வகுளாதேவி அன்னை வேங்கடேஸ்வரப் பெருமாளின் வளர்ப்புத் தாய். திருமலையின் வரலாற்றில் இந்த அன்னையைப் பற்றியும், இவரது ஆலயத்தைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.
துவாபர யுகத்தில் அன்னை யசோதைதான் கிருஷ்ணரின் வளர்ப்புத் தாய். கிருஷ்ணரின் தாய் தேவகி. யசோதை கிருஷ்ணரிடம், "உன் திருமணத்தை நான் பார்க்கவில்லை. அதை என் கண்களால் காண விரும்புகிறேன்'' என்று தன் விருப்பத்தைக் கூறினாள். அப்போது கிருஷ்ணர், "அதைப் பார்ப்பதற்கு நீ நீண்ட காலம் காத்திருக்க வேண்டுமே?'' என்று கூற, "அந்த கண்கொள்ளா காட்சியைப் பார்ப்ப தற்கு நான் எவ்வளவு காலம் வேண்டுமானா லும் காத்திருப்பேன்'' என்று கூறினாள் யசோதை.
"கலியுகத்தில் உனக்கு அந்த வாய்ப்பைத் தருகிறேன்'' என்றார் கிருஷ்ணர். அதைத் தொடர்ந்து கலியுகத்தில் வேங்கடேஸ்வரப் பெருமாளாக கிருஷ்ணர் அவதாரமெடுத்தார்.
வகுளாதேவியாக யசோதை பிறப் பெடுத்தாள். வேங்கடேஸ்வரருக்கும் பத்மா வதிக்கும் திருமண ஏற்பாடுகளை வகுளா தேவி செய்தாள். பத்மாவதி ஆகாசராஜா என்ற மன்னரின் மகள். திருமணம் நடை பெறுவதைக் கண்குளிர பார்த்தாள் வகுளாதேவியாக பிறப்பெடுத்த யசோதை. இதன்மூலம் தன் வளர்ப்பு அன்னையின் ஆசையை நிறைவேற்றித் தந்தார் கிருஷ்ணர். தாய்க்கும் மகனுக்குமிடையே இருக்கக்கூடிய ஆழமான பாசத்தை இந்த சம்பவத்தின்மூலம் உலகிற்கு உணர்த்தினார் வேங்கடேஸ்வரர்.
சுமார் 300 வருடங்களுக்குமுன்பு பேரூ ருபந்தா மலையின் உச்சியில் வகுளாதேவிக் கான ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயம் இருக்கும் ஊரின் பெயர் பேரூர். இது திருமலையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஆலயத்திற்காக 50 ஏக்கர் நிலம் தானமாக அளிக்கப்பட்டிருக்கிறது. அன்னை வகுளாதேவி, ஏழுமலையானைப் பார்க்கும் வகையில் அவளின் உருவச்சிலை அமைந்திருக்கிறது.
அன்னைக்குதான் முதலில் நைவேத்தியம் படைக்கப் படும். அதற்குப் பிறகுதான் திருமலை ஆலயத்திலிருக்கும் வேங்கடேஸ்வர பெருமாளுக்குப் படைக் கப்படுகிறது. இதன்மூலம் தாய்தான் முதலிடத்திற் குரியவள் என்னும் உண்மை உலகிற்கு உணர்த்தப்படுகிறது. வகுளாதேவிக்கு நைவேத்தியம் படைக் கப்படும்போது, மணிச்சத்தம் பலமாக ஒலிக்கும். அதைக்கேட்டுவிட்டு திருமலையில் வேங்கடேஸ்வரருக்கு நைவேத்யம் படைக்க ஆரம்பிப்பார்கள். இந்த நடைமுறை பல வருடங்களாகத் தொடர்ந்துவந்தது.
இதற்கிடையில் அதற்கொரு சோதனை வந்துவிட்டது. மைசூரின் அரசரான ஹைதர் அலி சித்தூரின்மீது படையெடுத்தபோது, வகுளாதேவியின் இந்த ஆலயத்தை பலமான சேதத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார். இந்த ஆலயத்தின் செல்வங்களைக் கொள்ளையடிக்கும் செயலைச் செய்திருக்கிறார். தான் ஆளும் பகுதியைப் பெருக்கவேண்டுமென்ற அவரின் பேராசையால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிவிட்டது பேரூர் வகுளாதேவி ஆலயம்.
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபிறகும் இந்த ஆலயத் தைப் புதுப்பிக்கும் செயலை அரசாங்கம் செய்யவில்லை. அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் இந்த மலைப் பகுதியின் கனிம வளங்களைச் சுரண்டும் வேலையில் இறங்கிவிட்டனர். மலையின் பெரும்பகுதியை அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.
பக்தர்கள் கோவிலைப் புதுப்பிக்கும் எண்ணத்துடன் நீதிமன்றத்திற்குச் சென்றனர். பலமுறை நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டதைத் தொடர்ந்து, வகுளாதேவியின் ஆலயத்தைப் புதுப்பிப்பதற்காக ஒரு தொகை ஒதுக்கப்பட்டது. விரைவில் திருப்பதி தேவஸ்தானம் இதற்கான வேலையில் இறங்க இருக்கிறது.
இப்போது சிதிலமடைந்த நிலையில்தான் இந்த ஆலயம் உள்ளது.
இது ஒரு புறமிருக்க, திருப்பதி ஆலயத் திற்குள்ளேயே மடப்பள்ள இருக்கும் பகுதியில் வகுளாதேவிக்கு உருவச்சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.