திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தன் பிறப்பிட வம்சாவளியினரான பட்டர் வீட்டிற்குச் செல்வது வழக்கம். கணவருடன் தாய்வீட்டிற்கு வரும் இருவரையும் பெரியாழ்வார் வழிவந்த வேதப்பிரான் பட்டர்கள் வரவேற்பார்கள். இந்த வைபவத்தின்போது ஆண்டாள், ரங்கமன்னார் இருவருக்கும் விருந்தாக, வெல்லப்பாகு சேர்த்த கொண்டைக் கடலைப் பருப்பையும் திரட்டுப்பாலையும் அளிப்பார்கள். வீட்டுத் திண்ணையில் பூசணிக்காயிலிருந்து நெல்லிக்காய் மற்றும் கரும்புக்கட்டு, பழவகை வரை அனைத்தையும் சீர்வரிசையாக பரப்பி வைப்பார்கள். இதனை பசைப்பரப்பு என்பர்.
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி நோன்பாக தைலக்காப்பு உற்சவம் நடைபெறும். நல்லெண்ணெய், பசும்பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் உட்பட அறுபத்தொரு வகை மூலிகைகள் சேர்த்து நாற்பது நாட்கள் காய்ச்சப்படும் தைலத்தை, ஆண்டாளுக்கு சமர்ப்பிப்பார்கள். பிறகு இந்தத் தைலத்தை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.
தினமும் இரவில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் வடை, தேன்குழல், அப்பம், புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் ஆகியன அரவணப் பிரசாதமாக நிவேதிக்கப்படுகின்றன.
பல சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் எழுந்தருளி யுள்ள ஆண்டாள் இடக்கையில் கிளியுடன் காட்சி தருகிறாள். ஒவ்வொரு நாளும் ஆண்டாளின் கையில் ஒரு புதுக்கிளி காட்சிதரும். வைணவத் திருத்தலங்களில் வேறெங்கும் காணமுடியாத தனிச் சிறப்பு பெற்ற இந்தக் கிளியை கல்யாணக் கிளி என்று போற்றுவர்.
இந்தக் கிளி ஆண்டாளுக்காக அரங்கனிடம் தூதுசென்ற கிளி. சுகப்பிரம்ம ரிஷியை கிளி ரூபத்தில் தூது அனுப்பினாள் ஆண்டாள். தூது சென்றுவந்த கிளியிடம், என்ன வரம் வேண்டுமென்று ஆண்டாள் கேட்க, இதே கிளி ரூபத்தில் தங்கள் கையில் என்றும் நான் இருக்க அருள்புரிய வேண்டுமென்று வேண்டினார்.
அன்றிலிருந்து ஆண்டாளின் இடக்கையில் சுகப் பிரம்மம் கிளியாகக் காட்சி கொடுக்கிறார்.
தூது சென்ற கிளியால் ஆண்டாளுக்கு அவள் விரும்பிய கணவன் கிடைத்ததால், இந்தக் கிளி கல்யாணக் கிளி என்று போற்றப்படுகிறது.
ஆண்டாளின் இடக்கையில் வீற்றிருக்கும் அழகிய இந்தக் கிளியானது தினமும் புதிதாக உருவாக்கப்பட்டு அணிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அணிவிக்கப்படும் இந்தக் கிளியை உருவாக்குவது தனிக்கலை. இதற்கென்றே ஒரு குடும்பத்தினர் இக்கோவிலின் அருகில் வசிக்கி றார்கள்.
தூய்மையான வாழைநார் மற்றும் மரவள்ளிக் கிழங்கின் இலைகளால் கல்யாணக் கிளியின் உடலும் முகமும் வடிவமைக்கப்படுகிறது. ஏழு இலை என்று சொல்லப்படும் மரவள்ளி இலை கிளியின் உடலுக்கும், இறகுகளுக்கு நந்தியாவட்டை இலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கிளியை உருவாக்க எடுத்துக்கொண்ட சிறிய மூங்கில் குச்சிகளை இலைகள் மறைகின்றன. உட்கார்ந்திருப்பதுபோல் காண்பிப்பதற்கு, நந்தியாவட்டைப் பூக்களே கிளியின் மெல்லிய கால்கள். இறகுகளுக்குப் பனையோலை. அதன்மேல் பச்சை இலைகள் சாற்றப்படுகின்றன. கிளியின் வால்பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள் உதவுகின்றன. கண்கள் பளிச்சிட காக்காய்ப்பொன் என்று சொல்லப்படும் பொருளைப் பயன்படுத்துவர். சிவப்புநிற மாதுளம்பூ கிளியின் அழகு மூக்காக உருமாறுகிறது. அழகு வாய்ந்த இக்கிளியைத் தயாரிக்க குறைந்தது நான்கு மணி நேரம் ஆகுமாம்.
தினமும் மாலைநேர பூஜையின்போது இந்தக் கிளி ஆண்டாளுக்கு அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விஸ்வரூப தரிசனத்திற்குமுன் இந்தக் கிளி எடுக்கப்படும். இதைப் பெறுவதற்கு கடும்போட்டி இருப்பதால் முன்பதிவு அவசியம் என்பர். வெளியூர் பக்தர்கள் இந்தக் கிளியை உடனே பெறமுடியாத நிலையின்போது, இதுபோன்ற கிளிகளைத் தயாரித்து, அங்கு பூஜைப்பொருட்கள் விற்கும் கடைகளில் விற்பனை செய்கிறார்கள். அந்தக் கிளியை வாங்கி அர்ச்சகரிடம் கொடுத்தால், அவர் ஆண்டாள் பாதங்களில் சமர்ப்பித்து பூஜைசெய்து கொடுப்பார். இதனை வீட்டில் வைத்துப் பூஜித்தால் திருமணத் தடை நீங்கும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும்; கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை நிலவும் என்பது நம்பிக்கை.
இக் கோவிலின் கருவறைக்கு முன்பாக அமைந்துள்ள அர்த்த மண்டபத்தில் ஜொலிக்கும் அரியணையில், சாய்ந்த கொண்டையுடனும் அழகிய கிளியுடனும் ஆண்டாள், செங்கோலேந்திய நிலையில் ரங்கமன்னார், கைகூப்பிய நிலையில் கருடாழ்வார் ஆகிய மூவரும் காட்சியளிக்கிறார்கள். இவ்வாறு மூவரும் ஒரே சந்நிதியில் தரிசனம் தருவது வேறெங் கும் காணக் கிடைக்காத அபூர்வ தரிசனம் என்று போற்றப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருகாலத்தில் ஆலமரங்கள் நிறைந்த காடாக இருந்தது. வேடர் குலத்தைச் சேர்ந்த வில்லி என்ற மன்னன் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, முட்புதரில் திருமால் சிலையையும் தங்கப் புதையலையும் கண்டெடுத்தான். அந்தப் புதையலைக் கொண்டு கோவிலைக் கட்டினான். அதில் திருமாலைப் பிரதிஷ்டை செய்தான். காட்டை சீர்செய்து புதிய நகரை உருவாக்கினான். அந்த நகரம் புதுவை என்றும் வில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டது.
வில்லிபுத்தூரில் திருமாலுக்குக் கைங்கரியம் செய்து வந்த விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார், தன் தவத்தின் பயனால் கோவில் அருகிலுள்ள துளசி வனத்தில் ஒரு பெண்குழந்தையைக் கண்டெடுத்தார். அதைத் தன் குழந்தையாக வளர்த்து வந்தார். அவளே ஆண்டாள்.
சிறுவயதிலேயே கண்ணன்மேல் காதல்கொண்ட ஆண்டாள், அவனை மணப்பதற்காக மார்கழி மாதம் முழுக்க நோன்பிருந்தாள். இதனை பாவைநோன்பு என்பர்.
ஆண்டாள் தன் முக அழகு பார்த்த தட்டொளி, இத்திருக்கோவிலின் கருவறையின் அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் எதிரே, உற்சவ மூர்த்திகளுக்கு நேரெதிராக மணிமண்டபத்தில் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. கன்னிப்பெண்கள் இதனை வணங்கினால் வேண்டியது நிறைவேறும். மேலும், இக்கோவிலின் அருகிலுள்ள கண்ணாடி கிணறும் மிகவும் புகழ் பெற்றது. திருமணமாகாத பெண்கள் இந்த கிணற்று நீரில் தங்கள் முக அழகைப் பார்த்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. மேலும் ஆண்டாள் அவதரித்த துளசி வனத்திலுள்ள மண்ணை யெடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டால் அனைத்துத் தடைகளும் நீங்கும் என்பர். புகழ்பெற்ற கல்யாணக் கிளியைப் பிரசாதமாகப் பெற்று, வீட்டில் பூஜையறையில் வைத்து வழிபட, சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.