4

இரண்டாம் பாகம்

மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!

அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்

Advertisment

"ஸ்ரீராகவேந்திர விஜயம்' என்னும் இந்த மகாதிவ்ய சரிதத்தில், நம் ஜகத்குரு ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் மூலராமர் பூஜை செய்கின்ற நிகழ்வுகள் அநேகம் இடையிடையே வந்துகொண்டேயிருக்கும். மகாஉன்னதமான, மகாபவித்ரமான, சக்தி வாய்ந்த ஸ்ரீமூலராமரைப் பற்றி அறிந்துகொண்டால், இன்றளவும் மந்த்ராலயத்தில் ஸ்ரீராகவேந்திரர் நிகழ்த்தும் அற்புதங்களுக்கு ஸ்ரீமூலராமர் பூஜையின் சக்தி எத்தகையது என்பது விளங்கும்.

சத்திய லோகம். நான்முகக் கடவுள் பிரம்மதேவர் ஸ்ரீமன் நாராயணன்மீது கொண்ட பக்திப் பிரேமையினால் விஸ்வ கர்மாவை அழைத்து, சீதா சமேத ஸ்ரீராமர் விக்ரகம் செய்ய ஆணையிட, அவ்வாறே அவர் பொலிவுடன்கூடிய தெய்வாம்ச விக்ரகம் வடித்துத் தர, அதைப் பெற்று பக்தியுடன் பூஜிக்கலானார்.

பின்னர் பிரம்மதேவன் அந்த ராமர் விக்ரகத்தை ஜாபாலி முனிவரின் பக்திக்கு மெச்சி அவருக்கு வழங்கினார். ஜாபாலியும் இடைவிடாது பக்தியுடன் ஸ்ரீராமவிக்ரகப் பூஜையினைச் செய்யலானார்.

Advertisment

அயோத்தி மாநகரம். கோசலை மைந்தன் ஸ்ரீராமனின் ஆட்சியில், தினசரி சபா மண்டபத்தில் ராமரை நேரில் தரிசித்த பின்னரே உணவுண்ணும் பவித்ரமான பழக்கத்தைக்கொண்ட பிராமணப் பெரியவர் இருந்தார். பல ஆண்டுகளாக அதைப் பின்பற்றுபவர். அருகிலிருக்கும் நாட்டிற்கு அரசுப்பயணமாய் ராமர் சென்றுவிட்டாலும், அவர் எத்தனை நாள் கழித்து வந்தாலும் தரிசனம் காணும்வரை துளி தீர்த்தம்கூட அருந்தாது உபவாசம் தொடரும் முரட்டு பக்தியில் வழுவாதிருந்தார். அதுபோன்று சில நாள் கழித்து வந்த ஸ்ரீராமர் இரவு இளவல் லட்சுமணனை அழைத்தார். ""தம்பி லட்சுமணா, ஏனோ என் மனம் கலக்கமாக இருக்கிறது. நம் குடிமக்களுக்கு ஏதேனும் குறையிருக்குமோ என்று தோன்றுகிறது.''

""தாங்கள் சத்தியம் தவறாது உத்தமமான ஆட்சியல்லவா நடத்துகிறீர்கள் அண்ணா.

கலங்க வேண்டாம் என்பது என் தாழ்மை யான கருத்து.''

""இல்லையப்பா. எதற்கும் இன்றிரவு நீ நகர்வலம் சென்று சோதித்து வருவாய்.''v ""உத்தரவு அண்ணா.''

சகல வளங்களுக்கும் சௌபாக்கியத்துக்கும் குறைவில்லாத ராமபூமியான அயோத்தி இரவில் அழகான அமைதியுடனிருந்தது. நகர்வலம் முடிக்கலாம் என்றிருந்தபோது ஒரு குடிசை வீட்டிலிருந்து மட்டும் சிறு அழுகையுடன்கூடிய கேவல் எழுந்தது. லட்சுமணன் அங்கு கண்ணுற, இரு வயதான தம்பதியின் சம்பாஷணையைக் கேட்க முடிந்தது.

""நீங்கள் செய்வது உங்களுக்கே நியாயமா? இந்த வயோதிகத்தில் உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் நானல்லவா அனாதையாவேன்'' என்றாள் அந்தப் பெண்மணி.

""என் ராமனிருக்க குடிமக்கள் யாரும் அனாதையில்லை அம்மணி'' என்றார் அப்பெரியவர்.v ""அதுதான் மன்னர் ராமர் அரண்மனை திரும்பியிருக்கிறாரே. தாங்கள் உபவாசம் முடித்துக்கொள்ளலாமே'' என்றாள் அவரின் வயதான மனைவி. ""இன்றோடு ஏழு நாட்களாயிற்று தாங்கள் உணவருந்தி'' என்றவள் கண்கலங்கினாள்.

""நாளை சபாமண்டபத்தில் ராமரைக் கண்டபிறகே நான் உணவெடுப்பேன். அதில் மாற்றமில்லை'' என்றார் ஈனக்குரலில்.

நெகிழ்ந்துபோன இளவல் லட்சுமணன், ஸ்ரீராமனின் நுட்பமான உணர்வை எண்ணி வியப்படைந்தான். குடிமகன் எங்கோ வேதனைப்படுவதை மனோரீதியாக உணரும் அவரின் வியத்தகு சக்தியும் அன்பும் ஆச்சரியப்படுத்த, நடந்ததை மன்னர் ராமனுக்கு எடுத்துரைக்க, அந்தப் பெரியவர் சகல மரியாதையுடன் சபாமண்டபத்திற்கு அழைக்கப்பட்டு, பாதபூஜை செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தசரத ராமன் பேசலானார்.

""பெரியவரே. என் மக்கள் என்மீது கொண்ட அன்புக்கு தலைவணங்குகிறேன். இருப்பினும் இந்த முரட்டு பக்தியால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் அது என்னையல்லவா பெருமளவில் பாதிக்கும். எனவே உங்கள் தள்ளாத வயதில் கடினமான இந்த சங்கல்பத்தைக் கைவிடுங்கள்.''

""மன்னியுங்கள் ராமா. தங்களது தந்தை தசரத மகாராஜாவுடன் நீங்கள் சபாமண்டபம் வரும் அக்காலத்திலேயே தங்களைக் கண்ணுற்றவன். கானகம் சென்று திரும்பிய தங்களை என்று அயோத்தி மன்னனாகக் கண்டேனோ அதிலிருந்து இது தொடர்கிறது.''

""இருப்பினும் எனக்காகவேனும் இதைக் கைவிடலாமே.''

""மன்னிக்கவேண்டும். அதைவிட ஜீவனை விடச்சொல்லுங்கள்.'' ராமரின் சமாதானம் ஏதும் எடுபடவில்லை. உடனே ஜாபாலி முனிவர் அழைக்கப்பட்டார்.

""ஆஹா... ஸ்ரீராமரே அழைத்து தரிசனம் தருவது... நான் பெரும் பாக்கியசாலி. ஸ்வாமி, என்னால் ஏதேனும் இடர்ப்பாடோ'' என்றார் சபா மண்டபம் வந்த ஜாபாலி.

""ஓர் உதவி உம்மால் ஆகவேண்டியுள்ளது.''

""ஸ்வாமி, இதென்ன அபச்சாரம்... கட்டளை இடுங்கள்.''

""நீர் பூஜிக்கும் மூலராமர் விக்ரகத்தை இந்தப் பெரியவர் வசம் ஒப்படைக்கவேண்டும்.''

""ஸ்ரீராமரே. இது நியாயமா. அதைவிட என் ஆவியைப்போக்க ஆணையிட்டால் மகிழ்வுடன் தலைவணங்கி மேற்கொள்வேன்.

என்னால் என் மூலராமனைப் பிரிய இயலாது. தினசரி மூலராம தரிசனம் கண்டே நான்...''

""சரி. இனி நீர் தினசரி என் சபாமண்டபத்திலே இருந்து தரிசிக்கலாம்'' என சமாதானம் செய்து, மூலராம விக்ரகத்தை இடம் மாற்றினார்.

முன்பு ஸ்ரீராமன் தனது பத்தினியுடன் கானகம் செல்கையில் அயோத்தியே திரண்டு அவருடன் சென்றது. அப்போது மக்களிடம் பலவிதமான சமாதானங்கள் கூறி, "நான் அரசாட்சியேற்று உங்களை எல்லாம் பிரியும் படியான சந்தர்ப்பம் ஏற்படின் உங்கள் அனைவரையும் என்னோடு அழைத்துச் செல்வேன்' என்று வாக்குறுதி தந்திருந்தார். அதன்படிக்கு அவரின் அவதார காலம் முடிவுற, அவர் சரயு நதியில் தன்னைக் கரைத்து, ஜீவனுடன் மேலுலகிற்கு அவரை அழைத்துச்செல்ல புஷ்பக விமானம் வந்தது. தன்னுடன் வந்த அயோத்தி மக்களையும் அதில் ஏற்றிக்கொள்ள, அதற்கேற்றாற் போல விமானம் விரிவடைந்தது. அந்தப் பெரியவரும் மூலராமர் விக்ரகத்துடன் அங்கு வந்துசேர்ந்தார். அப்போது அனுமன் மட்டும் விமானத்தில் ஏறாமல் நின்றுகொண்டிருந்தான்.

""என்ன ஆஞ்சனேயா, நீயும் என்னோடு வந்துவிடலாமல்லா?''

""இல்லை பிரபுவே. நின் ராமநாமம் ஒலிக்கும் பூமியே எனக்கு நித்தியம். நின் நாம சங்கீர்த்தனமே எனக்கு நித்திய போஜனம்.

நான் இங்கிருந்தே நின் நாமத்தோடு ஒன்றி வாழ்வேன்.''

""ஆகட்டும் அஞ்சனா புத்ரா. சிரஞ்சீவியாக இரு. இதைப் பெற்றுக் கொண்டு, என் நினைவாய்ப் பூஜித்து வா'' என, பெரியவரிடமிருந்த மூலராமரை ஆஞ்சனேயர் வசமளித்தார்.

திரேதாயுகம் முடிந்து துவாபரயுகம். சவுகந்தி மலரைத் தேடி வந்த பீமன்வசம் மூலராமர் ஒப்படைக்கப்பட, பீமனால் பூஜிக்கப் பட்டது. காலக்கிரமத்தில் கலிங்க மன்னன் கஜபதியின் நாட்டில் (தற்போதைய ஒடிஸா) நிலவிய பஞ்சம் தீர்த்ததனால், அந்த அற்புதத்தைச் செய்த நரஹரி தீர்த்தருக்கு என்ன வேண்டுமென்று மன்னர் கேட்க, அவர் மூலராமரை வேண்டிப் பெற்றார். இப்படியாக கலியுகத்தில் ஸ்ரீமத்வர்வழியில் வியாசராஜர், விபுதேந்திரர், விஜயீந்திரர், ஜிதாமித்ரர், சுதீந்திரர், ஸ்ரீராகவேந்திரர் என்று வழிவழியாகப் பூஜிக்கப்பட்டு, இன்று மந்த்ராலய சமஸ்தான பீடாதிபதி ஸ்ரீசுபுதேந்திர தீர்த்தர்வரை பூஜிக்கப்பட்டுவரும் ஸ்ரீமூலராமர், சத்யலோகத்திலிருந்து பூமிக்கு வந்து திரேதா, துவாபர, கலியுகம் என்று மூன்று யுகங்களிலும் தொடர்ந்து பூஜிக்கப்பட்டு, தற்போதும் மந்த்ராலயத்தில் அம்ஸ புருஷர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறார்.

இனி மந்த்ராலயம் சென்று ஸ்ரீராக வேந்திரரை தரிசிக்கும் அன்பர்கள் அங்கு தினசரி நடைபெறும் ஸ்ரீமூலராமர் பூஜையினைத் தவறாது தரிசிப்பர் என்பது திண்ணம். இஷ்வாகு குலத்தோன்றல்கள் மந்தாதா, அனரன்யா, திரிசங்கு, ஹரிச்சந்திரன், சாகரன், பகீரதன், அம்பரீஷன், திலீபன் போன்றோரால் பூஜிக்கப்பட்டவர். (பிரம்மனில் இருந்து இப்போதைய பீடாதிபதிவரை மிக நீண்ட வரலாறு கொண்ட ஸ்ரீமூலராமரின் பூஜையை ஸ்ரீராயர் மிகப் பிரியமுடன் மனமொன்றிச் செய்வார்.) அனுமனாலேயே பூஜிக்கப்பட்டவர்.

வாயு பகவான் நல்லாசியுடன் யுகம் தழைத்தோங்க பூமியில் நான்கு பிறவி எடுத்தார் சங்குகர்ணதேவதை. நான்காவது பிறவியான ஸ்ரீராகவேந்திரருக்கு அந்த ஸ்ரீராமனே ஸ்ரீராகவேந்திர தீர்த்தர் என்ற திருப்பெயரைச் சூட்டினார் என்பதன்மூலம், சத்யலோகத்திலிருந்து இப்போது வரை மந்த்ராலயத்திலிருந்து புண்ணியங்கள் வாரி வழங்கும் ஸ்ரீராயருக்கு, ஸ்ரீராமர், பிறவித் தொடர் பினை யுகயுகமாய்த் தொடர்ந்து கொண்டே யிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவு.

கிரீடகிரியில் தேசாயின் மகனை மாம்பழ ரசத்திலிருந்து உயிருடன் மீட்ட குருராயர், தனது யாத்ரா மார்க்கத்தினைத் தொடர்ந்து உடுப்பி மகாக்ஷேத்திரம் சென்று சேர்ந்தார்.

13-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீமாதவச்சார்யர் என்ற மத்வாச்சார்யாரால் நிறுவப்பட்டது இங்குள்ள ஸ்ரீகிருஷ்ண விக்ரகம். விஸ்வ கர்மாவால் செய்யப்பட்டு, துவாரகையில் ருக்மிணியால் பூஜிக்கப்பட்டதாகும். துவாரகை கடலில் மூழ்கியபிறகு, கோபி சந்தனக்கட்டியில் புதைந்திருந்த ஸ்ரீகிருஷ்ண விக்ரகம் மத்வரிடம் சேர்ந்தது. அவர் உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார். தட்சனின் சாபத்தில் ஒளியிழந்துபோன சந்திரன், 27 நட்சத்திர மனைவிகளுடன் இங்கு ஈசனை வழிபட்டு விமோசனம் பெற்றான். "உரு' என்றால் சந்திரன். "பா' என்றால் அதிபதி. "உடுபா' என்பது மருவி உடுப்பி என்றாயிற்று. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் உருவாக்கிய சந்திரபுஷ்கரணி விசேஷமானது. ஸ்ரீமத்வர் உடுப்பி மடத்தை நிர்வகிக்க எட்டு மடங்களை அதனைச் சுற்றி நிர்மாணித்து, இரு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு மடத்தினர் நிர்வகிக்கும் ஏற்பாட்டினையும், பூஜிக்கும் முறையையும் உருவாக்கினார்.

ஸ்ரீராகவேந்திரர் உடுப்பி விஜயம் செய்து ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்தார். பல நாட்கள் தங்கியிருந்து ஸ்ரீகிருஷ்ண பிரேமை கொண்டு மானசீக பூஜையிலிருந்தார். அந்த பூஜையில் ஸ்ரீகிருஷ்ண பகவானை நேரில் தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார். அதனாலேயே தன் திருக்கரங்களால் அவரே நிர்மாணித்துக் கொடுத்த விக்ரகம் இன்றும் உடுப்பியில் உள்ளது. ஸ்ரீவியாசராஜரின் "சந்திரிகா' என்ற நூலுக்கு "சந்திரபிரகாஸிகா' என்று விளக்கமெழுதினார். "சந்திர தீபிகா' என்று பெயரிட்டு பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கவுரை எழுதினார். மாணவப்பருவத்தில் சுதீந்திர தீர்த்தரிடம் "நியாய சுதா' பாடத்திற்கு விளக்கவுரை எழுதி பரிமளா என்ற பெயரில் வெளியிட்டார். சித்தாந்தங்களை நன்கு விளக்கித் தொகுத்து, "ந்யாயமுக்தாவளி' என்ற நூலையும் எழுதியதோடல்லாமல், "கோபால கிருஷ்ண' என்ற புனைப்பெயரினில் ஸ்ரீகிருஷ்ணர்மீது பாடல்களையும் ஸ்தோத்திரங்களையும் எழுதினார். ஸ்ரீராகவேந்திரர் ஏறக்குறைய ஒரு வருடத்ற்குமேல் இங்கு தங்கியிருந்தார்.

மகாபவித்திரமான பக்தரான கனகதாசரை அவர் தாழ்ந்த குலம் என்பதனால் கிருஷ்ணரை தரிசிக்க கோவிலினுள் அனுமதிக்கவில்லை. அவர் மனமுருகிப் பாடி வேண்டி, அங்கிருந்த சாளரத்தின்வழியே கிருஷ்ணரைக் காணமுயன்றார். அவரின் பிற்பகுதி மட்டுமே கண்களுக்குப் புலனாக, ஸ்ரீகிருஷ்ணரே கனகதாசருக்காக திரும்பி நின்று தரிசனம் தந்தார். இன்றளவும் கனக கிண்டி என்ற அந்த சிறு ஜன்னல்வழியே பலரும் தரிசனம் தொடர்கின்றனர்.

ஸ்ரீராயரும் கனக கிண்டி வழியேதான் உடுப்பியைவிட்டுப் புறப்படும்முன்பு தரிசித்தார்.

உடுப்பியிலிருந்து புறப்பட்டவர் கர்நாடகா அடைந்தார். எல்லையிலுள்ள கர்நாடக சமஸ்தானத்திற்கு சொந்தப் பிரதேசமான நஞ்சன்கூடு பெரும் பரபரப்பானது. மைசூர் மன்னரான தொட்ட தேவராஜ உடையாரே சகல பரிவாரங்களுடன் ஸ்ரீராகவேந்திரரை வரவேற்கக் காத்திருந்தார். அந்தக் காலைப்பொழுதில், ஸ்ரீராகவேந்திரர் நகரும் செந்நிற சூரியனாக மெல்ல மெல்ல தொலைவே அங்கு கூடியிருந்தோர் கண்களுக்குப் புலனாகத் தொடங்கினார். மகாராஜாவின் அருகிலிருந்த முக்கிய பிரதானி கையசைக்க, தவில், நாதஸ்வர மங்களவாத்தியம் முழங்க, ஸ்ரீராயர் வரவேற்கப்பட்டார். பூரண கும்ப மரியாதையுடன், "ஸ்ரீராகவேந்திரர் வாழ்க... ஸ்ரீராகவேந்திரர் வாழ்க...' என்ற வாழ்த்தொலி முழங்க, அந்தப் பிரதேசமே ஸ்ரீராயரின் கமல நயனங்களால் ஆசிர்வதிக்கப்பட்டது.

ragavendra

""வாருங்கள் ஸ்வாமி. தங்களை வரவேற்கும் பேற்றினை அளித்து ஆசிதந்த அன்னை சாமுண்டீஸ்வரிக்கு நன்றி கூறுகிறேன். தங்களின் திருப்பாதங்கள் இந்த ராஜ்யத்தினை மேலும் வளப்படுத்தும்.''

""வாழ்க மன்னரே. மக்களின் மகிழ்ச்சியும், தங்களின் ஆட்சிக்குட்பட்ட பூமியின் வளமும் அழகும் தங்களது நல்லாட்சிக்கு அத்தாட்சி. வீசும் காற்றின் இதத்தில் உமது மண் மட்டுமல்ல; உங்கள் மனதும் என்றும் ஈரமானதென்பதை அறியமுடிகிறது. ஆயுஷ்மான் பவ.''

""தங்களின் இதமான வாழ்த்தைப்பெற நான் பெரும்புண்ணியம் செய்திருக்கிறேன் ஸ்வாமி. தாங்கள் அரண்மனையில் எழுந் தருள ஆசைப்படுகிறேன்.''

""நஞ்சன்கூடில் மக்கள் ஸ்வாமிகளைக் காணவும் அவரிடம் மந்த்ராட்சதை பெறவும் ஏக்கமுடன் எதிர்நோக்குகின்றனர் மகாராஜா. சுவாமிகள் இன்று மட்டும் இங்கு தங்கியிருந்து நாளை எழுந்தருளச் செய்யலாம் என்பது எங்கள் பணிவான வேண்டுகோள் மன்னா...'' என்றார் அந்த ஊரின் முக்கிய பிரதானி. மன்னர் நெற்றி சுருக்கினார். ஸ்ரீராகவேந்திரர் புன்னகைத்தார்.

""மன்னா, இன்று நான் நஞ்சன்கூடு மக்களுடன் உபதேசம் பேச வேண்டுமென்பது எனது மூலராமனின் விருப்பம்போலும். தங்களுக்கு சம்மதம்தானே!''

""தங்களது பேச்சிற்கு மறுபேச்சா. நீங்கள் எமது சமஸ்தானத்தில் இரவு தங்குவதே வரமாகும். நாளை ஒரு நல்ல முகூர்த்தத்தில் தாங்கள் ஸ்ரீரங்கப்பட்டிணத்து அரண் மனைக்கு எழுந்தருள வேண்டும். நான் விடைபெறுகிறேன் ஸ்வாமி'' என்றவர், தம்முடைய முக்கிய பிரதானிகள் சிலரை அங் கேயே விட்டு, ஸ்வாமிகளுக்கு தேவையான வசதிகளைத் தாமதமின்றி ஏற்படுத்தித்தரப் பணித்தார்.

அந்த பெருமாள் கோவிலில் விசாலமான திறந்தவெளியின் நடுவே உயர மண்டபம் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாவிலை களால் தோரணம் கட்டப்பட்டு, இரவில் வெளிச்சம் வேண்டும் என்பதற்காக புதிய தீவட்டிகள் கட்டப்பட்டிருந்தன. போதாததற்கு கல்தூண்கள் நான்கிலும் சிறுசிறு மாடங்கள் செதுக்கப்பட்டு, வரிசையாக விளக்குகள் எண்ணெயிட்டுத் திரியுடன் மாலை கருக்கலுக்காகக் காத்திருந்தன. ஸ்ரீராயர் தமது பூஜைகளையும் தினசரி கடமைகளையும் செய்து முடித்து மண்டபம் வருவதற்கும், மாலை மங்கவும் சரியாய் இருந்தது. தூண்களின் விளக்கொளியும் தீவட்டிகளின் பிரகாசமும் மண்டபத்தில் வந்தமர்ந்த ஸ்ரீராகவேந்திரரை ஜோதிப்பிழம்பாய்க் காட்டிற்று. முழங்காலளவு வளர்ந்திருந்த புற்கள் செதுக்கப்பட்டு மணல் கொட்டி சமன்படுத்திய தரையில், ஸ்ரீராகவேந்திரரின் அருளுரையைக் கேட்க மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆங்காங்கே சிறு நெருப்பு மூட்டி, வாசனைக்கும் பூச்சிகளின் தொல்லை கள் ஏற்படாதிருக்கவும் சாம்பிராணி தூபமிட்டு, புகையை சீராக வெளிப்படுத்த பெருந்துளைகளுள்ள இரும்புக்கூடைகள் கவிழ்க்கப்பட்டிருந்தன.

""பகவான் ஸ்ரீஹரி கருணையே உருவாகக் கொண்டவன். உண்மையும் பவித்திரமும் சத்தியமும் நம் கைவிளக்கு போன்றவை. அஞ்ஞான இருள் என்ற திக்குத்தெரியாத பிரதேசத்தில் திணறி நிற்கையில், உங்கள் கைவிளக்கான சத்தியங் களே உங்களுக்கு வழித்துணை வெளிச்சமாகும். உயர்கதி அடைவதே மானிடர் விருப்பமாகும். அந்த உயர்கதியடைய ஆச்சார்ய சம்பந்தம் வேண்டும். பொறுமை, தயை, கருணை, ஈகை, உண்மை, சத்தியம் என்ற குணங்களே நல்வழிப்படுத்தும். எனவே இவற்றை இடைவிடாது வழுவாது பின்பற்ற வேண்டும். சம்ஸ்காரங்களையும் தவறாது பின்பற்ற வேண்டும். அதில் மிக உயர்ந்தது உபநயனம் என்று போதிக்கப்படுகிறது. வாழ்க்கைமுறையை உபதேசிப்பது உபநயனம்'' என்ற அவரது ஆழமான உபதேசம் மெல்ல மெல்ல கூட்டத்தினை வசப்படுத்தியது.

""துர்தினம் என்பது இல்லை. வேதத்தில் கூறியபடி சூரியன் பிரகாசிக்கா தினமே துர்தினம் என்பார்கள். ஆண்டவன்மீதான பிடிப்பும் ஆழ்மையும் இருந்தால் எந்நாளும் நன்நாளே. ஸ்ரீமன் நாராயணனான ஸ்ரீஹரி சர்வதா ரட்சகன். எப்போதும் ரட்சிக்கின்றவன். நிலைமையின் தீவிரத்தில் ஸ்ரீஹரியே சர்வத்ர ரட்சகன். எங்கேயும் ரட்சிக்கின்றவன். ஆம்; அவனது ப்ரிய பக்தன் பிரகலாதனுக்காக தூணிலிருந்து பிளந்தெழுந்து ரட்சித்தான். சர்வத்ர ரட்சகனாய் நரசிம்ம ரூபியாய் ஆர்ப்பரித்து ரட்சித்தான்...''

ஸ்ரீராகவேந்திரரின் அருளுரையில் பலரின் கண்களில் கண்ணீர் கசிந்தது. இரு கரங்களையும் உயரே தூக்கி அவரை கசிந்துருகி வணங்கினர். அனைவருக்கும் மந்திராட்சதையும் தீர்த்தப்பிரசாதமும் தனது திருக்கரங்களினால் வழங்கினார்.

மக்களுக்கு அரண்மனை சார்பாக பிரசாதங் கள் தயாரித்து வழங்கப்பட்டன. அங்கு கூடியிருந்தோர் அனைவருமே தாங்கள் அன்றுதான் புதிதாக ஜனித்த உணர்வில் திளைத்தனர்.

காலை ஸ்வாமிகள் அனுஷ்டானங்கள் அனைத்தையும் முடித்து வெளிவருகையில், அரண் மனையிலிருந்து சந்தன சிவிகை வந்திருந்தது. ஸ்வாமிகள் அதை அன்பாக மறுத்தார். அழைக்க பொறுப்புடன் வந்திருந்த மந்திரிப்பிரதானி, ""இது மன்னவரின் தாழ்மையான வேண்டுகோள். ஸ்வாமிகள் ஸ்ரீரங்கப்பட்டணத்து அரண் மனையில் எழுந்தருள்வது இது முதல்முறை என்பது மட்டுமின்றி, பீடாதிபதிகளை வரவேற்கும் மரபிற்காக தாங்கள் இதை ஏற்றுக்கொண்டு சம்மதிக்கவேண்டுகிறோம்'' என்றார். ஸ்வாமி புன்னகையை பதிலாய் அளித்து சிவிகையில் அமர்ந்தார்.

வழியெங்கும் ஸ்வாமிகளைக் காண மக்கள் ஆவலுடன் பெருகியிருந்தனர். வேத சொரூபமே பல்லக்கில் அமர்ந்திருப்பது போன்றிருந்தது அந்த பவனி. பிரதான வீதியில் மலர்தூவி ஸ்வாமிகளை வரவேற்றனர்.

அரண்மனையின் வெளிவாயிலுக்கே வந்திருந்து பூரண கும்பத்துடன் மன்னர் ஸ்வாமிகளை வரவேற்றார். ஸ்வாமிகள் அன்று மூலராமர் பூஜையினை நடத்த திருவுளம் கொண்டமையால், அதற்கான ஏற்பாடு நிமிடங்களில் ஆயிற்று. ஸ்ரீமூல ராமரின் பூஜையினை மேற்கொள்வதற்கு முன்பாக, பூஜையில் இடம்பெறும் விக்ரகங்கள் என்னென்ன என்பதனை ஸ்வாமிகளின் அணுக்கத் தொண்டர், ""இதுவே சீதாதேவியார், இது ஜெயராமன், இது இளையபிரான் லஷ்மணன், இதோ பாருங்கள்... பலப்பல பரமபுருஷர்கள் தொட்டுப் பூஜித்த மகா பவித்திரமானதும் சிரேஷ்டமானதும், பூஜித்தால் அந்த பிரதேசத்தை சுபிட்சமுடனும் வளமுடனும் திகழச் செய்யும் ஸ்ரீமூலராமர்...'' என்று உரக்க, உருக்கமாகக் கூறக்கூற, ஸ்ரீராகவேந்திரர் தமது திருக்கரங்களால் அவற்றை உயரே தூக்கிக் காண்பித்தார். அதைக்கண்டு சபா மண்டபமே கட்டுண்டு கிடந்தது. மன்னர் தொட்ட தேவராஜ உடையார், தனது பட்டத்து ராணியுடன் பூஜையில் தன்னையிழந்து ஆழ்ந்திருந்தார். பூஜை இனிதே முடிவுற்றவுடன் விலையுயர்ந்த நகைகளை ஸ்ரீமூலராமரை அலங்கரிக்க காணிக்கையாக ஏற்றுக்கொள்ள ஸ்வாமி களிடம் வேண்டினர். வளம்பொருந்திய கிராமங்களையும் ஸ்வாமி ராகவேந்திரருக்கு மன்னர் காணிக்கையாக்க, ராஜதம்பதி களை வாழ்த்தி ஸ்ரீராயர் அவர்களுக்கு மந்த்ராட்சதைகளை அளித்தார். தேவராஜ புரம் என்ற அந்த இடம் தன்னை தானமாக்கிக்கொண்டு பவித்ரமாகியது. அது சாதுர்மாஸ்ய காலமாதலால், தனது விரதத்தை முழுமையாக அங்கு சில நாட்கள் தங்கியிருந்து நிறைவு செய்தார். மன்னரும் மக்களும் ஸ்ரீராகவேந்திரரைப் பிரிய மனமின்றி வழியனுப்பினர்.

சாவனூர் மலையும், மலைசார்ந்ததும், பரந்த மேய்ச்சல் நிலமும் நிறைந்த பூமி. மலையில் மலைப்பயிர்கள், மலையை யொட்டிய சற்று சரிவான பூமியிலும் மக்கள் நிரம்ப பயிர்செய்து வளமைக்கு வழிசெய்திருந்தனர். முஸ்லிம் மன்னர்களின் காலமாய் இருந்தாலும்கூட, அவர்கள் இந்துமதத்தவரை இம்சைப்படுத்தாத பகுதிகளில் இதுவும் ஒன்றெனலாம். பெரும்பகுதிகளை ஆண்ட சுல்தான்கள் தங்கள் ஆட்சியினை நிலைநிறுத்த, தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் குறுநில மன்னர்களாக நவாப்களை நியமித்து அரசாளச் செய்திருந்தனர். அப்படிப்பட்ட நிர்வாகத்திற்குட்பட்ட அந்த இடத்தின் பெயர் சாவனூர். பீஜப்பூர் போகும் வழியிலிருந்த அந்த ஊருக்குத்தான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் சென்றுகொண்டிருந்தார். ஸ்ரீஸ்வாமிகள் தனது 28-ஆம் வயதான இளம்வயதிலேயே சந்நியாச தீட்சை பெற்று, சரீரப்பற்றற்று,

மிகச்சிறந்த வகையில் பீடாதியாக நித்ய கடமைகளை வழுவாது செய்துவந்தார். எனவே தேசாந்தரம் புறப்பட்டு மதுரை அடைவதற்குமுன்பே ராமேஸ்வரம், திருவனந்தபுரம், திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி என்று பல ஊர்களில் உபதேசம் செய்து, மதுரைக்குப் பிறகு ஸ்ரீரங்கம், நாமக்கல், வேலூர் போன்ற ஊர்களிலும் மக்கள் நல்லுபதேசம் பெற்று, மறுபடி இந்த தேஜோமயமான ஸ்வாமிகளை எப்போது பார்ப்போம் என ஏங்கி பெருமூச்செறிந்தனர்.

இப்போது சாவனூர்.

அந்த கல்கோட்டையில் நவாப் வசித்து வந்தார். அவருக்கு ஏழுவயதில் ஒரே செல்ல மகன் இருந்தான். தோட்டத்தில் விளையாடச்சென்ற அவன் அரவம் தீண்டி இறந்துபோனான். அழுதழுது புரண்டாலும் ஏதும் நிகழாது என்ற முடிவுக்கு வரவே நவாப்பிற்கு பல மணி நேரமாயிற்று. ""ஹே அல்லா... என் அருமை மகனை உனக்கு வேண்டுமென எடுத்துக்கொண்டாயா? பல வருடம் கழித்துப் பிறந்தவன்... அருமையாய் அன்பு செலுத்தி செல்லம் கொஞ்சி வளர்த்தது நீலம் பாரித்து உருக்குலைந்து இப்படிப் பார்க்கத்தானா? என்னையோ மனைவியையோ எடுத்துக்கொண்டிருக்கக் கூடாதா? இறைத் தூதரே! பாலகனைப் பறித்துக்கொண்டது நியாயமா?'' என்றெல்லாம் பலவாறு புத்திர சோகத்தில் அழுது புலம்பி, ஒருவாறு மனதைத் தேற்றி மகனுக்குச் செய்யவேண்டிய சடங்குகள் செய்து, அவனைப் புதைத்து மண் சமாதி எழுப்பிவிட்டு கோட்டையில் சுருண்டிருந்தார்.

நவாப் மகன் இறந்த அடுத்த நாள் ஸ்வாமிகள் சாவனூர் வந்திருந்தார். ஸ்வாமிகள் மதியம் நீராட பக்கத்தில் ஏதேனும் நீர்நிலை இருக்குமா என தேடி சீடர்கள் சென்றனர். அங்கு அந்தப் பகுதியில் நிழல் இருந்தது. சற்று உயர்ந்திருந்த மண்மேடையில் ஸ்வமிகள் மெல்ல அமர்ந்து கண்மூடி தியானிக்க முயல, மடக்கி அமர்ந்த அவரின் இரு கால்களின் கண்டை தசையில் பெரும் மூச்சினையுணர்ந்து சட்டென்று எழுந்து நிற்கவும், ""அடடா... ஸ்வாமி அபச்சாரம் ஆகிவிட்டதே. உங்களுக்கு தீட்டாகிவிட்டிருக்குமே'' என்றபடி ஓடிவந்தான் ஒருவன்.

""யாரப்பா நீ... ஏனிந்த அவசரம்? எங்கேனும் இடறிவிழுந்திருந்தால் அடிபட்டிருக்குமல்லவா? ஆமாம்... ஏதோ தீட்டு என்றாயே என்னப்பா அது?'' என்று கேட்டார்.

""நீங்கள் உட்கார்ந்த இடம்தான் நேற்று பாம்பு கடித்து இறந்த நவாப்பின் மகனைப் புதைத்த பகுதி.''

ஸ்வாமிகள் புன்னகைத்தார். ""யாரப்பா சொன்னது அவன் இறந்ததாக. அந்த குழந்தையின் சுவாசத்தை நானிப்போது உணர்ந்தேனப்பா. போய் ஆட்கள் அழைத்து வந்து குழந்தையைத் தோண்டி எடுங்கள்.

அவன் எழுந்து நடப்பான்.''

""ஸ்வாமி... இது முடிகிற விஷயமா?''

""இல்லையப்பா. ஆரம்பிக்கிற விஷயம். நாளை அவனுக்கு ஏழுவயது பூர்த்தியாகி எட்டாவதில் அடியெடுத்து ஆரம் பிக்கப் போகிறான். போய் ஆட்களை அழைத்துவா.''

ஸ்வாமிகளின் கண்களைக் கண்டவன், அதில் தெரிந்த ஜீவ களையும் உறுதியினையும் கண்டு ஓடி நவாப்பிடமே விஷயத் தைத் தெரிவிக்க, துயரத்திலிருந்தவர் ஆச்சரியப்பட்டு மெய்க்காப்பாளர்களோடு ஓடினார்.

ஸ்வாமிகளின் அருகில் சென்றவர் தன்னையறியாது கைகூப்பி வணங்கினார்.

அவரின் தோற்றமும் பாவனையும் மரியாதையை வளர்த்தது.

""ஸ்வாமி, என் ஆசை மகன் இறந்து விட்டான்.''

""இல்லை... அவன் இப்போது துயிலெழப் போகிறான்.''

""இல்லை ஸ்வாமி. கொடிய பாம்பின் விஷம். நீலம் பாரித்த அவன் தேகத்தை நேற்றுதான் மண்ணுள் புதைத்தேன்.''

""என் மூலராமனும் நீலராமன் தான். எனது பூஜாராமன் உனது மகனைக் காப்பாற்றுவான்.

அவனை வெளியிலெடு.''

நவாப்பின் கட்டளையில் சுற்றிலும் தோண்டி எந்தவித பின்னமும் ஏற்படாமல் சிறுவனின் தேகத்தை வெளியிலெடுத்துக் கிடத்த... குழந்தையை இமைக்காது நோக்கிய ஸ்வாமிகள் தலைமுதல் பாதம்வரை தன் பார்வையாலேயே வருடி, கமண்டல நீரை கையிலெடுத்து கண்மூடி கருட மந்திரம் ஜெபிக்கலானார். பின் நீரை குழந்தைமீது தெளித்தவுடன் கண்விழித்து எழுந்தான். "வாப்பா' என்று அழைத்தபடி நவாப்பின் கால்களை சிறுவன் கட்டிக்கொள்ள, ""யா... அல்லா! இது என்ன அதிசயம்'' என்றவர் சாஷ்டாங்கமாக ஸ்வாமிகளை வணங்கி எழுந்து நின்றார்.

""என் மைந்தனுக்கு உயிர்கொடுக்க வந்த காவி உடுத்திய தங்களை நான் அல்லாவாகவே எண்ணி வணங்குகிறேன் ஸ்வாமி. தங்களிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. உங்களது மரபுப்படி எனது நன்றியை நான் எப்படி வெளிப்படுத்துவதென்றும் தெரியவில்லை'' என்று திக்குமுக்காடினார் நவாப்.

ஸ்வாமிகள் புன்னகைத்தார்.

""உனது மகனின் ஆயுளை யாரும் களவாட முடியாது. ஒளித்தும் மறைத்தும் வைத்திருந்த அவனது வாழ்நாளை எனது மூலராமன் விடுவித்துவிட்டான்'' என்றார்.

""ஆஹா பேரதிசயம்... அற்புதம்!

அதனை நானே நேரில் காணும் பேறு! தங்களை இத்துணை அதிசயத்தில்தான் அல்லா அறிமுகப்படுத்துகிறார். தயவு செய்து வாருங்கள் கோட்டைக்கு'' என்று சொல்ல, ஸ்ரீராயர் மென்மையாக மறுத்தார்.

""இல்லையப்பா. எனது பயணத்தை இன்னும் தொடரவேண்டும். மறுபடியும் தமிழகம்... குடந்தை செல்ல வேண்டும். ஓய்விற்குப் பிறகு நான் இன்றே பீஜப்பூர் நோக்கிச் செல்ல வேண்டும்'' என்றார்.

நவாப் அவருக்கு பலவித மரியாதைகளைச் செய்து, பல சிறப்புகள் செய்து, பற்பல பரிசுகளையும் ஸ்வாமிகளுக்கு காணிக்கையாக்கி கௌரவித்தார்.

(தொடரும்)