மிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அவதார நாளாக வைகாசி மாதப் பௌர்ணமியுடன் கூடிய விசாக நட்சத்திர நாள் கொண்டாடப்படுகிறது.

முருகனுக்கு கந்தன், சுப்பிரமணியன், அழகன், தேவசேனாதிபதி, குமரன், குகன், தகப்பன் சுவாமி, செவ்வேள், சேந்தன் என்று பல பெயர்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று விசாகன். மகாவிஷ்ணு ஓண நட்சத்திரத்திலும், சிவபெருமான் ஆதிரை நட்சத்திரத்திலும் அவதரித்தனர் என்பர். இதை "மாயோன் மேய ஓண நன்னாள்,'

"அண்ணலான் ஆதிரையான்' என்று பரிபாடல் கூறுகிறது.

அதுபோல முருகப்பெருமான் அவதரித்தது விசாக நட்சத்திரம். இந்த நாளில் எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பாக விழா கொண்டாடப்படும்.

Advertisment

விசாகம் ஞானச் சிறப்புக்குரிய நட்சத்திரம். முருகப் பெருமான் அறிவுக் கடவுள். ஞானபண்டிதன் என்று போற்றப்படுபவர். வழிபடும் அடியார்க்கு ஞானத்தை வாரிவழங்கும் முருகப்பெருமானை, ஞானத் துக்குரிய விசாக நாளில் வழிபட்டால் கல்விச் செல்வம் பெருகும்.

Advertisment


முருகனின் "விசாகன்' என்னும் பெயருக்கு வேறொரு காரணமும் சொல்வார்கள். "வி' என்றால் பறவை. "சாகன்' என்றால் சஞ்சரிப்பவன். மயில்மீது சஞ்சரிப்பதால் விசாகன் எனப்பட்டார்.

கந்தனுக்கு கடம்பன் என்னும் பெயரும் உண்டு. அதாவது கடம்ப மாலை அணிபவன். ஒவ்வொரு தெய்வ மூர்த்தத்துக்கும் உகந்த மலர்கள் என்று உண்டு. அதுபோல முருகனுக்கு உகந்தவை இந்தீவரம் என்னும் செங்கழுநீர்ப்பூ, பன்னீர்ப்பூ, செச்சை, செவ்வந்தி, கருங்குவளை, கடம்பு, நீலோத்பவம் போன்றவை. (அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரத்தில் குறிக்கப்பெற்ற மலர்கள் இவை.) இதில் கடம்ப மலருக்கு என்ன சிறப்பு? திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் சொல்வதைக் காண்போம்.

"கடல் நீரை முகந்து சூலுற்ற கார்மேகங்கள் வானில் வருகின்றன. அவற்றினிடையே வாள் வீசுவதுபோல மின்னல்கள் வெட்டுகின்றன. அந்த மேகங்கள் வளப்பமான மழைத் துளிகளைச் சிதறுகின்றன. அடர்ந்த காட்டில் குளிர்ச்சியாய் மழை பொழிகிறது. அதனால் மரங்கள் நன்கு வளர்ந்து காடு இருள் மண்டிக் கிடக்கிறது. சூரிய ஒளியும் புகமுடியா வண்ணம் பருத்த மரங்கள் நிறைந்த காடு. அத்த கைய கடம்ப மரங்கள் வானுயர வளர்ந்து நிற்கின்றன. அந்த கடம்ப மரங்களில் பூத்த செங்கடம்பு மலர்களால் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலை கந்தனின் மார்பில் தவழ்கிறது. அம்மாலை போகத்திற்கும் உரியது' என்றார். (திருமுருகாற்றுப் படை 7-11). அத்தகைய மணமுள்ள, செறிந்த கடம்பமாலை)யை கந்தன் தெய்வானையை மணந்து இன்பம்பெற அணிந்துள்ளான் என்கிறார்.

கடம்பன்- தத்துவம் என்ன?

muமுருகன் குறிஞ்சிநிலக் கடவுள். அங்கே கடம்ப மரங்கள் நிறைந்தி ருக்கும். அதனால் கடம்ப மாலை அணிகிறான். வள்ளியை மணம்புரிய அவனே நாடிச் சென்ற வள்ளி மலையிலும் கடம்ப மரங்கள் உண்டு.

"கடம்பா போற்றி கந்தா போற்றி' என்கிறது கந்த சஷ்டிக் கவசம். "தண்மலர் கடம்ப மாலை தாங்கிய தோளா போற்றி' என்கிறது கந்தபுராணம். அருணகிரியார் பல இடங்களில் கடம்பமாலை அணிந்த கந்தனைப் போற்றுகிறார்.

"வள்ளி காந்தனை கந்தக் கடம்பனை

கார்மயில் வாகனனை சார்ந்துணைப் போதும்

மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே'

என்று புகழ்கிறார். கடம்பமாலை யணிந்த கந்தனை எப்போதும் மறவாதி ருந்தால் தாழ்வெதுவுமின்றி சுகமாக வாழலாம் என்கிறார். முதலி−ல் வள்ளி காந்தன் என்னும் பெயரைச் சொல்லி−ய பின் கந்தக் கடம்பன் என்கிறார். இதன் தத்துவம் என்னவென்றால், கந்தனுக்குப் பிரியமான தேவி வள்ளி. அந்த மலையில் கிடைக்கும் கடம்ப மலரைத் தொடுத்து தானும் அணிந்துகொண்டு கந்தனுக்கும் அணிவித்தாள் வள்ளி. எனவே அந்த மாலையின்மீது கந்தனுக்குப் பிரியம். எனவே கந்தனின் "கடம்பன்' என்னும் திருநாமம் எந்நேரமும் நெஞ்சில் கொள்ளத் தக்கது.

அடுத்து, "சுப்ரமண்ய சகஸ்ரநாம'த்தில் இடம்பெற்றுள்ள சில நாமங்களை சிந்திப்போமா?

"ஓம் அசஞ்சலாய நம:'

சஞ்சலமற்றவருக்கு நமஸ்காரம் என்பது பொருள். திடமான சித்தமும் தூய்மையான மனமும் இன்றியமையாத குணங்கள். அத்தகைய சலனமற்றவன் முருகன். அவனை வணங்கினால் நம் மன சஞ்சலங்கள், அஞ்ஞானம் யாவும் அழியும். ஞானம் பிறக்கும்.

"ஓம் அகளங்காய நம:'

களங்கமில்லாதவருக்கு நமஸ்காரம் என்று பொருள். முருகனின் இந்த நாமாவளியைப் போற்றித் துதித்தால் நம் களங்கங்கள் யாவும் மறைந்து தூய்மை பெறுவோம். எல்லா களங்கங்களையும் அழிக்கக்கூடிய ஜோதியில் ஜோதியில் தோன்றி, எல்லா அழுக்குகளையும் எரிக்கும் அக்னியால் ஏந்தப்பட்டு, எல்லா பாவங்களையும் தொலைக்கும் கங்கையில் விடப் பட்டவர் என்பதால் முருகன் பரிசுத்தமானவர்.

"ஓம் அதீந்த்ரியாய நம:'


ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவருக்கு நமஸ்காரம் என்று பொருள். நாம் ஐம்புலன் இச்சைக்கு அடிமையாவதாலேயே பல துன்பங்களுக்கு ஆளாகிறோம். மேற்கண்ட நாமம் சொல்− வணங்கினால் இந்திரியங்கள் நம் வசப்படும். தேவையற்ற ஆசைகளிலி−ருந்து நம்மை விடுவிப்பான் குமரன்.

"ஓம் ஜனஜன்ம நிபர்ஹணாய நம:'

மக்களின் பிறவித்தளையை அழிப்பவருக்கு நமஸ்காரம் என்று பொருள். அனைத்து ஞானிகளும் இறைவனிடம் வைக்கும் தலையாய வேண்டுதல் "இனி பிறவாமை வேண்டும்' என்பதே. பிறப்பு- இறப்பு- மறுபடி பிறப்பு என்னும் இந்த சுழற்சியி−ருந்து விடுபட்டால்தான் நாம் முக்தியடை முடியும். தன் பக்தர்களுக்கு ஆன்ம ஞானமளித்து, இந்தப் பிறவியுடன் நம்மைக் கடைத்தேற்றி மறுபிறவியில்லாமல் செய்யும் முருகனை மேற்கண்ட நாமத்தால் துதிப்போம்.

"ஓம் தைவசிந்தகாய நம:'

தெய்வ சிந்தனை உடையவருக்கு நமஸ்காரம் என்று பொருள். முருகன் எனும் தெய்வத்தின் சிந்தனை தெய்வ சிந்தனைதான். அதேசமயம் அவன் தன் தாய்- தந்தையரை எப்போதும் வணங்குகிறான். திருச்சிக்கு அருகிலுள்ள வயலூரில், தன் தேவியருடன் தலைசாய்த்து தன் பெற்றோரை வணங்கும் கோலத்தில் காட்சியளிக்கிறான் கந்தன்.

அத்தகைய தெய்வசிந்தனை இருந்ததால்தான் பிரம்மனுக்குத் தெரியாத பிரணவத்தின் பொருளை அவனால் கூறமுடிந்தது.

அத்தகைய முருகனை நம் சிந்தையில் வைத்து எந்நாளும் துதிப்போம்.