"பத்தியம் தவறினாலும் சத்தியம் தவறாதே' என்பது நல்லதொரு பழமொழி. யுகங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிந்தனை இருந்தது. கிருதயுகத்தில் தர்மசிந்தனை வலிமையாக இருந்தது. "தர்மம் தலைகாக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும்' என்ற கருத்தை வலியுறுத்தும் விதத்தில் வாழ்க்கை நடத்தினார்கள். ஞானிகள், மகான்கள் வாழ்ந்த காலமது. திரேதா யுகத்தில் அருள்சிந்தனை மாறி பொருள் சிந்தனை வந்தது. அடுத்து துவாபரயுகத் தில் காமப்பற்று அதிகரித்துக் கொண்டே வந்தது.
இக்கலியுகத்தில் மனிதர்களுக்கு மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என மூன்று ஆசை களுக்கும் மனதில் இடம்தரும் விதத்தில் வாழ்க்கைப் பாதை அமைந்துவிட்டது. இருப்பினும் சத்தியம் தவறாமல் வாழவேண்டும் என்பதற்காக அரிச்சந்திர புராணக்கதையை அரங்கேற்றம் செய்தார்கள்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை வலியுறுத்தி ராமபிரான் கதையை எடுத்துரைத்தார்கள். மண்ணாசைக்கு மகாபாரதத்தை யும், பெண்ணாசைக்கு ராமாயணத் தையும், பொன்னாசைக்கு சிலப்பதிகாரத்தையும் படைத்தார்கள். "சத்திய மேவ ஜெயதே' என்று சொல்லி சத்தியவழியில் நடந்தால் வெற்றி கிட்டும் என்று எடுத்துரைத்தார்கள். அரசாங்கத்தின் இலச்சிணையாக கோபுர சின்னத்தை வைத்து "வாய்மையே வெல்லும்' என்ற வாசகத்தை அதில் பதித்திருக்கிறார்கள்.
சத்தியத்தை எப்பாடுபட்டாவது காக்க வேண்டும். அறவழியில் வாழவேண்டும் என்று வள்ளுவர் "அறன் வலியுறுத்தல்' என்ற அதிகாரத்தையும், அவ்வைப்பிராட்டி "அறம் செய்ய விரும்பு' என்று ஆத்திசூடியும் இயற்றியுள்ளனர். ஆனால் இந்த கலியுகத்தில், அறவழியில் வாழ வேண்டியவர்கள், அருள்பற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள், வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள பொருள் பற்றில் நாட்டம் கொள்ளவேண்டிய சூழ்நிலை அமைந்துவிட்டது. பொருள்வழியே மதி செல்வதற்கு ஆசையே காரணமாகிறது. ஆர்ப்பரித்து வருகின்ற கடல்அலைகள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்து செல்வதால்தான் கடற்கரை ஓரத்தில் கால்மீது கால் போட்டு சுகமாக அமர்ந்து அதை ரசிக்க முடிகிறது. கடலலைகள் சூறாவளியாகவோ, புயலாகவோ, சுனாமியாகவோ வந்தால் தாங்கமுடியாது. அதுபோல ஆசைகளும் அதிக மானால் தாங்கமுடியாது. ஆசையின் விளை வால் குற்றம் புரிய நேரிடுகிறது. குற்றம் புரிவதன்மூலம் தண்டனையை அனுபவிக்க வேண்டும். தண்டனையை அனுபவிக்காமல் வாழவேண்டுமானால் சத்தியத்தைக் கடைப் பிடிக்கவேண்டும். அதனால்தான் "பத்தியம் தவறினாலும் சத்தியம் தவறாதே' என்று சொன்னார்கள்.
"சத்தியம் தவறாமல் அறவழியில் வாழ ஒவ்வொருவரும் ஒரு லட்சியப்பாதை அமைக்க வேண்டும். தனக்கான லட்சியத்தை நோக்கிப் பயணப்படும்போது மூன்று நிலைகளை சந்திக்க நேரிடும்' என்றார் சுவாமி விவேகானந்தர். அவை ஏளனம், எதிர்ப்பு, ஏற்றுக்கொள்ளப் படுதல் ஆகியவை.
நீயாவது அந்த நிலையை எட்டிப்பிடிப்ப தாவது? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா? இப்படி ஏளனம் செய்வோரிட மிருந்து மீண்டுவந்தால் அடுத்த நிலை எதிர்ப்பு. எதிரிகளின் தாக்குதல்களையும் சமாளித்து முன்னேறினால்தான் ஏற்றுக்கொள்ளப்படுதல் என்னும் மூன்றாவது நிலை உருவாகும்.
இலங்கையில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையைக் கடலைக்கடந்து தெற்குப் பக்கம் சென்றால் காணலாம். கடலைத்தாண்டும் கடினமான காரியத்தை மேற்கொள்ளும்போது அப்பயணத்தின் நடுவே ஆஞ்சனேயரைத் தடுத்து நிறுத்துவதற்கு தடைகள் பல வந்தன. அத்தடைகளையெல்லாம் தாண்டி சீதாதேவி இருக்குமிடம் சென்று, "கவலைப்படாதீர்கள்! கணவர் வருகிறார்; கட்டாயம் மீட்பார்' என்று ஆறுதல் சொன்னார். அதனால்தான் "செவிக்குத் தேன் என ராகவன் கதையைத் திருத்தும் கவிக்கு நாயகன்' என்று கவிச்சக்கரவர்த்தியாலும், பக்தர்களாலும் ஆஞ்சனேயர் போற்றப்படுகிறார்.
கப்பலைச் செலுத்தும் மாலுமி ஒருவர், திடீரென்று கடலில் ராட்சத அலைகளும், பேய்க் காற்றும் சுழன்றடிக்கும்போது சொன்னார்- "ஆர்ப்பரிக்கும் அலைகளும், சூறாவளிக்காற்றும் தடைகள் அல்ல; அவை எப்படியெல்லாம் லாவகமாகக் கப்பலை இயக்கவேண்டுமென்று நமக்கு கற்றுக்கொடுக்கின்றன' என்று.
தடங்கல்கள் பல வந்தபோது அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, தடங்கள் பதிப்ப வரையே சமுதாயம் பாராட்டும். அப்படிப்பட்ட தடங்களைப் பதிப்பதற்கு உறுதுணையாகவும், எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றதொரு திருத்தலம்தான் கொங்கு மண்டலத்தில் வெள்ளலூரில் எழுந்தருளியிருக்கும் தேனீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீதேனீஸ்வரர்.
இறைவி: சிவகாம சுந்தரி.
விநாயகர்: சித்தி விநாயகர், கல்யாண கணபதி.
புராணப்பெயர்: வெளிலூர், தென்னூர், தேனூர்.
ஊர்: வெள்ளலூர்.
தலவிருட்சம்: வன்னிமரம்.
தீர்த்தம்: கயிலாய தீர்த்தம், நொய்யல் தீர்த்தம்.
விசேஷமூர்த்தி: ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்.
கொங்கு மண்டலம் 24 நாடுகளைக் கொண்டது. அவற்றில் வாயறைக்கா நாட்டில் உள்ளது வெள்ளலூர். சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முற்பட்டதும், சேர, சோழ மன்னர்கள் திருப்பணி மேற்கொண்டதும், இயற்கை அழகுடன் கூடிய நொய்யல் என்னும் காஞ்சி மாநதி ஓடும் சிறப் பினைப் பெற்றதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் நொய்யல் நதியின் தென்புறத்தில், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை வழங்கும் திருத்தலமாக அமைந் துள்ளதுதான் ஸ்ரீ தேனீஸ்வரர் திருக்கோவில்.
"வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்குக்
குடக்குப் பொருப்பு வெள்ளிக்குன்று- கிடக்கும்
களித்தண்டலை மேவுகாவிரி சூழ்நாடு
குளித்தண் டலையளவு கொங்கு'
என்று சோழன் பூர்வப்பட்டயம் கூறுகிறது.
வேளிர்கள் ஆட்சி செய்யும்போது இவ்வூர் வேளிலூராக இருந்து வெளிலூராகி அதன்பின் வெள்ளலூர் ஆனதை கொங்கு நாட்டுக் கல்வெட் டுச் செய்திகள் கூறுகின்றன.
நீண்டு அடர்ந்த மரங்களும், சோலைகளும் நிறைந்த பகுதி என்பதால், மரங்களில் தேனீக்கள் கூடுகட்டி தேனைச் சிந்திக் கொண்டிருந்ததால் இவ்வூர் தேனூர் என்றானது. ""தேனூரில் ஒரு பிராமணன் நாள் தவறாமல் தேனீஸ்வரரை வழிபட்டுவந்தான். ஒருநாள் தேனீஸ்வரர் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்க, "எனக்கு ஒன்றும் வேண்டாம். இவ்வூர் மக்களுக்கு எல்லா வளங்களும் கொடுத்து அருள்பாலிக்கவேண்டும்' என்று வேண்டிக்கொண்டாராம். அதன்படி தேனீஸ்வரர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்'' என்று தலைமை அர்ச்சகரான பசுபதி குருக்கள் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில்...
""தேவர்கள், அந்தணரின் செயலைக் கண்டு தாங்களும் பிராமணர் உருவில் நாள் தவறாமல் வழிபட்டுவந்தனர்.
அவர்களிடம் தேனீஸ்வரர் "என்ன வரம் வேண்டும்?' என்று கேட்க, தேவர்கள் "எப்போதும் உங்களை வணங்கவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்களாம். அதனால் அவர்கள் மரங்களாகப் பிறந்து வழிபடுவதாக ஐதீகம். இவையெல்லாம் கொங்குநாட்டு ஏட்டுச்சுவடியில் உள்ளது'' என்றார்.
தேனீஸ்வரரான கதை
ஒரு நாள் சூரியன் அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு செல்லும்போது கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தியது. அது பூமியிலுள்ள வெள்ளலூரில் விழுந்தது. அந்த இடத்தை தேவர்கள் தேடிச்சென்றபோது அமிர்தம் விழுந்த இடம் சுயம்புலிங்கமாக மாறியது. உடனே தேவர்கள் தேனீக்களாக மாறிப் பூஜித்தார்களாம். அமிர்தமாகிய தேன், தேனீஸ்வரராக ஆனதாலும், தேனைத் தரும் பூச்சிகளாக தேவர்கள் மாறி வழிபட்டதாலும் இத்தல இறைவன் தேனீஸ்வரர் ஆனார் என்கிறது தலபுராணம். அதனால் வெள்ளலூரை தேனூர் என்றும், சிவபெருமானை தேனூராண்டான் என்றும் அழைக்கப்படுவது வழக்கமாயிற்று.
கரிகாற்சோழன் வரலாறும் வழிபட்டதும்
தஞ்சையை தலைநகராகக்கொண்டு சோழமன்னன் ஆட்சி செய்துவரும்போது மண்மாரி பொழிந்ததால், மன்னன், கருவுற்றிருந்த தன் மனைவியைக் காக்கும் பொருட்டு வேறொரு இடத்திற்குச் செல்லுமாறு படைவீரர்களுடன் அனுப்பிவைத்தான். அவர்கள் வெள்ளலூரில் வந்து தங்கினர். கருவுற்றிருந்த அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. குழந்தையை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக ஒளித்துவைத்தனர். அக்குழந்தை கரிகாலன் என்ற பெயருடன் வளர்ந்தது.
இவ்வாறிருக்க, சோழ நாட்டில் பட்டம் சூடுவதற்கு மன்னன் இல்லாமல் தவித்திருக்க, பட்டத்து யானை இவ்வூருக்கு வந்து விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனுக்கு மாலையணிவித்துத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு சோழநாடு சென்றது. பின் கரிகாலன் ஆட்சிசெய்த காலத்தில் கொங்கு நாட்டிற்கு வந்து நொய்யல் நதிக்கரையில் 36 தலங்களையும், 360 சிறிய கோவில்களையும் கட்டியதாக சோழன் பூர்வப்பட்டயம் கூறுகிறது. "இரும்பிடர்த்தலையார் இவன் மாமன்' என்று கரிகாற்சோழனைக் குறிப்பிடுகிறது. தன் மனைவி உடல்நலம் குன்றியபோது கரிகாற்சோழன் தேனீஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டு நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளான் என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
சிறப்பம்சங்கள்
✷ வெள்ளியங்கிரி- தென் கயிலாயம் எனவும், வெள்ளலூர்- பூலோகக் கயிலாயம் எனவும் கருதப்படுகிறது. இங்கு ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
✷ ஊழிக்காலத்தில் முனிவர்களும் தேவர்களும் வெள்ளியங்கிரி மலையில் தங்குவார்களாம். அத்தகைய வெள்ளியங்கிரி- போரூர்- வெள்ளலூர் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது சிறப்பு.
✷ கிருதயுகத்தில் தேவேந்திரன் காலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தபோது இவ்வூர் "தேனூர்' என்று அழைக்கப்பட்டுள்ளது. திரேதாயுகத் தில் அரிச்சந்திரன் காலத்தில் வேதவியாசர் லிங்கம் பிரதிஷ்டை செய்தபோது "வெளிலூர்' என்று வழங்கப் பட்டது. துவாபரயுகத்தில் சாந்தனு மகராஜன் காலத்தில் மார்க்கண்டன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை ஏகபாத முனிவர் பூஜித்தபோது இவ்வூர் "தோலூர்' என்றிருந்தது. கலியுகத்தில் நவகோடி சித்தர்கள், முனிவர்கள், சேர, சோழ, பாண்டியர்கள் வழிபட்ட தால் இவ்வூர் வள்ளலூர் என்றும் வழங்குகிறது.
✷ தஞ்சையில் ஆட்சி செய்துகொண்டிருந்த விக்ரமசோழன் தன் சகோதரனால் ஏமாற்றப்பட்டு, தன் மனைவியுடன் வெள்ளலூருக்கு வந்து சிவவழிபாடு செய்துகொண்டிருந்தான்.
அவன் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்து பெரியவளாயிற்று. அப்போது பாண்டிய மன்னனுக்குத் திருமண வயதில் ஒரு மகன் இருந்தான். தன் மகனுக்கு எங்கு தேடியும் பொருத்தமான பெண் அமையவில்லை. இந்நிலையில் ஒருநாள் பாண்டிய மன்னன் கனவில் சிவபெருமான் தோன்றி, விக்ரம சோழன் தன் தமையனால் நாடிழந்து வெள்ளலூரில் இருப்பதையும், அவனுக்கு ஒரு பெண் இருப்பதையும் சொல்லி, அவளே உன் மகனுக்குப் பொருத்தமாவாள் என்று கூறினார். உடனே பாண்டிய மன்னன் பரிவாரங்களுடன் வந்து விக்ரமசோழனை அழைத்துச் சென்று ஆட்சியைத் திரும்பப் பெற்றுத் தந்தான். விக்ரமசோழன் தன் மகளை பாண்டிய மன்னன் மகனுக்கு மணம் முடித்துவைத்து, மீண்டும் வெள்ளலூருக்கு வந்து தேனீஸ்வரர் கோவிலைப் புதுப்பித்து பல அறச் செயல்களைச் செய்துள்ளான் என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
✷ விண்ணுலகிலுள்ள காமதேனு வழிபட்டுப் பேறுபெற்று முக்தி பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.
✷ சித்திரை முதல் நாளன்று அதிகாலையில் சூரிய ஒளி தேனீஸ்வரர் மீது விழுவதை பக்தர்கள் பரவசத்துடன் பார்ப்பது விழாக் கோலம் போலிருக்கும்.
✷ திருவனந்தபுரத்தைச் சார்ந்த பக்தர் ஒருவருக்கு ஜனனகால ஜாதகத்தில் ஏழாமிடத்தில் கேது இருந்ததால் திருமணமாகவில்லை. அவர் தேனீஸ்வரரை வழிபட்டபின் அவரது கனவில் ஈசன் தோன்றி, ஆலய வளாகத்திலுள்ள பிள்ளையாருக்கு சந்நிதி கட்டி கும்பாபிஷேகம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரத்தினடியில், சிறியதாக கல்யாண கணபதி என்ற திருநாமத்துடன் ராகு- கேதுக்கள் சிலையுடன் கட்டியதுதான் இந்த கல்யாண கணபதி ஆலயம்.
✷ நிருதிமூலையில் க்ஷேத்திர விநாயகராக சித்தி விநாயகர் வீற்றிருக்கிறார். 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த விநாயகர் உளி கொண்டு செதுக்கப்படாத- ஓம்கார வடிவில் துதிக்கையில் கொழுக்கட்டையும் கரங்களில் நவநிதிகளையும் பெற்றுக் காட்சிதருவது அபூர்வமான அமைப்பு.
✷ கரிகாற்சோழன் காலத்தில் இருகூர் நாட்டில் காடுகளை அழித்தபோது வெங்கற்களாலான அற்புத லிங்கம் கிடைத்தது. அந்த லிங்கம் தேனீஸ்வரருக்குப்பின் வெளிப்பிராகாரத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிப் பதும், இந்த லிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யும்போது ஐந்து கோடுகள், ஐந்து நிறங்கள் தெரிவதும் சிறப்பு.
✷ இன்றும் பஞ்சலிங்கேஸ்வரருக்கருகில் இரண்டு வன்னி மரங்கள் உயர்ந்து நிற்பதை முனிவர்களாக, ரிஷிகளாகக் கருதுகின்றனர்.
கோவில் அமைப்பு: நான்கு தூண்களால் நிறுத்தப்பட்ட வித்தியாசமான முகப்பு. ஒரு தூணில் பராந்தகச் சோழன் காலத்துக் கல்வெட்டு உள்ளது. தூண்களின்மேல் பெரிய லிங்கமும், நடனமாடிக்கொண்டிருக்கும் நடராஜர் திருவுருவமும் அமைக்கப்பட்டுள் ளது. முன்மண்டபத்தில் நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தீஸ்வரர் உள்ளனர்.
நந்தீஸ்வரர் முன் வசந்த மண்டபம், அதற்கடுத்து தேனீஸ்வரர், உட்பிராகாரத்தில் எட்டுக்கல் தூண்களுடன் கூடிய மகாமண்ட பம் உள்ளது. இதனை "நக்கனார் மண்டபம்' என்று கல்வெட்டில் கூறியுள்ளனர்.
இதன் மேற்சுவர்களில் "வில்' சின்னமும், "யாழி' போன்று ஒரு சின்னமும் பொறிக்கப் பட்டுள்ளது.
தேனீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புமூர்த்தி யாக அருள்பாலிக்கிறார். அவருக்கு இடப்புறம் கிழக்கு நோக்கி அன்னை சிவகாமசுந்தரி கரங்களில் தாமரைப்பூ ஏந்தி, அபயவரத ஹஸ்தமாகக் காட்சியளிக்கிறாள். அருகே சங்கரநாராயணர் அருள்பாலிக்கிறார். சித்தி விநாயகர், பாலமுருகன், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், சனீஸ்வரர், காலபைரவர், நவகிரகங்கள் தனித்தனிச் சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
வன்சொற்கள் பேசி குடும்பத்தில் உள்ளவர்களிடம் அமைதியைக் கெடுத்துக் கொண்டிருப்பவர்களை இன்சொற்கள் பேசி தேன்போன்ற இனிமையான இல்லற வாழ்க்கையை அமைத்துத்துத் தருகின்ற தலமாம், பிரதோஷம், தேய்பிறை அஷ்டமியில் வேள்வி பூஜைகளுடன் உற்சவர் உலா வருகின்ற அளவுக்கு விழாக்கோலம் காணும் தலமாம், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சிக் காலங்களில் சிறப்பு ஹோம வழிபாடுகள் நடைபெறுகின்ற தலமாம், ஐந்து இலைகள் கொண்ட மந்தாரை மரத்தில் பூக்கும் இளஞ்சிவப்பு நிறப் பூக்களை சுவாமிக்குப் படைத்தால் ராகு- கேது தோஷங்களிலிருந்து நிவர்த்தி செய்கின்ற தலமாம், மனமுருகி வழிபட்டால் வள்ளலாய் அருளும் வெள்ளலூர் ஈசனாம் தேனீஸ்வரரைத் தொழுவோம். தொடர் வெற்றிகளுடன் தேனினும் இனிய வாழ்வு பெறுவோம்.
காலை 7.00 மணிமுதல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணி
முதல் 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத்தொடர்புக்கு: வி.என். பசுபதி குருக்கள்,
அ/மி சிவகாமசுந்தரி அம்பிகை சமேத ஸ்ரீதேனீஸ்வர சுவாமி திருக்கோவில்,
வெள்ளலூர் அஞ்சல், கோயம்புத்தூர்- 641 111.
வி.என். பசுபதி குருக்கள், செல்: 94422 00118, வி.என். இராமநாத குருக்கள், செல்: 98655 33418, கல்யாண சுந்தர குருக்கள், செல்: 93456 29731, வி.என். கண்ணன் குருக்கள், செல்: 97892 73149, வி.என். கிருஷ்ணமூர்த்தி குருக்கள், செல்: 90033 74112.
அமைவிடம்: கோயம்புத்தூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளலூர், உள்ளது. கோவை காந்திபுரம், உக்கடம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளலூர் செல்வதற்கு பேருந்துகள் நிறையவுள்ளன.
படங்கள்: போட்டோ கருணா