சித்தர் கால சிறந்த நாகரிகம்!
அடிகளார் மு. அருளானந்தம்
7
பட்டம் சூட்டப்படும் இளவலும், மருதநாயகனுமான பாண்டிய இளவரசன் அரியணை ஏறியவுடன், தன் குடிமக்களுக்கு ‘தந்தையில்லாருக்குத் தந்தையாகவும், தாயில்லாருக்குத் தாயாகவும், மைந்தனில்லாதவருக்கு மைந்தனாகவும்’ இருந்து பாதுகாப்பதைத் தன் குறிக்கோளாகக் கொள்வான்.
எதிர்வரும் காலத்தில், தன் குறிக்கோளுக்கு இடையூறு ஏதேனும் வந்தால், தன் உயிரைக் கொடுத்தாவது தடுக்க முற்படுவான். அதனை எதிர்கொண்டு வெற்றி கொள்வதற்குத் தன் உடம்பில் பல விழுப்புண்களைப் பெருமையோடு ஏற்பான். தன்னுடைய அரசிலுள்ள ‘ஒன்றினோடு ஒன்றுக்கும், ஒருவரோடு ஒருவருக்கும், ஒருத்தியோடு ஒருத்தருக்கும் உள்ள வெவ்வேறு பகைமைகளை, மனத்திலின்றி விழைந்து, காதலுடன் வாழ்வதற்கான பாதுகாப்பைத் தருவதற்காக விழுப்புண்களை ஏற்பான். அவை 96 வகைகளாகப் பிரிக்கப்பட்டன.
அதற்காக, அவனை உயர்வுபடுத்தும் விதத்தில் 96 வகை மலர்களால் பூஜிப்பர். (அட்டவணை காண்க).
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/table_0.jpg)
96 வகை மலர்களால் பூஜிக்கப்பட்டதும், தும்பை, மல்லிகை மலர்கள் பரப்பிய ஆசனத்தில் அமர வைத்து, இளவலின் பாதத்தை ஏழுகடல் நீர்கொண்டு அலம்பிப் பூஜிப்பர்.
ஏழுகடல் நீரென்பது
லவணம்- வாசனைத் திரவியம் கலந்த நீர்.
இட்சு- கருப்பஞ்சாறு.
சுரா- கள்.
சர்ப்பி- நெய்.
ததி- தயிர்.
ஷீரம்- பால்.
சுத்தோதகம்- சுனை நீர் அல்லது ஊற்று நீர்.
அதன்பிறகு, உடல் முழுவதும் செஞ்சந்தனாதித் தைலம் பூசி, கோரோசனை, கஸ்தூரியுடன், இளவல் பிறந்தபோது எடுத்துப் பாதுகாத்த தொப்புள் கொடியின் பொடியையும் சேர்த்து அஞ்சனம் தயாரித்து, ராஜதிலகம்தனை அவனைப் பெற்ற தாயானவள், நாபி, மார்புக்குழி, தொண்டைக்குழி, நெற்றி, ராஜமகுடம் தாங்கும் உச்சந்தலையில் இட, பூஜிக்கப்படுவார் இளவல்.
அதனைத் தொடர்ந்து, 16 முழ வெண்பட்டை ராஜகலிங்கம் என உடுத்தி, ரத்தினங்கள் பதித்த ஆறு முழ இளஞ்சிவப்பு நிற செம்பட்டை இடைக் கச்சையாகக் கட்டி, பொன்னாலான கால் தண்டை, கண்டைக் கவசம், இடைப்பிடிப்பான், நவரத்தினங்கள் தோய்த்த மார்பரப்பி, மாணிக்கம், முத்து, பவள வடங்கள், ஒன்பது ரத்தினங்கள் பதித்த ஒன்பது கணையாழிகள், கைவிரல்களுக்கு பொன்மணிக் காப்பு, தோள்வளை ஆகியவை அணிவிக்கப்பட்டு, வெண்பட்டாலான முத்துச்சரம் வைத்துத் தைக்கப்பட்ட கவரிமான் செண்டு பொருத்திய தலைப்பாகை இளவலின் நற்றாயினால் தலையில் சூட்டப்பட்டு, கடம்ப மரத்தால் செய்யப்பட்ட மயிலாசனத்தில் இளவலை அமரவைப்பர்.
அந்த ஆசனத்தோடு, வாசனை தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜபல்லக்கில் தூக்கி அமர்த்தும்போது, முதலில் குறிஞ்சி யாழ், முல்லை யாழ், மருத யாழ் வாசிக்கப்பட்டு, 1. வச்சிரம், 2. பாசம், 3. சத்தி, 4. தண்டம், 5. கொம்பாயுதம், 6. வேலாயுதம், 7. வில், 8. முசலம், 9. துஜம், 10 கடகம், 11. சூலம், 12. வாள் போன்ற ஆயுதங்கள் பொருத்தப்பட்ட வலை இராஜ பல்லக்கைச் சுற்றி பூட்டப்பட்டவுடன் ராஜமுரசு ஒலிக்கப்படும்.
பிறகு, மாமன் வீட்டுப் பரிசாக சூரிய சந்திர இரட்டை மீன்களும் குலக் கொடியும் பொறிக்கப்பட்ட பொன் நெற்றிப்பட்டம் சூட்டப்படும். மேலும், இரு காதுகளிலும் மகரக்குலை அணிவிக்கப்பட்டு, தாய்மாமன் சீர்வரிசை வழங்கப்படும். அப்போது சங்கு, கொம்புத்தாரை, கோளைத்தாரை, நெடுந்தாரை (ஒன்பது அடி நீளமுடையது), வளைத்தாரை, நெடுங்குழல் போன்றவை வாசிக்கப்படும்.
இதைக் கேட்கும் மக்கள் அனைவரும், பட்டம் சூட்டத் தயாராகும் இளவரசன் வாலை குருநாதன், ராஜபல்லக்கில் ராஜவீதிவழியாகக் கோவிலுக்குப் புறப்படத் தயாராகிவிட்டான் என்பதை உணர்ந்து, அவனை தரிசிப்பதற்கு விரைந்து வருவார்கள்.
அப்போது, முதலில் பஞ்சமுகத் தோல்கருவி, மகுடி, எக்காளத்தாரை, ஒத்து, திமிரி, இரட்டைப்பரி, சிலம்பு, திமிலை, பறை, தாளம், கொக்கரை, தவண்டை, குடமுழா, உடுக்கை, மணி, தக்கை, துடி, பம்பை, கண்டை, மகர யாழ், சிறுபறை, துத்திரி, இடக்கை, தண்ணுமை, சிறுமுரசு, கொட்டு போன்றவை முழங்க, கோமகனுக்கு மடவை, வள்ளி, அவ்வை ஆகிய மூவகைப் பெண்களும் ஆரத்தி எடுப்பர். அழகிய தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜவீதியில், பட்டத்து இளவலை எதிர்நோக்கி, எழுவகைப் படைப்பிரிவினரும் வரவேற்க அணி அணியாய்த் தயார் நிலையில் இருப்பர். ராஜபல்லக்கானது இளவலின் மெய்க்காப்பாளர்களால் புடைசூழ தூக்கப்பட்டு, கோட்டைக் கதவுகள் திறக்கப்படும்போது, அதன் எதிரே புலவர் பெருமக்கள் இளவலின் முன்னோர்களின் பெருமை பாடும் மெய்கீர்த்திகளைக் கோல் யாழ் கொண்டு இசையோடு பாடுவர். வில்யாழ் புடைசூழ, பாணர்களும் விரலியர்களும் மங்கல இசைமீட்ட, இளவரசன் செங்கதிரோனை வணங்கி, ஊர்வலத்தில் ஊர்ந்துவர ஆயத்தமாவான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a_3.jpg)
அவன் முன்பாக, பட்டத்து யானைமீது அமர்ந்த குரு, வெண்கலிங்க கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பார்.
அவர் பட்டத்து யானை அம்பாரியில் அமர்ந்து முன்செல்ல, ராஜபல்லக்கானது, குருநாதன் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தை நோக்கி, மக்கள் வெள்ளத் தினூடே மெல்ல நகரத்தொடங்கும்.
கோட்டு வாத்தியங்கள், ராஜபல்லக்கிற் குப் பின்னே, ஊர்வலத்திற்கான பிரத்யேக மங்கல இசைத்தொடர்கள் வர, அதன் பின்னால் ஒரு பதாதி போர்ப்படைகள் அடியெடுத்து வைப்பர்.
ஒரு பதாதி என்பது-
யானைகள் 3
தேர்கள் 10
குதிரைகள் 100
காலாள் 1000
கொண்ட படையாகும். அதன்பின்னே தண்டுப்படை வரும்.
யானைகள் 243
தேர்கள் 810
குதிரைகள் 8100
காலாள் 81000
கொண்டதுதான் ஒரு அரசரின் தண்டுப்படை. இப்படையினர்தான் கோட்டையைச் சுற்றி இருப்பார்கள்.
இத்தண்டு 100 எண்ணியளவு இருப்பது ஒரு அக்ரோணி.
இவர்கள் கோட்டையைச் சுற்றி ஒரு காததூர எல்லையில் அணிவகுத்து இருப்பார்கள்.
கரி மூன்று தேர் பத்து காலாளோ ராயிரம்
பரி நூற தாகும் பதாதி - வருந்தொகையால்
எண்பத்தொருமடங்கு தண்டாம் இவை நூறு
கொண்டதோர் அக்குரோணி கூறு.
-இதுவே சங்கத்தமிழ்ப் படை வெண்பா ஆகும்.
இதுபோல், ஒரு இளவரசன் பட்டம்
சூட்டும்போது போர் வராமல் தடுப்பதற்கும், கோட்டைக் கொத்தளங்களுக்குள் இருக்கும் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், விழா விருந்து நிம்மதியோடு அரங்கேறுவதற்கும், அரச விழாக்காலங்களில் இரவு- பகலாக, ஒரு அக்ரோணிப்படை கோட்டையைச் சுற்றிலும் ஒரு காத தொலைவில் விழிப்போடு இருந்து காவல்புரிவார்கள். இதனை நான்குபுறமும் காவல்புரியும் சதுரப்படை என்றும் கூறுவர்.
இனி வருவது ராஜ ஊர்வலத் திருவிழா...
(தொடரும்)
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/a-t.jpg)