மனித வள மேம்பாடு' என்னும் வரியை நன்றாக கவனிப்போம். இதன் பொருள் மனித மேம்பாடு அல்ல. உண்மையில், அபாரமான மாபெரும் சக்தி நம்மிடம் உள்ளது. நமக்குள் ஏற்கெனவே இருக்கும் வளத்தின் மேம்பாடு, வளர்ச்சி என்பதுதான் இதன் ஆழ்ந்த கருத்து.
அன்பு, அறிவு, திறமை, பொறுமை, கருணை, வீரம் என்று இன்னும் பல வளங்கள் நம்முள் இருக்கின்றன. இவற்றின் வளர்ச்சியை நாம் நன்றாக கவனித்து மேம்படுத்திக் கொண்டோம் எனில், அதுதான் மனிதவள மேம்பாடு.
நம் உடலும், மனமும், சக்தியும் எந்த அளவு ஒன்றாக இணைந்து செயல்படு கின்றன என்பதைப் பொருத்துதான் நம் ஒவ்வொருவராலும் என்னென்ன செய்யமுடியும் என்பதைத் தீர்மானிக்க முடியும். உடல், மனம், சக்தி ஒன்றாக இணையாவிடில் எவ்வளவு நேரம் கிடைத்தாலும் வெற்றியாக செயலாற்ற முடியாது. இங்கே நேரம் என்று சொல்வது மணிக்கணக்கை மட்டுமல்ல; நம் வாழ்நாளையும்தான்.
இந்த வளர்ச்சியை ஒரு விஞ்ஞானமாகத் தான்- நடைமுறை வாழ்க்கையாகத்தான் நாம் பார்க்கவேண்டும். இது ஒரு வரைமுறையோ, சட்டதிட்டமோ அல்ல.
பெரிய சாதனைகள்தான் வாழ்க்கையின் வெற்றி என்பதில்லை. சாதனை செய்தவர் தான் உயர்ந்தவர்- நல்லவர்- திறமைசா- என்பதும் இல்லை. அந்த சாதனை செய்தவர் அந்த செயலினால் எவ்வளவு ஆனந்தமடைந்தார் என்பதன் அடிப்படை யில்தான் அதை மதிப்பிடவேண்டும்.
ஒரு செயலைச் செய்யும்பொழுதும், முடித்தபின்பும் நம்முள் நிறைவு, நிம்மதி, ஆனந்தம் நிலைக்கவேண்டும் என்றால், அந்த செயலை நாம் எந்த மனநிலையில் செய்யவேண்டுமென பார்ப்போம்.
ஞானி புத்தரிடம் அவரது சீடர் ஒருவர், "எதையும் புரிந்துகொண்டு பின்பற்றுவது நல்லதா? பின்பற்றிப் புரிந்துகொள்வது சிறந்ததா?'' என்று கேட்டார்.
நேரடியாக பதில் சொல்லாமல் புத்தர் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்.
"கங்கையாற்றில் புனித நீராடுவதற்காக ஒருவர் வந்தார். குளித்து முடித்ததும் கங்கை நீரை எடுத்துச்செல்ல கையில் செப்புக் குவளை ஒன்று கொண்டுவந்திருந்தார்.
ஆற்றில் குளிக்கச் செல்லும் முன்னர் குவளையைப் பாதுகாக்க, மணலை ஆழமாய்த் தோண்டிப் புதைத்தார். புதைத்த இடம் தெரியவேண்டுமென, அடையாளத் திற்காக மணலை கோபுரம்போல் குவித்து, குச்சி ஒன்றையும் அதன்மேல் செருகி வைத்துவிட்டு குளிக்கச் சென்றார்.
குளித்து முடித்து கரையேறி வந்தவருக்கு அதிர்ச்சி! ஏன்? திரும்பிய பக்கமெல்லாம் மணல் குவியல். ஒவ்வொன்றின் மீதும் குச்சி.
நடந்தது இதுதான்! கங்கையில் இறங்கிக் குளிக்கும்முன் இவ்வாறு செய்வதை ஒரு சடங்கென நினைத்து, அடுத்தடுத்து வந்தவர்கள் செய்த செயல் இது!
புரிந்துகொள்ளாமல் பின்பற்றும் அவ்வளவும் இப்படி அர்த்தமில்லாத சடங்காய்தான் மாறும். ஆனால், ஒன்றைப் புரிந்துகொண்டுவிட்டாலோ, பின்பற்றுதல் என்பது தானே வரும். இப்பொழுது நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். புரிந்து கொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்துகொள்வதா?'' என்று கூறி முடித்தார்.
புரிந்துகொள்ள முயற்சி, சிந்தனை, அறிவு தேவை. பின்பற்ற இவை எதுவுமே தேவையில்லை. முன்னால் செயல்படு பவரைப் பார்த்தால் போதும். பின்பற்று கிறமோ, இல்லையோ- முதலில் புரிந்து கொள்ளத் தொடங்குவோம். முடிந்தால் பின்பற்றுவோம். இல்லையென்றால் விட்டுவிடுவோம். அல்லது புரிந்துகொள்ள மறுபடி முயற்சி செய்வோம்.
நம்முடைய செயல்திறமையை இரண்டு வகையாகச் சொல்லலாம்.
முதலாவது கடின உழைப்பு, அறிவு, திறமை, அனுபவம், கற்றுக்கொள்ளும் ஆசை, விடாமுயற்சியோடு கற்றுக்கொள்வது, புதுமைகளை விரும்பி உட்புகுத்துவது போன்றவை.
இரண்டாவது பொறுப்பு, உண்மை, செயல்படுத் தும் தைரியம், சேவை மனம் போன்றவை. இவற்றில் எது எளிதானது? எது ஆரோக்கியமானது என்று வினா எழுப்பினால், இரண்டுமே என்பதுதான் பதிலாக இருக்கமுடியும். பொறுப்பில்லாமல் உழைப்பு வராது. உண்மையில்லாமல் திறமை, அனுபவம் கிடையாது.
ஒரு செயல் நடக்க, ஏன் துவங்கவே தெளிவான மனம் அவசியம். மன அழுத்தம் இருக்கும்பட்சத்தில் எந்த செயலும் நடக்காது.
எதிலும் அவசரமும் பதட்டமும் இல்லையென்றால், மனமும் எண்ணங்களும் தெளிவாக இருக்கும். செயலும் துரிதமாக நடைபெறும். ஒரு அலுவலகத்தில், லட்சுமி என்னும் பணியாளர் அமைதியாகத் தானுண்டு, தன் வேலையுண்டு என்று பணிபுரிபவர். அன்னம் மாளோ அதிரடி, அடாவடி சுபாவம் கொண்டவர். அலுவலகத்தில் பெரும் பான்மையோர் விரும்பி ஆதரவு தருவது லட்சுமிக்கே.
லட்சுமியைப் பார்த் தாலே அன்னத்தின் ரத்தக் கொதிப்பு ஏறி விடுகிறது. லட்சுமி, அன்னம்மாவை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அவரின் நினைவே, இருப்பே அன்னம்மாவின் நிம்மதி யைக் கெடுகிறது. மன உளைச்சல். ஏனிந்த நிலை?
அடுத்தவரை அப்படியே அவர்களாகவே ஏற்றுக்கொள்வோம். அவர்கள் உணர்வுகளை மதிப்போம். நல்லவை எனில், நாமும் கடைப் பிடித்து மகிழ்வோம். நல்லவையாக யோசித் தால், நல்ல எண்ணங்களே உருவாகும். அவை தான் நம் செயலாக, நம் வார்த்தைகளாக வெளிப்படும்.
அமைதியைத் தேடி கோவிலுக்குப் போகிறோம். ஒரு முழு நாளும் கோவிலில் இருந்துவிட்டு, மீண்டும் நம் இருப்பிடம் வந்த சில மணி நேரங்களில் அல்லது ஓரிரு நாட்களில் மீண்டும் மனம் அமைதியை இழக்கிறது. அமைதியைத்தேடி கோவில் சென்றுவந்த பிறகும் ஏனிந்த நிலை எனில், கோவில் அமைதியாக இருப்பதாகத்தான் அர்த்தமே தவிர, நாம் அமைதியாக இருப்ப தாக அர்த்தமல்ல. இரைச்சல் மிகுந்த இயந்திரங் கள் ஓடும் இடத்தின் நடுவிலும் அமைதி யாக இருக்க முடியுமெனில் மட்டுமே அந்த அமைதி நம்முடையது என்று அர்த்தம்!
அமைதி என்பது வாழ்வின் கடைசி நிலையல்ல. அதுதான் வாழ்வின் ஆரம்பம். "அதிக அன்பு செலுத்துகிறேன்; மிகவும் அன்பாக இருக்கிறேன்' என்று சொல்கி றோம். அன்பு என்பது விலைபொருளல்ல- அளவீடு குறிக்க! அன்பு ஒரு அனுபவம். அன்பு ஒரு தன்மை. தானாகப் பிரவாகம் எடுப்பது! அன்பை அனுபவிக்கும்பொழுது, அன்பு நிகழ அனுமதிக்கும்பொழுது நாம் மிக அற்புதமான மனிதராகிறோம்.
நல்லவரோடு நட்பும், துன்பத்தைக் கண்டால் இரக்கமும், நல்ல விஷயத்தில் மகிழ் வும், தீய விஷயங்களில் அலட்சியமும் கொள்ள வேண்டும். இந்த மனப் பான்மை மனதிற்கு மகிழ்ச்சி தரும்.
ஒரு மனிதர் நமக்குத் தீங்கு செய்கிறார் என்று கொள்வோம். நாம் அதற்கு "அவர் நாண நன்னயம்' செய்கிறோம் எனில் நஷ்டமா என்ன? நமக்கு மன அடக்கம், கோபத் தின் தீங்கில்லாமை போன்ற லாபங்கள்தானே கிடைக்கின்றன?
வெறுப்பையும், கோபத்தையும் நாம் விலக்க விலக்க, நமக்கு நிறைய நன்மைகள் உண்டாகின்றன என்பதே உண்மை. வண்ண வண்ணக் கண்ணாடி அணிந்துகொண்டு பலரது வாழ்க்கையைப் பார்க்கிறோம். வாழ்க்கையின் நிறமே அதுதான் என்று தவறாக நினைத்து சோர்ந்துபோய்விடுகி றோம். நிறுத்தி நிதானமாக ஒவ்வொருவரும் அவரவர் மனதைப் பார்ப்போம்.
=அதில் கோபம் தென்படின்லி கோபத் துடன் செயல்கள் செய்வதைத் தவிர்ப்போம்.
=அதில் பயம் இருப்பின்- அந்த பயத்தை மெதுவாக வெளியே நகர்த்துவோம்.
=அதில் பொறாமை இருப்பின்-
பொறாமையைப் பூண்டோடு அழிப்போம்.
தியானம், யோகப் பயிற்சிகள், ஆழ்ந்த இறையன்பு கொண்டு, நிதானத்துடனும் பொறுமையுடனும் சிந்தித்துச் செயல்பட்டு, எந்த வண்ணமுமின்றி வாழ்க்கையை இயல் பாகப் பார்த்தவர்களும், பார்த்துக்கொண்டி ருப்பவர்களும் பலர் இருக்கிறார்கள்.
ஒருவர் கையை உயர்த்தி சண்டைக்கு வந்தால், "நான் இருமடங்கு சக்தியுடன் கைகளை உயர்த்திக்கொண்டு வருவேன்.
ஆனால், அமர்ந்து பேசுவோம்' என்று கையை உயர்த்தியவரிடம் சொன்னால், எங்கே நாம் வேறுபடுகிறோம் என்று அறியலாம். இந்த இடத்தில், வேறுபாட்டைவிட, ஒற்றுமை அதிகமாக இருப்பதைக் காணலாம்.
செயல்களைக் கொண்டாட்டமாக (ஆர்ப்பாட்டமாக அல்ல) செய்து பார்ப் போம். ஆனந்தத்தின் ஒரு வெளிப்பாடாக செயலாற்றிப் பார்ப்போம். களைப்பு தெரியாது; குறைகள் இருக்காது.
நாம் தினமும் சில எளிய யோகாசனப் பயிற்சிகளையும், தியானத்தையும் முறையாகச் செய்துவந்தால், நம்மில் பல தொந்தரவு கள் விலகிச் செல்வதை உணரமுடியும். நாம் இவற்றை மிகவும் அக்கறையோடும், முழு கவனத்துடனும், ஈடுபாட்டுடனும் செய்வதால் எதிர்மறைகள் விலகிப்போகின்றன.
விளைவு சரியாக இருக்கவேண்டுமென் றால் அதற்கான செயலும் சரியாக இருக்க வேண்டும். நல்ல பயிர் விளைய நல்லவிதை ஊன்றுதல், உரம், உழுதல் என்னும் அதன் தொடர்பான அனைத்து செயல்களும் முழு ஈடுபாட்டுடன் நடக்கவேண்டும். அன்றி நற்பயிரை மட்டுமே நினைத்துக்கொண்டி ருந்தால், நற்பயிர் எங்ஙனம் கிடைக்கும்?
எனவே வாழ்க்கை என்பது நம் செயல்பாடு களைச் சார்ந்துதான் இருக்கிறது. உடல், மனம், சக்தி ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்தும் பொழுதுதான் வாழ்க்கை உறுதியாக ஊன்றி நிற்கும்.
இறைவனின் திருவடிகளை உண்மை யான அன்பு, உறுதியான நம்பிக்கையு டன் பற்றிக்கொண்டால், வாழ்க்கை நம்மை வருத்தி சோதனைகளைக் கொடுத்து வீழ்த்தினாலும்கூட உயிர்த்தெழும் வாய்ப்புண்டு.
சோர்ந்து விழும்போதே, விழித்து நிமிர்ந் தெழுவோம் என்னும் நம்பிக்கையுடன் பார்த் தால், நம்மிடமுள்ள மாபெரும் சக்தியை உணர்வோம்.
இறைவனின் நாமத்தை சிந்தித்திருப் பாருக்குத் துன்பமும் துயரும் நிச்சயம் நீங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
"வீழ்ந்தெழலாம் விகிர்தன் திருநாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவர்க்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடையோனே.'
-திருமந்திரம்