"எண்பொருள வாகச்செலச் சொல்லித் தான் பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.'
-திருவள்ளுவர்
அரிய கருத்துகளைக் கூட நாம் எளியமுறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லி, பிறர் சொல்லும் நுட்ப மான கருத்துகளையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
இராமபிரான் இந்த பூமியில் பிறந்ததே வைராக்கியத்தால் தான். "தசரதருக்குக் குழந்தையாக இராமர் பிறக்கவேண்டும். அப்போதுதான் இங்குள்ள துன்பங்கள் நீங்கும்' என அனைத்துலகங்களும் எதிர்பார்த்தன. ஆனால் அவர் எப்போது பிறப் பாரென்று யாருக்கும் தெரிய வில்லை.
ஒருநாள் தசரதரைதத் தேடிவந்தார் நாரதர். "தசரதா, உனக்கொரு சேதி தெரியுமா?'' என ஆரம்பித்தார்.
"என்ன விஷயம்?' என்றார் தசரதர்.
"நீ அடிக்கடி தேவ லோகத்துக்குப் போகிறாய். அங்கே யும் உன்னை நல்லபடியாகத்தான் வரவேற்கிறார்கள். உன்னைப் பிரியமாய் அழைத்து, தன் அரியாசனத்திலேயே தனக்குப் பக்கத்தில் அமரவைக்கிறான் தேவேந்திரன். நீயும் மகிழ்ச்சியாக அமர்ந்து பேசிவிட்டு வருகிறாய்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva_123.jpg)
ஆலால் நீ திரும்ப இங்கே வந்தபிறகு அங்கே என்ன நடக்கிறதென்பது உனக்குத் தெரியுமா?'' என்றார் நாரதர்.
"என்ன நடக்கிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே...'' என்றார் தசரதர்.
"நீ வந்தபிறகு, நீ உட்கார்ந்த அரியாசனத்தை தண்ணீர் ஊற்றிக் கழுவி சுத்தப்படுத்துகிறார்கள். நீ என்ன அந்த அளவுக்குத் தூய்மையில்லாதவனா?'' என்றார் நாரதர்.
தசரதருக்கு மிக அவமானமாக இருந்தது. உடனே, புறப்பட்டு தேவலோகம் போனார் தசரதர். அங்கே வழக்கம்போல் இவரை அழைத்து உட்காரவைத்துப் பேசினான் தேவேந்திரன்.
"சரி... நான் புறப்படுகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் தசரதர். வாசல்வரை வந்து வழியனுப்பினான் தேவேந்திரன். வெளியே கொஞ்ச நேரம் மறைந்திருந்து உள்ளே எட்டிப் பார்த்தார் தசரதர்.
நாரதர் சொன்னதுபோல, தசரதர் உட்கார்ந்திருந்த ஆசனத்தை இரண்டு தேவர்கள் கழுவி சுத்தப்படுத்தினர்.
இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் தேவேந்திரனிடம் சென்று "நான் உக்கார்ந்திருந்த இருக்கையை சுத்தம் செய்கி றாயே. நான் அந்த அளவுக்குப் பாவியா?'' என்றார் தசரதர்.
"தசரதரே... மனிதனுக்கு மூன்று கடன்கள் உண்டு. தேவகடன், ரிஷிகடன், பித்ருக் கடன். இதைத் தீர்க்காதவன் பாவியாகிறான். இதிலும் மகனைப் பெறுவதால்தான் ஒருவனது பித்ருக்கடன் தீரும். உனக்கு மகன் இல்லை. அதனால் நீ பாவியாகிறாய். பாவி உட்கார்ந்திருந்த இடமென்பதால் அதை சுத்தம் செய்ய வேண்டியது எங்கள் கடமை'' என்றான் தேவேந்திரன்.
தசரதருக்குள் வைராக்கி யம் எழுகிறது. "தேவேந் திரரே... ஒரு மகனைப் பெற்றபிறகுதான் இந்த சபையில் மறுபடியும் அடியெடுத்து வைப் பேன்...'' என சொல்லிச் சென்றார். தசரதர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva1_18.jpg)
புத்ரகாமேஷ்டி யாகம் செய்து புத்திரர்களைப் பெற்றார். அவமானப் பட்டால் அடங்கிப்போகாமல், அதையே சவாலாகக்கொண்டு இறை நம்பிக்கையூடனும் வைராக்கியத்துடனும் முயற்சிசெய்து வெற்றி கண்டார்.
நீர் நிரம்பிய கண்ணாடிக் குவளைக்குள் ஒரு கல்லைப் போட்டால் அது அடியில் சென்று ஒதுங்கிக்கொள்கிறது. கல் தண்ணீருக்குள்தான் இருக்கிறது என்றாலும், அது தண்ணீருடன் முழுமையாகச் சேராமல் தனித்தே நிற்கிறது. அதாவது கல் கல்லாகவும், தண்ணீர் தண்ணீராகவும் இருக்கின்றன.
ஆனால் அதே நீரில் வண்ணப்பொடியைப் போட்டால் அது நீரில் கலந்து ஒன்றிவிடுகிறது. நீர்வேறு, சாயம் வேறென்று சொல்லமுடியாத அளவுக்கு இணைந்துவிடுகின்றன. இறைநெறிக்கும் நமக்கும் இருக்கவேண்டிய தொடர்பு அந்தக் கல்லையும் தண்ணீரையும் போன்றதல்ல; வண்ணத்தையும் தண்ணீரையும் போன்றது.
ஒரு இறைநெறியாளனின் உணர்வும், உள்ளத்துடிப்பும், பார்வையும், கேள்வியும் இறைமார்க்கமாகவே இருக்க வேண்டும். வாழ்வின் எந்தவொரு துறையையும் விட்டுவிடாமல் மனிதனை முழுமையாக சூழ்ந்து நிற்கிறது அந்த இறைநெறி. ஒரு மனிதனுக்கு ஏதேனுமொரு பொருளின்மீது அளவுகடந்த அன்பிருந்தால், அப்பொருள் முழுவதிலுமே அவனது அன்பின் பிரதிபலிப்பைக் காணலாம். அவ்வாறே இறைவழிபாட்டை ஒருவன் வாய்மை யுடன் ஏற்றுக்கொண்டால் தன்னுடைய முழுவாழ்விலும் அதனைப் பிரதிபலித்துக் காட்டவேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva2_2.jpg)
அப்படி தசரதர்போல் இறைநெறியில் முழுமையாகக் கரைந்து, நமக்கு ஏற்படுகின்ற சில அவமானங்களையும் தோல்விகளையும் வைராக்கியமாக மாற்றி, வாழ்வில் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருக்கின்ற உன்னதமான ஒரு திருத்தலம்தான் திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: வில்வாரண்யேஸ்வரர் (வில்வ வனநாதர்).
இறைவி: சௌந்தர நாயகி (அழகு நாச்சியார்).
பதிகம்: திருஞானசம்பந்தர்.
ஆகமம் : காமிகாகமம்.
புராணப் பெயர்: கூவிளம்பூர், செல்லூர், திருக்களம்பூர், கூவிளவனம்.
ஊர்: திருக்கொள்ளம் புதூர்.
தலவிருட்சம்: வில்வ மரம்.
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், காண்டீப தீர்த்தம், வெட்டாறு.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட் டிலுள்ள இவ்வாலயம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 177-ஆவது திருத்தலமாகவும், காவிரி தென்கரைத் தலங் களில் 113-ஆவது தலமாகவும் திகழ்கின்ற பெருமையுடன் விளங்குகிறது. திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட இத்தலத்திற்கான பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம்பெற்ற பெருமையுடன், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்பு களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற திருத்தலம்தான் திருக்கொள்ளம்புதூர்.
"ஓடம்வந் தணையுங் கொள்ளம்புதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தையார் தொழு
நல்கு மாறருள் நம்பனே
ஆறுவந் தணையுங் கொள்ளம்புதூர்
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தையார் தொழு
நல்கு மாறருள் நம்பனே.'
-திருஞானசம்பந்தர்.
சிவபெருமானுக்கு ஐந்து வகையான வனங்களைக் குறிப்பிடும் வகையில் "பஞ்சாரண்ய தலங்கள்' இருக்கின்றன. முல்லை வனமாகக் கருதப்படும் திருக்கருகாவூர், பாதிரிவனமான அவளிவநல்லூர், வன்னி வனமாகக் கருதப்படும் அரிதைப்பெரும்பாழி என்னும் அரித்துவார மங்கலம், பூளை வளமான இரும்பூளை என்னும் ஆலங்குடி, வில்வ வனமாகக் கருதப்படும் திருக்களம்பூர் ஆகியவையே பஞ்சாரண்யத் தலங் களாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva3_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva4_1.jpg)
முதலாவதாக தரிசிக்க வேண்டிய ஆலயம், தப்பாமல் குழந்தை வரம் தரும் திருக்கருகாவூர். உஷத் காலமாகிய காலை 5.00 முதல் 6.00 மணிக்குள், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி உடனாய முல்லை வனநாதர் கோவிலில் வழிபடவேண்டும். கால சந்தி பூஜை நேரமான காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் அவளிவநல் லூர் சௌந்தரநாயகி உடனாய சாட்சிநாதர் கோவிலில் வழிபட வேண்டும். உச்சிக்கால பூஜை நேரமான பகல் 11.00 முதல் 12.00 மணிக்குள் அரித்துவார மங்கலம் அலங்காரவல்லி உடனாய பாதாளேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்யவேண்டும். சாயரட்சை பூஜை நேரமான மாலை 5.00 முதல் 6.00 மணிக்குள் ஆலங்குடி ஏலவாரிகுழலி உடனாய ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வழிபடவேண்டும். அர்த்தஜாமப் பூஜை நேரமான இரவு 7.30 முதல் 8.30 மணிக்குள் திருக்களம்பூர் சௌந்தர நாயகி உடனாய வில்வவனநாதர் கோவிலில் வழிபடவேண்டும். இந்த ஐந்து தலங்களையும் ஒரேநாளில் மேற்சொன்ன முறைப்படி வழிபாடு செய்துவந்தால் சகலவளங்களும் பெறலாம் என்பது முன்னோர்கள் வாக்கு. அந்தவகையில் இந்தத் தலங்களில் ஒன்றான திருக்கொள்ளம்புதூர் என்னும் திருக்களம்பூரில் திருஞான சம்பந்தருக்காக தீபாவளியன்று இரவில் நடக்கவேண்டிய அர்த்த ஜாமப் பூஜையை மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் சிவபெருமான் ஏற்று அருளியுள்ளார்.
அந்தக் கதை என்னவென்று பார்ப்போமா?
தல வரலாறு
பல சிவத்தலங்களை தரிசித்துப் பாடிவந்த ஞானசம்பந்தர் ஒரு தீபாவளித் திருநாளில், ஐப்பசி மாத அமாவாசையன்று பஞ்சாரண்ய தலங்களில் முதல் நான்கு தலங்களை தரிசித்தார். ஐப்பசி அமாவாசை தீபாவளி இரவில், அர்த்த ஜாமப் பூஜைக்கு திருக்களம்பூர் ஈசனைக் காணவந்தார். சம்பந்தர் வருவதையறிந்த மக்கள் ஊரெங் கும், வீடுகளிலும் வெளியிலும் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து சம்பந்தரின் வருகைக்காகக் காத்திருந்தனர். ஆனால் சம்பந்தர் வரும் வழியில் கடும்மழை. இதனால் வழியில் குறுக்கிடும் அகத்திய காவிரி (முள்ளியாறு) என்னும் வெட்டாற் றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆகையால் திருஞானசம்பந்தரால் அந்த ஆற்றைக் கடந்து ஊருக்குள் வரமுடிய வில்லை. பெரும் வெள்ளத்தின் காரணமாக ஆற்றில் ஓடத்தை செலுத்த முடியாத தால் ஓடங்கள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நள்ளிரவும் வந்தது. ஈசனை தரிசிக்காமல் செல்லக் கூடாதென்பதில் திருஞானசம்பந்தர் உறுதியாய் இருந்தார்.
எனவே ஆற்றின் கரையில் நிறுத்தப் பட்டிருந்த ஓடம் ஒன்றில் அந்த நள்ளிர விலும் தன் அடியார்களுடன் ஏறினார்.
ஓடத்தை நீரில் செலுத்த துடுப்பில்லை. தமது நாவையே ஓடக்கோலாகக் கொண்டு, "கொட்டமே கமழும் கொள்ளம்புதூர் நட்டமாடிய நம்பனையுள்கச் செல்வுந்துக.. சிந்தையார் தொழு நல்கு. மாறகு தம்பனே' எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் மறுகரையை அடைந்தது. ஆற்றின் கரையிலேயே ஈசன் உமையுடன் ரிஷப வாகனத் தில் சம்பந்தருக்கும், அவரது அடியார்களுக்கும் அந்த அதிகாலையில் காட்சி கொடுத்தார். பின்பு சம்பந்தர் மீதி பதிகத்தைப் பாடியபடியே திருக்கொள்ளம்புதூர் ஆலயத்தை அடைந்தார்.
அந்த ஊர்மக்களும் தங்கள் வீடுகளில் தீபாவளி நாளில் ஏற்றிய அகல் விளக்குகளை அணையாமல் வைத்து, சம்பந்தர் மறுநாள் அதிகாலை தங்கள் ஊர் வரும்வரை காத்திருந்தனர்.
சம்பந்தர், மக்கள் அனைவரையும் ஆசீர்வாதித்து திருக்கொள்ளம்புதூர் கோவிலுக்குள் சென்றார். சம்பந்தர் வரும்வரை காத்திருக்குமாறு ஈசன் ஆலய அர்ச்சகர்களுக்கு அசாரியாகக் கூறியதால், தீபாவளி அர்த்தஜாமப் பூஜைக்கான நேரம் கடந்துவிட்டபோதிலும் பூஜையைத் தள்ளிவைத்துக் காத்திருந்தனர். அதிகாலையில் சம்பந்தர் வந்ததும் பூஜை நடத்தப்பட்டது.
சம்பந்தருக்கான தீபாவளி அமாவாசை இரவில் நடக்கவேண்டிய அர்த்தஜாமப் பூஜை, இந்த ஆலயத்தில் மறுநாள் அதிகாலையில்தான் நடத்துப்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தர் திருக் கொள்ளம்புதூருக்கு எழுந்தருளிய சம்பவத்தை நினைவுகூரும்விதமாக, தீபாவளி அமாவாசையில் ஓடத்திருவிழா இங்கு நடத்தப்பட்டுவருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் தவறாமல் கிடைக்குமென்பது ஐதீகம். சம்பந்தர் ஓடம் செலுத்திய வெட்டாற்றில் ஐப்பசி மாதத்தில் நீராடினால் வாழ்வில் இன்னல்கள் அகன்று இன்பங்கள் வந்தடையும் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.
சிறப்பம்சங்கள்
ப் இறைவன் சுயம்புலிங்கமாக அருள் பாலிக்கிறார்.
ப் இறைவி நின்ற நிலையில் அருள் பாலிக்கிறாள்.
ப் பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். அப்பெயர் மருவி கொள்ளம்புதூர், திருக்கொள்ளம்புதூர் என்றானது.
ப் சித்திரை பிரம்மோற்சவம், கார்த்திகை பிரதோஷ நாளில் சுவாமி புறப்பாடு, சித்ரா பௌர்ணமியன்று பஞ்சமூர்த்தி புறப் பாடு, நவராத்திரியில் அம்மன் புறப்பாடு, கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, தைப்பூசம் ஆகியவை ஆலய விழாக்களாக இருந்தாலும், மிக முக்கியமாக ஐப்பசி அமாவாசையில் நடக்கின்ற ஓடத் திருவிழாவை ஊரே திரண்டு வெகுவிமரிசை யாக கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
ப் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட இவ்வாலயத்தில் அருளும் வில்வாரண் யேஸ்வரரை பிரம்மா, அகத்தியர்,
அர்ச்சுனன், விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேஷன், வசிஷ்டர், மார்க்கண்டேயர், பிருகு முனிவர், காசிபமுனிவர், கண்ணுவ முனிவர், வாமதேவர், இடைக்காடர், சாண்டில்யர் ஆகியோர் வழிபாடு செய்துள்ளதாகக் கல்வெட்டு செய்திகள் மற்றும் தலபுராணம் சொல்கிறது.
ப் "கோவிலுக்கு மேற்கே ஓடும் முள்ளி யாறு, அகத்திய காவிரி என்று அழைக்கப் படும் வெட்டாற்றில் திருஞானசம்பந்தர் பதிகம்பாடி ஓடம்செலுத்திய துலா மாதத்தில் நீராடி, இத்தல ஈசனை வழிபட்டால் வேண்டும் சித்திகளையும், வலிமையையும் பெறுவர்; காசிக்கு நிகரான பெருமைவாய்ந்த தலம்'' என்று கூறுகிறார் ஆலய செயல் அலுவலர் சுரேந்திரன். ஓடம்போக்கி ஆறு என்று மக்கள் சொல்வழக்கில் இன்றும் உள்ளது.
ஒவ்வொரு தெய்வங்களுக்கும் சில குறிப்பிட்ட நாட்கள் விரதமிருப்பதற்கு மிக உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. அந்தவகையில் சிவபெருமானுக்குக் கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் எட்டு வகைப்படும்.
1. சோமவார விரதம்: கார்த் திகை மாதத்தில் வரும் அனைத்து திங்கட் கிழமைகளிலும் விரதமிருந்து சிவபெருமானை வணங்கலாம். அதையடுத்து ஆண்டு முழுவதும் வருகின்ற திங்கட் கிழமைகளில் விரதமிருப்பவர் களுக்கு சிவனருள் கிடைத்து குபேரனைப் போன்று சுகவாழ் வுடன் முக்திப் பேறும் கிடைக்கும்.
2. உமா மகேஸ் வர விரதம்: கார்த்திகை மாதப் பௌர்ணமி தினத் தன்று ஈசனை நினைத்து விரத மிருப்பதாகும். இந்த விரதமிருப்பவர்கள் குடும்பத்தில் மிகுந்த ஒற்றுமையுடன், கணவன்- மனைவி இருவரும் அதிகப் பிரியமுடன் இருப் பார்கள். 3. திருவாதிரை விரதம்: மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று வருவது. பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் முனிவருக்காக நடராஜப் பெருமான் தம்முடைய நடனத்தை ஆடிக் காட்டியது மார்கழித் திருவாதிரை என்பது குறிப்பிடத்தக்கது. திருவாதிரை அபிஷேகத்தையும், தரிசனத்தையும் காண்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.
4. சிவராத்திரி விரதம்: மாதந்தோறும் தேய்பிறை சதுர்த்தசியன்று வருவது. மாசிமாதம் வருவதே மகாசிவராத்திரி எனப்படும். இந்த ஒரு விரதமிருந்தாலே சிவபெருமானின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடலாம்.
5. கல்யாண விரதம்: சிவபெருமானுக் காக பங்குனி உத்திரத்தன்று கடைப் பிடிக்கப்படுவது. இந்த விரதமிருப்பதால் திருமணமானவர்களுக்கு இனிமையான வாழ்க்கையும், மணமாகாதவர்களுக்கு நல்ல மணவாழ்க்கையும் கிட்டும்.
6. பாசுபத விரதம், சூலவிரதம்: தைமாதப் பௌர்ணமியான தைப்பூசத்தில் வருவது பாசுபத விரதம். தை அமாவாசை தினத் தில் வருவது சூலவிரதம். இந்த இரண்டு விரதங்களைக் கடைப்பிடிப்பவர்க்கு நீதிமன்ற வழக்குகளில் சாதகநிலை ஏற்படும்.
7. அஷ்டமி விரதம்: வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப் பது. பிரதிமாதம் தேய்பிறை அஷ்டமியன்று விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு பைரவர் அருள் பரிபூரணமாகக் கிட்டும்.
8. கேதார கௌரி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று தொடங்கி ஐப்பசி அமாவாசை வரை (தீபாவளிக்கு மறுநாள்) 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம்தான் கேதார கௌரி விரதமாகும். இந்த விரதத்தின்மூலமாக சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கணவரின் ஆயுள் அதிகரிக்கும். வம்சம் விருத்தியடைந்து ஆரோக்கிய விருந்தி ஏற்படும்.
"கேதார கௌரி விரதமானது இத்தலத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம், தீபாவளிக்கு மறுநாள் அதிகாலை யில் திருஞானசம்பந்தருக்காக வெட்டாற் றின் கரையில் ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் காட்சிதந்த இத்தலத் தில், ஐப்பசி மாதத்தில் தங்களுக்கு சௌகரியப்பட்ட தினத்தில் ஏதேனும் ஒருநாள் வெட்டாற்றில் நீராடி வில்வவனத் திலே அருளும் ஈசனை வழிபட்டால், இருளிலே வாழாமல் ஒளிமயமாய் வாழ்வதற்கு இத்தல ஈசன் பக்கபலமாய் இருப்பார்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய பிரதான அர்ச்சகரான பஞ்சாபகேச சிவாச்சாரியார்.
"சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அம்மை யப்பனுக்கு அபிஷேகம் செய்து வழிபட, நோயிலிருந்து நிவர்த்தி பெறுவதுடன் மனத் தெளிவுடன் வாழலாம்'' என்று கூறுகிறார் ஆலயக் கணக்கர் ராஜா.
திருக்கோவில் அமைப்பு
நீர்வளம், நிலவளம் மிகுந்த பூமியான திருக்களம்பூரில், நாற்புறமும் அழகிய மதில் களால் சூழப்பெற்று, கிழக்கு நோக்கிய முகப்புவாயிலின் ஈசான்ய திக்கில் பிரம்ம தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்பிரமணியர் திருமேனிகள் வண்ணத்தில் சுதையில் அமைக்கப்பட் டுள்ளன துவார விநாயகர் இருபுறமும் உள்ளார். உள்ளே சென்றதும் வலப்புறம் ஆதிசௌந்தர நாயகி சந்நிதியும், இடப்புறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நிதியும் உள்ளன.
இரண்டாவது வாயிலுள்ள கோபுரம் ஐந்து நிலைகளுடன் 75 அடி உயரத்தில் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் வலப்பக்க கல்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பம் உள்ளது. உள் பிராகாரத்தில் வலம்வரும்போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலட்சி, சோழமன்னன், அவரது மனைவி ஆகிய சந்நிதி கள் உள்ளன. ஆறுமுகசுவாமி, மகாலட்சுமி, பைரவர், நவகிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகளும் உள்ளன.
தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதிக்கு முன்னால், வெளியில் மண்டபத்தின் மேற் புறத்தில் 12 ராசிகளின் உருவங்கள் உரிய கட்ட அமைப்பில் வடிவமைக்கப்பட் டுள்ளது. திருக்கோவில் திருப்பணிகள் செய்வித்த நகரத்தார் உருவங்களும் ஆலயத்தில் உள்ளன.
வாசுகி, இடைக்காடர், வரகுண பாண்டி யன், கோச்செங்கட்சோழன் வழிபட்ட பெருமையுடன், சுவாமி விபுலானந்தர் இயற்றிய "யாழ்தூல்' அரங்கேறிய திருக் கொள்ளம்புதூருக்கு துலா மாதத்தில் வருகை தந்து துயரங்கள் தீர்ந்து வளமுடன் வாழுங்கள் என்று அடியார்கள் கூறியதற் கேற்ப வழிபடுவோம்; வளம்பெறுவோம்.
காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், அ/மி வில்வவனேஸ்வரர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர், குடவாசல் வட்டம், செல்லூர் அஞ்சல், திருவாரூர் மாவட்டம்- 613 705. செயல் அலுவலர் சுரேந்திரன், அலை பேசி: 86108 77675; கணக்கர் ராஜா, அலைபேசி: 75022 81432; கோவில் பணியாளர் வள்ளி, அலைபேசி: 97874 49297; பூஜை விவரங்களுக்கு பஞ்சாபகேச குருக்கள், அலைபேசி: 94448 08017, 99627 50336.
அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாக கொரடாச்சேரி செல்லும் சாலை வழியில் 22 கிலோமீட்டர் தொலை விலும், கொரடாச்சேரியிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவிலும் செல்லூர் வரை பேருந்து உள்ளது. செல்லூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் நடைப்பயணம் அல்லது ஆட்டோ, கார்மூலம் திருக் கொள்ளம்புதூர் செல்லாம்.
படங்கள்: போட்டோ கருணா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-11/siva-t.jpg)