மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!

இரண்டாம் பாகம்

7

வாத்சல்யம் என்பது, பக்தர்கள்மீதும் சீடர்கள்மீதும் ஆண்டவனும் குருவும் வைத்திருக்கும் சிரேஷ்டமான அன்பேயாகும். இந்த அன்பு அளவு கடந்தது. சக்தி மிக்கது. நீண்டது. ஆம்; பிறவி கடந்தது. ஸ்ரீமன் நாராயணனுக்கு பக்தவாத்சல்யன் என்னும் பெயர் சிறப்பான ஒன்றாய்ப் போற்றப்படுகிறது. பக்தவச்சலப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். அதேபோல ஸ்ரீராகவேந்திரர் முற்பிறவியில் தான் வியாஸராஜராய் இருந்தபோது தனது சீடரான கனகதாசரை, இப்பிறவியில் அடையாளம் கண்டு புன்னகைத்தார். கிராமத்து வாசத்துடன் திடகாத்திரமாக இருந்தாலும் கூனிக்குறுகி அவன் நின்றிருந்த தோற்றம் மிகப்பரிதாபகரமாக இருந்தது. ""உள்ளே வா'' என அழைத்த ஸ்ரீராகவேந்திரரை சூழ்ந்திருந்தவர்களில் பெரும்பாலோர் அதிர்ச்சியுடனும் பயம் கலந்தும் பார்த்தனர்.

Advertisment

இப்போதும்கூட பெரும்பாலான கிராமங்களில் ஜாதிப் பிரச்சினைகள் மாற்ற முடியாதபடிக்கு ஆங்காங்கே இருந்துகொண்டுதானிருக்கின்றன. எனில் 300 வருடங்களுக்குமுன் எவ்வளவு பூதாகாரமாய் இருந்திருக்கும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாதிப்பற்று பெரிய அளவில் இருந்திருந்த அவ்வேளையில், ராயர் எங்ஙனம் போராடியிருப்பார்- எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்.!

ஸ்வாமிகளின் பார்வையில் கனிவும் சகோதரத்துவமும் கலந்திருந்தது. ""உள்ளே வா கனகதாசா'' என்றார்.

ஸ்வாமிகளுக்கு வெகு அருகில் இருந்த ஸ்ரீனிவாசாச் சார்யார் வெகு பதட்டமானார். அவரது அருகில் சென்று வாய் பொத்தி தலைவணங்கி நின்றார்.

Advertisment

""ஸ்வாமி... அவன் வந்து... இல்லை...''

""ம்... சொல்லுங்கள் மேற்கொண்டு.''

""தங்களது கட்டளைக்கு மறு பேச்சில்லை. இருந்தும் இந்த கிராமத்தைச் சேர்ந்த அவனைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே...''

""சொல்லுங்கள் ஸ்ரீனிவாசாச்சார்யார்...''

""அவன் தாழ்ந்த குலத்தவன். கோவிலுக்குள் அவனை அனுமதிக்கக் கூடாது. இக்கிராமத்தில் ஒருசில கட்டுப்பாடுகள் உண்டு. தங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே...''

""ஸ்ரீராமப்பிரபு குகனைத் தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டவர். மிருகத்தில் சேர்த்தியான வானரத்தலைவன் சுக்ரீவனையும் சகோதரனாக வரித்துக் கொண்டவர். அவ்வளவு ஏன்- ஸ்ரீஅனுமனை நெஞ்சோடு அணைத்து வாஞ்சையை வெளிப்படுத்தி, தான் சாதி, மதம் மட்டுமின்றி மிருக பேதமும் கடந்தவன் என நிரூபித்தவராயிற்றே. ராமாயணம் போற்றும் நாம் ஸ்ரீராமனின் செயல்களையும் ஏற்றுக்கொள்வதுதானே நியாயம். மகாபாரதமும் ராமாயணமும் படிக்க மட்டுமல்லாமல், அதன்படி நடக்கவும்தான் என்பதனை ஏன் நீங்கள் பின்பற்றுவதில்லை?''

""தங்களுக்குத் தெரியாததல்ல. நடைமுறை வேறு. அதுபோல...''

""ஸ்ரீனிவாசாச்சார்யார்... இதற்குமேல் இப்பேச்சு வேண்டாம். உள்ளே வர வழிவிடுங்கள்.''

ஸ்ரீனிவாசாச்சார்யார் மௌனமானார். தலைகவிழ்ந்து மண்டபத்தின் ஒரு ஓரம் ஒதுங்கி நின்றார். மெத்தப் படித்த அவர் பல நூல்களை இயற்றியவர். அவரும் அவரது தமயனாரும் இயற்கையிலேயே பெரிய பண்டிதர்கள். ஸ்ரீராகவேந்திரர்மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். தமயனாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலேயே தான் மட்டும் ஸ்ரீராகவேந்திரரை தரிசிக்க வந்து தங்கியிருந்தார். தனது நூல்களை ஸ்ரீராகவேந்திரரின் பார்வைக்கு சமர்ப்பிக்க, அனைத்தையும் படித்த ஸ்ரீராயர் மகிழ்ச்சியடைந்தார். "உங்களின் கல்வி ஞானம், ஏட்டினில் பதிந்திருக்கும் கோர்வைகள் உங்களின் ஞானத்தைப் பறைசாற்றுகின்றன. நீங்கள் இன்றுமுதல் ஸ்ரீனிவாச தீர்த்தர் என அழைக்கப்படுகின்றீர்கள்' என அவரை கௌரவித்தார். ராயரின் திருவாக்கினாலேயே பாராட்டும்படி அறிவார்ந்த பண்டிதர், ஜாதி பேதம் பார்க்கும் மடமையில் மூழ்கியிருந்தது என்பது அக்காலத்திய மூட நம்பிக்கையின் சிறந்த எடுத்துக்காட்டு.

மெல்ல மெல்ல தயக்கத்துடன் உள்ளே அழைக்கப்பட்ட கனகன் தனது வலது காலினை கோவிலினுள்ளே முதல் அடியை பதித்தவுடனே, "ராமா... ராமா...' என்ற குரல்கள் ஆங்காங்கே எழுந்தன. ஆனால் அதில் பக்திரசம் சிறிதும் இல்லை. அசூயையே நிரம்பியிருந்தது. ஸ்ரீராகவேந்திரர் நெற்றி சுருக்கினார். சம்மணமிட்டு அமர்ந்திருந்தவரின் மலர்ந்திருந்த தோற்றத்தில் மெல்லிய- மிக மெல்லிய அழுத்தம் தோன்றி விலகியது. சட்டென்று அவரது புன்னகை கனகன்மீது நிலைத்தது.

""என்னப்பா உன் தயக்கம்? ஏதேனும் கொண்டு வந்தாயா?''

""ஸ்வாமி என்னிடம் போய்... நானா... இந்த தாழ்ந்தவனிடமா?''

""ஏன், நீ தரலாகாதா. உன் பிறவி வாசம் அறியவில்லையா? மன்னன்போல வாழ்ந்தவனல்லவா நீ. ம்... மகாஜனங்களே. இதோ என் முன்பாக நிற்கும் இவர், சென்ற பிறவியில் நான் வியாஸராஜ தீர்த்தராக அவதரித்தபோது எனது சீடராக இருந்தவர். மிக பராக்கிரமசாலியான இவர் எமனின் அம்சமானவர்'' என்று அனைத்தும் கூறி, உடுப்பியின் "கனககிண்டி' வரை கூறக்கூற, குழுமியிருந்த அனைவரும் பிரமிப்பின் உச்சிக்கே சென்றனர்.

"ஆஹா! மகாத்மியம் பொருந்திய ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் தம்முடைய முற்பிறவி கூறி, அதன் உன்னத நிகழ்வினையும் நாம் கேட்கும்படிக்கு அவர் உரையாற்றியது எப்பேற்பட்ட பேறு!' என சிலாகித்துக் கொண்டனர். ஆனால் ஸ்ரீனிவாசாச்சார்யார் மனம் மட்டும் பழமையில் ஊறிஊறி மாறாது அதே நிலையில் இருந்தது ஸ்வாமிகளுக்கு நன்கு தெரிந்தது.

""சரியப்பா. உனக்கு இப்போது என்ன வேண்டும்?''

""மோட்சம் வேண்டும் ஸ்வாமி...''

""நீ நிலைவந்துவிட்டாயா?''

""ஆம் ஸ்வாமி. "நான்' போய்விட்டது. ஆதலால் போகமுடியும்.''

""சரி; இப்போது நீ சென்று, நாளை மூலராமனுக்கு ஏதேனும் காணிக்கை கொண்டு வா.''

""காணிக்கை கொடுக்குமளவு...''

""வேறு வழியில்லையப்பா. ஆனால் நீ கொண்டு வரப்போகும் வஸ்துதான் முக்கியத்துவமாகப் போகிறது. என்றென்றும் பேசப்படப் போகின்ற மத்வ மடத்தின் சர்ச்சையாகவும் ஆகப்போகிறது. போய்வா...''

கனகன் சற்றே மலர்ச்சியுடன் கொம்பூன்றி நடந்து சென்றான்.

""இப்போது நான் விடைபெற வேண்டி இருக்கிறது. சேவித்துக்கொள்கிறேன் ஸ்வாமி'' என ஸ்ரீனிவாசாச்சார்யார் வணங்கி நிற்க, ராயரின் இதழில் மெல்லிய புன்னகை பூத்தது. ""ஆச்சார்யார்... அவசரப்பட வேண்டாம். இன்று தங்கியிருந்து நாளை மூலராமர் பூஜைக்குப்பின் தீர்த்தப்பிரசாதம் பெற்றுப் புறப்படலாமே'' எனக்கூற, அவரால் மறுத்துப்பேச இயலவில்லை. மௌனமாகத் தலையசைத்தார். கனகனைக் கண்டதே தன் தேகமே தீட்டானதாக பிரம்மை கொண்டார்.

அடுத்த நாள் புலர்ந்தது. ஸ்ரீராயர் மான்வி அனுமன் கோவிலுக்கு வந்தது வெகுவேக செய்தியாகப் பரவியதால் மக்கள் பெருமளவில் கூடிவிட்டனர். ஸ்வாமிகள் அன்று மிகவும் மலர்ச்சியுடனிருந்தார். மூலராமர் பூஜைக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகப் போகின்ற தருணத்தில், மேடையில் அமர்ந்திருந்த ராயர் மெல்ல பார்வையினை சுழற்றினார். பார்வை கூட்டத்தில் தனக்கு சற்றருகில் நின்றிருந்த ஸ்ரீனிவாசாச்சார்யாரிடம் நின்றது. பின் நகர்ந்து தேடியது.

அதைப் புரிந்துகொண்ட ஆச்சார்யார், ""கனகன் வெளியில்தானுள்ளான்'' என்றார் தனது வெறுப்பை மறைத்தவாறு.

""இன்றும் கூடவா. சரி; நேற்றுபோல நீங்களே அவனை அழையுங்கள்'' என்று கூறிமுடிக்கும்முன் கூட்டம் சற்றே விலக, கனகன் மெல்ல உள்ளே நுழைந்தான்.

""என்ன கொண்டு வந்தாய் கனகா?''

ragavendra

தனது இடுப்பில் முடிந்திருந்த சிறு துணிமுடிப்பை பெரும் சங்கோஜத்துடனேயே ஸ்வாமிகளிடம் சமர்ப்பித்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான். துணிமுடிப்பின் மேல்பாகம் வியர்வையின் பிசுபிசுப்பில் லேசே நனைந்திருந்ததை தனது கரங்களால் உணர்ந்து கொண்டார். எல்லாரும் அறியவேண்டுமென அதனைப் பிரித்துப் பார்க்க, குண்டுகுண்டாய் சிறு கடுகுகள் நிறைந்திருக்க, அதைக்கண்ட அனைவரும் திடுக்கிட்டனர். ""ஏய், என்னஇது.

குசேலன் அவல் கொடுத்ததாக உனக்கு நினைப்பா? பார்த்தீர்களா ஸ்வாமி இவனது ஈனச் செய்கையை. இதற்குத்தான் இவனை உள்ளே அனுமதிக்க வேண்டாமென்றேன்'' என்றார் ஸ்ரீனிவாசாச்சார்யார்.

""ஏன்... இதில் அவன் தவறேதும் புரியவில்லையே. இது அந்த குசேல அவலுக் கும் மேலானது.''

""ஸ்வாமி. தாங்களா... இதைப்போய் உயர்வாக..''

""ம்... பொறுங்கள்'' என்றவர், தன்னருகே இருந்த சீடனிடம் திரும்பி, ""இன்று மடத்து சமையலில் இதை கட்டாயம் சேர்த்துவிடு'' என்றார்.

""ஸ்வாமி... இது ஆஷாட மாதமல்லவா. நாம் கடுகைச் சேர்க்கக்கூடாது என்ற நியதி உள்ளதல்லவா.''

ஸ்வாமிகள் மேற்கொண்டு பேசாது புன்னகையுடன் மூலராமனிடம் திரும்பினார்.

அன்றைய பூஜையில் நேரம் சற்றே கூடியது.

அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீராமனின் திருமலரிதழ் களில் அன்று அபரிதமான புன்னகை தவழ, ஸ்வாமிகள் அதை உள்வாங்கிக்கொண்டார். பூஜை இனிதே நிறைவடைய, தனது கரங்களால் அனைவரும் தீர்த்தமும் மந்த்ராட்சதையும் பெற்றுக்கொள்ளும்படி செய்தார். ஸ்ரீனிவாச தீர்த்தர் தீர்த்தம் அருந்தி மந்த்ராட்சதை பெற்று வேட்டி மடிப்பில் முடிந்துகொண்டு, ""நான் உத்தரவு பெற்றுக்கொள்கிறேன் ஸ்வாமி'' என்றார்.

""மடத்தில் அனைவருக்கும்தான் உணவு தயாராகியிருக்கிறது. உணவருந்திச் செல்லுங்களேன்.''

""சரி ஸ்வாமி'' என்றவரின் குரலில் இணக்கமில்லை.

""அன்பர்களே! ஆஷாட மாதங்களில் நமதுணவில் கடுகை விலக்கவேண்டும் என்பது நியதிதான்; மரபுதான். ஆனால் மூலராமனின் திருவிளையாடலைப் பாருங்கள். நான் மூலராமனுக்கு கனகனிடம் காணிக்கை கேட்டேன். அவன் பரம ஏழை. அவனால் இயன்றது கடுகுதான். இது மூலராமனே செய்த திருவிளையாடல் மட்டுமல்லாது, இந்த எளியேனிடம் இருக்கும் கடுகையும் ஏற்றுக்கொள்ளச் செய்யவே சித்தப்பட்டு இந்த நிகழ்வை உங்களையும் சாட்சியாக்கி நிகழ்த்தியுள்ளான். ஆகவே நீங்கள் தாராளமாக இந்த உணவைப் பிரசாதமாக ஏற்கலாம்'' என்று கூற, பக்தர்கள் தங்களுக்குப் பரிமாறப்பட்ட உணவை ஸ்ரீராம பிரசாதமாக எண்ணி பக்தியுடன் புசிக்கலாயினர். ஸ்ரீனிவாச தீர்த்தர் மட்டும் கடுகைத் தேடித்தேடி ஒதுக்கி கவனமாக சாப்பிடலானார். ஸ்ரீராகவேந்திரருக்கும் இது தெரிந்தேயிருந்தது. முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அதில் பெரும் தெய்வீக அர்த்தம் ததும்பி இருந்தது.

கனகன் ஸ்வாமிகளின் உத்தரவுப்படி ஸ்நானம் செய்து வந்து காத்திருக்க, அவனைத் தன்னருகே வரும்படி தலை யசைத்து ஸ்வாமிகள் அழைக்க, கனகனும் தேகத்தை பவ்யப்படுத்தி வாய்பொத்தி பக்தியுடனும் எதிர்பார்ப்புடனும் நிற்க, ஸ்வாமிகள் மௌனமாக ஏறிட்டார்.

அந்த ஸ்ரீமன் நாராயணனிடம் ப்ரேமை கொண்டு ஆத்மார்த்தமாக பக்தி செய்த கனகனின் பெருமையை எடுத்துச்சொல்லியும், மெத்த கற்ற ஸ்ரீனிவாச தீர்த்தரே ஜாதித் துவேஷம் பார்க்கும் முரண்பாடான பகுத்தறிவினை, அவரின் வாழ்வினிலேயே ஏற்படும் ஏமாற்றம் அவருக்கு மாற்றம் தரும் என்பதனைப் புரிந்துகொண்டார்.

அதற்கேற்றாற்போன்று ஸ்ரீனிவாசாச்சார்யார் ஸ்வாமிகளிடம் விடைபெற அனுமதி கோரி நின்றார்.

""தங்களுக்கு ஊரின்மீது மோகமுண்டு என்று நினைக்கிறேன். நிரம்ப அவசரமோ...''

""இல்லை ஸ்வாமி. எனக்குப் பணி நிமித்தம் போக வேண்டியுள்ளது. பித்தர ஹள்ளியில் எனது தமயனார் எனக்காகக் காத்திருப்பார். அதற்காகத்தான்... ஸ்வாமிகளிடம் சற்று அதிகமாகவே மந்த்ராட்சதை வேண்டுகிறேன்.''

ஸ்வாமிகள் புன்னகைத்தார். தனது உள்ளங்கை முழுக்க அட்சதையை அள்ளி ஆசிர்வதித்துக் கொடுத்தார். பெற்றுக்கொண்ட ஸ்ரீனிவாசாச்சார்யார் வேகவேகமாக அகன்று செல்வதையும் புன்னகையுடன் கண்ணுற்றவாறிருந்தார். அருகிலிருந்த சீடரை அழைத்து கனகனுக்கு வயிறார உணவிடுமாறு உத்தரவிட்டார்.

மிகவும் நிதானமாகவும் மென்மையாகவும், தன்னைச்சுற்றி பலர் பார்ப்பதையும் கவனியாது உண்பதையே தவம்போல ஆத்மார்த்தமாக கனகன் செய்வதை வியப்புடன் அங்கு சூழ்ந்திருந்தவர்கள் பார்த்தவாறிருந்தனர். பல நாட்கள் பிரிந்திருந்தவர்கள் அன்றுதான் பரஸ்பரம் தங்களுக்குள் நடந்த சந்திப்பின் உன்னதத்தை உணர்ந்து, உணர்ச்சிவசப்பட்டு விகசிப்பின் விளிம்பில் இருப்பதைப் போன்றிருந்தது, அன்று கனகன் உணவருந்திய அந்தத் தருணம்.

உண்டு முடித்து நீரருந்தி கைதுடைத்து எழுந்து நின்ற கனகன் ஸ்வாமிகள் அருகில் சென்று வணங்கி நிற்க, இன்னும் அருகழைத்த ஸ்வாமிகளிடம் நெருங்கி நின்றவனின் செவியில் ஸ்வாமிகள் மிகமிக மென்மையாக மெல்லிய தொனியில் மந்திரோபதேசம் செய்யச்செய்ய, ஆமோதிப்பாய் கண்களில் நிறைவு பொங்க கேட்டுக்கொண்டு, பின் மெல்ல நடந்து சென்று ஸ்வாமிகள் காணும் தொலைவில் பத்மாசனமிட்டு கண்மூடி அமர்ந்துவிட்டான். விழிகள் மூடியிருந்தாலும் உதடுகள் மட்டும் அசைந்துகொண்டேயிருந்தது... அது ஸ்வாமிகள் அருளிய மந்திரோபதேசம் என்பதை மற்றவர்கள் புரிந்துகொண்டனர். விரைப்பாய் முதுகு நிமிர்ந்தவாறிருந்த கனகனின் வதனம் சட்டென்று தளர்ந்தது. உச்சரிப்பும் நின்றது. தலை கவிழ்ந்தது.

ஸ்வாமிகள் கனகனது தேகத்திற்கு சற்றேறக்குறைய பத்தடிக்கு மேலே பார்வையை நிறுத்திப் புன்னகைத்தார். "நிம்மதியாய்ப் போய்ச் சேர்வாய் கனகா' என வலக்கரம் உயர்த்தி ஆசிர்வதிக்க, காற்றின் மெல்லிய- ஆனால் உறுதியான சூழலை அங்கிருந்தோர் அனைவரும் உணர்ந்தனர். ஆம்; கனகனது ஜீவன் பிரிந்து ஸ்வாமிகளின் கண்களுக்கு மட்டும் புலனாகி நன்றி தெரிவித்து நகர்ந்தது!

""ம் ஆயிற்று. கனகன் மோட்சம் சென்றதன் நினைவாக இங்கோர் நினைவுத்தூண் எழுப்பிவிடுங்கள்'' என்று ஆக்ஞை பிறப் பித்தார். ஒரு உண்மையான பக்தனின் காத்திருப்பின் மெய்த்தன்மைக்கு, பிறவி கடந்தாலும் காலம் கனிந்து கௌரவம் கிடைத்தது. இதற்கு கனகனின் நிகழ்வு ஒரு பேரற்புத நிதர்சனம்.

பித்ரஹள்ளிக்கு வேகமாகச் சென்றடைந்த ஸ்ரீனிவாச தீர்த்தர் முதலில் திண்ணையில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

அப்பாடா என்றிருந்தது அவருக்கு. கடுகும் கனகனும் அவருக்கு அருவருப்பாய் இருந்தது. தனதூருக்கு வந்ததும் நிம்மதியாயிற்று.

""அட... எப்போது வந்தாய் சீனூ'' என்று அழைத்தவாறு உள்ளிருந்து வந்தார் அவரது அண்ணனான யாதவாரியார். சட்டென்று எழுந்து மரியாதையுடன், ""இப்போதுதான் வந்தேன் அண்ணா'' என்றார்.

""சரியப்பா. உள்ளே வா. வந்து முதலில் ஸ்வாமி ராகவேந்திரரின் மந்த்ராட்சதையைக் கொடு. மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னால் இயலாது போனா லும் உன்மூலமாக எனக்கு மந்த்ராட்சதை அருளிய அந்த மகானுக்கு நன்றி. ம்... சீக்கிரம் கொடு'' என்று முதியவர் மிகவும் ஆவலிட கையேந்தி நின்றார்.

தனது வஸ்திரத்தில் முடிந்து வைத்தி ருந்த மந்த்ராட்சதையைக் கொடுக்க துணி முடிச்சை கவனமாகப் பிரிக்கலானார். மிகவும் இறுக்கமான முடிச்சானதால் கவனமுடன் அவிழ்த்துப் பிரித்து, பார்த்தவுடன் அதிர்ந்து போனார்.

""என்ன சீனூ... என்ன ஆயிற்று'' என்று வஸ்திர முடிப்பில் யாதவாரியாரின் பார்வை யும் செல்ல, அவரும் அதிர்ந்தே போனார்.

ஆம்; அட்சதை முழுக்க கருத்துப் போயிருந்தது!

(தொடரும்)