"உடம்பு உயிரெடுத்ததோ
உயிர் உடம்பெடுத்ததோ
உடம்பு உயிர் விடுத்தபோது
உருவம் ஏது சொல்லுவீர்
உடம்பு உயிர் இறந்தபோது
உயிரிறப்ப தில்லையே
உடம்பு மெய்யுணர்ந்து
கண்டு ஞானம் ஓதுமே.'
(சிவ வாக்கியர்)
சுந்தரானந்தர்: ஞானத்தமிழ் ஆசானே! இதுவரை பூமியில் ஒரு குழந்தை கருவாகி, சரீரம் உருவாகிப் பிறக்கும் வழிமுறைகளையும், பிறந்த குழந்தையின் உடலுக்குள் உயிர் வரும் வழிபற்றியும், உடலினுள்ளே உயிர்க்காற்று செயல்படும் நிலையையும் தெளிவாகக் கூறினீர்கள்.
இந்த பூமியில் மனிதன் முதலான எல்லா உயிரினங்களும் காற்றை சுவாசித்துதான் வாழ்கின்றன. ஆனால் நீங்கள் உயிர்க்காற்றைப் பற்றிக் கூறும்போது, மூச்சுக்காற்றின் கால அளவு என்று ஒரு காலக் கணக்கினைக் கூறினீர்கள்.
அந்த காலக்கணக்கினையும் விளக்கத்தையும் தெளிவாகக் கூறுங்கள்.
அகத்தியர்: சுந்தரா, சித்தர் பெருமக்களாகிய நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, நான் கூறும் பதிலிலிருந்தே அடுத்தொரு கேள்வியைக் கேட்கிறீர்கள். இதுதான் பகுத்தறிவுள்ள ஒரு மனிதனின் ஞான நிலை.
தமிழ்ச் சங்கத்தின் தலைமை ஆசானா கிய நான் கூறினாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதற்குரிய உண்மையான விளக்கத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற இந்த நிலையே மனிதர்களுக்கு ஞானத்தேடல் நிலையாகும். உங்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். ஞானம் தேடும் ஆர்வம், எல்லாவற்றையும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற துடிப்பு இந்தத் தமிழ் மண்ணில் பிறந்து வாழும் தமிழர்களுக்கு உண்டான இயற்கை குணம். மண்ணின் தனித்தன்மை.
சுந்தரா, கேள்விகளைக் கேட்பவன் ஞானி. அந்த கேள்விகளுக்கு உண்மையான விளக்கத்தைக் கூறுபவன் பூரண ஞானி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் உயிரைத் தருவது ஒரு மாபெரும் ஆதிசக்தி என்றும், மரணமடையும்போது எமன் உயிரைப் பறித்து விட்டான், விதி முடிந்துவிட்டது, கடைசி மூச்சை விட்டான் என்றும் இதுபோன்ற காரணங்களைக் கூறுகிறார்கள். இதில் எது உண்மையென்று நான் கூறும் விளக்கத்திலிருந்து ஆராய்ந்து அனுபவத்தில் அறிந்து கொள்ளுங்கள்.
சுந்தரானந்தர்: ஆசானே, இதில் இன்னும் ஒரு கேள்வி என் மனதில் தோன்றி விளக்கம் கேட்கத் தூண்டுகிறது. அதற்கும் தாங்கள் விளக்கம் தரவேண்டும்.
அகத்தியர்: உயிரைப் பற்றிதானே, கேள்.
சுந்தரானந்தர்: ஒவ்வொரு ஜீவனுக்கும் உயிர் தனித்தனி என்று கூறினீர்கள். ஒவ்வொருவருக்கும் உயிர்க்காற்று பிறப்புக்கு முன் எங்கே இருந்தது? இப்போது எப்படி வந்தது? இதனையும் விளக்கவேண்டும்.
அகத்தியர்: சுந்தரா, ஆன்மா எங்கே இருந்தது? உயிர்க்காற்று எங்கே இருந்தது? இந்த கேள்விகளுக்கு பின்னர் விரிவாக விளக்கம் தருகிறேன். உன் முதல் கேள்வியான சுவாச காலக்கணக்கினை இப்போது கூறுகிறேன்.
ஒருவனுடைய ஆயுட்காலம் இவ்வளவு நாள் என்று எவராலும் நிர்ணயித்துக் கூற முடியாது. நாம் சுவாசித்து வெளிவிட்ட மூச்சுக்காற்றை மீண்டும் உள்ளே இழுப் போமா என்பது நிச்சயமில்லை. நாம் வெளி விட்டு உயிர்க் காற்று மீண்டும் நம் உடலினுள் வந்தால் பிழைத்து உயிருடன் இருப்போம். வராவிட்டால் இறந்துபோனான் என்று மற்றவர்கள் கூறுவார்கள். ஒருவன் இந்த பூமியில் பிறப்பதும் இறப்பதும் அவனுக்கே தெரியாது.
ஒருவன் இறந்து போனான் என்பதன் உண்மை என்னவென்றால், அவன் மூக்குத் துவாரங்களின் வழியாக உடலினுள் ஓடிக் கொண்டிருந்த மூச்சுக்காற்று என்ற உயிர்ச் சத்து சரீரத்தை விட்டு வெளியே போய் விட்டால், அவன் இறந்துபோனான் என்று மற்றவர்களால் கூறப்படுகிறது. இந்த உயிர்க் காற்று ஒருவரை விட்டு விலகிப் போய்விட்டால் அதனுடன் சேர்ந்து உடலிலிருந்த அனைத்து சக்திகளும், உணர்ச்சிகளும், மண், நீர், தீ, காற்று, ஆகாயம் (மனம்) என்ற பஞ்சபூத சக்திகளும் கூடவே போய்விடும். இதனால் உயிரினங்களுக்கு காற்று தான் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது. இனி மனிதனின் சுவாசக்காற்று நிலை பற்றிக் கூறுகிறேன்.
ஒரு மனிதன் நாள்தோறும் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான். இதுபோன்று ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 21,600 முறை சுவாசிக்கிறான். ஒரு மனிதன் சுவாசித்து உயிர் வாழ்வதால், அவன் மூச்சுக்காற்று கணக்கு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்து, இப்பிறவியில் அவனுக்கு நிர்ணயிக்கப்பட்ட மூச்சுக்காற்றுக் கணக்கு (ஆயுள்) முழுவதும் உடலிலிருந்து கழித்து, கடைசி மூச்சுக்காற்று வெளியேறிய பின் அவன் இறந்துபோகிறான் என்பதே உண்மை.
ஒருவன் 100 ஆண்டுகள் வாழ வேண்டுமென்ற அளவுடன் மூச்சுக்காற்று நிர்ணயிக்கப்பட்டுப் பிறந்திருந்தாலும், அவன் தன் வாழ்வின் நடைமுறைச் செயல்களால், மூச்சுக் காற்றினைப் பற்றிய சிந்தனையில்லாமல், உண்மையறியாமல் செயல்பட்டு வாழ்ந்தால், அவனது நூறு வருட ஆயுள் கணக்குப்படி முழுமையாக வாழ முடியாமல், ஆயுள் குறைந்து இறந்து போய்விடுவான். இப்போது மனிதன் தன் உயிர்க்காற்றை எப்படி விரயம் செய்து தனது ஆயுள்காலத்தைத் தானே குறைத்துக் கொள்கிறான் என்பதைக் கூறுகிறேன், அறிந்து கொள்ளுங்கள்.
சுந்தரா, மனிதர்கள் தங்கள் நடைமுறை வாழ்வில் இயல்பாகச் செய்யும் ஒவ்வொரு செயல்மூலமும் அவர்களது உயிர்க்காற்று விரயமாகி ஆயுள் குறைவு உண்டாகும்.
மனிதர்கள் சாதாரணமாகப் பேசும்போது 12 அங்குல மூச்சுக்காற்று வெளியில் வந்து, மீண்டும் எட்டு அங்குல மூச்சுக்காற்று உடலினுள் செல்லும். ஆக, பேசுவதால் நான்கு அங்குல மூச்சுக்காற்று ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும் விரயமாகிறது.
மனிதன் நடக்கும் போது 16 அங்குல மூச்சு வெளியேறி எட்டு அங்குல மூச்சு மறுபடியும் உள்ளே வருகிறது. இதனால் எட்டு அங்குல மூச்சு விரயமாகிறது.
கைகளால் வேலை செய்யும்போது 20 அங்குல மூச்சு வெளியேறி 10 அங்குலக் காற்று உள்ளே வருகிறது. இதனால் 10 அங்குல மூச்சு விரயம்.
கோபத்துடன் சண்டையிடும்போது 24 அங்குல மூச்சுக் காற்று வெளியேறி 12 அங்குல மூச்சுக்காற்று மறுபடியும் உடலினுள் வரும். இதனால் 12 அங்குல மூச்சுக்காற்று நஷ்டம்.
தூங்கும்போது 48 அங்குல உயிர்க்காற்று வெளியில் சென்று 30 அங்குலக் காற்று உள்ளே வருவதால் 18 அங்குல மூச்சு விரயம்.
ஓடும்போது 54 அங்குல மூச்சு வெளியேறி 27 அங்குல மூச்சு மறுபடியும் உடலினுள் வரும். இதனால் 27 அங்குல உயிர்க்காற்று நஷ்டமாகிறது.
ஆணும் பெண்ணும் உறவுகொள்ளும் சம்போக சமயத்தில் 64 அங்குலத் காற்று வெளியில் வந்து 24 அங்குலக் காற்று மட்டும் மறுபடியும் உடலினுள் செல்லும். இதனால் 40 அங்குல உயிர்க்காற்று நஷ்டமாகிறது.
இதுபோன்று மனித வாழ்க்கையின் நடைமுறைச் செயல்களால் பல்லாயிரம் அங்குல அளவுள்ள உயிர்க் காற்றினை செலவழித்து விடுகிறார்கள். இதனால் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆயுள்காலம் வரை முழுமையாக வாழ்ந்து முடிக்காமல் முன்னரே இறந்து விடுகிறார்கள்.
இன்னும் சிலர் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்காமல், அளவுக்கு அதிகமாக மூச்சுக்காற்றை வெளியில் விட்டு தன் ஆயுள் கணக்கைக் குறைத்துக் கொள்கிறார்கள். சிலர் தேவையில்லாமல் சத்தம் போட்டுப் பேசுவது, அலைவது போன்ற செயல்களால் தாங்களே தங்கள் ஆயுள் காலத்தைக் குறைத் துக் கொள்கிறார்கள்.
சுந்தரானந்தர்: ஆசானே, நீங்கள் கூறிய தெல்லாம் ஒரு மனிதன் அன்றாடம் செய்யக்கூடிய செயல்கள்தானே? பேசாமல், நடக்காமல், உழைக்காமல் இருக்க முடியாதே! இந்த செயல்களைச் செய்யாதவன் உழைத்து தன் வாழ்க்கைத் தேவைகளை அடைய முடியாமல்போய், வாழ்க்கை சோம்பல் நிறைந்து, தன் குடும்பத்திற்கும் பூமிக்கும் பாரமாக வாழும் நிலையை அடைந்து விடுவானே? அவர் தன் வாழ்க்கையை எப்படி உயர்வாக அமைத்துக்கொள்ள முடியும்? ஒரு மனிதன் தன் அன்றாடக் கடமைகளை செய்தாகவேண்டும். உயிர்க்காற்று நஷ்டமாகி ஆயுள் குறைவையும் சரிசெய்து, நிர்ணயித்த ஆயுள் காலத்தைவிட இன்னும் அதிக காலம் வாழவேண்டும். இதற்கு சரியான வாழ்க்கை வழிமுறையைக் கூறுங்கள்.
அகத்தியர்: சுந்தரானந்தா, நாளை தமிழ்ச் சபையில் உயிர்க் காற்றின் நஷ்டத்தை சமன்செய்து நீண்ட ஆயுளுடன் வாழ வழி முறைகளைக் கூறுகிறேன். இன்று சபை கலையட்டும்.
"ஓம் என்ற புத்திகெட்ட மானா கேளே
உலகத்தில் மானுடர்க்காம் ஆண்டு நூறே
ஆமென்றே இருபத்தோ ராயிரத்தோடு
அறுநூறு சுவாசமல்லோ ஒரு நாளைக்குப்
போமென்று போனதனால் நாள் குறைந்து
போச்சுது போகாவிட்டால் போவதில்லை
தாமொன்று நினைக்கையிலே விதியும் ஒன்று
தானிணைந்த தன்மையல்லோ விதிகள் தாமே.
(உரோமரிஷி முனிவர்)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)