விமோசனம் தரவேண்டுமென்று வேண்டினார்.
பரம கருணையோடு பதஞ்சலியும், ""அப்பனே, எதற்கும் விமோசனம் உண்டு. பிரம்மராட்சத உருவத்தில் நீ இருந்தாலும் ஞானியாகவே இருப்பாய். மகாபாஷ்யம் உன் மனதிலேயே இருக்கும். அந்த சாபத்திலிருந்து நீ விடுபடுவதற்கு ஒரு உபாயமும் சொல்கிறேன். நீ பிரம்மராட்சத உருவத்தில் இருந்துகொண்டே வேதம், வேதாந்தம் நிறைந்த கருத்துகளை விரைவாகத் தொடுத்து, நீ இருக்கும்வழியாகச் செல்பவர்களிடம் கேள். உன்னுடைய வினாக் களுக்கு விடையளிப்பவர்களுக்கு உனக் குத்தெரிந்த கலைகளையும்- முக்கியமாக நான் உனக்கு அருளிய மகாபாஷ்யத்தையும் போதித்துவிடு. அந்த கணமே நீ சுயவுருவை அடைவாய்'' என்றார்.
பிரம்மராட்சத உருவிலிருந்த கௌடர் ஒரு ஆலமரத்தில் அமர்ந்து அந்த வழியாக வருவோர், போவோரை வழிமறித்து வியா கரணத்தைப் பற்றி கேள்விகள் கேட்டார். சிக்கலான அந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாதவர்களைப் புசித்துவிடுவார்.
பிரம்மராட்சத உருவிலிருந்த கௌடரின் மனம் இரண்டுவிதமாகப் போராடியது. ஞானமும், சாந்தமும் கொண்ட கௌடரின் இயல்பு ஒரு பக்கம்; பிரம்மராட்சத இயல்பு ஒரு பக்கம். உள்ளம் வெதும்பினார்.
நாட்கள்தான் நகர்ந்தன. மக்கள் அவர் இருக் கும் இடம் வருவதற்கே அஞ்சினர். நாம் எப்போது சுயவுருவை அடைவோம் என்று ஏங்கினார்.
மகாபாஷ்யத்தைக் கற்கவேண்டு மென்ற ஆவலினால் வந்த சிலரும், அவரது வினாக்களுக்கு விடை தெரியாமல் இரையாகினர். வியாகரணங் களையும், மகாபாஷ்யத்தையும் மனதிலேயே வைத்துக்கொண்டு மருகினார். தன் குருநாதரை கண்ணீர் மல்க உருகிப் பிரார்த்தித்தார்.
ஒருநாள் அந்தவழியாக ஒரு அந்தண இளைஞன் வந்தான். அவனைக் கண்டதும் பிரம்மராட்சதனுக்கு இனம்புரியாத சந்தோஷம்.
தேஜசோடுகூடிய இந்த இளைஞன் மகாபாஷ் யத்தை அறிந்துகொண்டால் இந்த உலகமே உய்யுமே. இந்த இளைஞன் முகத்தில் அலாதி யான ஒளி. ஈஸ்வரா! இவன் என்னுடைய வினாக் களுக்குத் தக்க விடையளித்தால் எனக்கும் விமோசனம் உண்டாகும்...
வழக்கம்போல பிரம்மராட்சதன் வேதிய இளைஞனை வழிமறித்து தன் கேள்விகளைத் தொடுக்க, என்ன ஆச்சரியம்! அந்த இளைஞன் அத்தனைக்கும் அசராமல் விடையளித்தான். கௌட பிரம்மராட்சதன் ஆனந்தம் தாங்காமல், அவனிடம் அன்போடு, ""அப்பனே, நீ எங்கே செல்கிறாய்'' என்றார். அந்த வாலிபன், ""சிதம் பரத்தில் மகாபாஷ்யம், வியாகரணம் எல்லாம் பதஞ்சலி முனிவர் போதிக்கிறாராம். அவற்றைக் கற்றுவரவே செல்கிறேன்'' என்றவுடன், கௌட பிரம்மராட்சதன் வேதனையோடு சிரித்தார்.
""குழந்தாய், சிதம்பரம், பதஞ்சலி, பாஷ்ய பாடம் எல்லாமே பழைய கதையாகிவிட்டது. பாஷ்ய பாடம் சொன்ன பதஞ்சலியும் இப்போது எங்கே இருக்கிறாரோ? பாடம் கேட்ட மாணவர்களும் இப்போதில்லை. பாஷ்ய பாடம் மட்டும் மிஞ்சியிருக்கிறது. அதையறிந்த நான் ஒருவன் உள்ளேன். வா குழந்தாய். உனக்கு நான் போதிக்கிறேன்'' என்று அன்பு பொங்க அழைத்தார் பிரம்மராட்சதன்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)