"கிட்டுமோ ஞானயோகம்
கிடைக்குமோ குருவின்பாதம்
கட்டுமோ மூலவாசி
காணுமோ கயிலைவீடு
எட்டுமோ நாகலிங்கம்
ஏற்றுமோ தீபசோதி
தட்டுமோ பளிங்குமேடை
தணையறியார்க்கு நெஞ்சே.'
(திருமூலர்)
இந்த பூமியில் மனிதர்களாகப் பிறந்து, வாசியோகம் செய்து மூச்சுக் காற்றை தன் உடம்பினுள் கட்டி நிறுத்தி, மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள், ரிஷி களைப் பற்றி புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இதில் உரோம ரிஷி முனிவர் வாசியோகப் பயிற்சி செய்து தன் ஆயுளை நீட்டித்துக் கொண்டு வாழ்வதைப் பற்றி அறிவோம்.
பூமியில் உயிரினங்களைப் படைப்பிக்கும் தொழிலைச்செய்யும் பிரம்ம தேவனுக்கு, தன்னைப்போல் அதிகமான ஆயுள்கொண்டு வாழ்பவர்கள் யாருமில்லை என்ற கர்வம் உண்டானது. பிரம்மனின் ஆயுள் எவ்வளவு காலமென்று அறிவோம்.
உத்திராயனம் ஆறு மாதம், தட்சிணாயனம் ஆறு மாதம்- இவையிரண்டும் சேர்ந்த 12 மாதங்கள் மனிதக்கணக்கில் ஒரு வருடமாகும். இந்த ஒரு வருடமென்பது தேவர்களுக்கு பகலிரவு சேர்ந்த ஒரு நாளாகும். இதுபோன்று 360 தேவ நாட்கள் கொண்டது தேவர்களுக்கு ஒரு வருடமாகும்.
பதினேழு லட்சத்து இருபத்தெட்டா யிரம் (17,28,000) மனிதக்கணக்கு வருடங்கள் கொண்டது ஒரு கிருத யுகக் காலமாகும்.
பன்னிரண்டு லட்சத்து தொண்ணூறா யிரம் (12,90,000) மனித வருடங்கள் ஒரு திரேதா யுகக் காலமாகும்.
எட்டு லட்சத்து அறுபத்து நான்காயிரம் (8,64,000) வருடங்கள் ஒரு துவாபர யுகக் காலமாகும்.
நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் (4,32,000) வருடங்கள் கொண்டது ஒரு கலியுகக் காலமாகும்.
இந்த மனித வருடக்கணக்கில், நான்கு யுகங்களும் ஆயிரம் முறையானால் பிரம்மனுக்கு ஒரு இரவுப் பொழுது, இது போன்று மற்றொரு ஆயிரமானால் ஒரு பகல் பொழுதாகும். இரண்டின் கூட்டுத் தொகையும் பிரம்மனுக்கு ஒருநாளாகும். இதுபோன்று முப்பது நாட்களானால் ஒரு மாதமாகும். இந்த பிரம்ம மாதம் பன்னிரண்டானால் ஒரு வருடம். பிரம்ம வருடம் நூறு கடந்தால் பிரம்மதேவனின் ஆயுட்ôலம் முடிவடையும்.
இதுபோன்று நீண்ட ஆயுள் கொண்ட வர் என்பதால், பிரம்மதேவர் தன்னைப் போல் நீண்ட ஆயுட்காலம் உள்ளவர் கள் தேவர்கள், அசுரர்கள், மனிதர்களில் யாராவது இருக்கிறார்களா என்பதை மகாவிஷ்ணுவிடம் கேட்டு அறிந்து கொள்வோமென்று, தனது அன்ன வாகனத்திலேறி வைகுந்தம் வந்தார்.
அங்கு மகாவிஷ்ணுவைப் பலவிதமாய் துதிசெய்து, ""வைகுந்தவாசா, நான் ஜீவித்திக்கும் காலத்தைப்போல் நீண்ட ஆயுள் உள்ளவர்கள் யாராவது, ஈரேழு பதினான்கு லோகங்களிலும் உள்ளார்களா? தங்களுக்குத் தெரிந்திருந்தால் கூறுங்கள்'' என்றார்.
பிரம்மனின் பேச்சில் ஆணவம் இருப்பதைப் புரிந்துகொண்ட மகாவிஷ்ணு அவருக்கு அறிவூட்ட நினைத்து, ""பிரம்மனே, நீர் சகல லோகங்களையும், பிரபஞ்சத்தையும், அதில் உயிரினங்களையும் படைப்ப வர். உங்களுக்கு சமமானவர்கள் பதினான்கு லோகங் களிலும் இல்லை. நீங்கள், யாதொரு வியாதியும் இல்லாமல் அநேக காலம் வாழ்பவர் என்பது என் எண்ணம்.
பிரம்மதேவரே, இருந்தபோதும் உமது மகா மகிமையை நான் ஒருவன் கூறுவது சரியாக இராது.
மும்மூர்த்திகளாகிய நம்மைவிட அறிவிலும், ஆற்றலிலும், லோகஞானத்திலும் சிறந்து உயர்ந்த இன்னும் சில பெரியார்களை விசாரித்து அறிந்து கொண்டால்தான், உமது மகிமை தெரியவரும்'' என்றார்.
""ஆபத்பாந்தவா, நீங்கள் கூறுவதுபோல், மும்மூர்த்திகளாகிய நம்மைவிட அதிக சக்தி கொண்டவர்கள் இருக்கிறார்களா? அப்படியா யின் இப்போதே நாம் சென்று சந்தித்து, என் சந்தேகத் திற்குரிய உண்மையை அறிந்துகொள்வோம்.''
மகாவிஷ்ணு கருட வாகனத்தின்மீதும், பிரம்மா அன்னத்தின்மீதும் ஏறி வானில் பறந்து இந்தக் கண்டத்தின் தென்புலப் பகுதியான, தென்தமிழ்ப் பகுதியிலுள்ள சதுரகிரி மலை ஆரம்பமாகும் எல்லை யில், தங்கள் வாகனத்தை நிறுத்தி இறங்கினார்கள்.
""பிரம்மதேவரே, இனி நாம் நடந்துசென்றுதான் நாம் காணவந்த பெரியாரைக் காணவேண்டும்'' என்று கூறினார்.
""நாராயணா, நாம் ஏன் வனத்திற்குள் நடந்து செல்ல வேண்டும்? நமது வாகனத்தில் ஏறிப் பறந்து அந்தப் பெரியவர் இருக்குமிடத்திற்குச் செல்லலாமே.''
""நான்முகனே, இந்தத் தமிழ் மக்கள் வாழும் பகுதியிலுள்ள சதுரகிரிமலையில் மும்மூர்த்திகளாகிய நம்மைவிட அதிக தவ ஞானசக்தியும், சித்தியும் பெற்ற சித்தர் பெருமக்களும், ரிஷிகளும் அநேகம்பேர் உளளனர். பொதுவாக, இந்த தென்தமிழ்ப் பகுதியில்தான் நம்மைவிட சக்தி பெற்ற சித்தர் பெருமக்களும், ரிஷிகளும் வசித்து வருகிறார்கள். நாம் அவர்களைக் காணச் செல்லும்போது பணிவுடன் செல்லவேண்டும். அகங்காரம், ஆணவம், அலட்சிய குணங் களுடன் செல்லக்கூடாது.
அவர்கள் கௌரவத்திற்கு ஒரு சிறிய பங்கம் உண்டாகும் வகையில் நாம் நடந்து கொண்டாலும். சித்தர்களின் கோபத்திற்கு ஆளாகி அவர்களால் சபிக்கப்பட்டுவிடுவோம். அவர்களது சாபத்திற்கு நிவர்த்தியே கிடையாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்களும் அவர்களைக் காணும்போது பணிவாக நடந்துகொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் ஆயுளைப்பற்றிய சந்தேகத்திற்கு விடையறிய முடியும்.''
பிரம்மதேவரும், விஷ்ணுவும் சதுரகிரி மலையின் தென்மேற்கு திசையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். எல்லைக் குட்டம், பாச்சற்களம் என்ற மண் மலைகளையும்; வெண்ணருவி, கானாறு போன்ற நீர்நிலை களையும்; சூரிய வெளிச்சம் உட்புகமுடியாத உயர்ந்து, அடர்ந்த இருள் வனங்களையும் கடந்து, மான்குட்டிகள், புலியின் முலைப்பால் குடித்துக்கொண்டும், களிப்பினால் மயில்கள் தம் தோகையை விரித்தாடிக்கொண்டும் உள்ள சதுரகிரியின் வனப்பைப் பார்த்து மகிழ்ந்து, தேன் பெருக்கி, நறுமணம் வீசும் மலர்களையுடைய உரோமரிஷியின் குடிலுக்குச் சென்றனர்.
மகாவிஷ்ணுவும், பிரம்மதேவரும் தன்னைக் காண வரப்போவதை ஞான திருஷ்டியினால் அறிந்த உரோமரிஷி, தன் குடிலின் நுழை வாயிலில் அவர்களை வரவேற்க, தன் மாணாக் கர்களுடன் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து காத்திருந்தார். பிரம்மாவும், விஷ்ணுவும் அங்கு சென்றதும் பலவிதமான துதிகளைச் செய்து வரவேற்றார்.
""சுவாமி, தேவரீர் இருவரும் என்னைத் தேடி இவ்வளவு தூரம் வரக்காரணம் என்னவென்று நான் அறியலாமா?'' என்றார் ரிஷி.
""ரிஷி பெருமானே, பிரம்ம லோகத்தில் பிரம்மனும், வைகுந்தத்தில் நானும், கயிலை யில் சிவனும் நிரந்தரமாக வாசம் செய்ய முடியவில்லை. முனிவர்கள், ரிஷிகளின் தவத்திற் கிரங்கி வரம் தருவதற்கும், பல அவதாரங் களை எடுத்து பூமியில் பிறந்து, மனிதர்களைப் போல் மாயை நிலையில் வாழ்வதற்கும் என ஏதாவதொரு காரணத்தால் பூமிக்கு வந்து விடுகிறோம்.
இதுபோன்ற நிகழ்வுகளால் எங்களின் ஆயுட்காலம் எங்கள் லோகத்தில் முடி வடைந்து, பூமியில் பிறந்து வாழ்ந்து, அங்கே ஆயுள் முடிந்து மரணமடைந்து, மறுபடியும் எங்கள் லோகம் செல்வது என நிலையற்றதாக உள்ளது. எங்கள் லோகத்தில் நாங்கள் நிரந்தரமாக வாழமுடியவில்லை. எங்களை விட நீங்கள் நீண்ட ஆயுட்காலத்தை உடையவர்;
பூமியில் நீண்ட ஆயுளுடன் வாழ்பவர் என்பதை அறிந்து, உங்கள் ஆயுட்காலத்தை அறிந்துகொள்ளவும், ஆயுளை நீங்கள் நீட்டித்துக்கொண்ட வழிமுறைகளையும் அறிந்துகொள்ளவே உங்களைத்தேடி வந்துள்ளோம். நாங்கள் அதனை அறிந்து கொள்ளும்படி விளக்கமாகக் கூறுங்கள்.''
விஷ்ணு கூறியதைக்கேட்ட உரோமரிஷி அவரை வணங்கி, ""தேவரீர். சகலத்தையும் அறிந்தவர் நீங்கள். உங்களுக்குத் தெரியாதது பதினான்கு உலகிலும் ஒன்றுள்ளதோ? ஆயினும் அடியேனை கௌரவித்துக் கேட்டதால் சொல்கிறேன்.''
உரோமரிஷி தன் ஆயுள்காலம் எவ்வளவு என்று கூறத் தொடங்கினார்.
"நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும்
நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான்
வல்லவர்போல் வேதபுரா ணங்காவி யங்கள்
மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றும்
திருடர்கள்தா னலைந்து திரிவார் மட்டை
வெல்வதொரு பிரம்மநிலை யறியா மற்றான்
வேரற்ற மரம்போலே விழுவார் பாரே!'
(காகபுசுண்டர்)
(பிரம்மம்- மனிதன்), (பரப்பிரம்மம்- நமது முன்னோர்கள்).
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)