வைகை நதி என்றதும் நமது நினைவுக்கு வருவது சித்திரை மாதத்து "முழு மதி' வானில் ஒளிர்கின்ற "பௌர்ணமி' நாளில் கள்ளழகர் பெருமாள் வண்ணப்பட்டுத்தி கம்பீரமாக வைகை ஆற்றில் இறங்குகிற மகத்தான பெருந் திருவிழா ஆகும்.

மீனாட்சி அன்னையின் திருக்கல்யாணத்திற்கு வருகை தந்த குண்டோதரன் என்ற அரக்கன் தாகத்தால் சிவனை வேண்டினான். அப்போது அங்கு தோன்றிய சிவ பெருமான் வை... கை என்று குண்டோதரனிடம் கட்டளை யிட வைகை பிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.

வைகை நதி தமிழ்நாட்டின் நான்காவது பெரிய ஆறு ஆகும். வருச நாடு மேகமலை பகுதியிலுள்ள வெள்ளி மலையில்தான் வைகை நதி உற்பத்தியாகிறது. சுருளி யாறு, தேனியாறு, வரட்டாறு, மஞ்சளாறு, நாகலாறு, மருத நதி போன்றவை வைகையின் துணை ஆறுகளாகும்.

Advertisment

ss

மகாவிஷ்ணு எழுந்தருளி யிருக்கின்ற வைகுண்டத்தின் "வை'யும் இமயகிரிவாசன் எழுந்தருளியிருக்கும் கைலாயத்தின் "கை'யும் இணைந்து சைவ- வைணவ ஒற்றுமையின் அடையாளமாக இந்த நதி உருவானதாகவும் சுவாரசியமான தகவல் உண்டு.

பெரும்பாலான நதிகள் கடலில் இணையும்பட்சத்தில் வைகை நதி மட்டும் கடலை அடையவில்லை. இதற்கு ஒரு புராண சம்பவம் உண்டு. தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது ஆலகால விஷம் வந்ததும் அதனை ஈசன் ஏற்றுக்கொண்டு நீலகண்டனாய் நின்றாரல்லவா. அப்போது வைகை நினைத்ததாம். "ஏ கடலே.... மீனாட்சி கரம்பிடித்த சுந்தரேஸ்வரனுக்கு நஞ்சு கொடுத்த காரணம் உன்னை வந்தடைய மாட்டேன். அது பாவம்' என்று வைகை நதி கடலோடு சேரவில்லை என்று பெருந் தொகை எனும் நூலில் ஒரு பாடலில் உணர்த்தப்பட்டுள்ளது.

"நாரி இடப்பாகர்க்கு நஞ்சளித்த பாவி

என்று வாரி இடம் போகாத வையையே நதி.''

இதுவே அந்தப் பாடல் ஆகும்.

Advertisment

மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது அழகர் மலை. இங்குதான் கள்ளழகர் பெருமாள் வீற்றிருக்கிறார். அழகர் கோவிலுக்கு திருமாலிருஞ்சோலை என்ற பெயர் உண்டு. திருமாலிருஞ்சோலை எனும் அழகர் கோவில் ஆழ்வார் பெருமக்களால் மங்களா சாசனம் பாடப்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று என்கிற பெருமைபெற்ற தலம் ஆகும்.

மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள் இருக்கிறார்களாம். ஒன்று திருமாலிருஞ் சோழகர், அடுத்து திருமோகூர் அழகர், மூன்றா வதாக கூடல் அழகர் ஆவர். இவர் களில் திருமாலிருஞ்சோலை அழகரே கள்ளழகர் பெருமான் என்று போற்றப் படுகிறார். வைகையாற்றில் இறங்கும் பெருமான் கள்ளழகர்தான்!

கள்ளழகர் கோவிலில் காவல் தெய்வமாக பதினெட்டாம்படி கருப்பசாமி வீற்றிருக் கின்ற சந்நிதி உள்ளது. கையில கத்தி, ஈட்டி காலில் சல்லடம், தோளில் சாத்திய கட்டாரி என்று கம்பிரமாக காட்சிதரும் கருப்பசாமி சந்நிதிக்குதான் கள்ளழகர் முதலில் வருவாராம்.

Advertisment

அந்த சந்நிதியில் கள்ளழகர் அணிந்தி ருக்கின்ற நகைகளின் பட்டியல் வாசிக்கப் படுமாம். வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் முடிந்து திரும்பும்போது அணிந்துசென்ற நகைகள் எல்லாம் பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டி விட்டுதான் அழகர் ஆலயம் செல்லவேண்டும் என்ற ஐதீகம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

அழகர் பெருமான் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நிகழும்போது அவர் எந்த நிறத்தில் பட்டாடை உடுத்தியுள்ளார் என்பதை மதுரை மக்கள் ஆவலுடன் பார்ப்பார்களாம்.

அவர் எந்த வண்ணத்தில் பட்டாடை அணிந்துவருகிறாரோ அதற்கேற்ப அந்த ஆண்டில் நன்மை- தீமைகள் நிகழும் என்ற நம்பிகை தொன்றுதொட்டு மக்களிடையே நிலவிவருகிறது. பச்சை நிறத் தில் ஆழகர் பட்டாடை உடுத்தியிருந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்பு பட்டு உடுத்தியிருந்தால் வறட்சி நிலவும். வெள்ளை, ஊதா போன்ற நிறங்களில் பட்டாடை உடுத்தியிருந்தால் நன்மையும் தீமையும் சரிசமமாக இருக்கும். மஞ்சள் பட்டு கட்டி வந்தால் நாட்டில் மங்களகரமான நிகழ்வுகள் இருக்குமென்ற நம்பிக்கை உள்ளது.

அழகர் பெருமானுக்கான ஆடைகள் ஒரு பெரிய பெட்டியில் இருக்கும். கோவிலின் தலைமை பட்டா அந்தப் பெட்டிக்குள் கையைவிட்டு ஏதாவது ஒரு பட்டாடையை எடுப்பார். அவர் கையில் எந்தநிறப் பட்டாடை வருகிறதோ அதுதான் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குகின்ற வைபவத்தின் போது அவருக்கு அணிவிக்கப்படுமாம். எனவே மக்கள் கள்ளழகர் எந்த நிறத்தில் பட்டாடை அணியப் போகிறாரோ என்று பய பக்தியோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்களாம்.

கள்ளழகர் பெருமான் ஆற்றில் இறங்கு கின்ற இந்த மாபெரும் வைபவத்தைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களிலிருந்து சாரை சாரையாக மக்கள் வந்துசேருவார்கள். வாராரு வாராரு அழகர் வாராரு என்று மக்கள் பக்தி பரவசத்துடன் கோஷமிட கள்ளழர் கம்பீரமாக வைகையில் இறங்கும் மாபெரும் திருவிழா இனிதே நடந்தேறும்!