வ்வொருவரும் தத்தம் வாழ்க்கையில் நல்லதைச் செய்யவும், நல்வழியில் பயணிக்கவும், ஆரோக்கியமாக- ஆனந்த மாக வாழவும், இயற்கையோடு ஒன்றியிருக்கும் பரம்பொருளான சிவபெருமான் பல்வேறு நல்வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் ஆறறிவு படைத்த மனித சமூகம் அதை மதிக்கிறதா என்பது கேள்விக்குறியே! "கொரோனா' வைரஸ் கிருமிகள் ஒருவகையில் நல்லவையே என்று கடந்த 2020 பிப்ரவரி மாதத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏனென் றால் ஒரு தனி மனிதனின் ஆரோக்கிய நல்வாழ்வுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது இந்த கொடிய வைரஸ்.

Advertisment

நாம் இயற்கையை மறந்தோம்; நமது இயல்பை மறந்தோம்; இறுதியாக நமது இயற்கை உணவையும் தொலைத்தோம். அந்த இயற்கை உணவை மீட்டுக்கொடுத்து, இயற்கையின் பக்கம் நமது சிந்தனைகளை மடைமாற்றம் செய்துள்ளது தற்போது நிரூபணமாகியுள்ளது. "உணவே மருந்து' என்று எடுத்துரைத்த- தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்பட்டுவந்த சித்த மருத்துவமானது, தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம் என்றிருந்ததை இன்று உலகமெல்லாம் அறியும்படி புகழைப் பரப்பியது இந்த வைரஸ் நோயே என்றால் அது மிகையல்ல.

siva

அதுமட்டுமல்லாமல் மஞ்சளின் மகிமை மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவரை வரலாறு காணாத அளவுக்கு, ஒரு குவின்டால் மஞ்சளின் விலை இன்றைக்கு 10,000 ரூபாய் எனும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மஞ்சள் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் இவையெல்லாம் பரம் பொருள் சிவத்தின் திருவிளையாடல் களில் ஒன்றேயல்லாமல் வேறில்லை.

Advertisment

எவ்வித வசதிகளும் இல்லாத காலத்தில், மின்சார பல்பு (டங்ஸ்டன் இழை) கண்டு பிடித்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் எந்த பல்கலைக் கழகத்திலும் படிக்கவில்லை. அவருக்கு வழிகாட்டிகளும் இருந்ததில்லை. அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் அவரது தாயார் மட்டுமே. இதைப்போன்று எவ்வளவோ அறிவியல் கண்டு பிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றைக்கு இன்னும் ஒருபடி மேலே ரோபோ எனும் எந்திரம் மனித வேலைக்கு மாற்றாக வந்துவிட்டது. ஆனால் இவற்றுக்கு உயிரூட்ட முடியுமா என்றால் முடியும் என்கிறார்கள். சரி; அந்த கண்டுபிடிப்புகளுக்கு உணர் விருக்குமா? பசிக்கும்போது அவை உணவாகப் பயன்படுமா?

இன்றைய சமூகம் காலத்தை விரயம் செய்து களியாட்டங்களில் ஈடுபட்டு, முன்னோர்களைப் பழமை வாதிகள் என்று பழித்துப் பேசுகிறது.

ஏனென்றால் அவர்கள் படிப்ப தெல்லாம் உணவு சார்ந்தது மல்ல; உணர்வு சார்ந்ததுமல்ல. இதே நிலை நீடித்தால் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழல் உருவாகிவிடும். உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனித சமூகத்திற்கு அத்தியாவசியமான தேவைகள். உணவையும், அதை உற்பத்தி செய்யும் உழவரையும் தெய்வப்புலவர் திருவள்ளுவர்-

"பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்'

Advertisment

என்று குறிக்கிறார். நெல் மணி யையும் உணவு தானியங்களையும் விளைவிக்கும் ஈரநெஞ்சம்கொண்ட உழவர், பல வேற்றரசர்களின் குடை நிழலின் கீழுள்ள- அதாவது வேற்று அரசர்களின் ஆதிக்கத்திலுள்ள பல நாடுகளையும் தங்களது நாட்டு அரசின் குடைக்குக்கீழே கொண்டுவருவர். நவீன விஞ்ஞானத்தால் எதை வேண்டுமானாலும் கண்டு பிடிக்க இயலும். ஆனால் அவற்றை உணவாகப் பயன்படுத்த முடியாது.

மறுபிறவியிலும் நாம் ஆரோக்கியமாகவும் ஆனந்த மாகவும் வாழ, ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான "வளையாபதி' கூறும் நன்னெறியைக் காண்போம்.

"இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றல்ல

வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்

உளவென நினையாதே செல்கதிக்கு என்றும் என்றும்

விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்.'

இளமைப்பருவம் எப்போதும் நிலைத்திருக்கக் கூடியதல்ல. இளமை கழிந்து முதுமை வந்தடைவது உறுதி. இந்த இளமைப் பருவத்தில் அனுபவிக்கின்ற இன்பங்களும் சேர்த்து வைக்கின்ற செல்வ வளங்களும் நிலையானவையல்ல. இவை பெருந் துன்பமே. இன்பமயமான உயிர்வாழ்வுக்கு இவையே உற்றதுணை என்றெண்ணி இவற்றையே பற்றியிருக்காமல், மறுமையிலும் அது மாண்பு டையதாக அமையவேண்டும். அவ்வாறு அமைய இப்பிறவி யிலேயே நல்ல அறங்களைச் செய்து, மறுமைக்கும் பயன் தரும் விதையாகவும் விளை நிலமாகவும் இருக்கும் வண்ணம் இவ்வுலகில் நம் சிந்தனையும் செயலும் அமையவேண்டும். உழவர் பெருமக்கள் மட்டுமே தாங்கள் உழுது, விதைத்து, அறுவடை செய்த தானியங் களை முழுமையாகப் பயன்படுத்தி விடாமல், மறு உழவுக்கும் தேவையான தானிய விதைகளை எடுத்து வைப்பார்கள். அதுபோன்று இவ்வுலகில் வாழும்போதே மறுமையிலும் இன்பம் கிட்ட பற்றற்றிருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது மறுமையிலும் இன்ப விளைச்சலுக்கு நாம் விதையாக முடியும்.

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றும் மிக அவசியம்.

ஒருவன் காலையில் உணவுண்கிறான்.

நண்பகலில் அவன் உணவருந்த வேண்டு மென்றால் காலையில் உண்ட உணவு செரிமானமாக வேண்டும். அது ஒருபுறம் இருக்கட்டும். மூன்று வேளையும் உணவு கிடைத்துவிட்டது. மனைவி, மக்களோடு உலக வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பையும் ஒவ்வொருவருக்கும் இறைவன் வழங்கியிருக்கிறான். இவையெல்லாம் சீராகத் தொடரவேண்டுமெனில் உணவொழுக்கம், மனவொழுக்கம் ஆகிய இரண்டும் மிக முக்கியம். இவற்றோடு அறவொழுக்கமும் சேர்ந்துகொண்டால் ஆரோக்கிய- ஆனந்த வாழ்க்கைக்கு சொந்தக்காரராகி விடலாம். ஒரு மனிதனின் அறம் எத்தகைய துன்பத்தையும் போக்கும் வலிமையுடையதாகும். அறம் செய்ய மனதிற்கு எது தேவை என்பதைத் திருமந்திரம் கூறுகிறது.

"யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே.'

இறைவழிபாட்டுக்கு எங்கும் எவர்க்கும் எளிதாகக் கிடைக்கும் பச்சிலை போதும். அதுபோல பசுவுக்கு ஒரு கைப்பிடி புல்லைப் பறித்து உணவாகத் தருவது எல்லாருக்கும் எளிதான ஒன்றே. தாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி சோற்றை மற்றவருக்குத் தருவதும் எளிதே. அதுபோல இனிமையாகப் பேசுவதும் அனைவராலும் செய்யத்தக்கவையே.

ஆகவே தர்மம் செய்வதென்றால் அதற்கென்று பெரிதாகப் பொருள் வசதி, ஆள்துணை இருந்தால்தான் இயலும் என்றிருக்க வேண்டியதில்லை என்பதே திருமூலரின் திருமந்திரவாக்கு நமக்குணர்த்தும் உண்மையாகும். அறம் செய்ய பொருள் வேண்டியதில்லை; மனம்தான் வேண்டும். அவ்வாறான ஈகை குணம் பெற்றவர்களே இறைவனுக்குப் பிடித்தவர்களாவார்கள். இதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.

எனவே நம் மனதை நேர்மறையான எண்ணங்களையும், அறம்சார்ந்த சிந்தனைகளையும், பிற உயிர்களை நேசிக்கும் பண்புகளையும் நோக்கிச் செலுத்தும்போது எந்தவிதமான தீவினைகளும் நம்மை அணுகாது. ஏனென்றால் நேர்மறை எண்ணங்களும் சிந்தனைகளும் செயல்களும் கொடிய வைரஸ் கிருமிகளையும் அழிக்கும். ஏன்- புற்றுநோயையும் புறமுதுகிட்டு ஓடச்செய்யும்.

அதேவேளையில் எதிர்மறை எண்ணங்களான ஆணவம், பொறாமை, கோபம் போன்றவற்றில் நம்மனம் இருக்குமானால் அது மிகக்கொடிய நோயை உருவாக்கி இறுதியில் அழிவையும் ஏற்படுத்திவிடும். அறம் என்பது நம் வாழ்க்கையின் ஆனந்தத்தை மட்டுமல்ல; ஆரோக்கியத்தையும் தரும். திருக்குறள் கூறுவதைக் காண்போம்.

"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.'

பிறரையும் அறநெறியில் நடக்கச் செய்து, அறத்தினின்றும் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதே மிகச்சிறந்ததாகும். அப்படி உள்ளவரின் வாழ்க்கையானது தவம்செய்பவரின் வாழ்க்கையைவிட வலிமையானதாகும்.

எனவே அறம் செய்வோம். அறம் செய்யும்போது மனமும் உடலும் ஆனந்த மடையும். அதன்காரணமாக அவை ஆரோக்கியம் பெறும். அங்கே அன்பும் கருணையும் கலந்து ஆனந்த அருள் மழையாகப் பொழியும். அறம் செய்ய விரும்பு; நமது ஆரோக்கியம் இனிக்கும் கரும்பு!