"செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ

டெய்த உணர்ந்து செயல்.'

-திருவள்ளுவர்

ஒரு செயலைச் செய்யவேண்டிய வனின் தகுதிகளை எண்ணி, அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும், செயலின் தன்மையையும் ஆராய்ந்து தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்கவேண்டும்.

Advertisment

கடவுளின் தரிசனம் வேண்டிப் பலகாலம் தவமிருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது. பெருமகிழ்ச்சியடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.

"எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ, அதுபோல ராணியாருக்கும், மந்திரி, அரச குடும்பத்தினருக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நீங்கள் காட்சிதர வேண்டும்'' என்றான்.

இது அவரவரின் கர்மவினையைப் பொருத்து அமையும். எனினும் மன்னன் வரத்தைக் கேட்டுவிட்டதால் கடவுளும் சம்மதித்தார்.

Advertisment

"அதோ தெரிகிறதே ஒரு உயர்ந்தமலை. அங்கே அனைவரையும் அழைத்து வா. காட்சிதருகிறேன்'' என்று சொல்லி மறைந்தார்.

மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அறிவித்து, அரச குடும்பத்தினருடனும் மக்களுடனும் மலையை நோக்கிப் புறப்பட்டான். அனைவரும் கடவுளைக் காணும் ஆவலில் மலையேறத் தொடங்கினர். சிறிது உயரம் சென்றவுடன் அங்கே செம்புப் பாறைகள் தென்பட்டன. உடனே மக்களில் நிறைய பேர் செம்பை மடியில் கட்டிக்கொள்ளவும் சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தனர்.

"உங்கள் அனைவருக்கும் இறைவனின் காட்சி கிடைக்கப் போகிறது! இதெல்லாம் அதற்குமுன் ஒன்றுமே இல்லை. அனைவரும் வாருங்கள்'' என்று உரக்க சப்தமிட்டான் மன்னன்.

"மன்னா! இப்பொழுது இதுதான் தேவை. கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது?'' என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது.

"எப்படியோ போங்கள்'' என்று மீதமிருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறத் துவங்கினான் மன்னன். மலையின் சற்று தூரத்தைக் கடந்தவுடன், அங்கே வெள்ளியிலான பாறைகளும் வெள்ளித் துண்டுகளும் நிறைய இருந்தன. அதைப் பார்த்த மீதமிருந்த மக்கள் ஓடிச்சென்று அவற்றை மூட்டை கட்ட ஆரம்பித்தனர்.

மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான். "விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்கப் போகிறது. அதற்குமுன் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்குப் பயன்படப் போகின்றன'' என்றான்.

"மன்னா... இப்பொழுது கடவுளின் காட்சியைவிட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும்'' என்று சொல்லி, மக்கள் முடிந்த அளவு அள்ளத்துவங்கினர்.

"உங்கள் தலையெழுத்து'' என்று சொன்ன மன்னன், மீதமிருந்த ராஜகுடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான். இப்பொழுது சற்று தொலைவில் தென்பட்டது தங்கமலை. ராஜகுடும்பத் தினர் பாதிப்பேர் அங்கே சென்றுவிட, எஞ்சியிருந்தவர் கள் ராணியும், மந்திரியும், தளபதியும் மற்றும் முக்கிய மானவர்கள் மட்டுமே. "சரி, வாருங்கள் செல்வோம்'' என்று அவர்களை அழைத்துக்கொண்டு முக்கால்வாசி மலையைக் கடந்திருப்பான் மன்னன்.

ff

அங்கே தென்பட்டது வைரமலை! அதைப் பார்த்த ராணி முதற்கொண்டு எல்லாரும் ஓடிவிட, மலையுச்சியில் தன்னந்தனியாகப் போய் நின்றான் மன்னன். கடவுள் மன்னன்முன் தோன்றி, "எங்கே உன் மக்கள்?'' என்றார்.

மன்னன் தலை குனிந்தவனாக, "அவர்களது வினைப் பயன் அவர்களை அழைத்துச்சென்றது அய்யனே! என்னை மன்னியுங்கள்'' என்றான்.

அதற்குக் கடவுள், "தயாராக இருப்பவர்களுக்கே கிடைக்கக்கூடியது இந்த பாக்கியம். நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதுவும் உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறது. உலக இச்சைகள் என்னும் சேற்றைப் பூசிக்கொண்டவர்கள் உடல், செல்வம், சொத்து, செம்பு, வெள்ளி, தங்கம், வைரம் போன்ற மாயைகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் கடந்து பாசம், நேசம், கருணை இருப்பவரே எம்மை அடைவர்'' என்று சொல்லி விண்ணில் மறைந் தார்.

இராமாயணத்தில், இராமனின் மனைவியாக வந்த சீதை மகாலட்சுமியின் அவதாரமாக இருந்தபோதும், மானிடப் பிறவி எடுத்து வந்ததன் காரணமாக சாதாரண மனிதர்களைப்போன்று, ஒரு நடுத்தர வீட்டுப் பெண் எவ்வாறு கஷ்டங்களை அனுபவிப் பாளோ அதைவிட அதிகமான கஷ்டங்களை அனுபவித்து துயர மடைந்தாள். அரண்மனையில் பிறந்து வளர்ந்து செல்வச் செழிப் பாக இருந்த சீதை, இராமனுக்கு மனைவியாகி, மகாராணியாகப் பொறுப்பேற்க இருந்த தினத் திற்குமுதல் நாளன்று, சின்னமாமியாரின் கட்டளையின் பேரில் கணவன் காட்டிற்குச் சென்றபோது, தானும் உடன் வருவேன் என்று கூறி கணவனின் துரயத்தில் பங்குகொண்டதை யாரும் மறக்க முடியாது.

அடர்ந்த காட்டில், இராவண னால் கடத்திச் செல்லப்பட்டு இலங்கையில் அரக்கிகளுக்கு மத்தியில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதை, தன்னைக் காக்க இராமன் வருவானா என்று வழிமேல் விழிவைத்து தினமும் காத்திருந்தாள். அப்போதுதான் அத்தி பூத்தாற்போல் கடல்கடந்து பறந்துவந்த அனுமன், "இராமனின் தூதனாக வந்தேன்'' என்று கூறி, இராமன் கொடுத்தனுப்பிய அணிகலனைக் காட்டியபோதுதான் சீதைக்கு மூச்சே வந்தது. அதையடுத்து சீதையும் தனது அணிகலனை இராமனுக்குக் கொடுத்தனுப்பி, தன்னை இராமன் விரைவில் வந்து மீட்கும்படி தெரிவித்தாள். அதன்பிறகு நடைபெற்ற சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், இராவணனுடன் போர்முடிந்த சமயம் அந்தத் தகவலை தெரிவிக்கச் சென்ற அனுமனிடம் சீதை கூறிய கதை பலருக்கும் தெரியாது. அது என்ன கதை? எதற்காக சீதை அனுமனிடம் தெரிவித்தாள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

f

இராவண வதம் முடிந்தபிறகு இராமனின் கட்டளைப்படி, விபீஷணனுக்கு கலசநீரால் அபிஷேகம் செய்து இலங்கையின் மன்னனாக பட்டாபிஷேகம் செய்துவைத்தான் லட்சுமணன். அதன்பின்னர் இராமன் அனுமனை அழைத்து, சீதையிடம் தனது நலத்தைத் தெரிவித்து, இராவணன் கொல்லப்பட்டதையும் தெரிவிக்குமாறு கூறினார். அதன்பேரில் அசோக வனத்திற்கு வந்த அனுமன் சீதையிடம் விவரங்களைக் கூறி, சீதையைத் துன்புறுத்திய அரக்கிகளை தண்டிப்பதற்கு அனுமதி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தான்.

அனுமன் கூறியதைக்கேட்ட சீதை, "விதிப்பயனாய் நான் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தேன். அதற் காக இராவணனின் பணியாட்களை தண்டிப் பது பாவமாகும். மேலும் அனுமனே, இராவணனின் கட்டளையின்படியே இந்த அரக்கிகள் என்னை மிரட்டினார்கள். அவனே இப்போது இறந்துவிட்டான். அதனால் இனி மிரட்டமாட்டார்கள். இது குறித்து புராதனமானதும், அறநெறி வழுவாததுமான நல்ல கருத்தை, ஒரு கரடி புலியிடம் கூறியதைக் கேட்பாயாக'' என்று கூறினாள்.

முன்னொரு காலத்தில் புலியொன்று வேடன் ஒருவனைத் துரத்தியது. புலிக்கு அஞ்சி ஓடிய வேடன் அருகிலிருந்த மரத்தின்மீது ஏறினான். அந்த மரத்திலோ ஒரு கரடி இருந்தது. அதைக்கண்டு பயந்த வேடன் அந்த கரடியிடம் சரணாகதியடைந்தான்.. கரடியும் அபயமளித்தது. அதன் மடியில் தலைவைத்துத் தூங்க ஆரம்பித்தான் வேடன். அப்போது மரத்தின் கீழே இருந்த புலி கரடியிடம், "நம்மை வேட்டையாடும் இவனுக்கு அடைக்கலம் கொடுப்பது நல்லதல்ல. வேடனைக் கீழே தள்ளினால் நான் பசியாறுவேன்'' என்று கூறியது.

அதற்கு கரடி மறுப்பு தெரிவித்து, "தஞ்சம் அடைந்தவரைக் கொல்வது சரியாகாது. அவரைக் காப்பதே கடமை'' என்று கூறியது. சிறிது நேரத்தில் வேடன் விழித்துக்கொண்டதும் கரடி உறங்க ஆரம்பித்தது. அப்போது வேடனை நோக்கிய புலி, "கரடியைக் கீழே தள்ளிவிடு. உன்னைவிட்டு விடுகிறேன்'' என்றது. அதற்கிணங்கிய வேடன் உறங்கிக் கொண்டிருந்த கரடியைக் கீழே தள்ளி விட்டான். ஆனால் விழித்துக்கொண்ட கரடி கீழே விழும்போதே ஒரு மரக்கிளை யைப் பற்றிக்கொண்டது. அப்போது புலி, "உன்னைத் தள்ளிய வேடனை இப்போதாவது நீ கீழே தள்ளிவிடு'' என்றது. அதற்குக் கரடி,'' தஞ்சமடைந்தவனுக்கு எப்போதும் தீங்கு செய்யமாட்டேன்'' என்று உறுதியாகக் கூறியது. மேலும் தன்னைக் கண்டு பதறிய வேடனிடம், "பயப்படாதே, உன்னைக் கொல்லமாட்டேன்'' என்றது.

ff

அந்தக் கரடியைப்போன்று உயர்ந்த மனம் வேண்டுமென்று சீதை கூறினாள். அதைக்கேட்ட அனுமனும் அரக்கிகளை தண்டிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான்.

நல்லோர் என்றும் தீங்கு செய்தோருக்குத் திரும்ப தீங்கு செய்வதில்லை. நாட்டின் அரசியாகட்டும் மக்களாகட்டும்- விதிப்பயனை அனுபவித்தேயாக வேண்டும். அதேசமயம் கர்மத்தால் வந்த வினையை தர்மத்தால் தொலைக்கவேண்டுமென்ற அடிப்படையில், நன்னடத்தையை ஆபரணமாக்கி நன்னெறியைப் பாதுகாத்து வாழ்வோருக்கு வினைப்பயனின் தாக்கத்தைக் குறைத்து தக்கசமயத்தில் நற்பலன்களைத் தரவல்லதொரு திருத்தலம்தான் திருப்பார்த்தன்பள்ளி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவில்.

இறைவன்: தாமரையாள் கேள்வன்.

இறைவி: தாமரைநாயகி (செங்கமல வல்லி).

உற்சவர்: பார்த்தசாரதிப் பெருமாள்.

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.

ஊர்: திருப்பார்த்தன்பள்ளி.

தீர்த்தம்: கட்க புஷ்கரணி.

மண்டலம்: சோழநாடு.

பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த தும், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 40-ஆவது தலமானதும், திருநாங்கூர் திருப் பதிகளில் ஒன்றாகப் போற்றப்படுவதும், அர்ஜுனன், இந்திரன், ஏகாதச ருத்திரர்கள் வழிபட்டுப் பேறுபெற்றதும், இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருப்பார்த்தன்பள்ளி அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில்.

"கண்ணன் என்றும் வானவர்கள்

காதலித்து மலர்கள் தூவும்

எண்ணன் என்றும் இன்பன் என்றும்

ஏழ் உலகுக்கு ஆதி என்றும்

திண்ணமாட நீடுநாங்கைத்

தேவதேவ னென்றென் றோதி

பண்ணின் அன்னமென் மொழியாள்

பார்த்தன்பள்ளி பாடுவாளே.'

-திருமங்கையாழ்வார்

தல வரலாறு

கௌரவர்களிடம் நாடிழந்து தனியாக யாத்திரை மேற்கொண்ட அர்ஜுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட வந்தபோது, அங்கிருந்த புரசங்காடு வனப்பகுதியினை அடைந்தான். அப்போது தாகம் எழ, நீர்தேடிச் சென்றபோது ஓரிடத்தில் அகத்தியர் கமண்ட லத்தை அருகில் வைத்து தியானத் தில் இருப்பதைப் பார்த்தான். தியானம் முடிந்து கண் திறக்கும் வரை தன்னால் தாகத்தைப் பொறுத் துக்கொள்ள முடியாது என்பதால், அகத்திய ரின் தியானத்தைக் கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அகத்தியரும் தந்தார்.

ஆனால் அர்ஜுனனால் அருந்த இயலாதபடி நீர்மறையவே வருந்தி காரணம் வேண்ட, அகத்தியரும் ஞானதிருஷ்டிமூலம் காரணத் தைக் கண்டு தெரிவித்தார்.

"அர்ஜுனா, நீ எப்போதும் எது வேண்டினா லும் பல்வேறு சோதனைகளிலும் காத்த கண்ணனை நினையாது என்னிடம் நீர் கேட்டாய். அதனால் கண்ணன் செய்த லீலை இது'' என்றார். அர்ஜுனன் தன் தவறை உணர்ந்து, "கிருஷ்ணா! கிருஷ்ணா!'' என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன்தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து, "இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினா லும் தண்ணீர் வரும்'' என்று கூறினார். அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தாகத்தைத் தணித்துகொண்டான். அகத்தியரின் வேண்டு கோளுக்கிணங்கி அங்கேயே கண்ணன் தங்கிவிட்ட தலம் பார்த்தன்பள்ளி என்றா யிற்று. பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.

தசரதன் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார்.

அப்போது நாராயணன் தனக்குக் குழந்தையாக அவதரிக்கப் போகிறார் என்பது அவருக்குத் தெரிந்தது. தன் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள நாராயணனை வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் தேவியருடன் தோன்றி, தான் இராமாவதாரத்தில் எப்படி இருப்பேன் என்பதை தசரசருக்குக் காட்டினார். இரு தேவியரும் இராமவதார காலத்தில் அவருடன் வாழ முடியாது என்பதால், தங்கள் கண்குளிர இராமனை தரிசித்த னர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இராமர் யாக குண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்துவருவதுபோல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம்!

வைணவத்தில் "பெரிய திருவடி' எனப் படும் கருடாழ்வார்மீது இறைவன் எழுந் தருளும் திருக்கோலமே கருட சேவை என்பர். ஆண்டுதோறும் தை அமா வாசைக்கு மறுநாள், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள நாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் 11 கருட சேவை உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

கரிகால் சோழன் பெண்ணெடுத்த பெருமைக்குரிய திருநாங்கூரில், அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் உள்ளன. (11 திவ்யதேசங்கள்). மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத் தில் 11 ஆலயங்களின் சுவாமிகளும் ஆண்டுக் கொருமுறை தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

புராணக்கதை

தந்தையான தட்சனின் யாகத்திற்குச் சென்ற பார்வதிதேவியை தட்சன் அவமானப் படுத்தினான். அதைக் கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்ட சிவன், சீர்காழிக்கு அருகிலுள்ள உபயகாவிரி எனும் இடத்தில் ருத்ர தாண்டவமாடினார்.

அவரது ரோமம் விழுந்த இடங்களிலிருந்து ருத்திரர்கள் தோன்றி ஆடத் தொடங்கினார் கள். சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தவித்த தேவர்கள் மகாவிஷ்ணு விடம் முறையிட்டனர்.

திருமால் திருநாங்கூரில் 11 வடிவங்களோடு சிவபெருமான் முன்பாகத் தோன்றி, அவரை சாந்தப்படுத்தி கோபத்தைத் தணித்தார்.

அதன்படி மணிமாடக் கோவிலில் நாராய ணப் பெருமாளாகவும், திருஅரிமேய விண்ண கரத்தில் குடமாடு கூத்தராகவும், திருச் செம்பொன்செய் கோவிலில் செம்பொன் அரங்கராகவும், திருத்தெற்றியம்பலத்தில் செங்கண் மாலாகவும், திருவெள்ளக்குளத் தில் அண்ணன் பெருமாளாகவும், திருவண் புருடோத்தமத்தில் புருஷோத்தம பெருமாளாகவும், திருமணிக்கூடத்தில் வரதராஜப் பெருமாளாகவும், திருவைகுந்த விண்ணகரத்தில் வைகுந்தநாதப் பெருமாளாகவும், திருத்தேவனார் தொகையில் மாதவப் பெருமாளாகவும், திருப்பார்த்தன்பள்ளியில் தாமரையாள் கேள்வனாகவும், திருக்காவளம்பாடியில் கோபால கிருஷ்ணனாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

இதேபோல மற்றொரு புராணக் கதையுண்டு. பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அது நீங்க நாங்கூர் திருத்தலம் சென்று 11 ருத்ரதோற்றங்கள்கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும்படிக் கூறினார் திருமால். சிவபெருமானும் 11 ருத்ர தோற்றம்கொண்டு யாகம் செய்தார். அதன் நிறைவின்போது 11 ருத்ர தோற்றத்திற்கும் 11 பெருமாள்களாகத் தோன்றி திருமால் காட்சிதந்தார். அப்படி பெருமாள் கொண்ட 11 கோலங்களே திருநாங்கூரை சுற்றி அமைந்துள்ள 11 திவ்ய தேசங்கள் என்பது வரலாறு. இதில் 10-ஆவது திவ்யதேசம்தான் திருப்பார்த்தன் பள்ளி.

சிறப்பம்சங்கள்

* மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தாமரையாள் கேள்வன் என்ற திருநாமத்தில் மூலவரும், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் ஸ்ரீபார்த்த சாரதி என்ற திருநாமத்திலும் அருட்காட்சி தருகின்றனர்.

* தாமரைநாயகி, செங்கமலவல்லித் தாயார் கருணை ததும்பும் முகபாவனையுடன் அருட்காட்சி தருகிறாள்.

* உற்சவர் பார்த்தசாரதிப் பெருமாளின் கையில் கத்தி இருக்கும். கோலவில்லி இராமர் கையில் வில்லுடன் அருள்பாலிப் பது சிறப்பு.

* ஆடி அமாவாசை தினத்தில் பூம்புகார் காவிரி சங்கமத்திற்கு எழுந்தருளச் செல்லும்போது, அவ்விழாவை சோழமன்னர் களே முன்னின்று தீர்த்தவாரி உற்சவத்தை சிறப்பாக நடத்தினார்கள் என்று புராதன வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளது.

* ஆனி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்று விழாவுடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்களுக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார். பின்பு வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், பெருமாளுக்கு சேவை சாற்றுமுறையும், திருமஞ்சனம் சாற்றுமுறையும் பரவசத்துடன் நடக்கும்.

* ஒருசமயம் வருண பகவான் மனநிம்மதியின்றி தவித்தபோது, "திருநாங்கூ ருக்கு அருகேயுள்ள திருப்பார்த்தன் பள்ளிக்குச் சென்று அங்குள்ள சங்க ஸரஸ், கங்கா தீர்த்தம் என்னும் கட்கபுஷ்கரணியில் நீராடி பெருமாளை நோக்கித் தவம் செய்தால் மன நிம்மதி கிடைப்பதோடு, எவராலும் எத்தனை பெரிய சக்தியினாலும் எக்காலத்திலும் இடையூறு ஏற்படாமல் பக்கத்திலிருந்து பார்த்தன் காப்பாற்றுவார்' என்று சொன்னதன் பேரில், வருணன் இங்குவந்து முறைப்படி பூஜித்து மனநிறைவைப் பெற்றான்.

* ஆனி மாத பிரம்மோற்சவம், ஆடி அமாவாசை, கார்த்திகை தீபவிழா, வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, தைபூசத் தன்று தீர்த்தவாரி மற்றும் புரட்டாசி சனிக் கிழமை ஆலய விழாக்களாகக் கொண்டாடப் படுகின்றன.

காவிரிக் கரையோரத்தில் அமைதியான சூழ்நிலையில் இத்தலம் காட்சியளிக்கிறது. மூன்று நிலைகள்கொண்ட 75 அடி உயரமுள்ள மேற்கு நோக்கிய ராஜகோபுரத் தின் முன்புறம் கொடிமரம், பலிபீடம் உள்ளது. ராஜகோபுரத்தின் வலப்புறம் கட்கபுஷ்கரணி தீர்த்தக் குளம் உள்ளது. கோபுரத்தின் உள்ளே இடப்புறம் அகத்தியர் சந்நிதி, வலப்புறம் தாயார் சந்நிதிகள் கிழக்கு நோக்கி உள்ளன. படிகள் ஏறி உள்ளே சென்றால் நாராயண விமானத்தின்கீழ் மூலவர் மேற்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார். அருகே உற்சவர். அர்த்தமண்டபத்தில் அர்ஜுனன், கிருஷ்ணன், பார்த்தசாரதி சிலாரூபத்தில் காட்சியளிக்கின்றனர். அகன்ற சுற்றுப் பிராகாரத்தில் நந்தவனம், துளசி மாடம் உள்ளது. வளிப்புறம் ஆஞ்சனேயர் சந்நிதி உள்ளது.

"ஆரோக்கியம் குன்றியவர்கள், வியாபாரத்தில் நம்பி ஏமாந்துபோனவர்கள், வேலை கிடைக்காமல் அவதிப்படும் இளைஞர்கள், பாலியல் தொல்லையால் அவதிப்படும் பெண்கள், பிள்ளைகளால் வெறுக்கப்பட்டு போக்கிடமில்லாமல் துடிக்கும் வயதானவர்கள் ஆகியோர் இந்த தலத்திற்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் கஷ்டங்கள் விலகி மனநிம்மதியோடு வாழ்நாட்களைக் கழிப்பார்கள்.

திருமால் பரிபூரண ஆனந்த கோலத்தோடு காட்சியளிப்பதை எவ்வளவு நேரமானாலும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். பகவான் விரும்பி அமர்ந்த தலங்களில் இதுவும் ஒன்றென்பதால் குறையுடன் வருபவர்கள் தெளிவான மனநிறைவுடன் செல்வது உறுதி'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலயப் பிரதான அர்ச்சகரான கிருஷ்ணகுமார் பட்டாச்சாரியார்.

பாஞ்சராத்ர முறைப்படி கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

காலை 8.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: ஸ்ரீபார்த்த சாரதிப் பெருமாள் திருக்கோவில், திருப்பார்த்தன்பள்ளி, 80, இராதா நல்லூர் அஞ்சல், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்- 609 106.

கிருஷ்ணகுமார் பட்டாச்சாரியார்; அலை பேசி: 88256 37992, 94422 26413.

அமைவிடம்: சீர்காழி வட்டம், புதன் தலமான திருவெண்காடு மேற்கு கோபுரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பேருந்து ஆட்டோ வசதியுண்டு.

படங்கள்: போட்டோ கருணா