"தூரம் தூரம் தூரமென்று
சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணு மெங்குமாய்ப்
பரந்த அப்பராபரம்
ஊருநாடு காடுதேடி
உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே
அறிந்துணர்ந்து கொள்ளுமே.'
-சிவவாக்கிய சித்தர்
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, பகுத்தறிவுத் தமிழ்ச்சித்தர்கள் சபையில், ஐந்து பூதங்களும் தங்கள் சக்தியால், உயிரினங்களின் முகத்திலுள்ள கண்கள், காதுகள், மூக்கு, வாய், நாக்கு ஆகிய ஐந்து உறுப்புகளின்மூலம் ஆன்மாவை எப்படி செயல்படவைக்கின்றன என்பதைப் பற்றி, தேரையர் கூறும் விளக்கங்களை இனி அறிவோம். தேரையர் சித்தரே, விவரங்களை விளக்கமாகக் கூறுங்கள்.
தேரையர்: மனிதன் முதலான அனைத்து உயிரினங்களும், சூரிய ஒளியால் உண்டாக்கப்படும் வெளிச்சத்தினால்தான் இந்த உலகிலுள்ள அனைத்துப் பொருட் களையும் தங்கள் கண்களால் காண்கின்றன. சூரியன் தன் ஒளிக்கதிர்களால் தரும் ஒளியினால் இந்த பூமியில் பகல்- இரவுகள் உருவாவதில்லை. சூரியன் அசைவின்றி ஒரே நிலையிலிருந்து ஒளியைத் தருகிறது.
இந்த பூமிதான் தன் சுழற்சிநிலையின்மூலம் தன்னுள் பகல்- இரவை உருவாக்கிக் கொள்கிறது.
சூரியன் நிலையான சக்தி; பூமி அசைவு, சலனம், சூழற்சி என பல சக்திகளைக் கொண்டது. அதனால்தான் பூமியின் எல்லா பகுதிகளிலும் ஒரே சமயத்தில் பகல்- இரவு என்ற நிலைûப்பாடு இல்லை. பூமியின் ஒரு பகுதியில் இரவாக இருக்கும்போது, மற்றொரு பகுதி பகலாக இருக்கும். பூமியின் சுழற்சிநிலை போன்றுதான் இந்த பூமியில் வாழும் மனிதர்களும், உயிரினங்களும் தங்கள் கண்களின் சுழற்சி சுக்தியால், தனக்கு வெளிப்புறத்தில், இந்த பிரபஞ்சத்திலுள்ள பொருட்களை அறிந்துகொள்கின்றன. நமது கண்களுக்கு மட்டுமே அசைவது, சுழல்வது போன்ற சக்திகள் உண்டு. முகத்திலுள்ள மற்ற உறுப்பு களான மூக்கு, காதுகள் அசையாது.
ஒவ்வொரு மனிதனும், உயிரினங்களும், தனக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், கண்களால் பார்த்து அறிந்துதான் அதன்பின் தனக்குத் தேவையானதை அடைய முயற்சித்து செயல்படத் தொடங்குகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தேடுதல் என்ற செயல்பாடு தொடங்குவதற்குக் காரணமான ஆரம்பப்புள்ளி கண்கள்தான். ஒருவருக்கு வாழ்வில் நன்மை, தீமை, புண்ணியம், பாவம், சாபம் போன்ற அனைத்து கர்மவினைப் பதிவுகள் உண்டாவதற்கு கண்களே முதல் கருவியாக உள்ளது.
போகர்: தேரையர் சித்தரே, கண்களால் மனிதர்களுக்கு பாவ- சாப- புண்ணியப் பதிவுகள் எவ்வாறு உண்டாகின்றன?
தேரையர்: இந்த பூமியில் வாழும் விலங்கு, பறவையினங்கள் என அனைத்தும், தங்கள் கண்களால் பார்த்து, தங்களுக்குத் தேவையான உணவினை மட்டுமே தேடுகின்றன.
ஆனால் மனிதன் உணவை மட்டுமல்லாது, இந்த பூமியிலுள்ள அனைத்துப் பொருட்களையும் பார்த்து, அவற்றின்மீது ஆசை, பற்று, பாசம், விருப்பு- வெறுப்பு என இதுபோன்று பலநிலைகளை உருவாக்கிக்கொண்டு அவற்றை அடைய முயற்சிக்கிறான்.
ஒருவர் ஒரு பொருளையோ, ஒரு நபரையோ தனது கண்களால் காணும்போது, அவற்றின் அழகு, தன்மை, அவனது ஆன்மாவிற்குப் பிடித்துவிட்டால், அதனை அடைந்துவிட வேண்டுமென்னும் ஆசையில் நேர்மையான வழிகளிலோ, பிறர் பாதிப்படையும்படியான தீமைதரும் வழிமுறைகளிலோ செயல்பட்டு அடைந்துவிட முயற்சிக்கிறான்.
உதாரணமாக, ஒரு பெண்ணை ஒரு ஆண் விரும்பியோ அல்லது ஒரு ஆணை ஒரு பெண் விரும்பியோ அவர்கள் விரும்பியபடி ஒருவரையொ ஒருவர் அடைந்துவிட்டால், அவர்களது ஆன்மா மகிழ்ச்சியையும், அமைதியையும் அடைகிறது.
ஆணோ பெண்ணோ- அவர்களது ஆன்மா விரும்பியபடி கிடைக்காவிட்டால், விரும்பியதை எந்த வழியிலாவது அடைய முயற்சித்து, அவர்களைத் துன்புறுத் தியோ, பலாத்காரம் போன்ற செயல்களைச் செய்தோ மற்றொரு ஆன்மாவைத் துன்பமடையச் செய்கிறது. அல்லது தனக்குக் கிடைக்காததை அழித்துவிட செயல்படுகிறது. ஒரு ஆன்மா இதுபோன்ற செயல்களை, மற்றொரு ஆன்மாவுக்குச் செய்யும்போது அந்த ஆன்மாவுக்கு பாவ- சாபப் பதிவுகள் உண்டாகின்றன. தீமை செய்த ஆன்மாவுக்குரிய மனிதன் தனக்குத் தானே பாவ- சாபங்களை உருவாக்கிக் கொள்கிறான்.
ஒரு மனிதன் தான் விரும்பும் பொருள், சொத்து, பணம், பூமி போன்றவை கிடைக்கவில்லையென்றால், அந்தப் பொருளை அடைய, நேர்மையற்ற வழியில் தவறான செயல்களைச் செய்து அடையும் போது, அந்தப் பொருள், சொத்துகளை இழந்த ஆன்மாவை வேதனையடையச் செய்வதால், அங்கு பாவ- சாபப் பதிவுகள் உண்டாகின்றன.
ஒரு மனிதன், மற்றொரு மனிதனுக்கு எந்தவகையிலும் துன்பம் தராமல் தன் வாழ்வில் செயல்படும்போது, தன் ஆன்மாவைப்போல் மற்றொரு ஆன்மாவை நேசித்து அன்பு, பற்று, பாசம் காட்டி செயல்பட்டு வாழும்போது, புண்ணியப் பதிவுகள் உண்டாகின்றன.
பார்வையில்லாத ஒருவனால், இந்த பூமியிலுள்ள எதனையும் காணமுடியாது. சூரியன் தரும் வெப்பத்தினை மட்டுமே உணரமுடியும். சூரிய ஒளியினால் காணும் காட்சிகளையோ, வண்ணங்களையோ, மனிதன், விலங்கு, தாவரம் என எதனையுமே காணமுடியாது. கண்பார்வை இல்லாத நிலையிலோ அல்லது கண்களை மூடிக்கொண்டிருக்கும் நிலையிலோ ஒரு ஆன்மாவுக்கு ஒன்றைப் பார்த்து, விருப்பு- வெறுப்பு, பாசம்- பகை போன்ற குணங்கள் உண்டாக்கப்படுவதில்லை; உண்டாகாது.
பூமி எவ்வாறு தன் சுழற்சி செயலால் தனக்குத்தானே இரவு- பகலை உருவாக்கிக் கொள்கின்றதோ, அதேபோன்றுதான் இந்த பூமியில் பிறந்து வாழ்ந்து மறையும் மனிதர்களும், தங்கள் வாழ்வின் நடைமுறைச் செயல்களால் தனக்குத்தானே பாவ- சாப- புண்ணியப் பதிவுகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் மற்றொரு மனிதனுக்கு ஒரு பிறவியில் செய்யும் பாவ- சாபப் பதிவுகளால்தான், தான் ஒரு பிறவியில் செய்த பாவ- சாபப்பதிவுகளை அனுபவித்து, நிவர்த்திசெய்து முடிக்க இந்த பூமியில் பல பிறவிகள் பிறந்து வாழும் நிலையையும், பிறவித் தொடர்ச்சியையும் அவன் ஆன்மா அடைகிறது.
ஒவ்வொரு மனிதனும், ஒருபிறவியில் மற்றொரு மனிதனின் ஆன்மாவிற்குச் செய்யும் நன்மைகள் மகிழ்ச்சியைத் தருவதால், அவனுக்கு உண்டாகும் புண்ணியப் பதிவுகள் இந்தப் பூமியில் பிறவியில்லா நிலையை உருவாக்கித் தந்துவிடுகின்றது.
ஒவ்வொரு ஆன்மாவும் பல பிறவிகள் பிறக்கும் நிலையையும், பிறவியில்லா மோட்ச நிலையையும், தங்கள் வாழ்வின் நடைமுறைச் செயல்கள்மூலம்தான் உருவாக்கிக்கொள்கின்றன. இந்த பூமியில் ஒரு ஆன்மா பிறப்பதையும், பிறவியில்லா நிலையையும் எந்த சக்தியாலும் தரவும் முடியாது; தடுக்கவும் முடியாது. பிறப்பும்- இறப்புமில்லா நிலை பிறர்தர வாராது என்பதே உண்மை.
பார்வை சக்தியால்தான் ஒரு ஆன்மா வானது ஒருநிலையில்லாமல், அலைபாய்ந்து கொண்டே இருக்கும். ஒரு காரியம் செய்து கொண்டிருக்கும்போது, வேறு பொருளையோ, காட்சியையோ காணும்போது கவனச் சிதறல் உண்டாகும். இதனால் அதனை செய்துமுடிக்க முடியாமல் போகும்.
அடையவேண்டிய பொருளை அடைய முடியாமல் போகும். காரியத்தடைகள் உண்டாகும். மனிதர்களின் வாழ்வில் உண்டாகும் செயல்களில் தடை, தாமதம், காரியநட்டம், பணவிரயம் என அனைத்தும் உண்டாவதற்கு விதியோ, வினையோ, கிரகமோ, கால நேரமோ காரணமல்ல. கண்களால் உண்டாகும் கவனச் சிதறல்தான் காரணம்.
ஒருவன் கண்களை மூடிக்கொண்டிருக்கும் போது, தனக்கு வெளிப்புறத்திலுள்ள காட்சிகள், நிகழ்வுகள் எதுவும் தெரியாது. ஒரே இருளாக இருக்கும். பார்வையில் எதுவும் தெரியாத நிலையில் ஆன்மாவுக்கு கவனச் சிதறல் இல்லை. நாம் எதை அடைய எண்ணுகின்றோமோ, அதனை அடைய என்ன செய்யவேண்டும் என, சரியான வழிமுறைகளைப் பற்றி மட்டுமே ஆன்மா சிந்தித்து, தெளிவாக அறிந்து செயல்பட்டு வெற்றியை அடையும்.
சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள், தாங்கள் அடைய நினைக்கும் சக்தியைப்பெற முயற்சி செய்யும்போது, வேறு காட்சிகள், பிம்பங்களைப் பார்த்து சித்தமும் சிந்தனையும் சிதறிவிடக்கூடாது- சலனப்படக்கூடாது என்பதற்காகத்தான் வனங்களிலும், குகைகளிலும், மனிதன் சஞ்சாரமில்லாத இடங்களில் தனித்திருந்து, கண்களை மூடிக்கொண்டு தவம்செய்கிறார்கள். அதில் சித்தியையும் பெறுகிறார்கள். தங்களுக்குள் சக்தியை உயர்த்தி சேமித்துக்கொள்கி றார்கள்.
கண்களுக்கென்று தனிப்பட்ட பார்வை சக்தி இல்லை. கண்களுக்கும், மூளைக்கும் தொடர்பை உண்டாக்கும் பார்வை நரம்புகளே பார்க்கும் சக்தியாகும். இந்த நரம்புகளே செயல்படும் இந்திரியம் எனப் படும். பார்வை நரம்புகள் செயல்படா விட்டால், நூறு கண்கள் இருந்தபோதும் அவற்றால் எதனையும் நாம் காணமுடியாது. கண்விழிகள், பார்வை நரம்புகள், மூளை என இவை சரியாக இருந்தாலும்- இவற்றுடன் உணர்ச்சிகளால் இயங்கும் நமது ஆன்மா இணையாவிட்டால், நாம் காணும் காட்சிகள் எதுவும் மூளையில் பதிவாகாது. பார்வை நரம்புகள், மூளை, ஆன்மா, கண் விழிகள் இவை நான்கும் சேர்ந்து இயங்கும்போதுதான் முழுமையான செயல்பாடு உண்டாகும். ஒரு மனிதனின் உடம்பிலுள்ள கருவிகளை இயக்குவதும், செயல்பாட்டை உருவாக்கிக்கொள்வதும் அவரவர் ஆன்மாதான்.
சித்தர் பெருமக்களே, மனிதர்களில் வாழ்வில் பாவமும் சாபமும் புண்ணியமும் அவரவர் கண்களினால் உருவாக்கப்படுகிறது. முகத்திலுள்ள மற்றொரு உறுப்பான காதுகளின் செயல்களைப் பற்றி தமிழ்ச் சபையில் நாளை அறிவோம்.
"பார்த்தவர்கள் செய்தொழிலும் மனமும்
வேறாக பலநூலைப் படித்துப்
படுகுழியில் வீழ்வார் ஏற்றபடி மனம் போனாற்
புத்தியும் போச்சே ஏழை மதி போகாதே
என் தாய் பாதம் போற்றுதற்கே ஐவரையும்
மனத்தி லொன்றாய் புத்தி சித்தியோர் நிலையில்
நிறுத்தி வாசம் பூத்த மலரெடுத்துத்
திருப்பாதம் போற்றி பொறியைந்து கருவி
கரணாதி போமே.'
(கருவூர் சித்தர்)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)