துலாம் காலபுருஷனின் ஏழாவது ராசியாகும். இதன் அதிபதி சுக்கிரன். இங்கு சனி உச்சமும், சூரியன் நீசமும் அடைவர்.
குடும்ப விவரம்
துலா ராசியினர் பலர் அழகான ராட்சஸர்கள். பார்க்க அழகாகவும், பழக யோசிக்கவும் செய்வர். ஆள் பார்த்துப் பழகுவர். இவர்களின் பேச்சு சற்று உரத்திருக்கும். இவர்களின் குடும்பம் சற்று முர்க்கத்தனமாக அமைந்திருக்கும். இளைய சகோதரம் அன்பாக- பக்தியாக- அடக்கமாக இருப்பார். தாய் சற்று சோம்பல் தன்மையுள்ளவர். குலதெய்வம் சற்று குறுகலான இடத்தில் இருக்கும். தாய்மாமன் பக்திப்பழமாக இருப்பார். இவர்களுடைய வேலையில் ஆன்மிக வாசனை அடிக்கும். பலருடைய வாழ்க்கைத் துணை பிறரை மிரளச் செய்யக்கூடியவராக இருப்பார்.
இவர்களது கலை, அழகியல் உணர்வுகளே அவமானத் துக்குக் காரணமாகும். தந்தை சற்று குறும்புத்தனம் மிக்கவராக இருப்பார். இவர்களது தொழில் நீர் சார்ந்திருக்கும். சிலரது மூத்த சகோதரர் சற்று பொல்லாதவராக, கம்பீரமாக, அரசியல், அரசு தொடர்புடன் இருப்பார். கல்வி, அறிவுத் தேடல், அலைச்சலை விரும்புவர்.
இவை துலா ராசியின் பொதுவான குடும்ப விவரம். இவர்களது பிறந்த ஜாதக கிரக இருப்புகள், பலனை ஏறக்குறைய செய்யும்.
குரு இருக்குமிடப் பலன்
குரு துலா ராசிக்கு 3, 6-ன் அதிபதி. அவர் இதுவரையில் 4-ஆமிடமான மகரத்தில் இருந்தார். இப்போது 5-ஆமிடமான கும்பத்தில் குடியேறுகிறார்.
5-ஆமிடம் என்பது புத்திரஸ்தானம். இதில் குருவானவர் 6 எனும் நோய் அதிபதியாகி அமர்வது சற்று நெருடலான விஷயமே. இதனால் வாரிசுகளின் உடல்நலத்தில் சற்று கவனம் கொள்ளும்படி இருக்கும்.
இன்னொரு விஷயம்- 6-ஆமிடம் நோய் ஸ்தானம். குரு அந்த வீட்டின் 12-க்கு, விரயத்தில் அமரும்போது இதுவரை வாரிசுகளுக்கு இருந்துவந்த நோய் பாதிப்பு விலகும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
5-ஆமிடம் ஆரோக்கிய ஸ்தானம். அதில் நோய் கொடுக்கும் குரு அமரும் போது, உங்களில் சிலருக்கு முழங்கால்வலி, சோகை, குடற்புண், குடல் இறக்கம், தலைவலி, தோல்நோய் போன்றவை வரக்கூடும். நோய்த்தாக்கம் நீங்க குலதெய்வ வழிபாடு, சிவன் அபிஷேகத்திற்கு மஞ்சள்பொடி அளித்தல், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல் நன்று.
சிலருக்கு கடன் தீரும். அது உங்கள் வாரிசுகளின் உதவியால் இருக்கலாம். அல்லது பூர்வீக சொத்துமூலம் அமையும். எதிரிகள், உங்களின் சில திறமை களைக்கண்டு எட்டிப் போய்விடுவர். பழைய வேலையாட்கள் திரும்ப வருவர். அல்லது பூர்வீக இடத்திலிருந்து வேலைசெய்ய ஆட்களை அழைத்து வருவீர்கள். உங்கள் இளைய சகோதரம் சொந்த இடம் செல்வார்.
காதல் விஷயம் கைகொடுக்காது. திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள் அதிக உழைப்பினால் ஆரோக்கியக் குறைவைக் காண்பர். பங்கு வர்த்தகம் ஏற்றக்குறைவாக இருக்கும்.
கலைத் தொழில் சம்பந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். சிலர் குழந்தைகள், காதல், வைதீகப் பழக்கம், குலதெய்வம் என இதுபற்றி டாக்குமென்டரி படம் எடுப்பார்கள். எழுத்து, பத்திரிகைத் துறையினர் தற்போது வேலை செய்யும் இடத்திலிருந்து பழைய இடத்திற்கு மாறுவர். சிலரின் மந்திரி பதவிக்கு எதிரிகளால் வழக்கு வரும்.
5-ஆம் பார்வைப் பலன்
குரு தனது 5-ஆம் பார்வையால் துலா ராசியின் 9-ஆமிடத்தைப் பார்க்கிறார்.
இது யோகப் பார்வையாகும். துலா ராசியினர் பலர் தந்தையாவீர்கள். ஆன்மிகச் செயல்கள் அதிகமிருக்கும். உயர்கல்வி பரிமளிக்கும். நினைத்த இடம் கிடைக்கும். முனைவர் பட்டம் சிறப்புற வாங்குவீர்கள். கணித அறிவு மேம்படும். கணக்கு, புள்ளியியல், ஆடிட்டிங் துறையினர் மேம்படுவர்.
மடங்கள், மடத்தலைவர்கள், மடம் சார்ந்த செயல்கள் பெருமையடையும். யாகம், வேள்வி வளர்க்கும் அந்தணர்கள் கைபேசி வழியேகூட தங்களை வெகுவாகப் பிரகடனப்படுத்துவர். எண்ணங்களில் உயர்வுண்டு. வெளிநாட்டுக் கல்விக்கு இடமுண்டு. கைபேசி விஷயமாக ஏதேனும் புதிதாகக் கண்டுபிடிப்பார்கள்.
வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனையுண்டு. வெளி மனிதர்களின் மரியாதை மிகுந்த தொடர்புகள் கிடைக்கும். இளைய சகோதரம் திருமணம் நடக்கும். தாய்மாமன் வீடு வாங்குவார். வேலையின் வழியாக வீடு கிடைக்கும். உங்களில் சிலரின் வெளிநாடு சம்பந்தமான கனவு, நம்பிக்கைகள் மெய்ப்படும்.
சாட்டர்ட்டு அக்கவுன்ட் போன்ற கடின தேர்வுகளிலும் சிறப்பாக வெற்றி பெறுவீர்கள். வங்கித் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வழக்கறிஞர்கள், வெளிநாட்டு சம்பந்தம், சர்வதேச வர்த்தகம் என இவைபோன்ற இனங்களில் வெற்றியுண்டு. மருந்து சம்பந்தமான கல்வியில் திறமை பெறுவீர்கள்.
மிகச் சிலர், "பக்தியும் ஞானமும் கொழுந்துவிட்டு எரிகிறது. தெய்வமே என்னுள் இறங்கிவிட்டார்' என கூறிக்கொண்டு, பரதேசம் பயணப்படுவார்கள். இதனை 9-ஆமிடத்தில் அமர்ந்து சாரநாதர் ராகு செவ்வனே செய்வார்.
7-ஆம் பார்வைப் பலன்
குரு தனது ஏழாம் பார்வையால் துலா ராசியின் 11-ஆமிடத்தைப் பார்க்கிறார்.
11-ஆமிடம் என்பது லாப ஸ்தானம். எனவே இந்த குருப்பெயர்ச்சி, துலா ராசியின் ஆசைகளை அள்ளிக்கொண்டு வந்து நிறைவேற்றும்.
உங்களின் அரசியல் கனவு நனவாகும். எப்பாடுபட்டாவது அரசியல் அரங்கின் ஒரு நாற்காலியை கச்சிதமாகப் பிடித்து, சட்டென்று அதில் உட்கார்ந்து விடுவீர்கள்.
அரசுப் பதவியில் இருப்போர் பதவி உயர்வும், பண பலமும் கிடைக்கப் பெறுவீர்கள். லஞ்சப் பணத்தின் நடமாட்டம் அதிகரிக்கும். மருமகன்- மருமகள் வீட்டிற்குள் காலடி எடுத்து வைப்பர். அவர்கள் அரசு சார்ந்த துறையில் வேலை செய்வர். அல்லது அரசில் மிக உயர்ந்த பதவி வகிப்பர். சிலருக்கு அரசியல்வாதிகள் மருமகனாக வருவர். உங்கள் வாரிசு நிறம் சற்று குறைவாக இருக்க, வரும் வரன் நல்ல நிறமாக இருப்பார்.
நீங்கள் இருக்குமிடத்தில் எந்த தேர்தல் வந்தாலும், அதில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுவிடுவீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் சம்பந்தமான வழக்குகள் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்தாலும், கம்பெனியின் உயர்பதவியில் அமர்வீர்கள்.
துலா ராசி குழந்தைகளின் தந்தை பேரதிர்ஷ்ட பெறுவார். உங்கள் வாழ்க்கைத் துணையின் பூர்வீக சொத்திலிருந்து பெரும் சம்பத்து கிடைக்கும். தந்தையின் புதையல் போன்ற ஒரு லாபம் உங்களை வந்தடையும். சிலர் அழகான கொலுசு வாங்குவர். துலா ராசி சமையல் கலைஞர்கள், மிக ஏற்றம் பெறுவர். அவர்களுக்கு அரசு சார்ந்த பெரிய லாபம் கிட்டும். கோரிக்கை நிறைவேறும்.
9-ஆம் பார்வைப் பலன்
குரு தனது 9-ஆம் பார்வையால் துலா ராசியைப் பார்க்கிறார். ராசி, லக்னத்தை குரு பார்வையிடுவது வெகு மேன்மை தரும். எனவே துலா ராசியினர் அனைத்திலும் முதன்மைபெறப் போகிறார்கள். இதுவரையில் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். இதனால் குடும்ப உறவு கள் பெருகும். நிறைய மனை, வயல் வாங்குவீர்கள். அதில் வேளாண்மை பெருகும்.
தன்னம்பிக்கை மிகும். சிலசமயம் தவறு செய்தவர்களை தைரியமாகத் தட்டிக் கேட்பீர்கள். சிலசமயம் சற்று யார் பேச்சையும் கேட்காமல் நடந்து கொள்வீர்கள். சிலசமயம், எல்லாரும் செய்யத் தயங்கும் செயல்களை, நீங்கள் முன்னின்று எடுத்துச் செய்வீர்கள். இதனை ஒரு சேவையாகச் செய்வீர்கள்.
வாழ்க்கையின் அடித்தட்டில், அனைவரும் வெறுத்து ஒதுக்கும் தன்மையுள்ள பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். இதனால் சிலரின் விரோதத்தை சம்பாதித்துக்கொள்வீர்கள்.
விபத்தில் சிக்கிக்கொண்ட அந்தணப் பெண் ஒருவருக்கு, மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய உதவி செய்வீர்கள். சிலருக்கு மிதிவண்டி தானம் செய்வீர்கள். வெளிநாட்டு வர்த்தகம் சம்பந்தமாக கையெழுத்து பதித்து, ஒப்பந்தம் முடிப்பீர்கள். மருத்துவமனை, சேவை மையம், ஆரோக்கியம் சம்பந்தமாக, ஏதோ கையுதவியாக செய்வீர்கள்.
உங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கு பெரும் கஷ்டத்திலிருந்து மீண்டுவர உதவுவீர்கள். ஒரு ஏமாற்றுப் பேர்வழியிடமிருந்து நல்ல செய்தியொன்று கிடைக்கும். துலா ராசியை குரு தனது 9-ஆம் பார்வையால் பார்க்கும்போது நீங்கள் செய்தற்கரிய செயல்களைச் செய்வீர்கள்.
பொதுப் பலன்கள்
துலா ராசிக்கு குரு பகவான் 3, 6-ன் அதிபதியாகி 5-ல் இருப்பது சிறு குறைதான். ஆனாலும், இந்தக் குறையை ஈடுசெய்வதுபோல், அவர் துலா ராசியின் மதிப்புமிகுந்த இடங்களைப் பார்க்கிறார். மேலும் ராசியையும் நோக்குகிறார். இதனால் இந்த குருப்பெயர்ச்சி சிலருக்கு வாரிசுகள் வகையில் மனக்கசப்பைக் கொடுத்தாலும், அதிர்ஷ்டம், லாபம், தன்னம்பிக்கை போன்ற இனங்களின் வகைப் பெருக்கத்தை அள்ளித் தருகிறார். போதுமே, ஒரு மனிதனுக்கு எது தேவையோ அதன் அளவு மிக அதிகமாகவே கிடைக்கிறதே.
துலா ராசியினருக்கு, இந்த குருப்பெயர்ச்சிப் பலன் 75 சதவிகிதமாகும்.
சித்திரை 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு இனம்புரியாத குதூகலம் தரும். அது தன்னம்பிக்கையால் வருவதாலி அதிர்ஷ்ட நிகழ்வுகள் கொடுக்கும் ஆனந்தமா- அதிக காலம் கழித்து திருமணமான சந்தோஷமா- வெகுகாலம் பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேர்ந்த நிறைவா- வியாபாரம் தரும் விருத்தியா- தாரள பணப் புழக்கமா என ஏதோ ஒன்று மனநிறைவைத் தரும். இந்த குருப்பெயர்ச்சி வியாபாரம், வணிகம், தொழில், கூட்டமைப்பு, நலசங்கம், கைத்தொழில் முன்னேற்றம் என ஏதோ ஒன்றில் நீங்களும் பங்குதாரராகி விடுவீர்கள். நீங்கள் அதில் சேர்ந்த யோகம் தொழில் வெகு முன்னேற்றம் காணும். எனவே குதூகலத்திற்குக் கேட்பானேன்! வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகனை வணங்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி நீங்கள் விரும்பிய வேற்றின மதத்துணையை, உங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கும். வெளிநாட்டு வியாபாரம் சம்பந்தமான நற்செய்தி வரும். கலையுலகம் சாந்தவர்கள், முற்றிலும் புரியாத மொழிப்படம், சீரியல்களில் பங்கெடுப்பார்கள். அயல்நாட்டுப் பணப் புழக்கம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டு மது, போதைப் பழக்கம் தொடங்கும். இருப்பினும் குரு பார்வைபடுவதால், கட்டுக்குள் இருக்கும். உங்களில் ஒரு சிலருக்கு, மனைவிமூலம் எதிர்பாராத சொத்து அல்லது நகை கிடைக்கும். சிலர் மதுக்கடைகளின் வியாபாரத்தில் பங்குபெற இயலும். துர்க்கையை வணங்கவும்.
விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
உங்களில் பல ஜாதகர்கள் கண்டிப்பாக வேலைக்குச் சேர்வீர்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. விசாக நட்சத்திரக் குழந்தைகள் இளைய சகோதரம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு கடன் அடையும். சிலர் நோய்த் தொந்தரவு நீங்கி ஆரோக்கியம் பெறுவர். சிலரின் எதிரிகள் மறைந்துவிடுவர். இதற்குக் காரணம் உங்களின் வீர தீரம், தைரியம் குரு பார்வையால் பொங்கி வழிவதால் இருக்கலாம். சிலர் வீடு மாறுவீர்கள். கோவில்களில் உழவாரப் பணிக்குச் செல்வீர்கள். தட்சிணாமூர்த்தியை வணங்கவும்.
பரிகாரம்
நல்ல அலங்காரத்திலுள்ள சிவனை வணங்கவும். திருவண்ணாமலை ஈசனுக்கு அழகாக அலங்காரம் செய்வார்கள். பிற மத, இனத்தவருக்கு உதவவும். திருமண வீடுகளில் முடிந்த அளவு உதவுங்கள். மனை, பூமி விஷயங்களில், வில்லங்கம் இருப்பதுபோல் தோன்றினால், அதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு நாசுக்காகவாவது தெரியப்படுத்தி விடுங்கள். குழந்தைகளின் மருந்து தேவையைப் பூர்த்தி செய்யவும். படிக்கும் மாணவர்களின் கைபேசி பழுதை நீக்க உதவுங்கள்.
"வண்டார் குழல் உமை நங்கை முன்னே' எனத் தொடங்கும் பஞ்ச புராணப் பாடலைப் பாராயணம் செய்யலாம்.