"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.'

-திருவள்ளுவர்

"வாழ்வின் முறையறிந்து அறத்துக்குக் கேடு செய்யாத இல் வாழ்க்கையே தவ வலிமையைவிட வலிமை யானது' என்கிறார் வள்ளுவர்.

Advertisment

"மலரினும் மெல்லியது காதல்' என்று இலக்கியம் கூறுகிறது. "காலடித் தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும்'- தலைவியின் பாதங்கள் மட்டுமல்ல; தலைவனின் உள்ளமும் மென்மையானதுதான் என்பதை அழகாகப் பாடலில் எடுத்துரைக்கிறார் கவிஞர்.

மனித வாழ்வில் காதல் ஏன் சிறப்புப் பெறுகிறதென்றால், அதில் முழுக்க முழுக்க மென்மை கோலோச்சுகிறது என்பதால்தான்.

காதலில் மட்டுமல்ல; வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் மென்மையையே கடைப் பிடிக்கவேண்டுமென்று மனித வாழ்வியல் தர்மம் வலியுறுத்துகிறது.

Advertisment

gg

எகிப்து நாட்டில் ஒரு கொடுங்கோல் மன்னன், மக்களை அடிமைகளாக்கி சொற்களால் வர்ணிக்க இயலாத அளவுக்கு கொடுமைகளைக் கட்டவிழித்துவிட்டான்.

அவனுக்கு நேர்வழிகாட்ட இறைவன் ஒரு தூதனை அனுப்பினார். அப்போது அவனிடம், "அந்த மன்னனிடம் மென்யைôகப் பேசு; அவன் அறிவுரைகளை ஏற்பான்'' என்று கூறி அனுப்பிவைத்தார்.

மனித நேயம் என்னவென்றே அறிந்திராத ஒரு மன்னனிடம் பேசும்போதுகூட மென்மை யைக் கடைப்பிடிக்குமாறு இறைவன் கூறுகி றார். ஏனெனில் இறைவன் மென்மையானவர். அனைத்து விஷயங்களிலும் மென்மை யைத்தான் நேசிக்கிறார்.

"கடன் கொடுத்தவர் வசூலிக்க வந்தபோது மென்மையைக் கடைபிடித்ததால்தான் அவருக்கு இறைவன் சொர்க்கத்தை அளித்தார்' என்று வேதம் கூறுகிறது. எனவே அனைவரிடத்திலும் மென்மையைக் கடைப்பிடிக்கவேண்டும்.

"கெட்டாலும் மேன்மக்கள்

மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.'

நெருப்பிலிட்டுக் காய்ச்சினாலும் பாலின் சுவை குறையவே குறையாது. அதுபோல வெண்மையான சங்கை எவ்வளவு சுட்டா லும் வெண்மை நிறத்தையே கொண்டிருக்கும் அதுபோலவே மேன் மக்கள் எவ்வளவு துன்பம் வந்தபோதிலும் தங்களது உயர்ந்த பண்பிலிருந்து வழுவமாட்டார்கள்.

கிராமத்தில் குளத்தின் அருகில் ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அங்கு நெறிதவறாமல் கடமையுணர்ச்சியோடு கைங்கர்யம் செய்து வந்தார் ஒரு பட்டர் சுவாமிகள். ஒருநாள் பெருமாளுக்கு தீர்த்தமெடுக்க குளக்கரைக் குச் சென்றவர், படியில் நின்று குடத்தை முகந்து தீர்த்தத்தை நிரப்பினார். அப்போது விஷக் கொடுக்குள்ள ஒரு தேள் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்டார். உடனே குடத் தினை இறக்கிவிட்டு தேளைக் கரையில் விடுவதற்காகக் கையில் எடுத்தார். அப்போது அந்தத் தேள் அவரைக் கொட்டிவிட, வலியால் கையை உதறினார்.

மீண்டும் அந்தத் தேள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தது. ஆலய பட்டரின் மனமும் தத்தளித்தது. தண்ணீரில் தவிக்கும் ஜீவனைக் காப்பாற்றுவது தனது கடமையென்று உணர்ந்து மீண்டும் அந்தத் தேளை எடுக்க, அது அப்போதும் கொட்டியது. அவர் கையை உதற, அது மறுபடியும் நீரில் விழுந்தது.

மூன்றாவது முறையும் அவ்வாறே நிகழ்ந்தது.

நான்காவது முறையாக அதனைத் தண்ணீரிலிருந்து எடுத்துக் கரையில் விட்டார். மூன்றுமுறை கொட்டியதால் கொடுக்கின் முனை மழுங்கியது; தேளின் ஆட்டமும் நின்றுவிட்டது.

hh

அப்போது அங்கிருந்தோர், "தேள் கொட்டுமெனத் தெரிந்தும் அதனை ஏன் காப்பாற்றினீர்கள்'' என்று கேட்டனர். "கொட்டுவது தேளின் பிறவிக்குணம். உயிருக்குத் துடிக்கும் ஜீவன்களைக் காப்பாற்றுவது மனிதகுணம். அதை நாம் மாற்றிக்கொள்ளக்கூடாது.

எந்த உயிராக இருந்தாலும் துன்பத்தில் இருக்கும்போது உதவிசெய்வது மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையல்லவா? இதுபோன்ற தொண்டுகளும் இறைவனுக்குச் செய்யும் தொண்டுதான்'' என்று விளக்கினார் பட்டர். பெருமாளின் அருளால் அவரது விரல்களில் இருந்த வலி மறைந்துவிட்டது.

அடுத்தவருக்கு உதவவேண்டும் என்று நம் மனதைப் பழக்கிக்கொண்டால் அந்த எண்ணம் நம்மோடு ஒன்றிவிடும். இதுபோன்ற மென்மையைக் கடைப்பிடித்து, மேன்மையாக வாழ வழிவகை செய்தருளும் ஒரு அற்புதமான திருத்தலம்தான் திருநகரி கல்யாண ரங்கநாதர் திருக்கோவில்.

இறைவன்: ஸ்ரீ வேதராஜப் பெருமாள்.

இறைவி: அமிர்தவல்லி நாச்சியார்.

உற்சவர்: ஸ்ரீ கல்யாண ரங்கநாதர்.

தீர்த்தம்: இலாக்ஷ புஷ்கரணி தீர்த்தம்.

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார்.

ஊர்: திருநகரி.

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வாலயம் சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலங்களை திவ்யதேசங்கள் என்று கூறுவர். அத்தகைய 108 திவ்ய தேசங்களில் 34-ஆவது திவ்ய தேசமாக இது போற்றப்படுகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புக்களுடன் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருவா- திருநகரி என்னும் திருநகரி கல்யாண ரங்கநாதர் திருக்கோவில்.

jj

"கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளைவந்து

வள்ளி மருங்குல் என்றன் மடமானினைப் போதவென்று

வெள்ளி வளைக்கை பற்றப்பெற்ற தாயரை விட்டகன்று

அள்ளலம் பூங்கழனி யணியா- புகுவர் கொலோ!'

-பிரபந்தம்

தல வரலாறு

பிரம்மாவின் மானச புத்திரன் கர்த்தம பிரஜாபதி மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடுந்தவம் செய்தான். அவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தமடைந்த மகாலட்சுமி பெருமாளிடம் கோபம்கொண்டு இத்தல குளத்திலிருந்த தாமரை மலருக்குள் தன்னை ஒளித்துக் கொண்டாள். பெருமாள் லட்சுமியைத் தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்துகொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் ஆலிங்கனக் கோலத்தில் இருப்பதால் இரண்டும் சேர்த்து திருவாலி திருநகரி ஆனது.

திரேதாயுகத்தில் கர்த்தம பிரஜாபதி, உபரி சிரவஸு மன்னனாகப் பிறந்தான். அவன் இத்தலத்தின்மீது புஷ்பக விமானத்தில் பறந்து வரும்போது, மேற்கொண்டு பறக்காமல் அப்படியே நின்றுவிட்டது. எனவே இத்தலம் மிகவும் புண்ணியமானது எனக்கருதி மோட்சம்வேண்டி பெருமாளைக் குறித்துத் தவம்செய்தான்.

அப்போதும் கிடைக்கவில்லை. அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்னும் பெயரில் பிறந்து ஒரு மன்னனுக்கு மந்திரியாக இருந்தான். அப்பிறவியிலும் தனக்கு மோட்சம் கேட்க, பெருமாள், "கலியுகத்தில் கிடைக்கும்' எனக் கூறினார்.

கலியுகத்தில் நீலன் என்னும் பெயரில், ஒரு படைத் தலைவனின் மகனாகப் பிறந்தான். இந்த நீலன்தான் பின்னாளில் "திருமங்கையாழ்வார்' ஆனான்.

திருநகரிக்கு அருகே உள்ள திருக்குறவலூரில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில், நள வருடம், கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருமாலின் சாரங்கத்தின் அம்சமாய் அவதரித்த வர் நீலன். இளமையிலேயே ஆயுத வித்தைகளில் தேர்ச்சிபெற்று விளங்கியதால் இவருக்கு "பரகாலன்' என்ற பெயரும் உண்டு. சோழமன்னன் நீலனை குறுநில மன்னனாகக்கினான்.

kk

திருவெள்ளக்குளம் எனப்படும் அண்ணன் பெருமாள் கோவில் திருத்தலத்திலுள்ள தாமரைப் பொய்கையில் பல கன்னியர்கள் நீராடிக் கொண்டி ருந்தனர். அப்போது ஓர் அழகிய நங்கை குமுத மலரைக் கொய்து கொண்டிருந்தாள். அவளுடைய தோழி கள் அவளைத் தனியே தத்தளிக்க விட்டுச் சென்றுவிட்டனர்.

அப்போது அங்குவந்த வைத்தியர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் விசாரிக்க, தோழிகள் தன்னைவிட்டுச் சென்று விட்டதாகவும், தன்னைப் பாதுகாத் தருள வேண்டுமென்றும் கூறினாள். வைத்தியரும் மனமகிழ்ச்சியோடு அந்தப் பெண்ணைத் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று தன் மனைவியிடம் ஒப்படைத்தார். வைத்தியர் தம்பதி யருக்கு குழந்தைப் பேறில்லை. எனவே அவளைத் தங்கள் மகளாக நினைத்து வளர்த்துவந்தனர்.

அந்த நங்கை குமுதமலரைக் கொய்த காரணத்தால் குமுதவல்லி என்றழைத்தனர். அவள் திருமண காலம் வந்ததும் அவளுக்கேற்ற கணவரைத் தேடினர்.

இந்த நிலையில் திருமங்கை மன்னருடைய ஆதரவாளர்கள் சிலர் குமுதவல்லியின் அழகைப் பற்றியும், குணத்தைப் பற்றியும் மன்னரிடம் கூறினர். திருமங்கை மன்னர் திரு வெள்ளக் குளத்திலிருந்த வைத்தியர் வீட்டுக்குச் சென்று, அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மறைந் திருந்த குமுதவல்லியைக் கண்டவுடன் காதல் மேலோங்கி, "இவளை எனக் குத் திருமணம் செய்து தரவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது குமுதவல்லி குறுக்கிட்டு, "சங்கு சக்கர முத்திரையிட்டு, திருமண் ணும் தரித்த வைணவருக்கே நான் வாழ்க்கைப்படுவேன். மேலும் தினமும் 1,008 பேருக்கு ஓராண்டிற்கு அன்னதானம் வழங்கி, அவர்களது திருவடித் தீர்த்தத்தை உட்கொண்டால் உம்மைக் கணவராக ஏற்றுக்கொள்வேன்'' என்றாள். "அப்படியே ஆகட்டும்'' என்று கூறிச்சென்றுவிட்டார் திருமங்கை மன்னர்.

hh

திருமங்கை மன்னர் தினமும் 1,008 வைணவர்களுக்கு அன்னதானம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரால் சோழ மன்னனுக்கு செலுத்தவேண்டிய பங்கை செலுத்தமுடியாததால், சோழ மன்னன் திருமங்கை மன்னனை சிறையிலிட்டான். மூன்று நாட்கள் மன்னர் பட்டினி கிடந்தார்.

பெருமாள் திருமங்கையின்முன் தோன்றி, "உனக்கு வேண்டிய பொருட்களைத் தருகிறேன் வா'' என்று அழைத்துச்சென்று நதிக்கரையில் ஓரிடத்தைக் காட்டினார்.

திருமங்கை அங்கிருந்த பொருட்களை எடுத்துவந்து, அரசனுக்குச் சேரவேண்டிய தைக் கொடுத்துவிட்டு, மீதமிருந்ததை அன்னதானத்திற்கு செலவிட்டார். அவையும் செலவழிந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல், தனது கையாட்கள் துணை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு அன்னதானம் செய்துவந்தார்.

திருமங்கையை நல்வழியில் திருப்ப பெருமாள் சித்தம் கொண்டார். அதன்படி அந்தணர் வேடம்பூண்டு நகைகளை அணிந்தபடி, தன் தேவியரோடு திருநகரியில் உள்ள வேதராஜபுரம் சென்றார்.

அங்கிருந்த அரச மரத்தடி யில் பதுங்கியிருந்த திருமங்கை, அந்தணர் உருவில் வந்த பெருமாளையும் தேவி யரையும் ஆயுதம் ஏந்தியபடி வழிமறித் தார். அவர்களிடம் நகைகளைப் பறித்த போது, தேவியின் கால் மெட்டியை திருமங்கை யால் கழற்ற முடிய வில்லை. பலமுறை முயற்சிசெய்தும் பலனளிக்கவில்லை. அதனால் திருமங்கைக்கு "கலியன்' என்ற பெயரும் உண்டு.

பின்னர் வழிப்பறி செய்த மற்ற நகைகளையெல்லாம் மூட்டையாகக் கட்டித் தூக்க முயன்றார். அதுவும் அசைக்கமுடியாதபடி ஆயிற்று. இதனால் ஆத்திரமடைந்த திருமங்கை அந்தணரை (பெருமாளை) நோக்கி, "நீ என்ன மந்திரம் செய்தாய்?'' என்று தன் படையைக் காட்டி மிரட்டினார். அந்தணரும், "அந்த மந்திரத்தை உமக்கும் சொல்கிறேன். அருகில் வாரும்'' என அழைத்தார். அருகில்வந்த திருமங்கையின் காதில், "ஓம் நமோ நாராயணா' எனும் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்து அருளினார். பின்னர் கருட வாகனத்தில் திருமகளோடு காட்சியளித்தார். மந்திர உபதேசம் பெற்ற திருமங்கை அஞ்ஞானம் அழிந்து தத்துவஞானம் கைவரப்பெற்றார். இறைவன்மீது நான்குவகை கவிகளையும் பாடினார். தொடர்ந்து இறைவனின் பல தலங்களுக்குச் சென்று மங்களாசாசனம் செய்தார். அதன்பிறகு திருமங்கை மன்னர் திருமங்கையாழ்வார் என அழைக்கப் பெற்றார்.

சிறப்பம்சங்கள்

= தென்கலை வைணவ முறைப்படி காலபூஜைகள் நடக்கும் இவ்வாலயம் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.

= திருமங்கை மன்னர் வேதராஜபுரத்தில் வழிப்பறி செய்ய, பெருமாள் தடுத்தாட்கொண்டார். இதனை உணர்த்தும் வண்ணம் வேடுபறி உற்சவ நிகழ்ச்சி இன்றும் நடந்துவருவது சிறப்பான ஒன்று.

= 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் தஞ்சை நாயக்கர்கள் இவ்வாலயத்திற்குத் திருப்பணிகள் செய்துள்ளதை கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

= பெருமாள் கல்யாணத் திருக்கோலத்தில் இளம் தம்பதியாகக் காட்சியருள்வதால் கல்யாண ரங்கநாதர் என்னும் பெயர் வந்தது.

= "ஆண்டுதோறும் தைமாதப் பௌர்ணமியன்று திருமங்கையாழ்வார் மங்களாசாசன உற்சவ நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது திருமங்கையாழ்வாரின் உற்சவச் சிலை யைப் பல்லக்கில் ஏற்றி, திருமணி மாடம் முதல் திருநகரிவரை அழைத் துச் செல்லப்படுகிறார். கருடசேவை யன்று சுற்றியுள்ள 11 திருநாங்கூர் கோவில்களிலிருந்து கருட உற்சவர் களை இக்கோவிலில் எழுந்தருளச் செய்துவதுடன், திருமங்கையாழ்வாரை யும், அவர்தம் இணையரான குமுத வல்லி நாச்சியாரையும் அம்ச வாகனத் தில் எழுந்தருளச் செய்து திருமங்கையாழ் வாரின் பாடிய நாலாயிரத் திவ்யப்பிரபந்தப் பாடல்களைப் பாடுவது கண்கொள்ளாக் காட்சி'' என்கிறார் ஆலய அர்ச்சகரான ஸ்ரீதரன் பட்டாச்சாரியார்.

= திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் திருமங்கையாழ்வார் தனிச்சந்நிதி கொண்டு காட்சிதருகிறார். எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒரு கொடிமரமும் என இரண்டு கொடிமரங்கள் உண்டு. "ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருஞானசம்பந்தரை வணங்கி, பின் சுவாமி, அம்பாள், உற்சவரை வணங்கினால் கலைகள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். ஞாபக சக்தியையும் தந்தருள் வார்'' என்கிறார் ராஜன் பட்டாச்சாரியார்.

=அஷ்டாட்சர விமானத்தின் கீழ் அருளும் மூலவர் வேதராஜப் பெருமாள், அமிர்தவல்லித் தாயார், உற்சவர் கல்யாண ரங்கநாதர் ஆகியோர் எல்லா நலன்களையும் அருளுவதோடு, தம்பதியர் ஒற்றுமை, சுபகாரியம் கைகூடல் போன்ற மங்களங்களையும் நிறைவாக அருள்கின் றனர்'' என்கிறார் பத்மநாபன் பட்டாச் சாரியார்.

குளிர்ந்த காற்று வருடும் பூம்புகார் கடற்கரைக்கு அருகில் கிழக்கு நோக்கிய 125 அடி உயர ஏழுநிலைகொண்ட ராஜ கோபுரத்துடன், திராவிடக் கட்டடக் கலையில் மனதைக் கொள்ளைகொள்ளும் விதத்தில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் மூன்று திருச்சுற்றுகளுடன் ஆலயம் அமைந் துள்ளது. வைணவ முறைப்படி அனைத்து சந்நிதிகளும் சிறப்பாக அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர் தனிச்சந்நிதியில் உள்ளார்.

காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் திருக்கோவில், சீர்காழி வட்டம், திருநகரி அஞ்சல், மயிலாடுதுறை மாவட்டம்- 609 106.

ஆலயப் பொறுப்பாளர் சிங்காரவேல், அலைபேசி: 94430 18335. ஸ்ரீதரன் பட்டாச்சாரியார், அலைபேசி: 94438 84969. ராஜன் பட்டாச்சாரியார், அலைபேசி: 73589 14967. பத்மநாபன் பட்டாச்சார்யார்,

அலைபேசி: 94433 72567.

அமைவிடம்: சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் புதுத்துறை மண்டபத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், புதன் தலமான திருவெண்காட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருநகரி.

பிலவ வருடம் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியன்றும், தை மாதப் பௌர்ணமியன்று திருஞான சம்பந்தர் வேடுபறி உற்சவ நிகழ்ச்சியிலும் "ஓம் சரவணபவ' வாசகர்கள் கலந்துகொண்டு பெருமாளின் அருளைப் பெறுமாறு ஆலய அர்ச்சகர் கேட்டுக்கொண்டார்.

படங்கள்: போட்டோ கருணா