துரை விசுவநாதபுரத்தில் வசித்துவரும் 70 வயது மாற்றுத்திறனாளி பெண்மணி லட்சுமி நம்பி, மூன்று வயதிலேயே போலியோ நோய்தாக்கி இரண்டு கால்களும் நடக்கமுடியாத நிலைமைக்குச் சென்றவர். ஆனால், தன் வாழ்க்கையை முழுக்க ஆன்மிக சிந்தனைகளில் ஈடுபடுத்தி, பலவித தெய்வீகக் கைவினைக் கலைப்பொருட்கள் செய்வதைத் தனது அன்றாடப் பணியாக சுறுசுறுப்பாக செய்துவருகிறார். அவரை சந்தித்தோம்.

mm

என்னென்ன கலைப்பொருள்களை செய்துவருகிறீர்கள்?

"அனைத்துவிதமான இந்து தெய்வங்களின் உருவங்களையும் அலுமினிய கம்பிகளில் படங்களாகவும் மற்றும் விதவிதமான உயரங்களில்- தோற்றங்களில் தெய்வ பொம்மைகளாகவும் செய்து தந்து வருகிறேன். இதை நான் தொழிலாகச் செய்யவில்லை. விரும்பிவந்து கேட்பவருக்கு மட்டும் செய்து தருகிறேன்.''

தெய்வப்படங்கள் செய்ய எவ்வளவு நேரமாகும்?

"அது படங்களைப் பொருத்தது. சில தெய்வ உருவங்களில் பல்வேறு நுணுக்கங்கள் இருக்கும். அவற்றை மிகவும் கவனமாகப் பார்த்துச் செய்வேன். கிருஷ்ணர், வேங்கடாலசபதி போன்ற தெய்வப் படங்கள் எந்தவொரு சிறு குறையு மின்றி நிறைவாக, பக்தர்கள் மனதில் ஆன்மிக சிந்தனையை உண்டாக்கும்படி இருக்கவேண்டும் என்பதால், என் உடலை வருத்தி உள்ளம் ஒன்றுபட்டு முழுக்க முழுக்க தெய்வீக சிந்தனையுடன் படங்களை உருவாக்குவேன். சில படங்களை சில மணி நேரங்களில் உருவாக்கிவிடுவேன். ஆனால், சில படங்களை உருவாக்க ஒரு வாரம், ஒரு மாதம்கூட ஆகும். எனக்கு முழுத் திருப்தி வரும்வரை செய்துகொண்டே இருப்பேன்.

அதனால்தான் என்னை நேரில் சந்தித்து தெய்வப்படங்களை வாங்குபவர்கள், "அம்மா, உங்களிடமும் உங்கள் அன்பான பேச்சிலும் தெய்வத்தைக் காண்கிறோம். உங்கள் படைப்பிலும் தெய்வத்தைப் பார்க்கிறோம்' என்று மெய்சிலிர்த்துக் கூறுவார்கள். எனக்கு அது மிகுந்த ஆத்மதிருப்தி கொடுக்கும். நான் தெய்வ சுலோகங்கள் பல அறிந்தவள். என் தாய்- தந்தை, சகோதரர்கள், சகோதரி ஆகிய எல்லாரும் தீவிர ஆன்மிக ஈடுபாடு உடையவர்கள். எனவே, என்னை ஊக்குவித்து நான் தெய்வப்படங்கள் உருவாக்கத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கித்தந்து வருகிறார்கள். ஏழு வயதுமுதல் துவங்கிய இந்த ஆன்மிக ஈடுபாடு, படங்கள் உருவாக்கம் இப்போது 70 வயதிலும் தளராது தொடர தெய்வ அருளே காரணம் என நினைக்கிறேன்'' என்றார்.

Advertisment

hh

இதனை யாரிடம் கற்றுக்கொண்டீர்கள்?

"சிறுவயது முதலே பல நூல்கள் படித்து, குரு என்று தனியாக யாரிடமும் போய் கற்றுக்கொள்ளாமல் அறிந்துகொண்ட கலைதான் இது. நான் பள்ளி சென்று படித்ததில்லை. ஆனால், பள்ளிகொண்ட பெருமாளை அப்படியே பொம்மையாக செய்து தந்துவிடுவேன். தெய்வ பொம்மைகள் செய்யும்போது கைகளில், விரல்களில் கடுமையான வலிவரும். ஆனால், அந்த திருவுருவ பொம்மையை செய்துமுடித்தபிறகு, அதைப் பார்க்கும்போது பக்திப் பரவசத்தில் எல்லாவலியும் பறந்தோடி விடும்.

நான் தையல் கலை கற்றவள் என்பதால், தெய்வ பொம்மைகளுக்கு விதவிதமான ஆடைகளையும், முத்துகளால் அலங்காரங்களையும் செய்து, பார்க்கும் அனைவரையும் பிரமிக்க வைத்துவிடுவேன். "உங்களால் மட்டும் எப்படி அக்கா இவ்வளவு தத்ரூபமாக தெய்வ உருவங்களை உருவாக்க முடிகிறது' என்று வியந்து பலர் என்னிடம் கேட்பதுண்டு. நான் அதற்கு "எனது ஆழ்ந்த பக்தியும் உழைப்புமே காரணம்' என்று பதில் சொல்வேன். குறிப்பாக குழந்தைகள் நான் செய்துதரும் பொம்மைகளை மிகுந்த ஆர்வத்தோடு வாங்கிச் செல்வார்கள். அது மட்டுமல்ல; அந்த தெய்வச் சிலைகள் இரவில் கனவில் உயிர்பெற்று வந்து விளையாடி மகிழ்வதாகவும் கூறுவார்கள். அதைக்கேட்டு வியந்து போய்விடுவேன்.''

Advertisment

ff

உங்கள் எதிர்கால திட்டம் என்ன?

"என் இறுதிக் காலம்வரை இந்த தெய்வீக கைவினை கலைப்பொருட்களை செய்து ஆன்மிக பக்தர்களின் அன்பைப் பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் லட்சியம். என் லட்சியத்திற்கு என் மூத்த அண்ணன் ஆடிட்டர் ஸ்ரீனிவாசன், தம்பிகள் முரளி, ரகு, ராஜகோபால் மற்றும் தங்கை வைதேகி, அவர்கள் குடும்பத்தி னர் அனைவரும் என்னை ஆதரித்து ஊக்குவித்து வருகிறார்கள்.''

லட்சுமி நம்பி அவர்களின் தெய்வீக லட்சியம் நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.

லட்சுமி நம்பியின் அலைபேசி: 70103 10783