காபாரதப் போர் முடிந்துவிட்ட நிலையில் பாண்டவர்கள் வெற்றிக்களிப்பில் இருந்தனர். பிதாமகர் பீஷ்மர், அர்ஜுனன் அமைத்துக்கொடுத்த அம்புப் படுக்கையில் படுத்தவண்ணம், உத்தராயண புண்ணிய காலம் (தை முதல் ஆனி மாதம்வரை) வரும்வரை உயிரை விடாமல் காத்திருந்தார்.

அப்போது வேதவியாசர் தர்மரைப் பார்த்து, "சகல சாஸ்திரங்களையும் முழுமையாகக் கற்றறிந்த பீஷ்மரிடம் உபதேசம் பெறுக'' என்று கூறினார். அதன்படியே தர்மர் பீஷ்மரிடம், "உலகில் சிறந்த தர்மம் எது?'' என்று வினவ, பீஷ்மர், "பரம்பொருளான இறைவனை (நாராயணன்) பக்தியுடன் பூஜைசெய்வது, இறைநாமத்தைப் பாடுவதுதான் எல்லா தர்மங்களிலும் சிறந்தது'' என்று கூறினார். இதுபோன்று மேலும் சில கேள்விகளை தர்மர் கேட்க, பீஷ்மர் எல்லாவற்றுக்கும் தக்க பதில் கூறினார்.

கிருத யுகத்தில் தவமும், திரேதா யுகத்தில் ஆத்ம ஞானமும், துவாபர யுகத்தில் வேள்விகளும் (யாகம்) என விதிக்கப்பட்டிருந்தன. தற்போதைய கலியுகத்திற்கு இறைநாமத்தைப் பாடுதல், பூஜைகள் செய்தல், தானம் செய்தல் போன்றவை சிறந்தவை என முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துள்ளனர். முந்தைய யுகங்களில் முக்தியை அடைவது சற்று கடினமான உபாயமாக இருந்தது. கலியுகத்தில் அனுஷ்டிப்பதற்கும் பலனைப் பெறவும் எளிதான பக்தியோகம் முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் தனது வாழ்க்கை நன்றாக அமையவேண்டு மென்று எண்ணினால், அவன் தனக்கு விதிக்கப் பட்ட கர்மாக்களை சரிவர செய்வதுடன் ஈச்வர பக்தியை வளர்த் துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அதற்குரிய முழுப்பலன் கிட்டுமென்பது முன்னோர்களின் வாக்கு. எனவே பகவதாராதனை என்பது முக்கியமான ஒன்றாகும். இதனால் செய்த பாவங்கள் ஓரளவு குறையும்.

Advertisment

"யதாக்னி ஸுஸம் ருத்தார்சி

கரோத்யேதாம்ஸி பஸ்மஸாத்

ததா மத்விஷயா பக்திருத்த

Advertisment

வைனாம்ஸி க்ருத்ஸ்சினச.'

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஸ்ரீமத் பாகவதத்தில் உத்தவருக்கு உபதேசம் செய்தபோது, "எரிகின்ற நெருப்பில் விறகுகள் எவ்வாறு முழுமையாக சாம்பலாகிறதோ, அவ்வாறே என்னிடம் பக்தி வைத்திருந்தால் பாவங்கள் அழிந்துவிடும்' எனக் கூறியுள்ளார். நம் முன்னோர்கள், "இறைவன் சிந்தனை எப்பொழுதும் மனதில் நிலைத்திருக்க வேண்டும்; ஒரு கணம்கூட அவன் நினைவிலிருந்து விலகக்கூடாது' என்று அறிவுறுத்தினார் கள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர், "நமச்சிவாய வாஅழ்க; நாதன் தாள் வாழ்க; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்...' என பாடியுள்ளார்.

dd

அது இன்றைய சூழ்நிலையில் சற்று கடினமாக இருக்கலாம். குறைந்தது தினமும் காலை எழுந்தவுடனும், இரவு உறங்கும் நேரத்திலும் சற்றுநேரம் பகவத் தியானத்தைச் செய்யவேண்டும். மனதில் இறைநாமத்தை உச்சரித்தாலே போதுமானது. இறைவனைக் காட்டிலும் அவனது திருநாமத்திற்குதான் அதிக முக்கியத்துவம் உண்டு.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், "நீ நாம ரூப முலகு நித்ய ஜெய மங்கலம்' என்று பாடியுள்ளார். பஜகோவிந்தம் ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர், "கேயம் கீதா நாம சஹஸ்ரம்' என்று கூறியுள்ளார். பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார், "நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்; நாராயணா எனும் நாமம்' என்று பாடியுள்ளார். இதற்கு ஒருபடி மேலாக புரந்தரதாசர், "உன் நாமபலம் ஒன்றே எனக்குப் போதும்' என்று இறைநாமத்தின் மகிமையைப் போற்றுகிறார். அவரவர் விரும்பி வணங்கும் தெய்வம் அவரவரின் இதயத்தில்தான் உள்ளது. இந்த தெய்வத்தை பிம்பத்திலோ படத்திலோ எந்திரத்திலோ ஆவாஹனம் செய்து (நிலைபெறச் செய்து) அதில் தினமும் மனதார ஈடுபட்டுப் பூஜைசெய்வதே ஆத்மபூஜையின் ஒரு அங்கமாகும்.

கலியுகத்தில் காலத்தின் கட்டாயத்தாலும், இயந்திரமயமான வாழ்க்கை முறையாலும் சாஸ்திரரீதியாக சரியான வழிபாட்டுமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாவிடினும், முடிந்த அளவுக்கு இறைநாமங்களை ஜெபித்தால் அதற்குத் தகுந்த பயனுண்டு. அதேபோன்று மாதந்தோறும் ஏகாதசி விரதம், பிரதோஷ விரதம், சஷ்டி விரதம் போன்றவற்றை நம் முன்னோர்கள் அனுஷ்டித்து வந்ததை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

எல்லா விரதங்களிலும் முக்கியமானது ஏகாதசி விரதம். இது மாதத்திற்கு இருமுறை (வளர்பிறை, தேய்பிறையில்) வருகிறது. ஏகாதசிக்கு முதல்நாள் தசமி திதியன்று பகலில் ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாகப் பட்டினி இருந்து, இரவு முழுவதும் உறங் காமல் இறை நாமத்தை ஜெபித்து, மறுநாள் துவாதசியன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு புளியற்ற உணவையும், சுண்டைக்காய், நெல்லிக்காய், அகத்திக் கீரை ஆகியவற்றையும் சமைத்து இறைவனுக்குப் படைத்தபிறகு உணவருந்துவது நம் மரபு. இதைத்தான் நம் முன்னோர்கள் செய்துவந்தனர். இன்றைய சூழ்நிலையில் இப்படி கடுமையான விரதமிருப்பது முடியாத ஒன்றாகும். காலத்திற்கேற்ப ஏகாதசியன்று மட்டும் விரதமிருக்கலாம். முடிந்தவரை நாராயணனின் திருநாமத்தை ஜெபிக்கலாம். இது அவரவர் மனதிற்கேற்ற வண்ணம்- சூழ்நிலைக்கேற்ற வண்ணம் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

நித்தியபூஜை செய்வது அவசியமான கடமையாகும். குளித்துவிட்டு, நெற்றியில் விபூதி, நாமம் போன்றவற்றை இட்டுக்கொண்டு தான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும். ஒற்றை வேட்டியுடன் பூஜை செய்யக்கூடாது. இடுப்பில் மேலும் ஒரு வஸ்திரம் இருக்க வேண்டும். ஆத்மபூஜையில் வெறும் தரையில் அமராமல், பலகை, கம்பளி, மான்தோல், புலித்தோல் போன்றவற்றின்மீது அமர்ந்து, கிழக்கு முகமாக தெய்வப் படத்தை வைத்து, பூஜைசெய்பவர்கள் வடக்குநோக்கி அமர்ந்து பூஜைசெய்ய வேண்டும். பொதுவாக 16 வகையான (ஷோடச) உபசாரங்கள் பூஜையில் உண்டு. அதில் வரும் சத்ரம், சாமரம், ஆபரணம் முதலிய ராஜ உபசாரங்களுக்கு மாற்றாக அட்சதையைப் பயன்படுத்தலாம்.

எந்தவொரு பூஜையைச் செய்யும் முன்பும், எல்லா சுப காரியங்களைச் செய்யும் முன்பும் கணபதிபூஜை செய்துவிட்டுதான் பிறகு அந்தந்த தேவதைகளுக்குரிய பூஜைகளைச் செய்யவேண்டும். இதற்கு முன்பு குருவையும், குலதெய்வத்தையும் நினைத்து அவர்களை வணங்கிவிட்டுச் செய்தால் சிறப்பாக இருக்கும்.

அரைத்த சந்தனம், மலர்கள், தூபம், தீபம், நிவேதனம் ஆகிய ஐந்தும் பூஜைக்கு அவசியமானவையாகும். அட்சதையானது- முறியாத முழு அரிசியில் நெய், மஞ்சள் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். வாடாமல்-, காகிதப்பூ, கனகாம்பரம், கேந்தி (காட்டு சாமந்தி) போன்ற வாசனையற்ற மலர்களைப் பூஜைக்கும், மாலை அணிவிக்கவும் பயன் படுத்தக்கூடாது. அதேபோன்று அர்ச்சனை யின்போதும், மாலையாக சாற்றும்போதும் மலர்களின் இதழ்களைக் கிள்ளி உபயோகப் படுத்தாமல் முழுமையாக உபயோகப்படுத்த வேண்டும். மலராத மொட்டுகள் பூஜைக்கு உகந்தவையல்ல.

பூஜைக்கு உபயோகப்படுத்தும் குத்து விளக்கு, தூபக்கால், தீபக்கால், பஞ்சபாத்திரம் முதலியவற்றைப் பயன்படுத்தும்போது, அவை இரும்பு, எவர்சில்வர் போன்றவையாக இருக்கக்கூடாது. அதேபோன்று நிவேதனப் பாத்திரங்கள் எவர்சில்வர், பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆனவையாக இருக்கக்கூடாது. வெள்ளி, தாமிரம், பித்தளை, வெண்கலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

அவரவருக்கு விதித்த நித்திய கர்மாக்களைச் செய்வதுடன், முறையாக பூஜை, விரதம் போன்றவற்றை மேற்கொண்டால் வாழ்க்கை சீராக அமைவதுடன், அதற்குரிய பலன் கிட்டும். மேற்கூறிய பூஜைகள், விரதங்களை பெரியோர்கள் வாயிலாகவும், வேத விற்பன்னர் கள், பண்டிதர்கள் வாயிலாகவும், குருவின் வாயிலாகவும் அறிந்துகொண்டு அதன்படி செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் நம் குடும்பத்தில் நன்மையும், ஐஸ்வர்யமும், சற்புத்திரர்களும், நோயற்ற அமைதியான வாழ்வும், தீர்க்காயுளும், நல்ல குணங்களும், மன அமைதியும் நிச்சயம் கைகூடும்.

நம்முடைய வாழ்க்கையை பகவத் சேவை யில் முழுமையாக ஈடுபடுத்தினால் அதற்கு அபார பயனுண்டு. நம் ஒவ்வொருவருடைய இந்திரியங்களையும் பகவத் சேவைக்குப் பயன்படுத்தவேண்டுமென முன்னோர்கள் கூறியுள்ளனர். அதன்படி நாவால் இறைவன் பெயரை உச்சரிக்கவேண்டும். கண்களால் இறைவனின் சந்நிதியையும், மகான்களையும் தரிசிக்கவேண்டும். காதுகளால் இறைவனின் பாடல்களைக் கேட்கவேண்டும். கைகளால் இறைவனுக்குப் பூஜைசெய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு இந்திரியங்களையும் பகவான் சேவைக்கு அர்ப்பணிக்கவேண்டும்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் புண்ணியமும் பாவமும் உண்டு என்பதை உணர்ந்தாலே பாவம்செய்ய மனம் வராது. இந்தப் பிறவியில் செய்யும் புண்ணிய- பாவங்களுக்கேற்ப அடுத்த பிறவியில் வாழ்க்கை அமையுமென்பதை நம் சாஸ்திரங்கள் வாயிலாக அறியலாம். இறைவன்மீதான நம்பிக்கையும் பக்தியும் வளரவளர மனிதன் புனிதனாகவிடுவான். குருவின் உபதேசத்தால் ஆத்மஞானம் பெற்று மோட்சமென்னும் பதவியை அடைவான். இன்றைய சூழ்நிலையில் இறைநம்பிக்கைதான் நம்மைக் காப்பாற்றும்.