க்கலும் அழித்தலும் தன்னாலெனப் பிதற்றியே

போக்கிரித் தனங்கள் செய்யும் பொல்லா குருமார்கள்

மூர்க்கமாய் சொன்னபடி முடியாவிடில்

அக்கணமே

Advertisment

சாதுர்யமாக தெய்வ சங்கல்பம் என்று கூறி ஏமாற்றுவாரே.'

(சிவவாக்கியர்)

அகத்தியர்: சைவத்தமிழ்ச் சித்தர் பெருமக்களே, சித்தர் பெரியோர்கள் கூடியுள்ள இந்த பகுத்தறிவுத் தமிழ்ச் சபையில், தேரையர் பெருமான் உயிரினங்களின் ஆன்மாவை இயக்கும் ஐம்புலன்களின் செயல்பாடுகள் பற்றி தெளிவான விவரங்களை விளக்கமாகக் கூறிவருகிறார். நேற்றைய தினம் நாக்கின் செயல்பாடுகள் பற்றிக் கூறினார். அதன் தொடர்ச்சியாக இன்று மூச்சுப்பயிற்சி (பிரணாயாமம்), பிரத்தியாகாரம், தாரணை, தியானம் மூலமாக நிர்விகல்ப சமாதிநிலையை அடைய நாக்குதான் முக்கியமாக செயல்படுகிறது என்பது பற்றி அவர் கூறுவதைக் கேட்போம். தேரையர் பெருமகனே, இனி தாங்கள் உரையைத் தொடர்ந்து கூறுங்கள்.

Advertisment

தேரையர்: இந்த தமிழ்ச் சபையில் கூடியிருக்கும் அகத்தியரின் மாணாக்கர்களாகிய அனைத்து சித்தர் பெருமக்களும், தங்கள் சித்தத்தால் சித்தத்தை அடக்கி, ஆன்மாவின் அலைபாயும் நிலையைத் தடுத்து நிறுத்தி, அட்டமா சக்திகளையடைந்து, மரணத்தை வென்று என்றும் வாழ்பவர்கள். தங்கள் பகுத்தறிவால் சிந்தித்து, அனுபவத்தால் அறிந்து செயல்பட்டு வாழும் வழிமுறைகளைத் தங்களின் இனமான தமிழின மக்களுக்கு போதனை செய்து, அவர்களும் வாழ்வில் உயர்வுபெற வழிகாட்டிகளாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். யான் கூறும் அனைத்தையும் அறிந்தவர்கள்தான் நீங்கள் என்பதை நானும் அறிவேன். இருந்தபோதும் என்னையும் ஐம்புலன்களைப் பற்றிய உண்மைகளை இந்த தமிழ்ச் சபையில் கூற அனுமதி தந்ததற்கு என் நன்றியையும் சிரம்தாழ்ந்த வணக்கத்தையும் கூறிக்கொள்கிறேன்.

sd

இந்த பூமியில் பிறந்தவர்களில் இருவகை மனிதர்கள் உண்டு, கணவன்- மனைவி, குழந்தைகள் என வாழும் இல்லறவாசிகள் ஒரு பிரிவினர். ஏதாவது ஒரு சக்தியை அடையவேண்டும்; மனம் அடக்குதல்; ஆத்மாவை அறிதல்; மந்திரம், தந்திரம்மூலம் சித்திகளை அடையவேண்டும்; கடவுளைக் காணவேண்டும் என இதுபோன்ற பலவிதமான எண்ணங்களைக்கொண்டு பக்தி, பாராயணம், படையல், ஜபம், தியானம், யோகம் போன்ற இன்னும் பலவித முறைகளில் ஈடுபட்டு செயல்களைச் செய்து, அதில் சித்திபெற முயற்சிசெய்து வருகின்றவர்கள் மற்றொரு பிரிவினர். இந்தப் பிரிவினர் தங்களை ஆச்சாரியார்கள், குருமார்கள், உபாசகர், மந்திரவாதி என பலவிதமான பெயர்களால் அழைத்துக் கொள்வார்கள்.

இல்லறவாசிகள் தங்களது குடும்பம், தொழில், வருமானம் என அன்றாட கடமைகளைச் செய்துகொண்டு, தினமும் மூச்சுப்பயிற்சி செய்துவருதல் வேண்டும். இந்த மூச்சுப்பயிற்சி என்பது இல்லறவாசிகளுக்கானது. மூச்சுப்பயிற்சி செய்துவருபவர்களுக்கு உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதில் உண்டாகும் பயம், மன சலனம் போன்றவை நீங்கி, சிந்தித்துச் செயல்படும் திறன், மனதில் அமைதி, மகிழ்ச்சி, பொறுமை போன்ற சக்திகள் அதிகமாகும். நோய்த் தாக்கம் எதுவுமின்றி நீண்ட ஆயுளுடன் இந்த பூமியில் வாழ்வார்கள்.

குடும்பத்தில் உள்ளோர் இல்லறவாசிகள். நடக்கும்போதும், உண்ணும்போதும், படுக்கையிலும், செயல்படும்போதும் எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் இவர்கள் மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்யலாம். இதைச் செய்ய இல்லற வாசிகளுக்கு நேரம், காலம் என்ற கணக்கெல்லாம் இல்லை. அவர்கள் தங்கள் சுய உழைப்பால் பொருள்தேடி வாழ்பவர்கள். அவர்களுக்கு வாழ்வில் எவ்வளவோ பிரச்சினைகள் அவ்வப்போது உண்டாகி மனதில் துன்பத்தைக் கொடுத்துவரும். அவர் கள் மூச்சுப்பயிற்சி செய்துவந்தால் அந்தத் துன்பங்களைத் தீர்க்கும் வழிமுறைகள் தெரியவரும். மனதில் தைரியம் தானாக உண்டாகும். உடல் நோயின்றி இருப்பதால் நோய்பயம், மரணபயம் போன்றவை இருக்காது. தினமும் மூச்சுப்பயிற்சி செய்து உயிர்க்காற்றை சேமித்து வருவதால் அவர்கள் ஆயுளை அவர்களே அதிகமாக்கிக் கொண்டு நீண்டகாலம் வாழ்வார்கள். தினமும் பிராணாயாமம் செய்துவருபவர்களுக்கு தங்களது முற்பிறவி பாவ- சாப கர்மவினைகளை அறிந்துகொள்ளும் சக்தியை அவர்களே அடைந்துவிடுவார்கள். தன்னிலி-ருந்து தன்னை அறிந்துகொண்டபின் பாவ- சாப நிவர்த்திகளை அறிந்து, அதனால் உண்டாகும் சிரமங்களைத் தடுத்துக் கொள்வார்கள்.

இந்த மூச்சுப்பயிற்சியை ஒரு சில மதம், இனத் தைச் சேர்ந்தவர்கள்தான் செய்யவேண்டும் மற்றவர்கள் செய்யக்கூடாது என சிலர் கூறுவார்கள். சித்தர்களால் அறிந்து கூறப் பட்ட மூச்சுப்பயிற்சி எனும் யோக் கலையை இந்த பூமியில் மனிதராகப் பிறக்கும் ஆண்கள்- பெண்கள் என அனைவரும் மதம், இனம் என்று எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் செய்துவரலாம். இல்லறத்தில் இருப்பவர்களுக்காகவே பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி முறையை சித்தர்கள் தெளிவாகப் பிரித்துக் கூறியுள்ளனர். பிராணாயாமம் இல்லறவாசிகளுக்கானது.

பக்தி, பாராயணம், ஜபம், தியானம், மாந்திரீகம், ஆன்மாவை அறிதல், மனதை அடக்குதல், கடவுள் அருள்பெற- கடவுளைக் காண உபாசனை என்னும் இதுபோன்ற பலவிதமான செயல்களைச் செய்து சக்தியும் சித்தியும் பெற முயற்சிப்பவர்கள் மற்றொரு பிரிவினர். இதில் சிலர் நிர்விகல்ப சமாதி நிலையை அடைய முயற்சித்து செயல்படுபவர்களும் உண்டு. நிர்விகல்ப சமாதியை அடைய முதல்படி இந்த பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சிதான்.

ஒரு மனிதன் 12 முறை மூச்சுப்பயிற்சி செய்தால் அது ஒரு பிரத்தியாகாரக் கணக்காகும். 12 மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எவ்வளவு சிரமமோ, ஒரு பிரத்யாகாரம் செய்ய அவ்வளவு சிரமம் உண்டாகும். ஒருவன் 12 பிரத்தியாகாரம் செய்தால் அது ஒரு தாரணை கணக்காகும். 12 பிரத்தியாகாரம் செய்வது எவ்வளவு சிரமமோ, அவ்வளவு சிரமம் ஒரு தாரணையைச் செய்து முடிக்க ஏற்படும். மிகவும் சிரமப்பட வேண்டும். ஒருவன் மிக சிரமப்பட்டு பன்னிரண்டு தாரணைகளைச் செய்து முடித்தால்தான் அவனுக்கு தியானம் சிந்திக்கத் தொடங்கும். இந்த தியான நிலையைத் தொடர்ந்து செய்து தக்கவைத்துக் கொள்பவன்தான் நிர்விகல்ப சமாதி நிலையை அடையமுடியும்.

போகர்: தேரையர் சித்தரே, இந்த பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் போன்றவற்றைச் செய்துமுடித்து சமாதி நிலையை அடைந்தால் கடவுளைக் காணலாம்; கடவுள் அருளைப் பெறலாம்; பல சக்திகளைப் பெறலாம் என சில மதங்கள் கூறுகின்றன. இது உண்மையா? யோகப்பயிற்சி செய்து நிர்விகல்ப சமாதி நிலையை அடைபவர்களேக்குக் கடவுள் காட்சிதருவாரா?

தேரையர்: போகர் பெருமானே, யோகப் பயிற்சி சாதனையில் சித்திபெற்றவர்களானா லும், பக்தி, பாராயணம், பூஜை, உபாசனை என எதைச் செய்பவர்களானாலும் கடவுளின் தரிசனத்தைப் பெறமுடியாது. ஆனால் யோகப்பயிற்சி செய்பவர்களுக்கு எண்ணம் இறந்து, மனம் அழிந்துபோய், அதன்பிறகு தானே பிரம்மம் ஆவார்கள்.

அகத்தியர்: போகர் சித்தரே, காண முடியாத ஒன்றை எவரும் எந்த செயலையும் செய்து பார்க்கமுடியாது. மனிதன் கற்பனையில் உருவாக்கிய சித்திரங்களுக்கும் சிலைகளுக்கும் காரணம் கூறலாம். ஆனால் காரியம் செயல்படாது. இந்த பூமியில் அவரவர் பிழைக்க செய்துகொண்ட மாயமிது. உங்கள் விளக்கத்தை தொடர்ந்து கூறுங்கள்.

போகர்: தேரையர் பெருமானே, நிர்விகல்ப சமாதிநிலை பற்றிக் கூறுங்கள்.

தேரையர்: நிர்விகல்ப சமாதி என்பது, ஒரு மனிதன் எந்த நினைவும் மறதிகளும் இல்லாமல், தன்னைத் தானே மறந்து, சுய நினைவற்று இருப்பதாகும். எண்ணங்களால் உருவாகும் மனம், ஆன்மா அசைவற்று, அகம், புறம் ஆகியவற்றின் தொடர்பின்றி, உடல், ஆன்மா எந்த உணர்வுமின்றி இருக்கும் நிலையே சமாதி நிலையாகும். எப்பொழுதும் இயக்கமில்லாமல் இறந்தவர்போல், இந்த பிரபஞ்ச தொடர்பில்லாத அசைவற்ற நிலையே நிர்விகல்ப சமாதி நிலையாகும்.

ஒருவருக்கு தன்னிலை மறந்த சமாதிநிலை யோகப்பயிற்சிமூலம் மட்டுமே உண்டாகுமே தவிர, வேறெந்த வகையான பக்தி, பூஜைகள், ஜெபம், மந்திரச் செயல்களால் ஏற்படாது. இதுபோன்ற செயல்களால் மனமடக்கம், நிர்விகல்ப சமாதி நிலையை அடையமுடியாது.

போகர்: யோகப்பயிற்சிமூலம் சித்தியடைய வேண்டும்- சமாதி நிலையை யடைந்து பிரம்மநிலையை அடையவேண்டு மென்றால் மனம், ஆன்மா இயங்கக் கூடாதென்று கூறுகிறீர்கள். யோகம் செய்யும் போது மனதில் வேறு எண்ணங்கள் தோன்றா மல், மனதையடக்கி யோகப்பயிற்சி செய்ய வழிமுறைகள் உண்டா? மனமடங்க அந்த வழிமுறைகளைக் கூறுங்கள்.

அகத்தியர்: போகர் பெருமானே, இன்று சபையை முடித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உங்கள் கேள்விக்கு நாளைய பகுத்தறிவுத் சபையில் தேரையர் பதில் கூறுவார். அதை அனைவரும் அறிவோம். இன்று சபை கலையலாம்.

"சித்தாகுஞ் சித்தியுமா மெட்டெட் டாகுந்

திறமாக நின்றவர்க்கு தியானஞ் சித்தி

வெற்றான வேதமந் திரத்தைப் பாவி

சலசலவென பேசிச்சே விப்பார் கோடி

கத்தாதும் நாய்போல கத்தி யென்ன

காசுக்கு மாகாது சித்தி இல்லை

முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு

மோசமிந்த வேத மெல்லாம் பொய்யென் பாரே.'

(சட்டை முனி சித்தர்)

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)