ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வின் தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டியது பொறுமை மற்றும் நம்பிக்கை. இந்த இரண்டும் இருந்தால் வாழ்வில் வெற்றி உறுதி என்று ஆன்றோர்கள் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
வியாபாரி ஒருவர் பெருமாள் கோவிலுக்குச் சென்றார்.
அங்கு உபன்யாசகர் ஒருவர் கதை சொல்லிக்கொண்டிருந்தார். ""அஜாமிளன் என்பவன் ஒழுக்கமின்றி வாழ்ந்து வந்தான். ஆனாலும் சாகும் நேரத்தில் அவன் செய்த முற்பிறவிப் புண்ணியத்தால் தன் கடைசி மகன் நாராயணனைக் கூப்பிட்டான். "நாராயணா' என கத்திய நிலையில் அவனது உயிர் பிரிந்தது. ஸ்ரீமன் நாராயணனின் பெயரை உச்சரித்ததன் காரணமாக அஜாமிளனின் உயிரை விஷ்ணுதூதர்கள் வைகுண்டத்திற்கு எடுத்துச்சென்றனர்'' என்றார் உபன்யாசகர்.
இதைக் கேட்ட வியாபாரி தன் ஆறு பிள்ளைகளுக்கும் நரசிம்மன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கோவிந்தன், கோபாலன் என பெயரிட்டு வளர்த்தார். வயதான காலத்தில் நோய் வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்த அவருக்கு உயிர் பிரியும் நேரம் வந்தது.
பிள்ளைகளின் பெயரைச் சொல்லி அழைத்தார்.
அவர்கள் ஓடிவந்து கட்டிலைச் சுற்றி நின்றனர். அவர்களைப் பார்த்த வியாபாரி, "ஐயோ... என்னைப் பார்க்க அனைவரும் வந்துவிட்டால் நம் வியாபாரத்தை யார் பார்த்துக் கொள்வர்?' என்று சொல்லி வருந்தினார். அப்படியே அவர் உயிர் அடங்கியது.
ஈடுபாடில்லாமல் செய்யும் செயல்கள் பலன் தருவதில்லை என்பதை உணர்த்தும் வகையில், வியாபாரியின் உயிரை எடுத்துச்செல்ல விஷ்ணுதூதர் களுக்கு பதிலாக எமதூதர்கள் அங்கு வந்தனர்.
உள்ள உறுதிப்பாட்டுடன் கூடிய செயல் எத்தகையது என்றால்...
"அனந்தன்' என்ற ஏழுமலையானின் பக்தர் பெருமாளுக்கு மாலை சாற்றி மகிழ்வதையே தன் தினசரி கடமையாகக் கொண்டிருந்தார். கீழ்த்திருப்பதி என்று சொல்லப்படும் திருமலையின் அடிவாரப் பகுதியில் வசித்து வந்த அவர் இருள்பிரியாத இளங்காலைப் பொழுதிலேயே துயில் நீங்கி தோட்டத்திற்குச் சென்று பூக்களைப் பறிப்பார். பிறகு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அற்புதமாக மாலைகளைத் தொடுப்பார். பின்னர் கீழ்த்திருப்பதியிலுள்ள ராமானுஜ ஏரியில் நீராடுவார். அடுத்து மாலைகளுடன் ஏழுமலை சிகரத்திற்கு நடந்துசென்று, பெருமாளின் சந்நிதானம் அடைந்து பக்தியுடன் திருமாலுக்கு மாலைகளை சமர்ப்பிப்பார். இந்த பக்தித் தொண்டில் ஒருநாள்கூட அடியவர் பின்வாங்கியதில்லை.
உருக்குலையாத உறுதி கொண்ட பக்தர்களாக இருப்பினும் இறைவன் அவர்களை சோதித்தே ஆட்கொள்வான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதானே!
ஒருநாள் இருட்டு விலகாத இளங்காலையில் அனந்தன் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது பெருமாள் ஒரு பாம்பாக வந்து அவனைத் தீண்டினார். பாம்பு என்றால் படையும் நடுங்குமே! ஆனால் அடியவர் (அனந்தன்) எவ்வித சலனமுமின்றி மலர்களைக் கொய்தார். பின் திண்ணையில் அமர்ந்து மாலையும் தொடுத்தார்.
அப்போது அசரீரி வாக்கு, ""அனந்தா! சர்ப்பம் தீண்டியது தெரியுமா தெரியாதா?'' என்று கேட்டது.
""தெரியும்'' என்றார் அடியவர்.
""எவ்வித சலனமுமின்றி எவ்வாறு இருந்தீர்?'' என்றார் பெருமாள்.
""பாம்பு தீண்டியதை அறிவேன். ஆனால் அது விஷமுள்ளதா, சாதாரண பாம்பா என்று தெரியவில்லையே! அதனால் பயப்படவில்லை'' என்றார் அடியவர்.
""விஷமுள்ள பாம்பாக இருந்தால்...'' என்றது அசரீரி.
""விஷமில்லாத பாம்பெனில் எப்போதும் போல் நீராடி மாலையுடன் மலையேறி வந்து உம்மை தரிசிப்பேன். விஷப்பாம்பாக இருந்தால் நீராடுவதுகூட என் வேலையில்லை. பிணமாகிக் கிடக்கும் என்னை மற்றவர்கள் குளிப்பாட்டுவார்கள். உம்மை வைகுண்டத்திலேயே வந்து தரிசிப்பேன்'' என்றார்.
அடியவரின் உறுதிப்பாட்டினை அறிந்து பெருமாளே ஒரு கணம் ஆடிப்போனார். அன்றுமுதல் அனந்தன் "அனந்தாழ்வார்' என்று போற்றப்பட்டார். ஏற்றுக்கொண்ட லட்சியத்தில்தான் எத்தனை நெஞ்சுரம்! இப்படி அனந்தாழ்வாரின் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்திய வேங்கடேசப் பெருமாள் அவிநாசி வட்டம், மொண்டிபாளையம் என்ற கிராமத்தில் கொண்டம நாயக்கரின் வாழ்விலும் அற்புதங்கள் நிகழ்த்தி அருள்புரிந்துள்ளார். அது என்னவென்று பார்ப்போமா...
இறைவன்: வேங்கடேசப் பெருமாள்.
இறைவி: அலமேலுமங்கை.
உற்சவர்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேங்கடேசப்பெருமாள்.
தலவிருட்சம்: ஊஞ்சல் மரம்.
தீர்த்தம்: தெப்பத்தீர்த்தம்.
ஊர்: மொண்டிபாளையம்.
பழமையும் பெருமையும் வாய்ந்த இவ்வாலயம் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் நிர்வாகத்தில் நன்கு நிர்வகிக்கப்பட்டு கும்பாபிஷேகம் கண்டு தற்சமயம் பொலிவுடன் திகழ்கிறது. இங்கு பெருமாள் சாளக்கிராம சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள வேங்கடேசர் நான்குபுறமும் பட்டையாக, மத்தியில் கூர்மையாக வாழைப்பூ வடிவில் சுயம்புலிங்கம்போல காட்சிதருவது வேறு வைணவத்தலங்களில் காணமுடியாத சிறப் பாக உள்ளது.
ஊஞ்சல் மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் இவ்வூர் ஊஞ்சல்வனம் என்றும், வேங்கடேசர் குடியிருந்த இடமாதலால் ஸ்ரீநிவாசபுரம் என்றும் ஆதியில் வேறு பெயர்கள் கொண்டிருந்தாலும், தற்சமயம் மொண்டி பாளையம் பெருமாள் கோவில் என்றே வழக்கத்தில் உள்ளது.
துர்வாச முனிவர் மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் செல்லும்வழியில் இந்த வேங்கடேசரை வழிபட்டுச்சென்று பின்பு மோட்சம் அடைந்துள்ளார். திருப்பதி வேங்கடேசப் பெருமாள் இவ்விடத்தில் அருள்பாலிப்பதாகக் கருதப்படுவதால், திருப்பதிக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து நிறைவேற்றுகின்றனர். இதனால் இத்தலம் "மேலத்திருப்பதி' என்னும் சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு ஏழு மலைகளைக் கடந்து செல்வதைப்போலவே, இங்கும் இயற்கையாகவே அமைந்த ஏழு மேடுகளைக் கடந்தே செல்ல வேண்டும். திருப்பதியைப்போல இங்கும் பாஞ்சராத்ர முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள பெருமாளை மனதில் நினைத்து, அவரவர் இருக்கும் இடத்தில் அனுதினமும் கீழ்க்கண்ட சுலோகத்தைப் பாராயணம் செய்தால் தீயசக்திகள் விலகி நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
"ஓம் வேங்கடேசாய ஸ்ரீவேங்கடேசாய நம:
ஓம் அனந்தாய ஸ்ரீவேங்கடேசாய நம:
ஓம் கேசவாய ஸ்ரீவேங்கடேசாய நம:
ஓம் ஸ்ரீதராய ஸ்ரீவேங்கடேசாய நம:
ஓம் தாமோதராய ஸ்ரீவேங்கடேசாய நம:
ஓம் வாசுதேவாய ஸ்ரீவேங்கடேசாய நம:
ஓம் நாராயணநகேசாய ஸ்ரீவேங்கடேசாய நம:
ஓம் சாளக்கிராம நிவாசாய ஸ்ரீவேங்கடேசாய நம:
ஓம் திரிவிக்ரமாய ஸ்ரீவேங்கடேசாய நம:
ஒம் சங்கரப்ரிய மித்ராய ஸ்ரீவேங்கடேசாய நம:
ஓம் கோவிந்தாய ஸ்ரீவேங்கடேசாய நம:
தல வரலாறு
பல்லாண்டுகளுக்கு முன்பு கோவையை அடுத்துள்ள ஆலத்தூர் என்னும் கிராமத்தில் கம்மவார், மேதலமிட்டவார் குலத்தில் வந்த மாதவ நாயக்கருக்கு கொண்டம நாயக்கர் என்ற மகன் இருந்தான். சிறுவனான அவன் பசுக்களை மேய்த்து வருவான். புத்தி சுவாதீனம் இல்லாதவன் போன்று புலம்பிக்கொண்டும், தெய்வங்களை வணங்கிக்கொண்டும், அருகிலிருந்த குன்றின்மீது ஏறி குதித்துக்கொண்டும் இருந்தான். மாட்டுத் தொழுவத்திலேயே தங்குவான். அவனுக்கு பதினாறு வயதானது.
அவனது நடத்தையில் சந்தேகமுற்ற அவனது பெற்றோர்களும் ஊர் மக்களும் சேர்ந்து ஒருநாள் காலையில் அவன் இருந்த பசுக்கொட்டகையில் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது அவன் நான்கு சுமை புளியமர விறகுகளை நெருப்பிலிட்டு எரித்தபின், அதனைத் தனது கைகளால் அள்ளி வாழையிலையில் வைத்து, அருகிலிருந்த கிணற்றில் மிதக்கவிட்டு அதன்மீது அமர்ந்து, திருப்பதியை நினைத்து மந்திரங்களைக் கூறியபடி சுவாமியைப் பூஜித்தான். இக்காட்சி யைக் கண்ட அவர்கள் சிறுவனின் வடிவில் வந்திருப்பது வேங்கடாசலபதியே என்பதை அறிந்து, அவனை வணங்கி கோவில் எழுப்ப உத்தரவு கேட்டனர். அவர்களிடம்-
""இங்குள்ள சகல பிரஜைகளும் அடுத்த புதன்கிழமை மாலை வருவீர்களாகில் என்னுடைய அவதாரத்தை உங்களுக்குக் காட்டுகிறேன்'' என்றான்.
ஊர் மக்களும் அடுத்த புதன்கிழமை வந்துசேர, அவர்களுடன் ஆலத்தூருக்கு அருகேயுள்ள மொண்டிபாளையத்திற்குச் சென்று, நான்கு முழ அளவில் சதுரமாக ஒரு கோடு குறித்து, அங்குள்ள மண்ணை அப்புறப் படுத்தச் செய்தான். பின்னர் அக்குழியில் இறங்கி கொந்தாளத்தைக் கையிலெடுத்து, ""நாராயணா! கோவிந்தா! மாதவா!'' என்று சொல்லி, கொந்தாளத்தினால் அங்கிருந்த ஒரு பாறையின்மீது ஓங்கி அடித்தான். பாறை இரண்டாகப் பிளந்தது. பின் அப்பாறையை அப்புறப்படுத்திப் பார்க்கையில் பூ மணல்கள் நிறைந்திருந்தன. அம்மணலை மெதுவாகத் தள்ளிப்பார்க்க, முன்பு தேவர்களால் பூஜிக்கப் பெற்றதும், இப்போது இந்த தலத்தில் பூஜிக்கப்படுவதுமான சாளக்கிராம சிலையும், ஒரு சங்கும், தாமிரக் கிண்ணமும் இருந்தன. அவற்றை எடுத்து ஊஞ்சல் மரத்தின்கீழ் மணலைக் கொட்டி குடிசை கட்டி நாள்தோறும் கொண்டம நாயக்கர் பூஜித்து வந்தார். கலியுக சகாப்தம், 4813-ஆம் வருடம், நந்தன ஆண்டு, ஐப்பசி மாதம் 15-ஆம் நாள், புதன்கிழமை இரவு 24 நாழிகை அளவில், ரோகிணி நட்சத்திரம், அமரபட்சத்தில் மொண்டிபாளையம் வேங்கடேசப் பெருமாள் அவதரித்தார் என்று தலபுராணம் சொல்கிறது. பின்னர் படிப்படியாக அவருடைய வாரிசுகள் கோவிலை நிர்வாகித்து, பக்தர்களின் காணிக்கைகளைக் கொண்டு திருமாலின் அருளோடு திருக்கோவிலை விரிவுபடுத்தியுள்ளனர்.
பாதத்தின் சிறப்பு
கோவில்களில் சென்று பார்த்தால் பல தெய்வ வடிவங்களைக் காணலாம். ஆறுமுகம் கொண்ட முருகன், நான்குமுகம் கொண்ட பிரம்மன் முதலிய வடிவங்களில்கூட இரண்டு பாதங்கள்தான் இருக்கும். மிகவும் அபூர்வமாக ஏக பாத மூர்த்தி சிலையும், திரிபாதமூர்த்தி சிலையும் காணக்கிடைக்கின்றன. பொதுவாக எல்லா தெய்வ வடிவங்களுக்கும் இரண்டு பாதங்கள்தான் உள்ளன.
வைணவ சம்பிரதாயத்தைப் பொருத்த வரை பெரிய திருவடி என்றால் அது கருடாழ்வாரைக் குறிக்கும். சிறிய திருவடி என்றால் நம் அனுமனைக் குறிக்கும். இந்த சிறிய திருவடிக்கும் பெரிய திருவடிக்கும் மேலே மகாதிருவடி ஒன்றுள்ளது. அதுதான் விஷ்ணு திருவடி. அறிவே மயமான கடவுளுக்கு திருவடி எதுவென்றால் பராவித்தை, அபராவித்தை ஆகிய இரண்டும்தான்.
அதாவது உலகியல் அறிவும், பரம்பொருள் பற்றிய அறிவும்தான் அவரது திருவடிகள்.
பாதம் என்றால் தாங்குவது என்று பொருள். அந்தவகையில் அறிவுக்கடவுளைத் தாங்குகின்ற பாதங்கள் பராவித்தையும் அபராவித்தையும்தான். இந்த இரண்டுவிதமான பாதங்களையும் பற்றி வழிபட்டால் மனநிறைவுடன்கூடிய நிம்மதியான வாழ்க்கைதான். இகபர சுகம்தான். அத்தகைய இகபர சுகத்ûத் தந்தருள்கின்ற விஷ்ணு திருப்பாதம் சுவாமிக்கு இடப்புறம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
சிறப்பம்சங்கள்
✷ ஏகதள விமானத்தின்கீழ் பெருமாள் சாளக்கிராம சுயம்புமூர்த்தியாய் அருள் பாலிக்கிறார்.
✷ அலமேலுமங்கைத் தாயார் மகாலட்சுமி அம்சத்துடன், நான்கு கரங்களுடன் கிழக்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறாள்.
✷ இத்தலத்தில் சுவாமியை வணங்க வருபவர்களுக்கு துளசி, வேம்பு, வெள்ளெருக்குப் பூமொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சை சாறு ஆகிய மூலிகைப் பொருட்கள் கலந்த மல்லிப்பொட்டு எனும் சிறப்புப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இது தேகத்தில் தோன்றும் வெண்குஷ்டம் போன்ற கொடிய நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.
✷ மனிதர்களுக்கு நீங்கா செல்வச்செழிப்பும், பூரண ஆயுளும் தந்து எதிர்நோக்கி வரும் இடர்ப்பாடுகளைக் களைந்து பய உணர்வை முற்றிலும் போக்கும் சக்தி கொண்டது சுதர்சன ஹோமம். கட்டளைதாரரின் அடிப்படையில் ஸ்ரீசுதர்சன ஹோமம் நடத்தி அவர்களுக்கு நற்பலன்களைத் தரவல்லதொரு திருத்தலம்.
✷ திருமலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் அதேநேரத்தில் (காலை 10.30-12.00) இவ்வாலயத்திலும் நடைபெறும். இந்த உற்சவம் பக்தர்களின் வேண்டுதலின்பேரில் ஆண்டுமுழுவதும் நடைபெறுவது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
✷ சனி பகவான் காக்கை வாகனத்துடன் தோஷம் விலக மேற்கு நோக்கி அருள்வது சிறப்பான ஒன்று.
✷ சக்கரத்தாழ்வார் வலக்கரங்களில் சக்கரம், ஈட்டி, கத்தி, கோடரி, தண்டம், சதமுகாக்னி, மாவட்டி, சக்தி என்ற எட்டு ஆயுதங்களுடனும், இடக்கரங்களில் சங்கு, வில், கண்ணி, கலப்பை, வஜ்ரம், சூலம், கதை உள்ளிட்ட எட்டு ஆயுதங்களுடனும் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதி கொண்டு அருள்வது சிறப்பான ஒன்று.
✷ விஜயதசமி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு மற்றும் மார்கழியில் பதினோரு நாட்கள் பிரம்மோற்சவம் என பிரதான திருவிழாக்கள் நடைபெறும்.
✷ ஒவ்வொரு சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாருக்கும், பூர நட்சத்திரத்தன்று ஆண்டாளுக்கும், மூல நட்சத்திரத்தன்று வீர ஆஞ்சனேயருக்கும், திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
✷ ஒவ்வொரு தமிழ் மாதமும் 2-ஆவது மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் பஜனையும் அன்னதானமும் நடை பெறும்.
✷ பிரதி தமிழ் மாதம் முதல் நாள் தும்பிக்கையாழ்வாருக்கும், சர்ப்பதோஷத்தை போக்குகின்ற நாகர் களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.
✷ சுவாதி நட்சத்திரத் தன்று இத்தலத்திலுள்ள தசாவதார சிற்பங்களைப் பார்த்தாலே பயம்விலகி மனநிலை தெளிவாகும்.
வைகுந்தம், பாற்கடல், அவதாரங்கள், அந்தர் யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் திருமால் இருந்தாலும், உயிர்களின் மனதில் குடிகொள்வதைத்தான் பெரிதும் விரும்புகிறார். நம் மனமே அவர் குடியிருக்கும் கோவில். மாசற்ற மனமே அறம். மனசாட்சியே கடவுளின் சாட்சி. அதன்வழிப்படி நடந்து தூய செயல்புரிவதே மாட்சி. மனதை-
பொறிப்புலன்களை அடக்கி வாழ்வாங்கு வாழ்வதே வீடு. நல்மனமே வல்வினையைப் போக்கி அறம், பொருள், இன்பத்தை அடைவிக்கும் தனம்.
"மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும் நினைப்பரிய நீர் அரங்கத்துள்ளான்' என்று நம் மனத்தையே முதன்மைப்படுத்தி உபதேசிக்கிற ஆழ்வார்கள் வீற்றிருக்கின்ற தலமாம்- மண்டியிட்டு வணங்கினால் கண்டத்தையே கலைத்தருளும் தலமாம் மொண்டிபாளையம் வேங்கடேசப் பெருமாளை, அவர் அவதரித்த நாளான ஐப்பசி மாதம், ரோகிணி நட்சத்திரத்தன்று (20-10-2018 சனிக்கிழமை) தரிசிப்போம். தன்னிகரில்லாத பலன்களைப் பெறுவோம்.
காலை 6.30 முதல் பகல் 12.30 மணி வரையிலும்; மாலை 4.00 முதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும். பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர், அனைத்து தரப்பு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஆலய நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர்: ஆ.உ. இராமமூர்த்தி, பரம்பரை அறங்காவலர்கள்: ஆ.உ. வெங்டேசன், ஆ.ங. தேவராஜன், ஆ.உ. தேவராஜன், ஆ.ங. வெங்கடேசன், த. ஸ்ரீராம் இராஜன், ங. இராமகிருஷ்ணன், ய. பாலசுந்தரம், ய. பாபு, ஆ.ப. தேவராஜன்.
ஆலயத் தொடர்புக்கு:
செயல் அலுவலர் மு. சந்திரமோகன், ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் திருக்கோவில், மொண்டிபாளையம், ஆலத்தூர் அஞ்சல், அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம்-641 655. தொலைபேசி: 04296-289270.
ரவிச்சந்திரன், அலைபேசி: 98423 12760, 63802 30536, பாலாஜி, அலைபேசி: 98422 29960.
அமைவிடம்: கோயம்புத்தூரிலிருந்து அன்னூர்வழியாக 45 கிலோமீட்டர் தொலைவிலும், சத்தியமங்கலத்திலிருந்து புளியம்பட்டிவழியாக 27 கிலோமீட்டர் தொலைவிலும், திருப் பூரிலிருந்து அவிநாசிவழியாக 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது மொண்டிபாளையம். அன்னூரிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது.