பள்ளிப்படையின் இரண்டாவது பரிணாமமான கந்து, வல்லக வழிபாட்டு முறையில், கந்து என்பது ஐந்து திறன்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, சுத்தவெளி ஆகியவற்றின் கூட்டமைப்பாக உள்ள மனித உடலைக் குறிக்கும் உருவகமாகும் என கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.
உயிராற்றலைக் கட்டுப்படுத்தும் வித்தொலிகள்!
அந்த கந்தும், கந்துக்கு முன்பக்கம் அதனை யொட்டி "வல்லம்' அல்லது "வல்லகம்' என்று அழைக்கப்பட்ட கற்பலகை வைப்பது, ஆதித் தமிழினத்தாரின் வழக்கமாக இருந்துவந்தது. இதில் "வல்' என்றால் ஆற்றல் அல்லது இயக்கம் அல்லது செயல் என்று பொருள். இங்கு வல்லம் அல்லது வல்லகம் என்பது நமது உடலிருக்கும் ஒன்பது துவாரங்களில், நாம் உயிரோடு இருக்கும்போது செயல்படும் ஆற்றல்களின் கூட்டமைப்பிற்கான உருவகமாகத் திகழ்கிறது.
இந்த வல்லகக் கற்பலகையில் ஒன்பது நிறைகளையும், ஒன்பது நிரல்களையும் கொண்ட 81 கட்டங்களைச் செதுக்கினார்கள்.
அவற்றில் உடலின் ஒன்பது வாசல்கள் என கூறப்படும் ஒன்பது துவாரங்களில் செயல் படும் உயிராற்றல்களைக் கட்டுப் படுத்தக்கூடிய ஒன்பது வகையான வித்தொலிகளைச் சித்தர்கள் கண்டுணர்ந்தனர். அவற்றை வல்லகக் கற்பலகையில் செதுக்கப்பட்ட 81 கட்டங் களில், மேல்வரிசையில் இருக்கும் ஒன்பது கட்டங்களில் இந்த ஒன்பது வகையான வித்தொலிகளை நிரப்பினார்கள்.
அதில், ஐந்தாவதாக இருக்கும் கட்டத்திலிருக்கும் வித்தொலியை இரண்டாவது வரிசையின் முதல் கட்டத்தில் எழுதி, அதனைத் தொடர்ந்து வலக்கைப் பக்கமிருக்கும் நான்கு கட்டங்களில் இருக்கும் வித்தொலிகளை வலப்பக்கமாக எழுதி, பின் முதல்வரிசையில் இருக்கும் முதல் கட்டம்முதல் நான்காவது கட்டம்வரை இருக்கும் வித்தொலிகளை நிரப்பினார்கள். இவ்வாறு அடுத்தடுத்த வரிசைகளில் நிரப்பி, 81 கட்டங்களையும் பூர்த்திசெய்து வைத்தார்கள். இவ்வமைப்பிற்கு "வல்லக உயிர் மந்திரக் கட்டமைப்பு' எனப் பெயரிட்டனர்.
சித்து விளையாட்டுகளில் எண்ணியல் ரகசியங்கள்!
இவற்றை இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் தினமும் உச்சரித்து பூசை செய்துவந்தால், இறந்தவரின் உயிராற்றலை நிலைபெறச் செய்து, பூசித்துவரும் தம்பதியினர் வயிற்றில் பிறக்கச் செய்யலாமென சித்தர்கள் கூறியிருந்தனர்.
ஒரு வல்லமை மிகுந்த மனிதன் இறக் கும்போது, அவனுடைய மறுபிறவியைத் தன் குல வாரிசுதாரர்களிடமே உருவாக்க வேண்டுமென சித்தர்கள் ரகசியமாக வைத்திருந்த கட்டமைப்பு இதுவாகும். இதில் பொறிக்கப்பட்டுள்ள எண்கள் மிகமிக ரகசியமாக சீடர்களுக்கு மட்டுமே சொல்லித்தரப்பட்டு வந்துள்ளது. இது வல்லமை மிகுந்த மனிதன்மீது செயல் பட்டுவந்த ஒன்பது கோள்களின் (நவ கிரகங்களின்) அமைப்புதனை மாறா மல், மறுபிறவியிலும் கொண்டுவரும் வல்லமையைப் பெற்றுள்ளதாக சித்தர்கள் கூறிவந்துள்ளனர்.
இது காலப்போக்கில் படிப்படியாக மறைக் கப்பட்டு, குருநாதர்களுக்கு மட்டும் சித்தர்களின் பீடங்களில் வைக்கப்பட்டு வருகிறது. இக்கட்டங்களிலுள்ள எண்களின் கூட்டுத்தொகை வலமிருந்து இடமாகவோ, மேலிருந்து கீழாகவோ கூட்டும்போது 81 என்ற இலக்கமாகவே வரும். எனவே சித்தர்கள் எண்ணியல் சார்ந்த ரகசியங்களைத் தங்கள் சித்து விளையாட்டுகளில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மனித ஆன்ம ஆற்றலின் ஆரா வட்டம்!
இந்த வல்லப்பலகைக் கட்டங்களின் நீள, அகலமானது, இறந்தவர்களின் (வலக்கை) சுட்டுவிரலில் இருக்கும் மேல் கோடுக்கும், நடுவிலிருக்கும் இரண்டாவது கோட்டிற்கும் இடையே இருக்கும் அளவினைக் கொண்டுதான் அமைக்கப்பட வேண்டும் என்பதுவும் ரகசியமாக வைக்கப்பட்டது. இந்த 81 அளவிலான சுட்டுவிரலில், மேலே கொடுக்கப்பட்ட முறையில் அளந்துகொண்ட அளவினை, ஒருவரது நாபியை மையமாக வைத்து ஆரமாக்கி ஒரு வட்டம் வரைந்தால், அதுவே ஒரு மனிதனின் ஆன்ம ஆற்றலின் ஆரா வட்டமாகும். இவ்வட்டம் மேலிருந்துகீழ்- இடவலமாக ஒரு கோள வடிவத்தில் செயல்படும் ஆற்றல் அதிர்வுகளாக இருக்கும் என்றும், ஒரு அணுவில் உட்கருவைச் சுற்றி வட்டமாக இயங்கும் எலக்ட்ரான் துகள்களின் இயக்கத்தைப் போன்றது எனவும் சித்தர்கள் கூறியுள்ளனர்.
ஒரு அணுவானது வெப்ப ஆற்றலை உட்கிரகித்தால், எலக்ட்ரானின் சுற்றுவட்டப் பாதையின் விட்ட நீளம் அதிகரிக்கும். தன்னிடமிருந்து ஒரு அணு வெப்ப ஆற்றலை இழந்தால், எலக்ட்ரான்களின் சுற்றுவட்டப்பாதையின் விட்டத்தின் நீளம் குறையும். இதேபோல்தான் ஒரு மனிதனின் ஆற்றல் அதிகமாக இருக்கும்போது, அவனது ஆன்ம ஆரா வட்டத்தினுடைய ஆரத்தின் நீளம் 81 அங்குலத்திலிருந்து கூடிக்கொண்டே செல்லும் என்றும், ஒரு மனிதன் தூக்கத்தில் இருக்கும்போது 81 அங்குலமாக இருக்கும் ஆராவின் ஆரமானது, அவன் பேரானந்தத்தில் திளைக்கும்போது பல காத தூரங்களைத் தாண்டிச் செல்லும் எனவும் சித்தர்கள் விவரித்துள்ளனர். ஆகவே சித்தர்களின் கூற்றுப்படி, ஆன்ம வட்டத்தின் ஆரம் அதிகரிக்கச் செய்வதற்கு, பல யோகப் பயிற்சி முறைகளைக் கற்பித்தனர்.
இவ்வாறு அதிகமான ஆன்ம ஆற்றல் பெற்ற ஞானிகளை அடக்கம் செய்த இடத்தைச் சுற்றிலும் பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு அவரது ஆன்ம அதிர்வுகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றி ஆன்ம ஒளி அதிர்வுகள் என்றென் றும் நிலைபெறச் செய்வதற்குக் கீழ்க்கண்ட முறையில் அடக்கம் செய்விக்கவேண்டும் எனச் சித்தர்கள் அறிவுறுத்தி வந்துள்ளனர்.
யோகி இறப்பதற்குமுன் சேகரிக்க வேண்டியவை:
ஒரு ஞானி அல்லது யோகி இயற்கை எய்துவதற்குமுன், உடல் சோர்வுற ஆரம்பிக் கும் காலகட்டத்திலிருந்து கீழுள்ள பொருட்கள் சேகரிக்கப்பட வேண்டுமென கூறுகின்றனர்.
1. வெள்ளைக் குங்குலிகத் தைலம். இக்குங்குலிகத்தை குழித்தைலமாக இறக்கும் முறையை போகர் பெருமான் சிறப்பாகக் கூறியுள்ளார்.
2. ஈனாத கெடரிப் பசுவுக்கு தினந் தோறும் அறுகம்புல்லைத் தீவனமாகக் கொடுத்து, அது போடும் சாணத்தைத் தரையில் படாதவாறு ஒரு செப்புத் தாம்பாளத்தில் பிடித்து உருண்டை திரட்டி, அதன் மேல்கீழாக ஒரு விரல்கடை அளவு ஓட்டையிட்டு வெயிலில் உலரவைக்க வேண்டும். இவ்வாறு 108 உருண்டைகளைச் செய்தபின், அவற்றை எடுத்து சாணியால் மெழுகப்பட்ட தரையில் நெல் சண்டுகள் பரப்பி, அதன்மீது பிரமிடுகள் போல அடுக்கவேண்டும்.
அந்த பிரமிடு மறையும் அளவுக்கு நெல்சண்டுகளைப் போட்டு மூடி, அதன் மேல் முனையில் பச்சைக் கற்பூரத்தை வைத்துத் தீ மூட்டினால், அது படிப்படியாகக் கசிந்து கங்காகி, அனைத்துச் சாண உருண்டைகளையும் சாம்பலாக்கிவிடும். இதை நன்றாகத் தூளாக்கி, திரிகையில் அரைத்துச் சலித்துத் திருநீறாக்கிக் கொள்ளவேண்டும்.
3. நன்றாக வளர்ந்த சீந்தில் கொடியை இலைத்தண்டு வேரோடு எடுத்து உலர்த்தி, அதனைப் பொடிசெய்து ஒரு மூட்டை அளவு சேகரிக்கவேண்டும்.
4. கடல் உப்பை ஏழுமுறை சுத்திசெய்தல் வேண்டும். சுத்தி செய்தல் என்றால், ஒரு மூட்டை உப்பை வாங்கி, அதனைப் பெரிய அண்டாக்களில் பாதியளவு போட்டு, அது நிறைய நீரூற்றி 48 மணிநேரம் ஊறவைத்தால், கசடுகள் அடியில் தங்கி தெளிந்த நீர் மேலே இருக்கும். அந்த தெளிந்த நீரை மற்றொரு பாத்திரத்தில் வடித்து, அதை அடுப்பேற்றி, அந்த நீரெல்லாம் ஆவியாகும்வரை விறகேற்றி எரிக்கவேண்டும். அப்பாத்திரத்தில் நீர் உலர்ந்து உப்பு மட்டும் மீதமிருக்கும். அது மிக பளபளப்பாகத் தோன்றும். பின் அது மூழ்குமளவு அப்பாத்திரம் முழுவதும் நீரூற்றி 48 மணிநேரம் வைத்திருந்தால், அதிலிருந்த கசடுகள் அப்பாத்திரத்தின் அடியில் தங்கும். அதன்மீது இருக்கும் தெளிந்த நீரை மற்றொரு பாத்திரத்தில் வடித்து, முன்பு கூறியதுபோல் அடுப்பில் வைத்து நீர் வற்றும்வரை எரித்தால், முன்பிருந்த உப்பைவிட மிகவும் பளபளப்பாகத் தோற்றமளிக்கும்.
இவ்வாறு ஏழுமுறை உப்பிலிருக்கும் கசடுகளை நீக்குவதற்கு சுத்திசெய்தல் என்று பெயர். இப்படி சுத்திசெய்த உப்பானது வைரம்போல் மின்னும். இவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
5. செஞ்சந்தனத் தூள். இது போகரின் காயகற்ப மருந்தில் பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான பொருளாகும். இந்த செஞ்சந்தனத் தூளை ஏழு படியளவு சேகரித்துக்கொள்ளவேண்டும் 6. 11 முதல் 13 இலைகள் இருக்கக்கூடிய வில்வ மரத்திற்கு மகா வில்வம் என்று பெயர். இம்மரத்திலிருந்து எடுக்கப்பட்ட வில்வ இலை, மரப்பட்டை, வேர் முதலியவற்றை சமபங்கு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
7. ஏழு படியளவு கருஞ்சீரகத்தை எடுத்து குழித்தைலம் இறக்கி எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஆதிகால அடக்கமுறையை வரும் இதழில் தெளிவுறக் காண்போம்...
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்