சங்ககால வேல்கோட்ட வழிபாட்டு தெய்வங்கள் குறித்து கடந்த இதழ்களில் விவரித்த நிகழ்வுகளிலிருந்து, மீண்டும் பாண்டிய இளவலுக்கு வருவோம்!
மன்னனாக முடிசூட்டத் தயாராகும் இளவரசனின் மனையை நோக்கிய அனைவரது பயணங்களும் தொடங்குகிற நாழிகை நெருங்கிவர, அணிகள் நிரம்பிய பலவித வண்ணப் பேராடையால் அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையானது, அதனுடைய மாவூத்து சில சமிக்ஞைகளைக் காட்டியவுடன், மக்கள் கூட்டம் அதிர்ந்து ஓடுமளவுக்கு, தன் முன்னங் கால்களைத் தூக்கிக்கொண்டு பிளிற ஆரம்பித்தது. பெருங்கூட்டத்திலிருந்து சிறார் கள் அலறியடித்துக்கொண்டு தம் பெற்றோரை நோக்கி ஓடிவந்தனர்.
மண்டியிட்டு வணங்கிய யானை!
யானையின் கழுத்தில் அமர்ந்திருந்த யானைப்பாகன், தன் அங்குசத்தை அதன் நெற்றியில் தட்டியதும், யானை துதிக்கையை உயர்த்தியது. அழகிய மலர் மாலைகளைப் பின்னும் பண்டாரங்கள், மிகப்பெரிய மலர் மாலையைத் தூக்கமுடியாமல் தூக்கி யானையின் துதிக்கையில் கொடுத்தவுடன், அதை இலகுவாகப் பிடித்து மேலே தூக்கியவாறு, யானைப்பாகன் காட்டும் திசையை நோக்கி நகரத் தொடங்கியது.
அதைக்கண்ட மக்கள், தங்களின் தலைவனைக் காண ஆவல்கொண்டு, வாழ்த்தொலிகளை முழக்கமிடத் தொடங்கினர். வருங்காலப் பேரரசனை, மலைபோன்ற தன் முதுகில் சுமக்கப்போகும் பெருமிதத்தை நினைத் துப் பீடுநடை போடுவதுபோல், யானை இளவலை நோக்கி கம்பீரமாக நடந்தது. கூட்டத்தினரின் வாழ்த்தொ- இருபுறமும் ஆர்ப்பரிக்க, மக்கள் தலைவன் கம்பீரமாக நின்ற இடத்திற்குச் சென்று, துதிக்கையில் தான் சுமந்துவந்த மாலையை அலுங்காமல் அவன் கழுத்தில் அணிவித்து, மண்டியிட்டு வணங்கியது. படைத்தளபதியார் இளவலைப் புன்முறுவலோடு வரவேற்று, யானை முதுகிலிருந்த அம்பாரியிலுள்ள பொன்னா சனத்தில் அமர வைத்தார். அம்பாரி யின்மேல் இருந்த முத்துக்குடையைச் சுற்றிலுமிருந்த மணிகள் அசைந்தாட, பட்டத்து யானை மெல்ல எழுந்து நின்றது.
கும்மாளமிட்ட குறிஞ்சி!
நாற்படைகள் இருபுறமும் புடைசூழ, அரண்மனையை நோக்கிச் செல்லும் பெருவழிப் பாதையின் இருமருங்கிலும் நின்ற மக்கள் வெள்ளம், ஆவலோடு மலர்த் தட்டுக்களைக் கையிலேந்தியபடி இளவலைக் காணத்துடித்தனர். கன்னியர்முதல் முதியவர்வரை இளவலை எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களது மனவோட்டங்களை, புலவர்களும் பாணர்களும் நுட்பத்துடன் கவனிக்கத் தொடங்கினார்கள். தாங்கள் கவனித்த பாங்குகள் அனைத்தையும், தாங்கள் பாடும் பாடல்களிலும், எழுதவிருக்கும் மன்னனைப் பற்றிய பிள்ளைத்தமிழ், உலா, பரணிக் கவிகளில் வர்ணிப்பதற்கும் ஆயத்தமாகி மகிழ்ந்தனர்.
கன்னியர்கள் கூறும் காதலை, தங்களின் அகப்பாடல்களில் அலங்கரிக்கத் தொடங்கினர். ஐந்திணைகளும் அவர்களின் அகத்திற் குள் அலைமோதின. அவற்றுள் குறிஞ்சியே அதிகமாக கும்மாளமிட்டது. வேந்தன்மீதான வேல் விழியார்களின் வேட்கைகளை, யாழ்கொண்ட விரலியர் யாழ்மீட்டத் தொடங்கினர். தாங்கள் தூவும் மலர்கள், வேந்தனின் தாள்மலர்களிலாவது பட்டுவிடாதா என, மக்கள் உயர குதித்து குதித்துத் தூவினார்கள். மன்னனின் முகத்தைக் காண முடியாதவாறு, வான்மழைபோல் பூமழை பொழிந்தது.
மண்ணுலகா? விண்ணுலகா?
வழியெங்கும் நின்ற வறியோர்களும் கூன்விழுந்த வயோதிகர்களும், தங்களை வாழவைக்கும் தெய்வம் வருகிறதென விழியுயர்த்திப் பார்த்தபோது, இளவலின் இன்முறுவலையும், கம்பீர உடற்கட்டையும், கலைசெறிந்த அருள்பார்வையையும் கண்டு, தங்களின் கூன் நிமிர்ந்து எழும் அளவுக்குத் தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்தனர்.
மன்னன் ஊர்வலமாகச் செல்லும் பெருவழிப்பாதை மண்ணுலகமா? விண்ணுலகத்துக்குச் செல்லும் பாதையா என்றெண்ணும் அளவுக்கு, வானுயரப் பந்தல்களில் தொங்கவிடப்பட்ட அலங்காரப் பொருட்களும், நறுமணப் புகைகளும் மக்களின் மனங்களை மயங்கச் செய்தன.
அதேநேரம், கோட்டையைச் சுற்றியிருந்த அகன்ற ஆழமான அகழிகளில் இருந்த பழைய நீர் வடிகட்டப்பட்டு, நதிகளிலிருந்து புதிய தண்ணீர் நிரப்பப்பட்டு, அவற்றின்மீது தண்ணீர் தெரியாத அளவுக்கு மலர்கள் தூவப்பட்டிருந்தன. கோட்டை வாயில்களில் வெண்சுதை பூசிய உயர்ந்த கோபுரங்களும், அவற்றின் மீதுள்ள மிகப்பெரிய மீன் கொடிகளும் அழகாக புதுப்பிக்கப்பட்டிருந்தன. மன்னன் அமரவிருக்கும் வசந்த மண்டபத்தைச் சுற்றி செயற்கை அருவிகள் அமைக்கப்பட்டிருந்தன. தாழ்நிலையில் கட்டப்பட்டிருந்ததால், அந்த அருவி நீர் சுற்றியுள்ள தடாகத்தில் விழுந்தது. அது மண்டபத்தைச் சுற்றிவந்து வெளியே செல்வதற்கும், ஆற்றிலிருந்து சுரங்கப்பாதை வழியாக நீர் வருவதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
மன்னனுக்கான பரிசுக் குவியல்!
வசந்த மண்டபத்தின் முன்னால் இருந்த ஆடக மாளிகை, விளக்குகளாலும் திரைச்சீலை, மலர்த் தோரணங்களாலும் சொர்க்கபுரியாகியிருந்தது. அறவோர்கள் மன்னரின் அருகே அமரும் வண்ணம் மெல்லாசனம் அமைக்கப்பட்டிருந்தது. வசந்த மண்டப சுதைச் சிற்பங்களுக்கு வண்ணப் பூச்சுகளால் உயிர்கொடுக்கப்பட்டது.
கடல்கடந்து கலங்களிலிருந்து வந்திறங் கிய குதிரைகள் அலங்கரிக்கப் பட்டு, மன்னருக்கான பரிசுப்பொருளாக அரண்மனை முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டன. அரண்மனைக்குள் இருந்த படிகப் பாதைகள் செப்பனிடப் பட்டு, இருமருங்கிலும் சிற்பங்களும் அயல்நாட்டுக் கலைப்பொருட்களும் அழகுபடுத்தப்பட்டிருந்தன. வசந்த மண்டபத்தைச் சுற்றியிருந்த பூங்காக்களில், யாழ் மீட்டுவோருக்கென இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. தென்கடல் முத்துகள், மேற்கடல் பவளங்கள், கப்பல்களிலிருந்து வந்திறங்கிய கண்ணாடிப் பொருட்கள், சீனத்துக் குவளைகள், செங்கடலிலுள்ள மயாஸ் துறைமுகத்திலிருந்து வந்த வாசனைத் திரவியங்கள், கிரேக்க, உரோமானியக் கடலோடிகள் கொண்டுவந்த தங்க நாணயங்கள், அரேபியாவில் ஒகேலிஸ் என்ற இடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட குங்குலிகம் போன்ற வாசனைப் புகை நறுமணப் பொருள்கள், ஹிப்பாலஸ் என்று அழைக்கப்படும் காற்றின் உதவியால் முசிறிக்கு வந்த அயல்நாட்டு வணிகர்கள் கொண்டுவந்த வைர மணிகள், எகிப்தியரின் துபிஸில் மாதத்தில்- அதாவது நம் நாட்டின் மார்கழி மாதத்தில் கடல் பயணம் தொடங்கிய வணிகர்கள் கொண்டுவந்த ஒளிக்கற்கள், தந்தம், புலிப்பல், வெட்டிவேர் போன்ற வாசனை வேர்கள், யவனர்கள் கொண்டுவந்த நறுமதுக் குவளைகள், பொற்குவளைகள், இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட அகில், சந்தனம், நீலமணிக்கற்கள், புஷ்பராக மஞ்சள் மணிகள் போன்றவை வசந்த மண்டபத்தைச் சுற்றிலும் குவியலாகக் குவிக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் மன்னனுக்கான பரிசுப் பொருட்களாகும்.
பெண்டிர் ஏந்திய பொற்கலன்களில் நறுமது!
இலங்கையிலிருந்து ராஜமருத்துவ மூலிகைகள் தெப்பங்களில் கொண்டுவரப்பட்டு, மன்னருக்கு மட்டும் பரிசளிக்கப்பட்டன. அரேபியா வில் கனே, எண்டைமோன் துறைமுகங்களிலிருந்து வந்து தொண்டியில் இறக்கப்பட்ட பேரீச்சம், மதுக்குடுவைகள் சிறப்பானவை. சுமத்ரா, பர்மாவிலிருந்து வந்த வணிகர்கள், மாணிக்கக் கற்களை ரோமாபுரி தங்கத் தோடு இணைத்து ஆபரணங்களாகப் பரிசளித்தனர்.
யவனப் பெண் சிலை, அன்ன உருக்கொண்ட பூங்குடில்கள், நெய் ஏற்கும் யவன பொற்கிண்ணங்கள் ஆகியவற்றை மன்னனுக்காகக் கொடுத்தது மட்டுமன்றி, யவன காவல் வீரர்களையும் ரோமானிய பெருவணிகர்களையும் மன்னருக்குப் பரிசாக்கினார்கள். மேற்கண்ட வெளிநாட்டு விருந்தினர் தங்கவும், பட்டம்சூட்டு விழாவைக் கண்டுகளிக்கவும் வசந்த மண்டபத்தைச் சுற்றிலும் மாளிகைகள் அலங்கரிக்கப்பட்டன.
நக்கீரர்-
"வெற்றிவாள் ஏந்திய மாறனே!
யவனர்கள் நற்கலனில் தந்த நறுமதுவை
பெண்டிர் பொற்கலங்களில் ஏந்த
நறாமாந்திக் களிப்புடன்
அமைதியுடன் உன்நாட்கள் கழிவனவாக'
எனக் குறிப்பிடுகிறார்.
பாண்டியனின் பட்டமேற்பு விழா தொடரும்...
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்