"நாநலம் என்னும் நலமுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.'
-திருவள்ளுவர்
நாவண்மையாகிய நாநலம் தனிச் சிறப்புடையது. சொல்வண்மைக்குள்ள சிறப்பு வேறெதற்கும் இல்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.
ஈரேழு உலகங்களுக்கும் சென்று வரும் பாக்கியம் பெற்றவர் நாரத முனிவர். அவரது தந்தை படைப்புக் கடவுளான பிரம்மதேவர். ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாராயணரின் திருநாமத்தையே உச்சரிக்கும் வரம் பெற்றவர் நாரதர். ஒருசமயம் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதாவது சிவ மந்திரங்களில் சிறந்ததான "சிவாயநம' என்பதன் பொருள் என்ன என்பதே அது. யாரிடம் கேட்பதென்று யோசித்து, பின் தன் தந்தையிடமே சென்று கேட்டார்.
அதற்கு பிரம்மதேவர், ""அதோ, அங்கு அமர்ந்துள்ள வண்டிடம் கேள்; அது சொல்லும்'' என்றார். அதன்படி கேட்டார் நாரதர். வண்டு சுருண்டுவிழுந்து இறந்து விட்டது.
அதைக்கண்டு நாரதர் பிரம்ம தேவரிடம், ""சிவாயநம என்பதற்குப் பொருள் தெரிந்துகொண்டேன்'' என்றார். ""என்ன தெரிந்து கொண்டாய்?'' என்று பிரம்மா கேட்க, ""எவரொருவர் இம்மந்திரத்தைக் கேட்கிறாரோ அவர் இறந்து விடுவார்'' என்றார். அதற்கு பிரம்மா, ""நாரதா, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ அந்த மரத்தின்மீது அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள்'' என்றார்.
நாரதரும் ஆந்தையிடம் சென்று கேட்க, அது உடனே கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பிரம்மா விடம் சென்று, ""ஆந்தையும் இறந்து விட்டது'' என்றார். ""அப்படியா, அதோ அந்த வீட்டில் ஒரு கன்றுக் குட்டி பிறந்துள்ளது. அதனிடம் சென்று கேள்'' என்றார்.
நாரதர் அந்த கன்றுக்குட்டியிடம் சென்று சிவாயநம என்னும் மந்திரத்தின் பொருள் கேட்க, கன்றுக்குட்டியும் இறந்துவிட்டது. திரும்பிவந்த நாரதர் தந்தையிடம் விவரத்தைச் சொன்னார்.
""கன்றுக் குட்டியும் இறந்து விட்டதா! சரி; இந் நாட்டு மன்னருக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய்க் கேள்'' என்றார் பிரம்மா. அதற்கு நாரதர், ""வேண்டாம் நான் போய்க்கேட்டு, அந்த குழந் தைக்கு ஏதாவது நேர்ந்தால் அந்தப் பாவம் என்னை வந்துசேரும்'' என்றார்.
""நான் எழுதியபடியே அவற்றின் ஆயுட்காலம் முடிந்தது. எனவே பதறாமல் அந்தக் குழந்தையிடம் சென்று கேள்'' என்றார் பிரம்மா. நாரதர் நடுங்கிய நிலையில் அக்குழந்தையின் அருகே சென்று, "சிவாயநம' என்று சொல்ல, பிறந்த அக்குழந்தை பேசத் தொடங்கியது!
""ஐயனே, வண்டாக இருந்த நான் இந்த மந்திரத்தைக் கேட்டதன்மூலம் ஆந்தையாக மாறினேன்.
மீண்டும் இந்த மந்திரத்தைக் கேட்டதால் கன்றாக மாறினேன். மறுபடியும் அந்த மந்திரத்தைக் கேட்டதால் கிடைத்தற்கரிய மனிதப்பிறவி பெற்றேன். இறைவனிடம் என்னை சேர்க்கக்கூடிய ஒப்பற்ற மனிதப்பிறவி அந்த மந்திரத்தால் எனக்குக் கிடைத்தது'' என்றது. நாரதர் தெளிவுபெற்றார்.
"சிவாயநம' என்று சிந்திக்கிறவர்களை அபாயம் ஒருபோதும் நெருங்குவதில்லை. "சிவாயநம' என்பதை "சிவயநம' என்று உச்சரிக்கவேண்டும். இதில் "சி' என்றால் சிவம். "வ' என்றால் திருவருள். "ய' என்றால் ஆன்மா. "ந' என்றால் திரோதமலம். "ம' என்றால் ஆணவமலம். திரோதமலம் என்பதற்கு அழுக்கை நீக்குவது என்று பொருள்.
நான் என்னும் ஆணவ அழுக்கைப் பூசியிருக்கும் ஆன்மாவை திரோதமலம் கொண்டு தூய்மைசெய்து, சிவத்தை அடைந்து பிறவிப் பிணியிலிருந்து விடுபடவேண்டும் என்பது பொருள். "சிவயநம' என்று உள்ளம் உருகக் கூறினால் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்னும் விளக்கத்தை நாரதருக்குச் சொன்னார் பிரம்மதேவர்.
சிவபெருமானின் திருமந்திரங்கள் ஏராளமாய் ஒலித்துக்கொண்டிருக்கும் பற்பல தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததொரு திருத்தலம்தான் திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் ஆலயம்.
இறைவன்: தாளபுரீஸ்வரர், சப்தபுரீஸ்வரர், திருத்தாளமுடையார்.
இறைவி: ஓசைகொடுத்த நாயகி, த்வனி பிரதாம்பாள்.
புராணப் பெயர்: சப்தபுரி, திருத்தாளமுடையார் கோவில்.
ஊர்: திருக்கோலக்கா.
தல விருட்சம்: கொன்றை மரம்.
தீர்த்தம்: ஆனந்த தீர்த்தம், சூரிய தீர்த்தம்.
சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இத்தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரி வடகரையில் 15-ஆவது தலமாகத் திகழ்கின்றது. திருஞான சம்பந்தர், சுந்தரரால் பாடப்பெற்ற பெருமையுடன், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்பு களுடன் இன்னும் பல்வேறு சிறப்புகள் பெற்ற திருத்தலம்தான் திருக்கோலக்கா.
"நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்
ஞான சம்பந்தனுக்கு உலகவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும்
தன்மையாளனை என் மனக்கருத்தை
ஆளும் பூதங்கள் பாட நின்றாடும்
அங்கணன்தனை எண்கணம் இறைஞ்சும்
கோளிலிப் பெருங்கோயில் உள்ளானைக்
கோலக்காவில் கண்டேனே.'
தல வரலாறு
சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தருக்கு உமையவள் ஞானப்பால் கொடுத்தருளினாள். ஞானப்பால் உண்டதால் அவருக்கு ஞானம் பிறந்தது. பதிகம் பாடத்தொடங்கினார்.
சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் சிவத்தல யாத்திரையாக முதலில் சென்றது திருக்கோலக்கா தலத்திற்குதான். தனது சின்னஞ் சிறு கைகளால் தாளம் தட்டிக்கொண்டே இத்தலத்து இறைவனைத் துதித்துப் பதிகம் பாடினார். சம்பந்தரின் கைகள் வலிக்குமே என்று இரங்கிய இத்தல இறைவன், அவருக்கு இரண்டு பொற்றாளங்கள் கொடுத் தருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். அதனால் இறைவன் தாளமுடையார் என்றும், அம்பிகை ஓசை கொடுத்த நாயகி என்றும் பெயர்பெற்றனர்.
திருமகள் இங்கு தவம்புரிந்ததன் பயனாக திருமாலை மணாளனாக அடைந்தாள் என்று தலபுராணம் கூறுகிறது. எனவே இத்தலம் திருக்கோலக்கா என பெயர்பெற்றது.
சித்திரை மாதத் திருவாதிரை நட்சத்திரத்தில், சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருவிழா கொண்டாடப்படும். இரண்டாம் நாளன்று பால் உற்சவம் நடை பெறும். அதன்பின் ஞானசம்பந்தர் இத்தலத் திற்கு எழுந்தருளுவார். அன்றிரவு சிவ பெருமான் ஞானசம்பந்தருக்கு பொற்றாளம் தருவார். மறுநாள் காலை பூப்பல்லக்கில் சம்பந்தர் திரும்புவது இங்கு நடக்கும் சம்பிரதாயத் திருவிழாவாகும்.
சிறப்பம்சங்கள்
= இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்புரிகிறார்.
= இறைவி நின்ற நிலையில் கிழக்குநோக்கி அருள்பாலிக்கிறாள்.
= திருமகள் தவமிருந்து திருமாலை மணந்த தலமென்பதால், தொடர்ந்து ஆறு வாரங்கள் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மஞ்சள் பொடி மற்றும் வாசனை மலர்களால் இங்குள்ள மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் ஈடேறும்.
= இந்திரனும் சூரியனும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர் என்கிறது தலபுராணம்.
= இசைக்கலையில் ஈடுபாடுள்ளவர்கள் இத்தல அம்மையப்பனை வழிபட்டுவந்தால் இசைத்துறையில் வல்லவராகலாம்.
= சிவாகம விதிப்படி பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் தீர்த்தவாரித் திருவிழா விமரிசையாக நடக்கும். மற்றும் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, தமிழ் மாதப்பிறப்பு, தேய்பிறை அஷ்டமி, கிரகப் பெயர்ச்சிப் பூஜைகளும் சிறப்பாக நடக்கின்றன.
= பேச்சு வராதவர்கள் இத்தலம் வந்து ஆனந்தத் தீர்த்தத்தில் நீராடி, அம்மனிடம்,
""ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே! எனக்கு பேசும் ஆற்றலைக் கொடு'' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேன் வைத்து அர்ச்சனை செய்து அதை அருந்திவந்தால் விரைவில் பேசும் ஆற்றல் பெறலாம் என்பது பயனடைந்த வர்கள் சொல்வழக்கு.
= இத்தல ஈசனை வழிபட்டாலே அனைத்தும் கிட்டுமென்பதால் இங்கு நவகிரக சந்நிதி இல்லை. குருப்பெயர்ச்சிக் காலத்தில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை உண்டு.
= சுவாமி சந்நிதிக்கும் அம்மன் சந்நிதிக் கும் நடுவே தனிச்சந்நிதி கொண்டு, கிழக்கு நோக்கி அனுக்கிரக மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் சனி பகவான். சனியின் திசை மேற்கு. ஆனால் அதற்கு மாறாக கிழக்கு நோக்கி அருள்கிறார். அதாவது கொடூரத் தன்மையின்றி குழந்தைத் தன்மையுடன் அருள்வது சிறப்பான ஒன்று. சனிப் பெயர்ச்சியின் போது சிறப்பு அர்ச்சனை, சிறப்புப் பூஜைகள் உண்டு.
= ""அம்மன் சந்நிதியில் சொற்பொழிவு, இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழ்பெறலாம் என்பது கண்கூடான உண்மை'' என்கிறார் ஆலய அர்ச்சகராக கார்த்தி குருக்கள். மேலும் அவர் கூறுகை யில், ""குழந்தைகளுக்கு கல்விச்செல்வம், ஞாபகசக்தி, ஞானம் உண்டாகித் தெளிவுடன் விளங்குவர்"" என்கிறார்.
= தாத்தா சொத்து சட்டப்படி பேரனுக்குப் போய்ச் சேரவேண்டும்; தந்தை சொத்தும் மகனுக்குச் சேரவேண்டும் என்கிறார்களே... அதுபோல அவர்கள் செய்த பாவங்கள் யாரைப் போய்ச்சேரும்? சம்பந்தப்பட்ட வாரிசுகளைதானே சேரும்? இவையெல்லாம் சூரிய தோஷத்தால் வந்த விளைவுகள். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் நீசம், பகை பெற்றிருந்தாலும், சனியால் பார்க்கப்பட்டாலும் அவர்கள் சூரிய தோஷத்திற்கு ஆளானவர்கள். அத்தகையவர்கள் இத்தல ஆனந்தத் தீர்த்தத்தில் பிரதோஷ நாளில் நீராடி, அதிகார நந்தியிடம் முறையிட்டு, அம்மை யப்பன், சூரியனை வணங்கிவந்தால் சூரிய தோஷம் விலகி பிரகாச வாழ்வு கிட்டும்.
= ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள்; கார்த்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்; சித்திரை, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள்; பிரதோஷ நாளில் பிறந்தவர்கள்; சூரிய தசாபுக்தி நடப்பவர்கள், தற்பொழுது மகர ராசிக்குப் பெயர்ச்சியடைந்துள்ள சனிபகவான் சஞ்சரிக்கும் இந்த இரண்டரை ஆண்டுகள் (27-12-2021 முதல் 27-6-2023 வரை) இத்தல அம்மையப்பன் மற்றும் அனுக்கிரக சனிபகவானை வழிபட்டுவந்தால் கூடுதல் பலன் கிட்டுவதோடு, மன அழுத்தமின்றி மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்.
ஊரின் மையத்தில் நாற்புறமும் அழகிய மதில்கள் சூழப்பெற்று, கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் திகழ்கிறது ஆலயம். முகப்பு வாயிலின் மேற்புறம் வரலாற்று சுதைச் சிற்பங்கள் உள்ளன. சிவாலயத்திற்குரிய மூர்த்தங்கள் அனைத்தும் சிறப்புடன் விளங்குகின்றன. லிங்கோத்பவர் உள்ள இடத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் அருள்கின்றனர்.
செல்வங்கள் அனைத்தும் வழங்கும் மகாலட்சுமி குடிகொண்டுள்ள தலமாம்- தம்பதியர் ஒற்றுமைக்கு உகந்த தலமாம்- இசைக்கலையில் சிறந்து விளங்கச் செய்வதோடு பெரும் புகழைச் சேர்க்கின்ற தலமாம்- சனியின் தாக்கத்திலிருந்து விடுபடவைக்கும் தலமாம்- பேச முடியாதவர்களுக்குப் பேசும் சக்தியை வழங்குகின்ற தலமாம் திருக்கோலக் காவில் கோவில்கொண்டருளும் திருத்தாள முடையார், ஓசைகொடுத்த நாயகியை வழிபடுவோம்; வளம்பெற்று வாழ்வோம்.
காலை 6.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலய முகவரி: சப்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருக்கோலக்கா, சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம். அஞ்சல் குறியீடு: 609110.
அர்ச்சனை விவரங்களுக்கு: கார்த்தி குருக்கள், அலைபேசி: 98658 85780.
அமைவிடம்: சீர்காழி சட்டநாதர் கோவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோலக்கா. பேருந்து, ஆட்டோ வசதி உண்டு.
படங்கள்: போட்டோ கருணா