குருநாதரால் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த இளவல், வளர்பிறைச் சந்திரனாக வளர்ந்து முழுநிலவாகிய தருணத்தில், இராஜ அகியை அணிந்த களிப்புடன் இருக்கும்போது, குருநாதர் அவனது வலக்கரத்தைப் பிடித்து மருதாசனத்திலிருந்து எழுப்பி, அவனை வலக்காலால் முதல் அடியை எடுத்து வைக்கச் சொல்வார்.

பிராண சக்தியால் இயங்கும் உலகம்!

ரத்தினக் கம்பளம் விரித்திருக்கும் தரையில் இளவரசன், தனது வலக்காலால் முதல் அடியை எடுத்து வைத்ததும், இடக்காலை மடக்கி முழந்தாழிட்டு குருவைப் பணிவோடு வணங்குவான். அப்போது இம்மாநிலத்துக்கு மகாமன்னனாகப்போகும் முழுச்சந்திரனான இளவரசன், மாபெரும் ஒளிச்சுடராகத் திகழக்கூடிய சூரியனாக மாறவேண்டும் என்பதற்காக, குருநாதர் இளவரசனின் மனவளத்தை எழுப்பி, அவனது "சீரை' உணரும்படி செய்வார். இங்கு "சீர்' என்பது மனிதனின் உச்ச ஆற்றல் பொங்கும் உயர் மனநிலையைக் குறிக்கிறது. சீர் என்பது இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உயிருக்குள்ளும் இயங்கும் பிராணனுக்குள், மகாபிராணனாகச் செயல்படும் சக்தி எனச் சித்தர்கள் கூறுகின்றனர். இதுவே, இவ்வுலகத்தை பஞ்சபூத, நவகிரக சக்திகளோடு இயைந்து செயல்பட்டு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது சித்தர்களின் கூற்றாகும்.

மன்னனின் முதற்கடமை!

Advertisment

ஒரு மன்னனாக முடிசூடப்போகும் இளவலுக்கு என்றென்றும் கலக்கமுறாத தூய ஆன்மகுணம் இருக்கவேண்டும். அக் குணத்தின் விளைவாகத் தம் குடிமக்கள் அனைவரிடத்திலும் நடுநிலையை அருளும், பரிவுகாட்டும் தன்மையுடையவனாகவும், அறத்தொடு நிற்றலில் மிகுந்த ஈடுபாடுடைய வனாகவும் இருப்பான். இவ்வாறிருந்தால் மட்டுமே தெவ்வர்களிடமிருந்து தம் குடிமக்களைப் பாதுகாக்க முடியும்.

தெவ்வர்கள் என்பவர்கள், மிகுபொருள் பற்றுடைய, அதன்விளைவாக மனதில் வஞ்சனை வைத்து, உள்ளும் புறமும் எதிர்மறையாக உள்ள, இன்பம் துய்க்கக்கூடிய மானிடப் பதர்களாகும். இவர்கள் பொருளுக்காகத் தன்னைச் சார்ந்தவர்களையும் பிறரையும் வருத்துவார்கள். இவர்கள் பொய், களவு, கொலை, எரியூட்டல், எளியோர்களைத் தம் இனப்படைகொண்டு நடுங்கச் செய்தல், பிறர் உறுப்புகளைக் குறைபடச் செய்தல், கொலைக் கருவிகளைத் தன்னுடன் எப்போதுமே வைத்திருத்தல் போன்ற வேதனைதரும் குற்றங் களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களைத்தான் பழந்தமிழர்கள் "தெவ்வர்கள்' என்றழைத்த னர். இவர்களிடமிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதே மன்னனின் முதற்கடமை என அன்றைய குருமார்கள் வலியுறுத்தி வந்தனர்.

விடுபடவேண்டிய இரு கட்டுகள்!

Advertisment

முதற்கடமையை மன்னன் நிறைவேற்ற வேண்டுமாயின், அவன் உயிர்க்கட்டு, பொருள்கட்டு ஆகியவற்றிலிருந்து விடுபட்டிருக்கவேண்டும். ஒவ்வொரு உயிரினமும் தன் தாயின் கருவில் உயிர்த்தோற்றம் உருவாகிய தருணத்திலிருந்தே அதனிடத்திலிருந்து நல்லவை, அல்லவை ஆகிய எதிரெதிர் உணர்வூற்றுகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இவை, முற்காலத்தில் ஒருவர் செய்த பாவ- புண்ணியங்களின் அடிப்படையிலும், அவை நடந்த காலநிலை அடிப்படை யிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும். இந்நிகழ்வுகளுக்குள் ஒவ்வொரு உயிரும் அகப்பட்டு அவஸ்தைப்படுவதற்கு "உயிர்க்கட்டு' என்று பெயர். "பொருள்கட்டு' என்பது- ஒவ்வொரு உயிரும் பொருள் சார்ந்து, தான் முன்செய்த வினைகளின் நிமித்தமாக, தான் பார்க்கும் பொருட்களின்மீது காட்டும் விருப்பு- வெறுப்புகளைக் குறிக்கும்.

ஆட்சிசெய்யும் மன்னன், இவ்விரு கட்டு களிலிருந்து விடுபட்டவனாக இருந்து, அரியாசனத்தில் அமரவேண்டும்.

dd

ஆன்மாவின் தூயநிலை உணர்ந்தாலே நல்லாட்சிதான்!

இந்தக் கட்டுகளிலிருந்து அவன் விடுபடவேண்டுமாயின், உயர்நிலை பிராண னான சீரை உணர்ந்தவனாக இருக்கவேண்டும். பிராணன் என்றால், "உயிர்ப்பு சக்தி' என்று பொருள். இது மூன்று வகைப்படும். அவை, பொறி பிராணன், மனப்பிராணன், சுவாசப் பிராணன் அல்லது ஆயுள் பிராணன் ஆகும். இம்மூன்று பிராணன்களுக்குள்ளும் மகாப்பிராணன் செயல்பட்டு, இவ்வுலகில் வேதியியல், இயற்பியல் மாற்றங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. இதை ஒருவன் உணர்ந்துகொண்டால், அக்கணமே அவனது ஆன்மாவின் கட்டற்ற தூயநிலையை உணர்ந்துகொள்வான். அதன்பின்பு அவன் மேற்கொள்ளும் ஆட்சிதான் நல்லாட்சியாக, உயர் தெய்வநிலை ஆட்சியாக இருக்கும்.

அப்பொழுதுதான் அவன் தன் குடிமக்களின் இதய தெய்வமாக மாறுவான்.

அறிவுசார்ந்த பண்பாட்டு கலாச்சாரம்!

தொல்காப்பியரும் இதனையே தொல் காப்பியத்தில், ஐந்திணை ஒழுக்கங்களுக்குரிய தெய்வங்களைக் கூறும்போது, "மருத நிலத்தவர்களின் தெய்வமாகத் திகழ்பவன் வேந்தன்தான்' என அறுதியிட்டு, உறுதியிட்டுக் கூறியுள்ளார். இதிலிருந்து, நம் பைந்தமிழ் வேந்தனாகத் திகழ்ந்தவர்கள் அனைவரும் மருதநிலத்தைச் சார்ந்தவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பதை ஆணித் தரமாகக் கூறமுடியும். அவர் கூற்றுப்படி, குறிஞ்சி நிலத்தவருக்கு முருகன், முல்லை நிலத்தவருக்குத் திருமால், மருத நிலத் தவருக்கு வேந்தன், நெய்தல் நிலத்தவருக்கு வருணன், பாலை நிலத்தவருக்கு கொற்றவை என தெய்வங் களைப் பிரித்து வழிபட் டுள்ளனர். இதன்மூலம், மருதநிலத்தில் இருந்தவர் கள் மட்டுமே இயற்கை யோடு இயைந்த- அறிவு சார்ந்த பண்பாட்டுக் கலா சாரத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. எனவே, தங்களைத் தன் கண்ணுக்குக் கண்ணாக வைத்துப் பரிவோடு காத்துவந்த வேந்தனை மட்டுமே தாங்கள் வணங்கக்கூடிய கடவுளாகக் கருதினர். அவரைத்தவிர வேறு யாரையும் அவர்கள் கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் புலனாகிறது.

அதனால்தான், பழங்காலக் குடியிருப்புப் பகுதியான கீழடி அகழாய்வின்போது எந்த ஒரு கடவுள் சிலையும் எடுக்கப்பட வில்லை. ஆதலால், அங்கு வசித்தவர்கள் மருதநிலத் தமிழ்க்குடிகளென்பது உறுதி யாகிறது. வேந்தனானவன், மன அடக் கத்துடனும், புலனடக்கத்துடனும் இருந்து, தீவினையால் ஏற்படும் கொடிய கர்மவினைகளின் வரவுகளைத் தடுக்கக்கூடிய மனவலிமையுடன்கூடிய, தூய உண்மை இயைபோடு இருத்தல் வேண்டும் என்பது அக்கால மரபு. இவ்வாறு மன்னன் தன் ஆட்சிக்காலம் முழுவதுமே சீரோடும் சிறப்போடும் ஆட்சி புரிய குருமார்கள் துணையாகவும் தூண்டுதலாகவும் இருந்து வந்துள்ளனர்.

முதன்முதலில் அரசியலமைப்பு உருவானது தமிழகத்தில்தான்!

மன்னனாகப்போகும் இளவல், குருநாதர்முன் மண்டியிட்டு வணங்கும்போது, சித்தர்களால் கற்றுத்தரப்பட்டுவந்த சூட்சும முறைப்படி குருநாதர் அவனுக்கு சீரை உணரும் அனுபூதி நிலையை உருவாக்கித் தருவார். உலகில் முதன்முதலில் அரசியல மைப்பு உருவாகிய இடம், தமிழகத்திலிருந்த மருதநிலம்தான். இளவலுக்கு சீரை உணர்த்துவதற்கு குருநாதர் அவனுக்கு செய்வித்த சூட்சும வித்தை கீழ்வருமாறு:

ஒருவன், தன் சுவாசத்தை இடது நாசித்துவாரத்தின் வழியே சுவாசித்தால் அதற்கு இடக்கை மூச்சு எனவும், வலது நாசித்துவாரத்தின் வழியே சுவாசித்தால் வலக்கை மூச்சு எனவும், இரு நாசித்துவாரங்களின் வழியே சமமான அளவில் சுவாசித் தால், அதனை துதிக்கை மூச்சு எனவும் பழங்காலத்தில் அழைத்தனர். உயிரினங் களில் யானை மட்டுமே தன் துதிக்கைவழியே இரு நாசித்துவாரங்களில் எல்லா நேரமும் சமமான காற்றை சுவாசிக்கும் இயல்புடையது. அதனால்தான், மனிதன் சம அளவில் எப்போதாவது இரு நாசித் துவாரங்களின்வழியே சுவாசித்தால், அப்போது துதிக்கை மூச்சு ஓடுகிறது என்று கூறுவார்கள். ஒருவன், தனது சீர் நிலையை உணரவேண்டுமாயின், அவன் முதலில் துதிக்கை மூச்சில் இருக்கவேண்டும். அதே மூச்சை, உச்சகதியில் 12 முறை இழுத்து, தன் இரு குதிகளையும் தரையில் படாதவாறு, இரு கால்களின் விரல்களால் ஊன்றி நின்று, புருவ மத்தியில் தன் நினைவை நிறுத்தி, "சிம்' என்று பீஜத்தை மனதில் நினைக்கவேண்டும். அப்போது, நம் மனம் வெளிச்சிந்தனைகள் ஏதுமின்றி சஞ்சலமற்று அமைதிபெறும்.

மனம் மெய்ஞ்ஞானத்தில் திளைக்கும்!

இளவலை குருநாதர் இவ்வாறு செய்ய வைத்ததும், "சதுசுரதிரிபுடை' தாளம் வாசிக்கப்படும். அது, எட்டுவகை எண்ணிக்கையைக் கொண்டது. தொடர்ந்து பல்லியக் கூட்டிசை வாசிக்கப்படும். பல்லியக் கூட்டிசை என்பது எல்லா இசைக் கருவிகளையும் ஒருசேரக் கொட்டி முழக்குதல் ஆகும். அப்போது இளவலின் மூச்சு மேன்மேலும் அதிகரித்து அனுபூதி நிலையை அடையும். இதைத்தான் "கந்தரனு பூதி' நிலை எனக் கூறுவர். கந்தரனுபூதி நிலையில் மனம் மெய்ஞ்ஞானத்தில் திளைக்கும். அப்போது ஏற்படும் நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் போன்ற மூன்றுவிதமான உயர் பண்புகளில் மனம் ஆனந்தமடையும். அதன்விளைவால் உயிர், உயர்நிலையை அடைந்து, ஆழ்ந்தகன்ற, நுண்ணிய மதிநுட்பத்தை உணரும். இதையே "முருகவேல்' தரிசனம் என சித்தர்கள் வர்ணிக்கின்றனர்.

முருகவேல் என்பது ஒரு மன்னனிடம் கண்டிப்பாக இருக்கவேண்டிய மதிநுட்பத் தின் உருவகமாகும்.

வேல்கோட்டத்தின் ரகசியம் வரும் இதழில்...

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்