தமிழகத்தில் சைவம் தழைக்கப் பேருதவியாக இருந்தவை தேவாரப் பாடல்கள். அவை மனித குலத்துக்குக் கிடைக்கக் காரணமான வர்கள் பொல்லாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, மாமன்னன் ராஜராஜ சோழன் ஆகியோர்.
தேவதத்தன் என்னும் கந்தர்வன் துர்வாச முனிவரின் தவம் கலையக் காரணமாக இருந்தான். முனிவர் கந்தர்வனை நாரையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்துவிட்டார். கந்தர்வன் தன் தவறையுணர்ந்து பணிந்து, சாபவிமோசனம் அருளுமாறு வேண்டினான்.
கோபம் தணிந்த முனிவர், "காவிரியின் வடகரையில் கோவில்கொண்டுள்ள ஈசனையும் அம்பாளையும் தினமும் பூஜைசெய்து வந்தால் சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்கும். அதற்காக நீ தினமும் காசிக்குச்சென்று கங்கையிலிருந்து நீர் எடுத்துவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும்'' என்று வழிசொன்னார்.
அதன்படி நாரையாக மாறிய கந்தர்வன் தினமும் பறந்துசென்று கங்கைநீரை எடுத்துவந்து ஈசனையும் அம்பாளையும் வழிபட்டுவந்தான். நாரையின் பூஜையையும் பக்தியையும் கண்டு மனம் நெகிழ்ந்த இறைவன், நாரையை சோதிக்க விரும்பினார். ஒருநாள் கங்கையிலிருந்து நீருடன் நாரை பறந்து வந்துகொண்டிருந்தது. ஆலயத்தை நெருங்கும் நேரத்தில் திடீரென்று பெரும் புயல்காற்றுடன் மழைகொட்டத் தொடங்கியது. அந்த நிலையிலும் மனம் தளராத நாரை, ஆலயத்தை நோக்கி கடும் சிரமத்துடன் பறந்தது.
காற்றின் வேகம் மேலும் மேலும் அதிகரித்தது. இதனால் நாரையின் சிறகு கள் உதிர்ந்து காற்றில் பறந்தன. சிறகுகளை இழந்த நாரை மேலும் பறக்கமுடியாமல் பூமியில் விழுந்தது. அப்போதும் மனவுறுதி தளராமல் ஊர்ந்தபடியே சென்று இறைவன் சந்நிதியை அடைந்து, தான் கொண்டுவந்த கங்கைநீரைக் கொண்டு இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தது.
நாரையின் பக்தியையும் உறுதியையும் கண்ட இறைவனும் அம்பாளும் ஒருசேர நாரைக் குக் காட்சி கொடுத்தனர். அப்போது இறைவன், "நாரையே, உன்னை சோதிக்கவே யாம் இந்த திருவிளையாடலை நடத்தினோம். இனி நீ நாரை வடிவம் நீங்கி கந்தர்வ வடிவம் கொள்வாயாக'' என்று சாபவிமோசனம் அளித்தார். இவ்வாறு நாரை சாபவிமோசனம் பெற்றதால் இவ்வூருக்கு திருநாரையூர் என்ற பெயர் உருவானது.
காவிரியின் வடகரைத் தலங் களில் ஒன்றாகத் திகழ்கிறது. (நாரை கங்கையிலிருந்து நீர் கொண்டுவரும்போது புயல் காற்றில் சிறகுகளை இழந்து தரையில் விழுந்த இடம் தற்போது சிறகிழந்த நல்லூர் என்ற பெயருடன் விளங்கிவருகிறது.)
திருநாரையூர் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் முழுமுதற் கடவுளான பிள்ளையார், உளிபடாத சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் என்று பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் மக்கள் பேச்சுவழக்கில் மருவி பொல்லாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.
எல்லா ஊர்களிலும் பிள்ளையார் தொப்பையுடன் காணப்படுவார். ஆனால் இங்கு தொப்பை கரைந்து காணப்படுகிறார்.
பக்தர்கள் நலனுக்காக ஓடியாடி உழைத்தவர் என்பதால் தொப்பை இல்லையென்பது வித்தியாசமான ஒன்று.
பெரும்பாலான சிவன் கோவில்களில் சிவனுக்கு இடப்புறம் சண்டிகேஸ்வரர் அமர்ந்திருப்பார். இவ்வாலயத்தில் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி ஒன்றாக அமர்ந்துள்ளது வித்தியாசமானது என்கி றார்கள் பக்தர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு, அர்ச்சகர் அனந்தேசர் என்பவர் தினமும் கோவிலுக்குச்சென்று, ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் பிள்ளையார், இறைவன் சௌந்தரேஸ்வரர், இறைவி திரிபுரசுந்தரி உட்பட சகல தெய்வங் களுக்கும் அபிஷேக ஆராதனை முடித்து பிரசாதப் படையல் செய்துவிட்டு, அந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கிவிட்டு வெறுங்கையோடு வீட்டுக்குச் செல்வார். அவருக்கு நம்பி யாண்டார் நம்பி என்ற மகன் இருந்தார். அவர் தனது தந்தை கோவிலில் பூஜை முடித்துவிட்டு வரும்போதெல் லாம் தெய்வங்களுக்குப் படையலிட்ட பிரசாதத்தை சாப்பிடத் தருமாறு கேட்பார்.
ஆனால் அர்ச்சகர், "பிரசாதத்தை பிள்ளையார் சாப்பிட்டு விடுவார்' என்று கூறி வந்துள்ளார். இதை முழுமையாக நம்பினார் சிறுவன் நம்பி.
ஒருநாள் அர்ச்சகர் வெளியூர் போகவேண்டி யிருந்தது. அப்போது தனது மகன் நம்பியை அழைத்து, பூஜைப் பொருட்களையும் பிரசாதத்தையும் எடுத்துச்சென்று பிள்ளையாருக்கும் மற்ற தெய்வங் களுக்கும் பூஜை செய்துவிட்டு வருமாறு கூறிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். அதன்படி நம்பியாண்டார் நம்பி ஆலயத்திற்குச் சென்று பூஜையை முடித்தபிறகு பிள்ளையாருக்கு நிவேதனங்களைப் படைத்து அதை உண்ணுமாறு கேட்டார். சிலையாக இருக்கும் பிள்ளையார் எப்படி உண்பார்? பலமுறை பிள்ளையாரை பிரசாதம் உண்ணுமாறு நம்பி கேட்டுக்கொண்டே இருந்தார். அவரோ எந்த சலனமும் இல்லாமல் அமைதி யாக அமர்ந்திருந்தார்.
"தந்தை கொடுக்கும் போதுமட்டும் பிரசாதத்தை சாப்பிடும் பிள்ளையாரே! நான் கொடுக்கும்போது ஏன் சாப்பிட மறுக்கிறாய்?'' என்று அழுது அடம்பிடித்தார். அப்படியும் பிள்ளை யார் சாப்பிடவில்லை. மனம் வெதும் பிய நம்பி, பிள்ளையாரின் விக்ரகத் தின்மேல் தலையை மோதிக்கொண்டு கதறி அழுதார்.
நம்பியின் செயலைக்கண்டு மனமிரங்கிய பிள்ளையார், நம்பி தலையைத் தன்மீது மோதிக்கொள்ளாமல் தடுத்து, நம்பி அளித்த பிரசாதத்தை அவர் முன்பாக அமர்ந்து மகிழ்வு டன் சாப்பிட் டார். அத்துடன் சிறுவனுக்கு குருவாக இருந்து வேதாகமங்களை போதித்தார்.
பிள்ளையாருக் கும் நம்பியாண்டார் நம்பிக்குமான நட்பு தொடர்ந்தது.
இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த அவரது தந்தை அனந்தேசர் ஊருக்கு வந்ததும், மகனுக்கு பிள்ளையார் காட்சிகொடுத்து பிரசாதம் உண்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டு மெய்சிலிர்த்துப் போனார். இந்த செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது. இந்த விவரத்தைக் கேள்வியுற்றார் மன்னர் ராஜராஜ சோழன். அவர் உடனே திருநாரையூர் புறப்பட்டு வந்து, சிறுவன் நம்பியாண்டார் நம்பிக்கு உபசாரங்களைச் செய்தார். அப்போது அவர் அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடிய தேவாரத் திருமுறை ஏடுகள் மறைந்திருக்கும் இடத்தை பிள்ளையார்மூலம் அறிந்து சொல்லுமாறு நம்பியிடம் கேட்டுக்கொண்டார். அதுபோலவே நம்பியும் பிள்ளையாரிடம் கேட்க, பிள்ளையார், தேவார ஏடுகள் சிதம்பரம் மேற்குக் கோபுர வாசல் மதில்பகுதி அருகேயுள்ள அறைக்குள் மறைந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் தகவலை மன்னர் ராஜராஜனிடம் நம்பி கூறினார்.
அதையடுத்து ராஜராஜன் சிறுவன் நம்பியை அழைத்துக்கொண்டு சிதம்பரம் சென்று, தில்லைவாழ் அந்தணர்களை சந்தித்து திருமுறைகள் இருக்கும் அறையின் சாவியைத் தருமாறு கேட்டார். அந்தணர்கள், "தேவாரம் பாடிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்துவந்து கேட்கும்போதுதான் அந்த சாவியைத் தர வேண்டும் என்னும் ஐதீகம் காலங்காலமாகப் பின்பற் றப்பட்டு வருகிறது. அவர்கள் மூவரும் வந்தால்தான் அறையின் சாவியைத் தருவோம்'' என்று கூறினர்.
"முந்நூறு ஆண்டு களுக்குமுன்பு வாழ்ந்து மறைந்தவர்களை இப்போது எப்படி உயிரோடு கொண்டுவர முடியும்?' என்று யோசித்த மன்னன் ராஜராஜன், சற்றும் தயங்காமல் மூவரின் உற்சவ விக்ரகங்களைத் தயார்செய்து அந்தணர்கள்முன்பு கொண்டு வரச்செய்தார். "இதோ பாருங்கள், தேவாரம் பாடிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து வந்துள்ளனர்.
இப்போதாவது சாவியைக் கொடுங்கள்'' என்று கேட்க, வேறு வழியின்றி தில்லைவாழ் அந்தணர்கள் சாவியை மன்னரிடம் கொடுத்தனர்.
அறையைத் திறந்த ராஜராஜனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பல ஆண்டுகளாக கவனிப்பாரின்றி அறை பூட்டிக்கிடந்ததால், அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த தேவார ஓலைச்சுவடிகளை கரையான் புற்று முழுவதும் மூடியிருந்தது. மனம் பதைத்த மன்னர் கண்ணீர் சிந்தினார். பிறகு எண்ணெய் கொண்டுவரச்செய்து அந்த புற்றின்மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றச் செய்தார். புற்று மண் கரைந்து அதில் கரையான் தின்றது போக எஞ்சியிருந்த ஓலைச்சுவடிகளை சேகரித்தார்.
அப்போது இறைவனின் குரல் அசரீரியாக, "மன்னா, இக்காலத்திற்கேற்ற ஓலைச்சுவடிகள் சிதையாமல் உம்மிடம் கிடைத்துள்ளன. எனவே வருந்தவேண்டாம்' என்று ஒலித்தது. அதைக்கேட்டு மகிழ்ந்த ராஜராஜன், அந்த ஓலைச்சுவடிகளை நம்பியாண்டார் நம்பியிடம் கொடுத்து தொகுக்கச் செய்தார்.
இப்படித்தான் தமிழகத்தில் சைவம் தழைக்கக் காரணமாக இருந்த தேவாரப் பாடல்கள் கிடைக்கப்பெற்றன. தேவாரம் கிடைக்கக் காரணமாக இருந்த திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் "திருமுறை காட்டிய பிள்ளையார்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
இவ்வாலயத்தின் மூலவராக இறைவன் சௌந்தரேஸ்வரர் காட்சியளிக்கி றார். இடப்புறம் அம்பாள் திரிபுரசுந்தரி தனிச் சந்நிதியில் அருளாசி வழங்குகிறாள். இவ்வாலயத்தின் தென்மேற்கு மூலையில் பொல்லாப் பிள்ளையார் தனிச் சந்நிதியில் உள்ளார். இவருக்கு எதிரே வலப்புறம் மன்னன் ராஜராஜசோழன், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் சிலைவடிவில் காட்சியளிக்கின்ற னர். இப்பகுதியில் நம்பியாண்டார் நம்பியின் ஜீவசமாதியும் உள்ளது.
இறைவனின் சந்நிதி அர்த்தசந்திர வடிவில் அமைந்துள்ளது அபூர்வமானது என்கிறார் கள் இவ்வூர் ஆன்மிகப் பெரியோர்கள். இவ்வாலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்படுகிறது. தலவிருட்சம் புன்னை மரம். ஆலயத்தின் எதிரில் காருண்ய தீர்த்தக்குளம் அழகுற அமைந்துள்ளது. தேவாரப் பாடல்பெற்ற தலங்கள் 274. அதில் 33-ஆவது தலமாக அமைந்துள்ளது இவ்வாலயம்.
"முருகனுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளதுபோல் விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. அதில் திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் சந்நிதியும் ஒன்று'' என்கிறார் ஆலய அர்ச்சகர் முத்துக் குமாரசாமி குருக்கள். "பல்வேறு ஊர்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இவ்வாலய இறைவனையும் அன்னையையும் பொல்லாப் பிள்ளையாரையும் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கிறோம்'' என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் சோழன்.
தேவாரத் திருமுறை கிடைக்கக் காரணமாக இருந்த நம்பியாண்டார் நம்பிக்கு தனி ஆலயம் எழுப்பப்பட்டு, வரும் டிசம்பர் 13-ஆம் தேதி (கார்த்திகை மாதம் 27-ஆம் தேதி, திங்கட்கிழமை) தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் மிக சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து பொருட்செலவையும் ஏற்பாடுகளையும் செய்துவருகிறார் விருத்தாசலம் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் திருப்பணிச்செம்மல் அகர்சந்த்.
அது குறித்து அவர், "தருமபுரம் ஆதீன மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் ஆலோசனையின்பேரில், நம்பியாண்டார் நம்பிக்கு ஆலயம் எழுப்பப் பட்டுள்ளது. நம்பியாண்டார் நம்பியின் சிலை புதியவடிவில் அழகுற உருவாக்கப்பட்டு புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருப்பணியில் எங்களையும் ஈடுபடுத்திக்கொள்ள இறைவனின் அருள்தான் காரணம். இவ்வாலய இறைவனையும் பொல்லாப் பிள்ளையாரையும் நம்பியாண்டார் நம்பியையும் வழிபடுவதன் மூலம் பல்வேறு நலன்களைப் பெற்றுவருகி றார்கள் பக்தர்கள்'' என்றார்.
அதற்கு ஒரு உண்மைச் சம்பவத்தைக் கூறுகின்றனர். ஊர்மக்கள். தற்போது ராஜேந்திரபட்டணம் என்றழைக்கப்படும் எருக்கத்தம் புலியூரைச் சேர்ந்தவர் ஏந்திசை என்ற ஏழைப்பெண். இவர் வாய்பேச முடியாத ஊமை. அந்தப் பெண் பொல்லாப் பிள்ளையாரை வணங்கி, அவரது அருளால் பேசும் சக்தி பெற்றதோடு, தேவாரப் பாடல்களை இவ்வாலயத்தில் மிகவும் அருமையாகப் பாடியுள்ளார்.
பேசாதவரைப் பேசவைத்துப் பாடவைத்த பிள்ளையார் குடிகொண்டுள்ள திருநாரையூர் ஆலய இறைவனையும் அம்மையையும் வழிபடுவதன்மூலம் பக்தர்களின் வாழ்க்கை யில் ஏற்படும் தடைகள் விலகும். பேச்சுவராத குழந்தைகளின் பெற்றோர் இவ்வாலயப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்கிறார்கள். அதுபோன்று காணாமல்போன பொருட்கள் கிடைக்க, திருமணத் தடைகள் விலக, குழந்தைப்பேறு கிடைக்க இவ்வாலயத்தைத் தேடிவந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
தேவாரம் தந்த திருநாரையூர் செல்ல வேண்டுமா? சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி செல்லும் வழியில் 17-ஆவது கிலோமீட்டர்; காட்டுமன்னார் குடியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருநாரையூர். காலை 7:30 முதல் பகல் 11:30 மணிவரையிலும்; மாலை 4:30 முதல் இரவு 7:30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தொடர்புக்கு: 63812 88122.