"துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாந் தரும்.'

-திருவள்ளுவர்

ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும். செய்யும் வினையின் நன்மை- அதாவது நற்செயல், செயல் தூய்மையோ அவன் விரும் பிய எல்லாவற்றையும் கொடுக் கும் என்கிறார் வள்ளுவர்.

Advertisment

இரண்டு உயிரினங்களுக் கான தொடர்பை- இணைப்பை- நட்பை "உறவு' என்கிறோம். இதன் சொல் வளம் விசாலமானது. உறவுமுறை பல பரிணாமங்களை உள்ளடக்கியுள்ளது. எத்தகைய உறவுகளாக இருந்தாலும் அந்த உறவுகள் இணைந்து உயிர்ப்போடு இருக்க வேண்டும். பல உயிர்கள் இணைவதுதான் உறவு.

rr

உறவுகள் சேர்வதுதான் குடும்பம். பல குடும்பங் கள் சேர்வதுதான் கோத்திரம். பல கோத்திரங் கள் இணைவதுதான் சமூகம். பல சமூகங்களின் சங்கமம்தான் தேசியம். பல தேசிய இனங் களின் உருவாக்கம்தான் சர்வதேச உலகம்.

Advertisment

உறவென்னும் ஒற்றைப் புள்ளியிலிருந்துதான் உலகம் உருவாகிறது. அந்த உலகமே உறவுமுறையில் ஐக்கியமாகிவிடுகிறது. அந்த புனித உறவுகளை முறிப்பவன் சொர்க்கம் செல்ல மாட்டான்; நற்செயல் செய்து செயல் தூய்மை யைக் கையாள்பவனே சொர்க்கம் செல்வான் என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

மன்னர் ஒருவர் நன்றாக ஆட்சி செய்து வந்தார். நகர எல்லையில் மகா ஞானி ஒருவர் இருந்தார். அவர் சித்து வேலைகள் அனைத்தும் கைவரப் பெற்றவர். மன்னருக்குத் திருமண வயதில் ஒரு மகள் இருந்தாள்.

ஒருமுறை மங்கள வாத்தியங்கள் முழங்கிய ஒலிகேட்டு அரண்மனைக்கு வந்தார் மகாஞானி. வந்தவரை வணங்கினாள் இளவரசி. இளவரசியைப் பார்த்த ஞானி, "மன்னா, இவளை எனக்குக் கொடுத்துவிடேன்' என்று கேட்டார். அதைக்கேட்டு அதிர்ச்சியுற்ற மன்னர், "இந்த ஞானி சகல சித்துகளும் கைவரப் பெற்றவர். இவரை விரோதித்துக்கொள்ள முடியாதே' என யோசித்தார். உடனே உள்ளே சென்று கோழி முட்டை அளவில் இருந்த இரண்டு முத்துகளை எடுத்துவந்து, "இதுபோன்று 108 முத்துகளைக் கொண்டுவந்து தருபவர்களுக்குதான் இளவரசியைத் திருமணம் செய்துதர உள்ளோம்'' என்றார் மன்னர்.

"இதுபோன்று 108 முத்துகளை நான் எடுத்துவருகிறேன். அதுவரை உன் மகளை வேறு எவருக்கும் மணம்முடித்துவிடாதே'' எனக் கூறி வெளியேறினார் ஞானி.

மூன்று நாட்கள் தவமிருந்து, வருண பகவானிடமிருந்து 108 முத்துகளைப் பெற்றுக்கொண்டு அரண்மனைக்கு வந்தார் ஞானி.

"மன்னா, இதோ நீ கேட்ட முத்துகள்'' என்றார். திகைத்தார் மன்னர். இவரிடமிருந்து எப்படியாவது தப்பவேண்டுமே என்றெண்ணி, "குரு நாதா... பக்கத்து நாட்டு அரசன் எனக்கு பரமவிரோதி. அவன் இறந்துவிட, அவன் மகன் ஆட்சி செய்கிறான். அவன் தலையை எடுத்துவந்து கொடுத்தால் உங்களுக்கே என் மகளைத் தருகிறேன்'' என்றார் மன்னர்.

rr

"அதிலென்ன சிரமம். இதோ கொண்டு வருகிறேன்'' என்று சொல்லிப் புறப்பட்டார் ஞானி.

பக்கத்து நாட்டை அடைந்தவர் ராஜமாதா விடம், "அம்மா, உன் மகன் தலை எனக்கு வேண்டும்'' என கேட்டார். அவரைப்பற்றி நன்கு அறிந்திருந்த ராஜமாதா, "தலை என்ன சுவாமி... என் மகனை முழுமையாக உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவனை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்'' என்று கூறி, தன் மகனை அவரிடம் ஒப்படைத்தாள். மகிழ்ந்த ஞானி அரசகுமாரனை அழைத்துக்கொண்டு மன்னரிடம் போனார்.

"மன்னா... நீ கேட்டதைக் கொண்டுவந்துள்ளேன். திருமண ஏற்பாடுகளை உடனே செய்'' என்றார். வேறு வழியற்ற நிலையில் இளவரசியை அலங்கரித்துக் கொண்டு ஞானியின்முன் நிறுத்தினார் மன்னர்.

இளவரசியின் அருகில் தான் அழைத்துவந்த பக்கத்து நாட்டு அரச குமாரனை நிறுத்திய ஞானி, "இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவை. பகை நீங்கி இருநாடுகளும் ஒற்றுமையாக இருக்கும்'' என்றார். மன்னர் உட்பட அனைவரும் வியந்து மகிழ்ந்தனர்.

பகைமை நீங்கி ஒற்றுமையாக வாழவே மகான்களும் ஞானிகளும் பெரிதும் பாடு பட்டுள்ளனர். உறவுகளை முறித்துக்கொண்டு எதிர்மறை எண்ணத்துடன் செயல்படாமல், நேர்மறை எண்ணத்துடன் நற்செயல் புரிந்துவாழ வகைசெய்யும் அற்புதமான திருத்தலம்தான் வேளுக்குடி ஸ்ரீருத்ரகோடீஸ்வரர் ஆலயம்.

rr

இறைவன்: ருத்ரகோடீஸ் வரர்.

இறைவி: கோமளாம் பிகை.

புராணப்பெயர்: வேள்விக்குடி.

ஊர்: வேளுக்குடி.

தலவிருட்சம்: நெல்-மரம்.

தீர்த்தம்: சிவ தீர்த்தம் (கோடி தீர்த்தம்).

சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், காவிரி தென்கரைத்தலங்களில் வைப்புத்தல மாகத் திகழ்வதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் பல்வேறு சிறப் பம்சங்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் வேளுக்குடி. காலபூஜைகள் முறைப்படி நடக்கும் இத்தலத்தில் பிரம்மன், நாரதர், சாண்டில்ய முனிவர், வசிஷ்டர், இந்திரன், நந்திதேவர், நவகிரகங்கள் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வாலயம் மேற்கு நோக்கி அமைந் துள்ளது. பிரதோஷம், சிவராத்திரி, சனி மகாப் பிரதோஷம், நவராத்திரி, அன்னாபிஷேகம், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் சிவனுக்குரிய அனைத்து விசேஷங் களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

தலவரலாறு

பிரம்மரிஷி வசிஷ்டர், சூரிய குலக்கொழுந்து இராமபிரானுக்கு குறித்துக்கொடுத்த திருமணத் தேதி பிழையென்று அறிவிக்கப்பட்டதை அறிந்து தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவரால். "அடடா!

எத்தனைப் பெரிய தவறு செய்து விட்டோம்' என்று கலங்கினார்.

இராமனின் திருமணத்துக்கு மிகுந்த கவனம் செலுத்திப் பார்த்துதானே முகூர்த்த தேதி குறித்துக் கொடுத் தோம். ஆனாலும் இப்படி ஆகிவிட் டதே என்று வசிஷ்டர் தவித்து மருகினார்.

முனிவர் பெருமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, "நீங்கள் தேதியும் நேரமும் சரியாகத் தான் குறித்துக்கொடுத்தீர்கள். ஆனால் சதாசர்வ காலமும் தர்ப்பைப்புல்லை வாயில் வைத்திருக் கும் சக்கரவாகப் பறவை, தாங்கள் அருளிய அட்சரத்தைப் பிழையாக உச்சரித்ததால் வந்த குழப்பம்'' என்று எடுத்துரைத்தனர்.

எனினும் அவர் மனம் சமாதானமாகவில்லை.

வசிஷ்டர் குறித்த நேரம் சுட்டிக்காட்டப் பட்டதால், தன்னுடைய தவத்தில் பங்கம் ஏற்பட்டதாகக் கருதி அதற்குப் பரிகாரம் செய்து தீர்வுகாணவேண்டி தலயாத்திரை மேற்கொண்டார்.

rr

ஒவ்வொரு தலமாகச் சென்று அங்கே சிலகாலம் தங்கி இறைவனை நினைத்து தவத்தில் ஈடுபட்டார். இப்படியாக சித்தனக் குடி வழியாக வந்தவர் நெல்லிவனம் சூழ்ந்த பகுதியைக்கண்டு அங்கு ஓய்வெடுத்தார். அங்கிருந்து புறப்பட எத்தனிக்கும்போது, "இன்று சனிக்கிழமை; பிரதோஷமும்கூட. சனி மகாப்பிரதோஷம் சர்வ பாப விமோசனம். எனவே இந்த நெல்லிவனத் தில் ருத்ர ஜபம், பிரதோஷ பூஜை செய்து பயனடைவாயாக' என்று அசரீரி ஒலித்தது. ஆடிப்போனார் வசிஷ்டர். "என்ன பாக்கியம்... ஆஹா என்ன பாக்கியம்!' என்று கண்களைமூடி சிவனாரைத் தொழுதார்.

அந்த நெல்லிவனத்தில் தீர்த்தக்குளம் ஒன்றிருந்தது. அதில் நீராடி கரைக்கு வந்தவர் கோடி முறை ருத்ரஜபம் செய்வதென்று தீர்மானித்து ஜபத்தில் இறங்கினார். சனிக்கிழமையும் பிரதோஷ மும் கூடியவேளையில் மனமுருகி சிவனா ரைப் பிரார்த்தனை செய்ததன் பலனாக மனதிலிருந்த சஞ்சலங்கள் யாவும் மறைந் தன. மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் வேள்வியையும், கோடி ருத்ர ஜபத்தையும் நிறைவுசெய்தார். அங்கேயே வசிஷ்டருக் குத் திருக்காட்சி தத்ருளினார் சிவ பெருமான்.

பின்னாளில் இந்தத் தலத்தைப் பற்றியும், வசிஷ்டர் இங்கே வழிபட்டதையும் அறிந்து கோவில் எழுப்பினான் சோழ மன்னன்.

கோடிமுறை ருத்ரஜபம் செய்த தலம் என்பதால், இங்கே குடிகொண்டுள்ள சிவனாருக்கு ருத்ரகோடீஸ்வரர் என்று திருநாமம் சூட்டப்பட்டது. தீர்த்தக் குளக் கரையில் ஜபம் செய்ததால் சிவதீர்த்தம், கோடிதீர்த்தம் எனவும், வேள்வி செய்த தலம் என்பதால் வேள்விக்குடி எனவும் பெயர் வந்தது. வேள்விக்குடி என்பதே நாளடைவில் மருவி தற்போது வேளுக்குடி என்றழைக்கப்படுகிறது.

தட்சயாகத்தின் இறுதியில் சிவபெருமான் கோடி ருத்ர ஸ்வரூபமாக ருத்ர தாண்டவம் ஆடிய போது, யாக குண்டத்தில் விழுந்து உயிர் நீத்த தேவி, பின்னர் குழந்தையாக வந்து சிவனது கோபம் தனித்ததும் பிரதோஷ தினத்தில்தான். இந்த நிகழ்ச்சி நடந்ததும் வேளுக்குடி தலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ண பரம்பரைச் செய்திகளும் இத்தல பிரதோஷ சிறப்பினை எடுத்துரைக்கின்றன.

rr

சிறப்பம்சங்கள்

=சிவபெருமானின் யோகத்தீயிலிருந்து தோன்றியவர் இங்குள்ள நந்திதேவர். "நந்துதல்' என்றால் வளர்தல், நிலையாய் இருத்தல் என்று பொருள். எப்போதும் ஞானத்தீயாக ஒளிரும் பெருமானுடன் இணைந்திருப்பதால் இவர் நந்தீ என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான்மீது இவர் கொண்டிருக்கும் அன்பு மங்காது வளர்வதால் இவருக்கு நந்தி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தகைய அதிகார நந்தியுடன் இணைந்து பிரம்ம ரிஷி வசிஷ்டர் வேள்வி நடத்தியது இத்தலத்தில் தான் என்பது சிறப்பான ஒன்று.

=கோவிலையும் அமைத்து ஊரையும் உருவாக்கிய மன்னன், இந்த ஊரில் எப்போதும் வேத கோஷங்கள் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்; வேள்விகளும் நடந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சோழ தேச அந்தணர்கள் சிலருக்கு இந்த ஊரை எழுதிக் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் வழங்கினான். இந்தக் கோவிலுக்கு ஏராளமான நிலங்களையும் ஆடுமாடுகளையும் அள்ளித் தந்துள்ளனர் மன்னர் பெருமக் கள் என்று தல புராணம் சொல் கிறது.

=இரண்டாம் குலோத் துங்க சோழன் தொழுநோயால் தவித்துக் கொண்டிருந்தான். வேளுக்குடிக்கு வந்து கோடி தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ வழிபாடு செய்ய, நோய் நீங்கப் பெற்றான் என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

=மூலவர் ருத்ரகோடீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்புலிங்க வடிவமாக மயானத்தை நோக்கி அருள் பாலிப்பது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

ருத்ரகோடீஸ்வர சுவாமியின் அருகில் அபூர்வ மான ருத்ரபீடம் என்னும் உருண்டை வடிவில் சிறிய பாணம் உள்ளது. அதனருகில் திரிசூலம் உள்ளது. கேதார்நாத் மகாகாளேஸ் வரர் ஜோதிர்லிங்கத்திற்கு திரிசூலம் உள்ளது போல், வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் சந்நிதியிலும் உள்ளது. இது மிக அபூர்வமான அமைப்பாகும். இந்த அமைப்புடன்கூடிய தலத்தில் பிரதோஷ தரிசனம் செய்தால் 12 ஜோதிர்லிங்களையும் தரிசித்த பயன் கிட்டும்.

=இத்தல பிரதோஷ மகிமையை உலகிற்கு வெளிப்படுத்திய சாண்டில்ய முனிவர் வழிப்பட்டுப் பேறு பெற்றுள்ளார். தட்சிணாமூர்த்தி சந்நிதியில் சனகாதி முனிவர் களுக்கு பதிலாக சாண்டில்ய முனிவர் சீடருடன் அமர்ந்திருப்பது தனிச்சிறப்பு.

=பிரம்மன், விஷ்ணு, நாரதர் வழிபட்டு அருள்பெற்றதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

வேளுக்குடி ஊரின் எல்லையில் 200 அடி நீளம், 60 அடி அகலத்துடன் 12,000 சதுர அடி சுற்றளவில், வயல்வெளிகள் சூழ மயானத் தைப் பார்த்தவாறு நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று, கும்பாபிஷேகம் கண்டு பொலிவுடன் அமைந்துள்ளது ஆலயம்.

கருவறையில், மூலவர் ருத்ர கோடீஸ்வரர் அழகுறக் காட்சியளிக்கிறார். சூரிய சந்திரர்கள் அவரைப் பார்த்தவண்ணம் உள்ளனர். கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, துர்க்கை, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு அருள்கின்றனர். முன்புறம் தெற்குப் பார்த்த படி நின்ற நிலையில் அருள்மிகு கோமளாம் பிகை அம்மன் திரிசூலம் கையில் ஏந்தியபடி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். சூரியன், காலபைரவர் திருமேனிகள் உள்ளன. சிவாலயங்களுக்குரிய மற்ற சந்நிதிகளும் சிறப் பாக உள்ளன.

மேற்கு திசை நோக்கிய சிவாலயங்கள், காமிகாகம விதிப்படி சத்யோஜாத நிலையில் வரசித்தியுடன் விளங்கிவரும் நிலையில் அமைந்துள்ளன. மேற்கு பார்த்த சந்நிதியிலுள்ள திருமூர்த்தங்கள் ஆச்சார்ய பதவியில் உள்ளதாக இருக்கும். உதாரணமாக, பழனியாண்டவர் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இவர் முழுமுதற்கடவுளான ஈசனுக்கே குருவாக விளங்கியவர். அதுபோல இறைஞானம் மேலிட்ட ஞானிகள் பிறவியை நீக்கிட விரும்புவார்கள். இதனைப் பிறவி அஸ்தமனம் என்பர். அதாவது சூரிய அஸ்த மனம் மேற்கே நடைபெறுவதுபோல், ஆன்மிக பக்தர்களின் பிறவி அஸ்தமனத்தின் பொருட்டே இறைவன் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். ஞான சொரூப நிலையில் இறைவன் மேற்கே இருக்கவேண்டும் என்பதே ஐதீகம்.

"சொல்லெணாத் துயரமாயிருந்தாலும் சரி- தீராத நோயாயிருந்தாலும் சரி- ஊரடங்கு காலத்தில் கட்டுக்கடங்காத கடன்களாகி யிருந்தாலும் சரி- எந்த நிலையிலும் மனத் துயரங்கள், மனசஞ்சலங்கள் நீங்கி வாழ ஐந்து பிரதோஷ வழிபாடு செய்து அதற்கு நிவர்த்தி காணலாம். உள்ளபடி சொல்வதென்றால், உலகிலேயே ஒரு பிரதோஷ வழிபாடு செய்தால் கோடி பிரதோஷ வழிபாட்டின் பலன்களைத் தந்தருளும் தெய்வமாம் வேளுக்குடியில் சுயம்புவாய் வீற்றிருக்கும் ருத்ரகோடீஸ்வரரை ஒரு பிரதோஷ நாளில் வழிபாடு செய்யுங்கள். பிரகாசமான வாழ்வைப் பெறுங்கள்'' என்று ஆத்மார்த்தமாகக் கூறுகிறார் ஆலயப் பிரதான அர்ச்சகரான ஷண்முக சிவாச்சாரியார்.

காலை 6.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் ஆலயம், வேளுக் குடி (அஞ்சல்), கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம்- 610 102.

பூஜை விவரங்களுக்கு: ஷண்முக சிவாச்சாரியார், செல்: 96886 37117.

அமைவிடம்: திருவாரூரிலிருந்து மன்னார் குடி செல்லும் வழியில், திருவாரூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மன்னார்குடியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது வேளுக்குடி. பஸ் வசதி உண்டு.

படங்கள்: போட்டோ கருணா