"கம்பை கொள்ளிடம் காவேரி

கங்கை துங்கபத்ரா

நம்பி சிந்து சரஸ்வதி

நர்மதா கோதாவரி

Advertisment

சம்புத் தீவுள்ள சகல

நதி தீர்த்த மாடினும்

இறையருள் பெற்று

Advertisment

வினையடிக் காளாவரோ.'

(சிவவாக்கிய சித்தர்)

அகத்தியர்: சைவத் தமிழ்ப் பகுத்தறிவாளர் சங்கத்தில், தேரையர் பெருமான் உயிரினங்களின் ஆன்மா செயல்படுவதற்கு ஐம்புலன்களே காரணம்; உடலிலுள்ள ஆன்மா தனித்தியங்கமுடியாது. ஐம்புலன்களின் தூண்டு தலே ஆன்மாவின் செயலுக் குக் காரணம் என கூறினார். உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றும் இயங்குவதற்கு காற்றுதான் மூலகாரணம் என்று அவர் கூறுவதை இன்று தமிழ்ச் சபையில் அறிவோம். தேரையரே, இனி தாங்கள் கூறுவதைக் கேட்க சித்தமாக உள்ளோம்.

தேரையர்: ஆசானே, இந்த பூமியில் வாழும் மனிதர், விலங்கு, பறவைகள் மற்றும் நிலத்திலும், நீரிலும் வாழும் அனைத்து உயிரினங்க ளின் குணம், செயல், அவற்றின் வாழ்க்கை நிலை, அவற்றின் அகத்தின் இயல்பை அனுபவ அறிவால் அறிந்து கூறியதால் "அகத்தியன்' என்ற காரணப் பெயரைப் பெற்றவரே, தமிழி னத் தலைவனே, சித்தர்களின் தலைமை ஆசானே, உங்களை வணங்குகிறேன்.

உடல், உயிர், ஆன்மாவின் இயக்கத் திற்கு காற்றுதான் காரணம். ஒவ்வொரு ஜீவனுக்கும் உயிரைத் தந்து காப்பாற் றும் கடவுள் காற்றுதான் என்று, எங்களையும் அனுபவ அறிவால் அறியச் செய்து, எங்களின் சுயபுத்தியி னால் புரிந்துகொள்ளச் செய்தவர் தாங்கள்தான். இந்த பேரண்டத்திலும், அவற்றில், வாழும் ஜீவராசிகளின் அகத்திலும், புறத்திலும் காற்று எவ்வாறு செயல்படுகின்றது என்பதைப்பற்றி நான் கூறுகூதைவிட, தாங்களே கூறுவதுதான் பொருத்த மாகவும் விளக்கமாகவும் சரியானதாகவும் இருக்கும். காற்றினைப் பற்றியும், உயிர்களைக் காத்து ரட்சிக்கும் உண்மையான கடவுளைப் பற்றியும் நீங்களே கூறுங்கள்.

அகத்தியர்: பகுத்தறிவுச் சித்தர்களே, தேரையர் காற்றைப் பற்றிய விளக்கத்தைக் கூறும் பொறுப்பை என்னிடமே ஒப்படைத்துவிட்டார். அவர் கூறியதுபோல் நான் காற்றின் செயல்களைப்பற்றிக் கூறுவதாக எண்ணாமல், இந்த பூமியையும், அதில் வாழும் ஜீவராசிகளையும் மற்றும் இந்த பிரபஞ்சத்தில் ஆக்கல், காத்தல், அழித்தல் என முத்தொழிலையும் செய்து, அவற்றை இயங்கச் செய்யும் உண்மையான கடவுளைப் பற்றியும் கூறுகிறேன். அதனை கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்த பூமியில் வாழும் எல்லா உயிரினங்களின் உள்ளும் புறமும், வானிலும் நிலம், நீர், நெருப்பு மற்றும் இந்த பிரபஞ்சத்தில், பேரண்டத்திலுள்ள அனைத்திலும் ஊடுருவி, உள்சென்று, எங்கும் நீக்கமற நிறைந் திருப்பதால் இந்த காற்றுதான் கடவுளாகும்.

இந்த காற்றுக் கடவுளின் கருணையால்தான் அனைத்தும் இயங்குகின்றன. இயற்கைத் தன்மையை நிர்ணயித்து, அதனதன் விதிப்படி செயல்பட வைக்கும் ஒரே கடவுள் காற்றுதான்.

siddhar

புலத்தியர்: அகத்தியர் பெருமானே, அனைத் தும் இயங்குவதற்கு காற்றுதான் காரணமென்று கூறுகிறீர்கள். கடவுளாக இருக்கும் காற்று ஒவ்வொன்றிலும் எவ்வாறு செயல்படுகிறது? செயல்படச் செய்கின்றது? அகத்தியர்: யார்? இலங்காபுரியை ஆளும் தமிழ் மன்னனும், பத்து தலைகளை உடையவனும், அகத்தியன் அருளாசியால் குண்டலினியோகம் செய்து எட்டுவிதமான சித்திகளையும் பெற்ற இராவணனின் பாட்டனார்- எனது உயிர் நண்பர், மகாசக்திபெற்ற புலத்தியரா? அனைத்து உயிரினங் களின் அகத்தின் இயல்பை அறிந்து கூறியதால் என்னை அகத்தியன் என்று அழைக் கிறார்கள்.

இந்தப் பேரண்டத்தின் புலத்தின் இயல்பை- இயற்கை விதியை நீங்கள் பகுத்தறிந்து கூறியதால் உங்களை "புலத்தியன்' என்று அழைக்கிறோம். தமிழர்களின் தனித்த அறிவு, வீரம், தன்மானம், சைவ சித்தாந்தக் கொள்கை என அனைத்தையும் லட்சியமாகக்கொண்டு, இராவணனுக்கு வாழ வழிகாட்டியவர். நீங்கள் அறியாதது எதுமில்லை. இந்த சித்தர்கள் சபையில் எனக்கு நிகரான அறிவும், ஞானமும், தமிழ்மொழிப் பற்றும் கொண்டவர் நீங்கள். தமிழ் மக்களின் நலனிலும் என்னைப் போலவே அக்கறை கொண்டவர். எனக்கு நீங்கள் பரீட்சை வைத்துள்ளீர்கள். உங்களுக்குத் தலைவணங்கி, உண்மை கடவுள் யார் என விளக்கமாகக் கூறிகிறேன்.

சித்தர் பெருமக்களே, இந்த பிரபஞ்சம், கண்ணுக்குத் தெரியாத காற்றினால் சூழப்பட்டுள்ளது. பூமியும், கிரகங்களும், நட்சத்திரங்களும் இந்தக் காற்றின் உதவியால், செயலால்தான் சுழன்றுவருகின்றன. வானம் என்று எதுவுமில்லை. வானம் வெட்டவெளியாகும். வானம் என்பது காற்று நிரம்பிய பகுதி. வானில் உண்டாகும் இடிமுழக்கம், காற்றின் வேகத்தால் உண்டாகிறது. காற்றின் உராய்வு மோதலால்தான் நெருப்பு உண்டாகி மின்னல் உருவாகிறது. காற்றின் உதவியால்தான் மேகங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்கின்றன. காற்றின் சக்தி இல்லையென்றால் வானமும் இல்லை; கிரகங்கள், நட்சத்திரங்கள் எதுவுமே இல்லை. வானில் உண்டாகும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காற்றுதான் காரணமென்று புரிந்துகொள்ளுங்கள்.

இந்த பூமியை சுழலச் செய்வதும், பூமியில் இரவு- பகலை உருவாகச் செய்வதும் காற்றுதான். பூமியின் உள்ளேயும் காற்றுள்ளது; வெளியிலும் காற்றுள்ளது. பூமியின் உள்ளே இருக்கும் காற்றை, பிரபஞ்ச வெளியிலுள்ள வெளிக்காற்று உந்தித் தள்ளுவதால் பூமி சுழல்கிறது.

பூமியிலுள்ள மண், மலைகள், கற்களின் உள்ளேயும் காற்றுள்ளது. இந்த பூமியில் வளரும் தாவரங்களிலும் மரங்களிலும், அவற்றின் விதைகளின் உள்ளும் காற்றுள்ளது. பச்சை மரங்களில் மட்டுமல்ல; காய்ந்து, பட்டுப்போன விறகினுள்ளேயும் காற்றுள்ளது. வாயுவின் உள்ளே இருக்கும் காற்று, நெருப்பு பட்டவுடன் எரியத் தொடங்குகிறது. மரமும், தாவரங்களும் காற்றை சுவாசித்து வளர்கின்றன. ஆனால் அதேமரம் காய்ந்து பட்டுப்போனபின்பு, அழிந்து போவதும் இந்த காற்றினால்தான்.

பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணிலுள்ள காற்றுதான் பூமி அதிர்ச்சிக்கும் பூமி பிளப்பதற்கும் காரணமாகிறது. மண்ணினுள்ளே ஊன்றிய விதையை, மண்ணினுள்ளே இருக்கும் காற்றுதான் முளைவிட்டு வளரச்செய்கிறது.

பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணில்மட்டும் காற்று இருப்பதாக எண்ண வேண்டாம். மற்றொரு சக்தியான நீரினுள்ளேயும் காற்று கலந்திருக்கிறது. நதிகளில் நீர் ஓடுவதும், கடலில் ஓய்வில்லாமல் அலையடித்துக்கொண்டிருப்பதும் காற்று சக்தியால்தான். நீரினுள் கலந்திருக்கும் காற்றுடன் வெளியிலிருக்கும் காற்று இணையும்போதுதான் நீரோட்டமும், அலைகளும் உருவாகின்றன. கடல், ஆறு, குளம் ஆகியவற்றில் வாழும் நீர்வாழ் உயிரினங் கள், நீரிலுள்ள காற்றை சுவாசித்துதான் உயிர் வாழ்கின்றன. நீரிலுள்ள காற்று வெளியேறிவிட்டால் அங்கு நீர் இருக்காது; மறைந்துவிடும்.

பூமியிலுள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, நீரிலுள்ள காற்று சக்தி மேகமாக வானில் சேர்கிறது. இந்த மேகத்துடன் வானிலுள்ள குளிர்காற்று சேரும்போது, அந்த மேகம் குளிர்ச்சியடைந்து, மறுபடியும் நீராக மாறி மழையாக பூமியில் பொழிகிறது. ஒன்றின் இயற்கையான விதி நிலைத் தன்மையை மாற்றுவதும் காற்றுதான். மறுபடியும் அதன் இயற்கையான சுயநிலைக் குக் கொôண்டுவருவதும் காற்றுதான்.

மண், நீர் ஆகியவற்றில் மட்டுமே காற்று இருப்பதாக எண்ணவேண்டாம். மற்றொரு சக்தியான நெருப்பின் உள்ளேயும் காற்றுள்ளது. எரியும் நெருப்பினுள்ளே இருக்கும் காற்று, பிரபஞ்சத்திலுள்ள வெளிக்காற்று பட்டவுடன் சுடர்விட்டு தீ சுவாலையாக, பெருநெருப்பாக எரியும். தீ சுவாலை இல்லாத தீக்கங்குகள் கனிந்துகொண்டிருக்கும்போது, அதிலிருக்கும் காற்று வெறும்புகையாக கசிந்துவெளியில் வரும். இந்தப் பிரபஞ்ச வெளிக்காற்று பட்டவுடன், கனிந்து கொண்டிருக்கும் தீக்கங்கு சுவாலைவிட்டு எரியும்.

மண், நீர், நெருப்பு, ஆகாயம், நட்சத்திரங்கள், அசையும் பொருட்கள், அசையா பொருட்கள், பெரியதூண்- சிறு துரும்பு என அனைத்திலும் நீக்கமற நிறைந் திருக்கும் ஒரே கடவுள் காற்று மட்டும்தான்.

சித்தர் பெருமக்களே, நாளை சித்தர்கள் சபையில் காற்றின் இன்னும் பல வகையான சக்திகளையும் அதன் செயல்களையும் அறிவோம்.

"ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும்

அயன் மாலும் அரனோடு தேவ ரெல்லாம்

மூச்சப்பா தெய்வமென்றே யறியச் சொன்னார்

முனிவோர்கள் இருடியரிப் படியே சொன்னார்

பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்

பேரான பூரணத்தை நினைவாய்க் காரு

வாச்சப்பா பூரணத்தை காக்கும் பேர்கள்

வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே!'

(அகத்தியர்)

(மூச்சு, நூல், மரணம், வாசி- காற்று)

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)