தட்சன் தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் மாபெரும் யாகம் ஒன்றைத் தொடங்கினான். அவனது மகளான தாட்சா யணி என்னும் சதிதேவி தந்தையிடம் சென்று நியாயம் கேட்டாள். ஆனால் தட்சனோ மகளென்றும் பாராமல் அவளை அவமதித்தான்.
அதனால் அவமானமடைந்த அவள் அதே யாக குண்டத்தில் விழுந்தாள். இதையறிந்த சிவபெருமான் தட்ச யாகத்தை அழித்ததோடு, யாக குண்டத்திலிருந்த தன் மனைவியின் உடலைத் தோள்மீது சுமந்துகொண்டு பெரும் சீற்றத்தால் ருத்ர தாண்டவமடினார். அதனால் மூன்று உலகங்களும் நடுங்கின.
இதைக்கண்ட தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட, அவர் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடல் பாகங்களைப் பல்வேறு துண்டுகளாக அறுத்தார். ஒவ்வொரு உறுப்பும் விழுந்த இடங்கள் சக்தி பீடங்களாகின. அவ்வாறு சதிதேவியின் வலப் பக்க மார்பு விழுந்த பகுதியே வஜ்ரேஸ் வரி ஆலயம் என்னும் பெயரில் விளங்குகிறது.
இந்த ஆலயம் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள காங்கடா என்னும் இடத்திலுள்ளது. இதன் புராணப் பெயர் நகர்கோட் என்பதாகும். காங்கடா என்னும் இடத்தில் இருப்பதால் இந்த அன்னையை காங்கடா மாதா என்றும் மக்கள் அழைக்கின்றனர்.
இவ்வாலயத்தில் இருக்கும் வஜ்ரேஸ்வரியை பக்தர்கள் பிண்ட வடிவில் வழிபடுகிறார்கள். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என மூன்று மதத்தினரும் இங்கு வந்து வழிபடுகிறார்கள் என்பதே இவ்வாலயத்தின் சிறப்பு. இவ்வாலயத்தின் மேற்பகுதியில் மூன்று மதங்களைக் குறிக்கும்வண்ணம் மூன்று சின்னங்கள் உள்ளன. இந்த மூன்று மதத்தினரும் வழிபட தனித்தனியே அன்னையின் மூன்று பிண்டங்கள் உள்ளன. முதல் பிண்டம் வஜ்ரேஸ்வரி; இரண்டாவது பிண்டம் பத்ரகாளி; மூன்றாவது பிண்டம் ஏகாதசி மாதா.
இங்கு வரும் பக்தர்கள் மஞ்சள்நிற ஆடைகளை அணிந்து வருகின்றனர். தங்களது அனைத்து வேண்டுகோள்களும் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இவ்வாலயத்தில் ஐந்துமுறை ஆரத்தி நடத்தப்படுகிறது. காலையில் சுப்ரபாத ஆரத்தி நடைபெறுகிறது. நண்பகலில் பிரசாத ஆரத்தி நடத்தப்படும். அப்போது அன்னைக்குப் படைக்கப்படும் பிரசாதத்தை யாருக்கும் காட்டமாட்டார்கள். கதவை முழுமை யாக அடைத்துவிட்டுப் பூஜைசெய்வார்கள். மாலையில் சூரியன் மறைந்தபிறகு செய்யப் படும் ஆரத்தியின்போது அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வார்கள். சிவப்புவண்ண மலர்கள், சந்தனம், ஆடை ஆகியவற்றை வைத்துப் பூஜிப்பார்கள். இந்த ஆரத்தியின்போது படைக்கப்படும் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
இரவில் செய்யப்படுவது மங்கள ஆரத்தி எனப்படுகிறது. பால், தயிர், நெய், தேன் ஆகியவற்றால் அன்னைக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் சந்தனத்தால் அழகு படுத்துவார்கள். தங்க நகைகள் அணிவிப்பார் கள். கடலை, பூரி, பழம், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றைப் பிரசாதமாகப் படைப்பார்கள்.
ஐந்தாவது ஆரத்தி அன்னையை உறங்க வைப்பதற்காகச் செய்யப்படுகிறது.
இவ்வாலயத்தில் பைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. ஆனால் அவரை வழிபட பெண்களுக்கு அனுமதியில்லை. இந்த காங்கடா பகுதியில் ஏதேனும் இன்னல்கள் ஏற்படும் சூழ்நிலை தோன்றினால் இந்த பைரவரின் கண்களில் நீர் வடியும். அவரது உடலில் வியர்வை அரும்பும். அதைப் பார்க்கும் அர்ச்சகர்கள் உடனடியாக இன்னல்கள் நேராமலிருக்க சிறப்புப் பூஜைகள் செய்வார்கள்.
பானகங்கா, மஞ்சி என்னும் இரு நதிகளுக்கு நடுவில் அமைந்துள்ள காங்கடா, கடல்மட்டத்திலிருந்து 2,350 அடி உயரத்தில் உள்ளது. காங்டாவின் தெற்குப் பகுதியில் மிகப்பெரிய கோட்டை ஒன்றுள்ளது. வஜ்ரேஸ்வரி ஆலயம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
மகாபாரதப் போருக்குப் பிறகு சுசர்மா சந்த் என்ற மன்னர் இந்த ஊரை உருவாக்கினாராம். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இது அப்பகுதியின் தலைநகராக இருந்துள்ளது.
பண்டைக்காலத்தில் வெளிநாட்டினர் இவ்வாலயத்தைக் கொள்ளையடித்துள்ளனர். 1009-ல் கஜினி முகம்மது இவ்வாலயத்தை இடித்திருக்கிறார். அதன்பின்னர் 1905-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது ஆலயம் சேதமடைந்தது. தற்போதுள்ள ஆலயம் 1920-ல் கட்டப்பட்டது. இந்த தலத் திற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் பதன்கோட்.