காசிவராத்திரி வழிபாடுகள் குறித்து அறியாத பக்தர்கள் இல்லை.

சிவாலயத்திற்குச் சென்று, இரவு முழுவதும் சிவபெருமானின் மூலமந்திரமான "ஓம் நமசிவாய' ஜபித்துக்கொண்டே வழிபட்டால், பாவங்கள் நீங்கி புனிதம் கிடைக்குமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.

இந்த மகாசிவராத்திரி வழிபாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு ஊரிலும் சில நியமங்களைக் கடைப் பிடிக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னிரண்டு சிவாலயங்களை அன்று தரிசிக்கிறார்கள். அதுவும் ஒரு குழுவாக ஓட்டமும் நடையுமாக சிவனருள் நாமங் களைக் கூறிக்கொண்டும், "கோவிந்தா கோபாலா' என்று ஜபித்துக்கொண்டும் செல்வது வழக்கம்.

அதுபோல் மகாசிவராத்திரி வழிபாட்டில் "முக்கோண தரிசனம்' மிகவும் போற்றப்படுகிறது. ஒரு திருத்தலத்திலிருந்து அடுத்து செல்லும் திருத் தலம் மேல்நோக்கியும் (சாய்வாக), அதற்கு அடுத்த திருத்தலம் கீழ்நோக்கியும் (இறங்கு முகமாக) அமைந்திருக்கும்.

Advertisment

கடலூர் மாவட்டத்தில் ஐந்து நிலப்பகுதியில் ஒன்பது சிவன் கோவில்களை நடந்து சென்று தரிசிக்கும் வழக்கம் காலங் காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் முக்கோண வடிவத்தில் பூலோகம் (பிறத்தல்), சிவலோகம் (வாழ்தல்), கயிலை (முக்தி) ஆகிய மூன்று நிலைக்கான சிவன் கோவில்களும் உள்ளன. இதுவோர் அபூர்வமான அமைப்பென்று போற்றப் படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ளது நெல்லிக் குப்பம் திருத்தலம். இங்குள்ள புவனாம்பிகை சமேத பூலோகநாதர் கோவில் சிவ- விஷ்ணு தல மாகும். இது பூமிக்கான தடைகளை நீக்கும் தல மென்று போற்றப்படுகிறது. செவ்வாய்க்கிழமைதோறும் காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிவரை செவ்வாய் ஓரை யில் பூமிக்கான (நிலம் மற்றும் மனைகள் வைத்திருப்பவர்கள்) அத்தனை தடைகளையும் நீக்கும் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. வீடு கட்ட, மனை வாங்க எண்ணுபவர்கள் இந்தப் பூஜையில் கலந்து கொண்டு பயன்பெறுகிறார்கள்.

ss

Advertisment

பொதுவாக நாம் மணலில் நடக்கும்போது நமது பாதங்கள் முழுவதற்கும் நல்ல அழுத்தம் கிடைக்கும். இது "அக்குபிரஷர்' சிகிச்சைபோல செயல்பட்டு நமது உடலிலுள்ள நோய்களைப் போக்கும். அந்தவகை அறிவியலின் அடிப்படையில் இவ்வாலய சுற்றுப்பிராகாரம் மணலால் நிரப்பப்பட்டுள்ளது.

இக்கோவிலில் பெரிய ராஜகோபுரம் இருந்தாலும், தெற்கு வாயில்வழியாகச் சென்று வழிபடும் முறை உள்ளது. உள்ளே நுழைந்ததும் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தரிசனம் தருகிறார். மண்டபத்திற்குள் சென்றதும் கிழக்கே நந்தி, கொடிமரம், ராஜகோபுரம் காணலாம். இடப்புறம் மேற்குப் பகுதியில் அலர்மேல்மங்கையுடன் பெருமாள் தரிசனம் தருகிறார். மேலும், மேற்கே சற்று நகர்ந்தால் புவனாம்பிகையுடன் பூலோகநாதரையும் (சிவபெருமானையும்) தரிசனம் செய்யலாம்.

சிவ- விஷ்ணு திருத்தலம் இந்தியாவில் 21 இடங் களில் உள்ளதாக வரலாறு கூறுகிறது. இதில் தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில், நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில் என்று இரண்டு கோவில்கள் மட்டுமே தனிச்சிறப்புடன் இடம்பெறுகின்றன. இரண்டும் கடலூர் மாவட்டத்தில், சுமார் 50 கிலோமீட்டர் தூர இடைவெளியில் உள்ளன.

அடுத்து, வெள்ளப்பாக்கம் திருத்தலம். பரிகாரத் தலமாக இது கருதப்படுகிறது. திருமணத்தடை, குழந்தை பாக்கியத்தடை உட்பட அத்தனைத் தடைகளையும் நீக்கி, பக்தர்கள் வேண்டுவதை அருளும் திருத்தலம்.

இவ்வாலய சுற்றுப்பிராகாரத்தில் ராஜயோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். தலவிருட்சமான பன்னீர் மரம் பூத்துக்குலுங்குகிறது. மூலவர் லிங்கம் சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்று போற்றப் படுகிறது.

அடுத்து வான்பாக்கம் திருத்தலம். சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், அகிலாண்டேஸ்வரி உடனுறை கயிலாயநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வந்தால் வாழ்வின் கடைசி நிலையான முக்தியைத் தரும். முக்தி கிட்டும்வரை வளமுடனும் சுகமுடனும் வாழலாமென்று கூறப்படுகிறது.

700 ஆண்டுகள் பழமையான இவ்வாலயத்தை ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவைப் பிராட்டி புனரமைப்பு செய்ததாக வரலாறு கூறுகிறது.

நெல்லிக்குப்பம், வெள்ளப்பாக்கம், வான்பாக்கம் ஆகிய மூன்று திருத்தலங்களும் முக்கோண வடிவில் ஏழு கிலோமீட்டர் இடைவெளியில் அமையப் பெற்றுள்ளன.

முதலில் பூலோகநாதர், அடுத்து சிவலோகநாதர், இறுதியாக கயிலாயநாதர் என ஒரே நாளில் மகாசிவராத்திரியன்று வழிபட்டு, இப்பிறப்பின் பயனைப் பெற்று வளமுடனும் சுகமுடனும் வாழலாம்.

மேலும் மகாசிவராத்திரியன்று, கடலூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்களுக்கு முடிந்தவரை சென்று வழிபடுகிறார்கள்.

குறிப்பாக மஞ்சகுப்பம்- வில்வராயநத்தம் விஸ்வநாதீஸ்வரர் கோவிலில் முதல்கால பூஜையில் துவங்கி, புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார்- சிவன் கோவில், திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர், எய்தனூர் ஆதிபுரீசுவரர், திருவதிகை வீரட்டானேஸ் வரர், மேல்பட்டாம்பாக்கம் சிவன் கோவில், திருக்கண்டேஸ்வரர் நடனபாதீஸ்வரர், வான்பாக்கம் கயிலாயநாதர் கோவில், நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில், வெள்ளப்பாக்கம் சிவலோகநாதர் கோவில் என்று இரவு முழுவதுமாக நடந்தே சுற்றிவந்து, தென்பெண்ணை ஆற்றில் நீராடி, வில்வநாதீஸ்வரர் கோவில் குளத்திலோ, கெடிலம் ஆற்றிலோ குளித்து, திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் கோவில் ராஜகோபுர தரிசனம் கண்டு, மகாசிவராத்திரி வழிபாட்டினை நிறைவு செய்யும் வழக்கம் காலங்காலமாக இருந்துவருகிறது.

அத்துடன், மகாசிவராத்திரியில் முக்கோண அமைப்பில் அமைந்துள்ள சிவபெருமானை தரிசனம் செய்து, சிவனருள் பெற்று நலமுடன் வாழலாம்.