"அருவாயும் உருவாயும் அந்தி யாயும்

அந்தமாயும் ஒளியாயும் ஆதி யாயும்

குருவாயுங் குழிவாயுஞ் சீவனாயும்

செறிந்த வாயுவைப் போற்றி யாடுபாம்பே.'

Advertisment

(பாம்பாட்டிச் சித்தர்)

சுந்தரானந்தர்: அளவிடமுடியாத ஆற்றலும், அட்டமா சக்திகளையும் பெற்ற எங்கள் ஆசானே, பதினெட்டு சித்தர்களுக்கும் பகுத்தறிவை போதித்தவரே, சுய அறிவாலும் அனுபவத்தாலும் அவரவர் வாழ்வில் நன்மைகளை அடைந்துகொள்ளும் வழியைக் காட்டியருளிய அகத்தியர் பெருமானே, தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.

ஆசானே, நேற்று பஞ்சபூதங்கள் ஒன்றுடன் ஒன்றிணைந்து உடலுறுப்புகளை செயல்படுத்தும் முறைகளைக் கூறினீர்கள். இன்று சரீரத்தில் நோயை உண்டாக்கும் சக்திகளையும், அதனால் உண்டாகும் காரண காரியத்தையும் கூறுங்கள்.

Advertisment

siddhar

அகத்தியர்: சித்தர் பெருமக்களே, உலகில் ஜீவராசிகளின் உடற்கூற்றையும், உடலைத் தாக்கும் நோய்களையும், அந்த நோய்கள் தீர சரியான மூலிகைகளையும் முறையாக, முழுமையாக அறிந்தவர் நமது தேரையர் சித்தர்தான். உங்களுக்கு இதைப்பற்றி அவரே இப்போது கூறுவார். அவர் கூறுவதை அனைவரும் அறிவுடன் கேட்டுப் புரிவோம். தேரையரே, உடலில் நோய் உருவாக்கம் பற்றிய உண்மைகளைத் தமிழ்ச் சபையில் கூறுங்கள்.

தேரையர்: இந்த தமிழ்ச்சங்கத்தின் தலைமையானவரும், தமிழ்மொழி காவலருமான ஆசான் அகத்தியருக்கும், அனைத்து சித்தர் பெருமக்களுக்கும் அடியேனின் வணக்கம்.

ஒரு ஜீவனின் உடல், அவன் உண்ணும் உணவால்தான் சக்தியைப் பெறுகிறது. சுவாசக் காற்று உயிரைத்தந்து, உடலில் தங்கி உடலை இயக்குகிறது. ஆன்மா அவரவர் செயலால் இயக்கப்படுகிறது. இந்த பூமியில் பிறக்கும் அனைத்து மனிதர்களுக்கும் ஆயுள் நூறுதான். ஆனால் ஒவ்வொரு வரும் தன் ஆயுளைக் கூட்டியோ குறைத்தோ மரணமடைவது அவரவர் செயலால்தான்.

சரீரத்தில் நோய் உண்டாக் காரணம் ஒருவர் உண்ணும் உணவும், அவரது மனமும்தான். மனம் வருந்தும்போது உடலில் நோய் உண்டாகி சிரமம் தருகிறது. அதேபோன்று உண்ணும் உணவிலுள்ள பஞ்சபூத சக்திகள், உடலினுள்ளே வாதம், பித்தம், சிலேத்துமம் (கபம்) என்ற முத்தோஷங்களை உருவாக்கி செயல்படவைத்து நோயை உருவாக்குகிறது.

"காரணமாம் மாந்தர்க்கு நாடி சொல்வேன்

கருவான எழுபத்தியீரா யிரந்தான்

பூரணமா மதைக்குறுக்கித் தச நாடியாகப்

பூட்டினேன் குருநாடி சூதநாடி தானே.'

பொருள்: இந்த உலகில் பிறந்த மனிதன் முதலான அனைத்து உயிர்களுக்கும், அவை தாயின் கருவில் இருக்கும்போதே, 72,000 நரம்புகளும் இந்திரியங்களும் உருவாகிவிடும். இவற்றை நான் பத்து நாடிகளாக சுருக்கி வரையறை செய்து, அவற்றை குருநாடி சூதநாடி என்று இரண்டு பாகமாகக் கொண்டு அறிந்தேன்.

"தோரணமாம் வாதமென்ற நாடி தானுந்

தொகுப்பான கானகத்து மயில் போலாகும்

வாரணமாம் பித்தமது வட்டை போலாம்

வளமான சிலேற்றுமமது தவளை யாமே.!'

உண்ணும் உணவு நரம்புகளுக்கு சக்தியைத் தந்து செயல்படச் செய்வது வாதநீர் ஆகும். மனதின் செயல்பாட்டை நிர்ணயிப்பது, உணவை ஜீரணிக்கச் செய்வது பித்தநீர் ஆகும். உடலில் நீர்சக்தியைத் தருவது சிலேத்துமம் (சளி) ஆகும். இந்த வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவை சரியான அளவில் இருக்கும்போது, எந்தவிதமான நோய் பாதிப்பும் உண்டாகாது. இவற்றின் அளவு கூடிக் குறைந்து, ஏற்றத்தாழ்வுடன் இருக்கும்போது சரீரத்தில் நோய் தாக்க ஆரம்பித்துவிடும்.

வாதநீர் தோரணம் கட்டினாற்போல் சரீரமெங்கும் பரயிருக்கும். இந்த வாதநீர் கானகத்து மயில் தோகைவிரித்து அகன்றி ருப்பதுபோல், உடலெங்கும் நரம்புகளில் பரந்து பரவியிருக்கும்.

பித்தம் அட்டைபோல் சுருண்டு, ஒரே இடத்தில் பித்தப்பையில் இருக்கும். சிலேத்துமம் என்ற சளிநீர், தவளை ஓடுவதுபோல், நுரையீரல், மூக்கு, தலை என உடலின் பல பாகங்களில் ஓடித் தங்கியிக்கும்.

"ஆமேதான் நாடிமூன் றோடினால்

அப்பனே சன்னியது வந்து கூடும்

போமேதான் வாதமது திமிர்ந்து நின்றால்

பொல்லாத எமனுக் குறுதி யாகும்.'

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில், வாதநாடி அதிகமாகிவிட்டால் ஜன்னியால் சிரமப்படுவான். உயிருக்கும்கூட அபாயம் உண்டாகலாம்.

"சாமேதான் பித்தமது வழுதிற் றானார்

சார்வாக வாசாத்திய முடனே சேரும்

சாமேதான் சிலேற்றுமமது கோபித் தாக்கால்

சடுதியா லெமபதி சேருவானே.'

உடலில் பித்தம் கூடி வழிந்தால் மனநிலை பாதிப்பு, ஜீரண உறுப்புகள் பாதிப்பினையும், சிலேத்துமமாகிய சளி அதிகமானால் மூச்சுத் திணறல் உண்டாகி உயிருக்கு பாதிப்பையும் உண்டாக்கும்.

"சேருவார் வாதத்தில் பித்த மாகில்

செழிப்பான வார்த்தை குழறிப் பேசும்

கூறுவார் பித்தத்தில் வாதமாகில்

குணமான திரேகமது வெளுப்பு மாகும்.'

சரீரத்தில் வாதம் அதிகமாகி அதனுடன் பித்தமும் சேர்ந்தால், நரம்புகள் பலவீனமாகும். குழறிக் குழறிப் பேசுவான். பித்தம் அதிகமாகி அதனுடன் வாதம் சேர்ந்தால், ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைந்து, ரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய்கள் உண்டாகும். உடம்பு வெளுத்துப் போகும்.

"தீருவார் சேற்றுமமத்தில் பித்த மாகில்

திரேகமது மஞ்சணிக்கும் மலம் வெளுக்கும்

ஊருவார் தொந்தத் திரமாகி நின்றால்

உடல்வலிக்கும் நா சிவக்கும்

முன்னம் பாரே.'

உடம்பில் சளி நீருடன் பித்தம் சேர்ந்துவிட்டால், சரீரம் மஞ்சள் நிறமாகும். மலம் வெள்ளையாகப் போகும். உடல் சக்தி குறைந்து வலியெடுக்கும். நாக்கு சிவப்பாகும்.

"பாரப்பா வாதமது தித்திப் பாகும்

பாங்கான பித்தமது கசப்பு மாகும்

சீரப்பா சேத்துமமது புளிப்பு மாகும்

சிறப்பான தொந்தமது வியாதி மெத்த.'

வாதம் இனிப்பு சுவையுடையது. உடம்பில் வாதம் அதிகமானால் வாய் இனிக்கும். பித்தம் கசப்பு சுவையுடையது. பித்தம் உடம்பில் அதிகமானால் வாய் கசக்கும். சிலேத்துமம் புளிப்புச் சுவையுடையது. சிலேத்துமம் அதிகமானால் வாய் புளிக்கும்.

ஒருவருக்கு நோய் வரும்போது வாய் இனிப்பாக இருந்தால், அந்த நோய் வாதத்தி னால் உருவானது என அறிந்துகொள்ள வேண்டும். வாய் கசப்பாக இருந்தால் அந்த நோய் பித்தத்தினால் வந்தது என்று அறியலாம்.

வாய் புளித்தால் அந்த நோய் சிலேத்துமத்தால் (சளி) வந்ததென்று அறிந்து கொள்ளலாம்.

"கூரப்பா சப்தங்கள் மாறிப் போகும்

குடிமாங் காந்தலது வதிக முண்டாம்

தீரப்பா மேனியது கருகிப் போகும்

திறமான நாடியின் விபரங்காணே.'

வாதம், பித்தம், சிலேத்தும நாடி ஓட்டம் சமநிலையில் இல்லையென்றால் குரல், சப்தம் மாறிவிடும். உடலில் சூடு அதிகமாக இருக்கும். உடல் நெருப்பில் வெந்து கருகியதுபோல் கருத்துப்போகும். இந்த மூன்று நாடிகளும் ஒன்றுடன் ஒன்றிணைந்து இன்னும் தரும் நோய்களை அறிவோம்.

"நாணவே சேத்துமமத்தில் வாத மாகில்

கடினமாம் பிடரியது வலிப்பு முண்டாம்

தோணவே நரம்பெல்லாம் வலித்து நிற்குந்

துடியான கண்டமது வலித்துக் காணும்.'

உடலில் சிலேத்தும நாடி யுடன் வாதம் சேர்ந்தால், கழுத்து, பிடரி வெட்டி வெட்டி இழுக்கும். வலிப்பு உண்டாகி சிரமம் தரும்.

உடல் முழுவதும் நரம்பு களில் வலி உண்டாகும். கழுத்துவலியும் இருக்கும்.

"ஊனவே பித்தத்தில் நாடி தானு

முற்பனமாய் வாதத்திலுறையு மாகில்

ஆனவே பித்தமும் வாதமும் கூடில்

அரணைவால் துடிபோல துடிக்கும் பாரே.'

உடலில் பித்தநாடி, வாதநாடி இரண்டும் சேர்ந்து செயல்படும்போது, உடல் வெட்டுப் பட்ட அரணையின் வால் துடிப்பதுபோல், தூக்கித் தூக்கிப் போடும்.

"பாரேதான் நோயாளி யெழுந்து நிற்கில்

படையுடனே மூச்சுமது அதிகங் கொண்டால்

சீரேதான் நேத்திரமது வட்ட மானால்

சிகப்பான முழியதுவுந் திரும்பிவிழி பார்த்தால்.'

பித்தநாடி, வாதநாடிகளின் சேர்க்கை அளவுக்கதிகமானால், நோய்வாய்ப்பட்டவர் நரம்பு, எலும்புகளில் உண்டான சத்துக்குறைவால் எழுந்துநிற்க முடியாது. எழுந்துநின்றால் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கும். விழிகள் சிவப்பு நிறமாகிவிடும். பார்வை நேராக இல்லாமல் சுழலும்.

"துரேதான் சேத்துமமது தொண்டை கட்டும்

தொலையாத நெஞ்செரிப்பு மேல் சுவாசம்

வீரேதான் மேனியது கருகல் காணும்

மேதியினியில் வியாதியது செனிக்கும் பாரே.'

உடம்பில் சிலேத்தும (சளி) அளவு அதிகமானால் தொண்டை கட்டும். குரல் கம்மிவிடும். நெஞ்சில் எரிச்சல் உண்டாகும். மூச்சுவிடுவதில் சிரமம்; உடல் கருகினாற் போல் ஆகும். இன்னும் சளி சம்பந்தமான பல நோய்களை உருவாக்கி சிரமம் தரும்.

"வாறான பித்தமது வுறையு மானால்

வளமான சேற்றுமத்து தொண்டை கட்டும்

கூறான வாதமது குறுகிற் றானால்

குறிப்பான மூத்திரமது மஞ்சள் போலாகும்.

' குறிப்பாக, பித்தமும் சளியும் சேர்ந்து அளவைவிட அதிகமானால் தொண்டை சரியாகப் பேசமுடியாது. குரல்கட்டிப் போகும். பேசினால் வலிக்கும். வாதம் உடம்பில் குறைந்துபோனால், குறிப்பாக சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். மேலும்,

"நீறான பழுவெழும்பு ரத்தஞ் சுண்டி

நிலையான யாக்கைக்கு வுறுதி நேரும்

நாறான சடலமது சுருங்கிப் போகும்

சுந்தரனே நாடிதெளிந்து நோய் பாரே.'

உடம்பு எலும்புகளில் ரத்த ஓட்டம் குறையும். எலும்புகள் பலவீனமாகும். உடல் ஆரோக்கியத்திற்கு கேடு உண்டாகும். தசை நாளங்களால் உருவான உடம்பு சுருங்கி இளைத்துப்போகும்.

சுந்தரானந்தா, மனித உடம்பில் உண்டாகும் ஒவ்வொரு நோயையும் சரியாக அறிந்து கொள்ள, நோய்க்கு மூலகாரணமாக வாதம், பித்தம், சிலேத்தும நாடிகளின் அளவைத் தெளிவாக அறிந்து, அவற்றின் ஏற்ற- இறக்கங் களை சரியாக அறிந்து, நோய்தீர மூலிகையை அதனதன் அளவறிந்து கொடுக்கவேண்டும்.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்! (மேலும் சித்தம் தெளிவோம்)