"காவியுஞ் சடைமுடி கமண்டலங் களாசனம்

தாவு ருத்ராட்சம் யோகத்தண்டு கொண்டமாடுகள்

தேகத்தை அலையவிட்டு தேசமெங்கும் சுற்றியே

பாவி கண்டவீடெல் லாம்பணம் கேட்டலைவரே.'

Advertisment

(சிவவாக்கியச் சித்தர்)

காகபுசுண்டர்: திராவிட தேசத் தலைவரே, எங்கள் ஆசான் அகத்தியர் பெருமானின் திருவடிக்கு வணக்கம். சபையில் குழுமியிருக்கும் சித்தர் பெருமக்களே, நாம் பேசும் திராவிட மொழிகளால் வேறுபட்டுள்ளோம். ஆனால், திராவிட மக்களுக்கு ஒற்றுமையும், சித்தாந்தக் கருத்துகளையும், பூரண ஞானத் தையும் போதிப்பதில் ஒன்றுபட்டுள்ளோம். சித்தர்களாகிய நாம், நமது வம்ச முன்னோர் கள் செய்த தொழிலால் இனம் பிரிந்துள் ளோமே தவிர பிறப்பால் அல்ல.

அகத்தியர் பெருமான் தென்பாண்டிப் பகுதியில் பாய்ந்தோடும் தாமிரபரணி நதிக்கரையில் விவசாயத் தொழில் செய்யும் வேளாண் இனத்தில் பிறந்தவர்.

Advertisment

வால்மீகி சித்தர் வனங்களில் மிருகங்களை வேட்டையாடும் வேடுவர் இனத்தைச் சேர்ந்தவர்.

கோரக்க சித்தர் ஆடைசெய்யும் தொழில்செய்யும் சேணியர் இனத்தைச் சேர்ந்தவர்.

சுந்தரானந்தர் தெலுங்கு மொழிபேசும் மக்கள் வாழும் திராவிடப் பகுதியில் வேளாண் தொழில் செய்யும் ரெட்டியார் இனத்தில் பிறந்தவர்.

கொங்கணச் சித்தர் கன்னட மொழி பேசும் கன்னட தேசத்தில், ஆடு, மாடு வளர்த்துப் பிழைக்கும் இடையர் இனத் தைச் சேர்ந்தவர்.

மச்சமுனி சித்தர் மீன் பிடித்து வாழும் செம்படவர் இனத்தில் பிறந்தவர்.

கமலமுனி சித்தர், பொன் நகை, ஆபரணங்கள் செய்யும் தட்டார் இனத்தில் பிறந்தவர்.

சட்டைநாத சித்தர் நெசவுத் தொழில் செய்யும் சேணியர் இனத்தவர்.

போகர் சித்தர் மலையாள தேசத்தில், மண்பாண்டத் தொழில் செய்யும் குலாளர் (குயவர்) இனத்தில் பிறந்தவர்.

அழுகணிச் சித்தர் வேளாண் தொழில் செய்யும் கார்காட்டார் இனத்தைச் சேர்ந்தவர்.

திருமூலர், போர் செய்யும் கைக்கோளர் இனத்தில் பிறந்தவர்.

காலங்கிநாதர் காவேரி நதி தீரத்தில் வேளாண் தொழில்செய்யும் சோழிய வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்.

தேரையர் சித்தர் மருத்துவர் (நாவிதர்) தொழில் செய்யும் இனத்தில் பிறந்தவர்.

காகபுசுண்டனாகி நான், சாளுக்கிய (ஆந்திரா) தேசத்தில், நெசவுத் தொழில் செய்யும் சாளியர் இனத்தில் பிறந்தவன். என்னை எல்லாரும் சாளிமைந்தன் என்றழைப்பார்கள்.

இந்த சபையிலுள்ள அனைத்து சித்தர் பெருமக்களும், பலவிதமான தொழில் செய்து உழைத்து வாழும் இனத்தில் பிறந்தவர்கள். தங்களைப் பிறப்பால் உயர்ந்தவர்கள் என கூறிக் கொண்டு, உழைக்காமல் பிறரை ஏமாற்றிப் பொருள்பறித்து வாழும் வேடதாரிகள் யாருமில்லை.

சித்தர்களாகிய நாம் பல யுகங்களாக வாழ்ந்துவருகிறோம்.

"பாரப்பா கிரேதாயில் நிரம்ப செயல்கள்

பண்பாகச் செய்தோம் சித்த ரெல்லாம்!'

கிரேதா யுகத்தில், பண்பாட்டுடன், ஒற்றுமையாக வாழ்ந்த இந்த திருவிடத்து மக்களுக்கு, வாழ்வியல்முறை, முன்னோர் வழிபாட்டுமுறை (வருடதிதி, அமாவாசை திதி, தர்ப்பணம் கொடுக்கும் முறையல்ல) நாகரிகம், கலாச்சாரம், சித்தர்களின் சித்தாந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழச் செய்தோம்.

s

(திராவிட சித்தர்களின் சித்தாந்தக் கொள்கைகள் வேறு; வடபுலத்து இனத்த வரின் சாதி, மத, இனப் பிரிவு கூறும் கொள்கை கள் வேறென்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்).

"வேரப்பா திரேதாயில் அட்ட சித்தும்

வேடிக்கை வினோதங்கள் செய்து வந்தோம்.'

திரேதாயுகத்தில், அட்டமகா சித்திகளை மனிதனின் சக்திமூலம் அடைந்தோம்.

அணிமா: அணுவில் அதைவிட சிறிதாக, தன்னைச் சுருக்கிக்கொண்டு அணுவில் நுழைந்து செயல்படுதல்.

மஹிமா: சரீரத்தை மிகப்பெரி தாக்கி. (விஸ்வரூபம்) கொள்ளுதல்.

அனிமா: உடலை மிக பளுவானதாக, அதிக கனம்மிக்கதாக செய்து கொள்ளுதல்.

லஹிமா: உடலைப் பஞ்சுபோல் எடை யில்லாமல் லேசானதாக ஆக்கிக்கொள்ளுதல்.

பிராப்தி: வடபுலத்து புராண இதிகாசங்களில் கூறப்படும் மூன்று தெய்வங்களையும், முக்கோடி தேவர்களையும், சூரியன், சந்திரன், முதலான அனைத்து கிரகங்களையும், பஞ்சபூதங்களையும், மற்ற உயிரினங்களையும் தன்வயப்படுத்தி தனக்கு ஏவல் செய்யவைத்தல்.

பிரகாமியம்: கூடுவிட்டுக் கூடுபாய்ந்து, மற்ற மனிதர்கள், உயிரினங் களின் உடம்பில் நுழைந்து செயல்படுதல்.

ஈசத்துவம்: சுய உழைப்பால் பொருள் தேடி வாழ்தல், பிற சக்திகளின் உதவியை எதிர்பார்க்காமல் தன் சுய அறிவால் சிந்தித்து செயல்பட்டு, பணம், பதவி, புகழ், வெற்றி என அனைத்தையும் பெற்று தலைவனாகு தல்.

(ஈசன், ஈஸ்வரன் என்றால் தலைவன் என்று பொருளாகும்).

வசித்துவம்: இந்த அண்டத்திலுள்ள அனைத்தையும், இயற்கையையும் தன்னுள் வசப்படுத்தி மூச்சுக் காற்றினைத் தன்னுள் கட்டி, மரணத்தை வென்று, மரணமில்லாப் பெருவாழ்வு அடையும். வழிமுறைகள்.

"சிரப்பா துவாபரையில் அனேக சித்தி

செய்து நல்லதொரு பேரும் பெற்றோம்.'

துவாபார யுகத்தில், ஒவ்வொரு மனிதனும் தனது முற்பிறவி பாவ- சாப வினைகளை நிவர்த்திசெய்யும் வழிமுறைகளைக் கூறி செயல்படச் செய்து, அவர்களை கர்மவினைப் பதிவுகளிலிருந்து காப்பாற்றினோம்.

(முற்பிறவி பாவ- சாப- கர்மவினைப் பதிவுகளையும், அவற்றை நீக்கும் முறைகளையும் சித்தர்கள் ஜீவநாடி ஜோதிடத்தில் கூறியுள்ளார்கள்.)

சித்தர்களாகிய நாம், மூன்று யுகங்களிலும், நாம் பிறந்த திராவிட தேசப்பகுதிகளையும், திராவிட மொழிகளையும், மக்களையும், பூரண ஞானக் கருத்துகளைக் கூறி வழிநடத்தி, நல்வாழ்வு வாழச்செய்து பாதுகாத்துவிட்டோம்.

அடுத்துவரும் கலியுகத் தில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வு களையும், மக்களின் மனமாற்றத்தையும், குணப் போக்கினையும், நமது சித்தர்களின் நிலையினையும் கூறுகிறேன்.

"அடுத்து கலியுகத்தில் கொடிய

அநியாயம் மெத்த நடக்குமென்று

விடுத்து நான் சொல்லிவிட்டேன் இந்த

மேதினி யிருக்க நீதியில்லை யென்று

நீதியில்லாக் கலியுகந்தான் தீரும்வரை

வாசியில் இருந்திட வேணுமப்பா

காணப்பா கலியுகந்தான் போகும் மட்டும்

கண்மூடி குண்டலினி யோகம் காண்போம்.'

கலியுகத்தில் இந்த திராவிட மக்களை ஏமாற்றி, இவர்களின் பொருட்களைப் பறித்து தாங்கள் சுகமாக வாழ எண்ணம்கொண்ட அந்நிய தேசத்தவர்கள், இம்மக்களிடையே கலந்து வாழ்வார்கள். மொழி, மதம், சாதி, குலம் என பல விதமாகக்கூறி, ஒற்றுமையுடன் வாழ்ந்த திராவிட மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி, பகைமையை உருவாக்கி எதிரிகளாக்கி விடுவார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் முற்பிறவி கர்மவினைப் பதிவுகளைத் தடுத்துக்கொள்ள நாம் கூறிய வழிமுறைகளையும், முன்னோர் வழிபாட்டுமுறைகளையும் கைவிட்டு, அந்நிய இனத்தவரின் வழிபாடு, பூஜை, பரிகாரமுறைகளை நம்பிக் கடைப்பிடித்து, திராவிட சித்தர்களின் பகுத்தறிவு சித்தாந்தக் கொள்கைகளைக் கைவிட்டு, இந்த திருவிடத்து மக்கள் வாழ்வார்கள்.

சித்தர்கள் கூறிய கருத்துகளைக் கடைப் பிடிக்காமல் வாழ்வதால், பொன்னையும், பொருளையும், பூமியையும் அவர்கள் வசம் இழந்துவிடுவார்கள். நல்வாழ்வுக்கு ஆதாரமான உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் சிரமப் படுவார்கள். உழைத்துப் பொருள்தேடி சேமித்து வாழும் குணம் மாறி, நாம் வணங்கும் சக்தி நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கைக்கொண்டு வாழ்வார்கள். இதனால் வாழ்வில் வறுமை சூழும்.

அறிவால் உயர்ந்து வாழ்ந்த திராவிட மக்கள், அந்நியருக்கு அடிமைபோல் சேவகம் செய்து வாழ்வார்கள்.

சித்தர்களின் கருத்துகளைக் கடைப் பிடித்து வாழும் மக்களை மட்டும் நாம் காப்பாற்றுவோம். இந்த கலியுகம் தீரும்வரை இம்மக்களின் கண்களுக்குத் தெரியாமல், இவர்களை விட்டுவிலகிச் சென்று, மலை, குகைகளில், வனங்களில் மறைந்திருப்போம். இந்த திராவிட மக்கள் மனம்திருந்தி சித்தாந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழும்போது இவர்களைக் காப்பாற்ற இந்த திருவிடத்திற்கு வருவோம்.

"சமய பேதம் பலவான சாதி பேதங்கள்

சளுக்கர்க்கே அல்லாது சைவ மக்களுக்கோ

இமயத்தி லேறின பேர் சித்தம் மாறுமோ

சித்தர் சித்தாந்தம் தெளிந்து வாழ்வாரப்பா.'

(சைவம் என்றால் "அறிவு' என்ற பொருளாகும்).

சித்தர் பெருமக்களே, இந்த பூமியில் மூன்றுவகையான சாதிப் பிரிவு உயிரினங் கள் மட்டுமே வாழ்கின்றன. அறிவு, யுக்தி, உடல் சக்தி, தன் செயல்களால் உண்டாகும் அனைத்து நன்மைகளையும் அனைவரும் பெறும்வண்ணம் வாழும் உயிரினம் மனித இனம், மனிதர்கள் உத்தம சாதியினர்.

அறிவு குறைந்து, தன் வாழ்நாள் முழுவதும். உணவு தேடி, தான் பெற்ற குழந்தைகளை மட்டும் காப்பாற்றி வாழும் மிருகங்கள், விலங்குகள், பறவைகள் இரண்டாவது நிலை உயிரினங்கள். இவை மத்திம சாதி இனம். இவை தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்து வாழும்.

மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்ற தாவரங்கள் அதம சாதி. இந்த மூன்று இனங் கள் மட்டுமே இந்த பூமியில் உண்டு.

மனித இனத்தில் குலம் என்பதையும், சாதி என்பதையும் ஆராய்ந்து முடிவாக அறியும்போது, ஆண், பெண் என்ற இருவகை சாதிகள் மட்டுமே உண்டென்று அறியமுடிகின்றது.

குலம் என்பதை ஆராய்ந்து அறிந்த போது. அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, அமைதி, ஒற்றுமை, பாகுபாடின்றி வாழ்ந்து, தன் உழைப்பால் தன்னையறிந்து வாழ்ந்து, தானும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்ந்தவர்களாக்கும் செயல்களைச் செய்து வாழ்பவர்கள் மேலான குலத்தினர். இதுதான் திராவிடக் கொள்கை.

கொலை, களவு, காமம், பொய், ஏமாற்றுதல் என்று ஐந்து வகை பாதகச் செயல்களைச் செய்து, காம குரோத குணங்களைக்கொண்டு, ஒற்றுமையாய் வாழும் மக்களிடையே மதம், சாதி, இனம், பாகுபாடு பேதங்களை உருவாக்கி அன்பினை நீக்கி, அமைதியைக் குலைத்து மக்களை ஏமாற்றிப் பொருள் பறித்து சுயநலத்துடன் வாழ்பவர்கள் கீழான குலத்தினர். குலம் என்பது இந்த இரண்டுவகை மனிதர்களை மட்டுமே குறிப்பிடுகிறது.

கலியுகத்தில் மக்கள் நல்வாழ்வுபெற, மனித குலமும் இனமும் ஒற்றுமையுடன், அமைதியான வாழ்க்கை வாழ சித்தர்களின் சித்தாந்தக் கருத்துகளே நல்வழிகாட்டும்.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)